Published:Updated:

வறுமைக்கு விடை கொடுத்த பால் !

வே.கிருஷ்ணவேணிபடங்கள்: அ.ரஞ்சித்

வறுமைக்கு விடை கொடுத்த பால் !

வே.கிருஷ்ணவேணிபடங்கள்: அ.ரஞ்சித்

Published:Updated:
##~##

சென்னை, விருகம்பாக்கத்தின் வெங்கடேசன் நகரை.. காலை நான்கு மணிக்கெல்லாம் எழுப்புகிறது விஜயகுமாரியின் டி.வி.எஸ்-50 வாகனமும், 'அம்மா பால்..!’ என்கிற அவரின் குரலும்! 46 வயதிலும் 16 வயது சுறுசுறுப்புடன் இருக்கும் இந்தப் பால்காரம்மா... கால்டாக்ஸி டிரைவர், ஐ.டி. வேலை, ஃபாரின் வேலை என்று கரையேற்றியிருக்கிறார் தன் மூன்று மகன்களை - இடைவிடாத உழைப்பால்!

விஜயகுமாரியின் பேச்சில்கூட பால் மணம்தான்... ''தாத்தா காலத்துல இருந்தே பால் வியாபாரம்தான் தொழில். கல்யாணமாகி வந்த நான், வீட்டுக்காரரோட சேர்ந்து மாடுகளை பார்க்க ஆரம்பிச்சேன். மாடு மேய்ச்சு, தீவனம் வெச்சு, தண்ணி காட்டினு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்த்தாலும்... பால் கறக்கத் தெரியாது. அது என்னமோ நம்ம கைக்கு வசப்படல. 'சரி நான் பால் கறக்குறேன்... நீ எடுத்துட்டுப் போய் ஊத்து!’னு சொன்னார். சந்தோஷமா சைக்கிள்ல கௌம்பிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு பொண்ணு சைக்கிள்ல வந்து பால் ஊத்துறது... ஏரியாக்காரங்களுக்கு ஆரம்பத்துல ஆச்சர்யமாதான் இருந்துச்சு. என்னோட பேச்சு, நேரம் தவறாத தொழில் நேர்த்தி, நம்பிக்கையான குணம் எல்லாம் நிறைய வாடிக்கையாளர்களை சேர்த்துச்சு. 10 வருஷத்துக்கு முன்ன, 'சைக்கிள மிதிச்சு மிதிச்சு பாதமே தேய்ஞ்சு போச்சு. டி.வி.எஸ்-50 வாங்கினா என்ன?’னு தோணுச்சு. வீட்டுக்கார ரும், புள்ளைகளும் 'சூப்பர் ஐடியா!’னு சொல்ல, நான் டூ-வீலர் பால் காரம்மா வான கதை இதுதான். வியாபாரமும், வாழ்க்கையும் நல்லா போயிட்டு இருக்கு!'' எனும் விஜயகுமாரி, தொழிலில் வைத்திருக்கும் அர்ப்பணிப்பு ஆச்சர்யமானது.

வறுமைக்கு விடை கொடுத்த பால் !

''எனக்கு மூணு பையன்க. 25 வருஷத்துக்கு முன்ன ஒரு பொம்பளப் புள்ள பொறந்து இறந்துடுச்சு. ஒரு வயசு இருக்கும்போது அம்மை நோய் வந்துடுச்சு. எப்படியாச்சும் பொழைக்க மாட்டாளானு ராத்திரி எல்லாம் கண்ணு மூடாம பக்கத்துலயே இருந்தேன். காலையில கண்ணை மூடிட்டா. அழுது ஆத்தக்கூட நேரமில்லாம, என் மத்த புள்ளைகளுக்கு எல்லாம் தெரியாம, ஒரு துணியப் போட்டு மூடி ஓரமா வெச் சுட்டு, பால் ஊத்தக் கௌம்பிட்டேன். பொறந்த கொழந்தையில இருந்து படுக்கையில கெடக்குற பெரியவங்க வரை பாலுக்காக காத்துட்டு இருப்பாங்க. ஒரு கொழந்தைக்காக, ஊருல இருக்குற கொழந்தைங்க பாலில்லாம அழணுமானு மனசை கல்லாக்கிட்டுப் போனவ, கண்ணீரைத் தொடைச்சுக்கிட்டே வீடு வீடா பால் ஊத்தினேன்.

வீடு வந்து சேர்ந்தப்போ... நான் அழுத அழுகை, அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். இப்படி எல்லாம் வருத்திப் பார்க்கிற இந்தத் தொழில், கண்டிப்பா நம்மள நல்ல நிலைக்குக் கொண்டு வரும்னு காத்திருந்தேன்'' எனும் விஜயகுமாரியின் நம்பிக்கை, மெய்யாகிவிட்டது!

மூத்த மகன், தனியார் டிராவல்ஸ் நிறுவன டிரைவர்; இரண்டாவது மகன், எம்.பி.ஏ. முடித்து ஐ.டி. நிறுவன வேலையில்; மூன்றாவது, மகன் மெரைன் இன்ஜினீயரிங் முடித்து, லண்டன் கப்பலில் வேலை என செட்டில் ஆகியுள்ளனர்.

''இப்ப மனசு நிறைஞ்சு போச்சு. 'புள்ளைங்கதான் தலை எடுத்துட் டானுங்களே... இன்னும் எதுக்கு இந்தப் பால் சொம்பத் தூக்கிட்டு திரியற’னு சிலர் கேட்குறாங்க. உழைச்ச ஒடம்புக்கு உட்கார புடிக்குமா..? அதி காலை 3 மணிக்கு எழுந்தா, ராத்திரி 10 மணி வரைக்கும் வேலை இருந்துட்டேதான் இருக்கும். சொந்த வீடாப் போயிட்டாலும், இருக்குற இத்துனூண்டு எடத்துல மாடுகளக் கட்டி வெச்சுப் பராமரிக்கணும். ஹோல்சேல் கடையில புண்ணாக்கு, தவிடு, கம்புனு தீவனம் வாங்குறது, பூந்தமல்லிக்குப் போய் வைக்கோல் வாங்குறது, காய்கறிக்கடைகள்ல மீந்து போன காய்களை வாங்கிட்டு வர்றது, மாடு, கன்னுகளை கவனிக்கிறது, பால் ஊத்துறதுனு ஓடிக்கிட்டே இருக்கோம்.

முன்ன 20 எருமை மாடுகள் இருந்தது. இப்போ அதை எல்லாம் வித்துட்டு, ஆறு சிந்தி மாடுகள் வாங்கிக் கட்டியிருக்கோம். ஒரு மாடு 30 ஆயிரம் ரூபாய் விலை. காலையில 50 லிட்டரும், சாயங்காலம் 50 லிட்டரும் கறக்குறோம். ஒரு லிட்டர் 28 ரூபாய்க்கு விக்கிறோம்'' என்று கணக்குச் சொன்னார் விஜயகுமாரி.

''பொங்கல் வேலை நெறையாக் கெடக்கு. அதுவும் மாட்டுப் பொங்க லுக்கு எங்க வீட்டு 'ஹீரோயின்கள்’ எல்லாம் குஷி ஆயிடுவாங்க!'' என்று மாடுகளைப் பார்த்துச் சிரித்தவர்,

''வறுமைக்கு நடுவுல புள்ளைகள வளர்க்குறவுகளுக்கு, 'பால் ஊத்தியே புள்ளைகளக் கரை சேர்த்துடுச்சே இந்தம்மா..!’னு நான் ஒரு நம்பிக்கையா தெரிவேன்ல.?!'' என்றார் தன் 'ஹீரோயின்களை’க் கட்டிக்கொண்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism