Published:Updated:

மயிலிறகு மனசு !

உள்ளத்தை வருடும் நெகிழ்ச்சித் தொடர் தமிழச்சி தங்கபாண்டியன் படம் : எம்.உசேன்

மயிலிறகு மனசு !

உள்ளத்தை வருடும் நெகிழ்ச்சித் தொடர் தமிழச்சி தங்கபாண்டியன் படம் : எம்.உசேன்

Published:Updated:

கிராமத்தில் பண்டிகை என்றால் அது பொங்கல்தான்!
'தீஞ்ச தீபாவளி வந்தா என்னா?
காஞ்ச கார்த்திகை வந்தா என்னா?
மவராச(ன்) பொங்க வரணும்
மண்டி போட்டுத் திங்கணும்’

##~##

- இப்படி பொங்கலைப் பற்றித் தனது 'மல்லி’ புதினத்தில் எழுதிய பேராசிரியை சரசுவதியைச் சந்திக்கச் சென்றது... மார்கழியின் ஒரு பின் மாலைப்பொழுதில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வா, பொண்ணே...'' என்ற அவரது வாஞ்சைக் குரலோடு, அழகாக வெட்டி வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் பழத்துண்டுகளைக் கொடுத்தார். பன்முக ஆளுமை கொண்ட அவரது திருவான்மியூர் வீடு 'தோழமை’ எனும் பெயர்ப்பலகை தாங்கி, மிகையற்ற எளிமையுடன் சிரித்தது - அவரைப் போலவே.

முற்போக்குச் சிந்தனையாளர், பெரியாரின் பெண்ணியக் கருத்துக்கள் மீது பெரும் ஈடுபாடும், பங்களிப்பும் கொண்டவர், மனித உரிமை ஆர்வலர், செயல்பாட்டாளர் என்று நான் வியந்து நோக்கும் பல முகங்கள் கொண்ட அவர் எனக்கு அறிமுகமானது, ராணிமேரிக் கல்லூரியில்தான். என்னைப் போல் புதிதாய்ப் பணியில் சேர்ந்த விரிவுரையாளர்களுக்கு அவரது இயல்பான அணுகுமுறையும், வாஞ்சையும், அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்தினாலும், நான் அவரைப் பெரிதும் மதிக்கத் துவங்கியது அவரது போராட்டக் குணத்துக்காகவும், 'சமரசமற்ற சரசுவதி’யாக அவர் தனக்கெனப் பொதுவாழ்வில் இன்று வரை நேர்கொள்கின்ற நெறிகளுக்காகவும்தான்!

வீட்டின் வரவேற்பறை அலமாரியில்... கம்பீரமாகத் தலைவர் பிரபாகரன் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் புகைப்படம். அருகிலேயே கிட்டு அண்ணனும், பேபி அண்ணனும். 'ஈழம்’ எனும் புள்ளியிலேயே உரையாடல் துவங்க, பேபி அண்ணனுடனான தனது பல வருடங்களுக்கு முந்தைய சந்திப்பை நினைவுகூர்ந்தார்.

மயிலிறகு மனசு !

இரவு மெல்ல நுழைந்து கொண்டிருந்த அந்த அறையில் வலியும், துயரமும் கலந்து ஒலித்தது அவரது குரல். கண்கள் முள்ளிவாய்க்காலின் கடைசிச் சிலுவையின் ரத்தம் சுமக்க, தான் 'பொடா’ கைதியாக்கப்பட்ட கணங்களை விவரித்தார். இன்று வரை மாறாத ரணமாய், தான் பேபி அண்ணனின் குடும்பத்தினர் குறித்துத் தகவலற்றுத் தவிப்பதைச் சொல்லியபடி, பேபி அண்ணனின் மனைவி, குழந்தையுடனிருக்கின்ற தனது புகைப்படத்தைப் பார்த்தார்.

வரலாற்றின் மாபெரும் மானுடத் துயரமொன்றின் போராட்டக் களத்தைக் கண்ணுற்றவரும், அதன் பல்வேறு காலகட்டங்களில் உடனிருந்து, சிறை சென்றவருமான அவரது உக்கிரப் பெருமூச்சின் முன், எனது முகமூடி கிழிய, நான் மௌனித்திருந்தேன்.

என்னை இலகுவாக்குவதற்கான யத்தனத்துடன் எங்களது கல்லூரி கால நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். அவருடைய மென்குரலை இடைமறித்து, அவருடைய இளமைக்காலம் குறித்துக் கிளறினேன். அவரது முதல் புதினமான 'மல்லி’ ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது தவறவிடாத ரசிகை நான் என்றவுடன், சத்தமாகச் சிரித்தார். அதே சிரிப்புடன், அவர் எனது முதல் கவிதைத் தொகுப்பான 'எஞ்சோட்டுப் பெண்’ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதைச் சொன்னேன். தொடர்ந்து என் பயணத்தில் ஒரு வழிகாட்டிப் பலகையெனவும், தோழமையின் நிழலெனவும் இருக்கின்ற அவர் கொடுத்த ஆப்பிள் பழத்துண்டுகள், ஏனோ மிக இனித்தன.

சேலம் மாவட்டம், அம்மம்பாளையம் எனும் சிறு கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் கடைக்குட்டிப் பெண்ணாகப் பிறந்து, தத்துவத்தில் பட்டம் பெற்று, தர்க்கவியல், சமூக அறிவியல் துறைகளில் பேராசிரியையாகப் பணியாற்றியவர்! ராணிமேரிக் கல்லூரியில் சமூக அறிவியல் துறைத் தலைவராக அவர் பொறுப்பு வகிக்கையில், கல்லூரி ஆசிரியர் மன்றங்களில் முறையாகத் தேர்தல் மூலம் பொறுப்புகளுக்கு வருதலைச் சாத்தியப்படுத்தியவர்! சென்னைப் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு உறுப்பினர், செனட் உறுப்பினர், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், ஆசிரியர் மன்றம்... இவற்றில் பொறுப்பு வகித்தவர்! வன்முறை, அடக்குமுறைக்கு எதிரான உண்மை அறியும் குழுக்களில் உறுப்பினர்! இப்படி நீளும் ஆச்சர்யக் குறிகளிலேயே என்னை அதிகம் கவர்ந்த பெரிய ஆச்சர்யக்குறி, அவருடைய மனித உரிமைச் செயல்பாடுகளும், பெரியாரின் வழி நடக்கின்ற பெண்ணியச் செயல்பாடுகளும்தான்!

நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை ஒவ்வொன்றாக எனக்கு எடுத்துத் தந்தார். ஒவ்வொரு துண்டுக்கும் ஒரு பகிரலென இனிக்கத் தொடங்கியதால், இரவும் எங்களோடு வந்து சத்தமின்றி அமர்ந்து கொண்டது. மிக இளவயதில் விதவையான தனது தாயின் வெள்ளைப் புடவையிலிருந்து வெளிவந்தது, அவரது கறுப்பு - வெள்ளை நினைவுகள். முற்றிலுமாகத் திருமணம், குடும்பம், குழந்தை - இவற்றை மட்டுமே சார்ந்திருந்தவர் அவருடைய அம்மா. கணவரின் மறைவுக்குப் பின்னர், கைம்பெண் வாழ்வினைக் கேள்விகளற்று ஏற்றுத் தன்னைப் பலியிட்டுக் கொண்ட தன் அம்மாவின் நிலை கண்டு, குமுறிச் சூல் கொண்டதே, பெரியாரின் மீதான பற்று என்றார்.

தன் அண்ணன் ஜெகன்னாதன் ஒரு தந்தையெனத் தன்னை வழிநடத்தியதைச் சொல்கையிலும், தன் அக்காவை என்னிடத்தில் அறிமுகப்படுத்துகையிலும் அதீத நெகிழ்ச்சியுடன்இருந்தது அவரது குரல். தன் தாத்தா ஒரு மளிகைக் கடை வைத்திருந்தாரெனவும், வியாபாரத்துக்கென அவர் கையாண்ட சில தந்திரங்களை, தான் சிறுமியாக இருந்தபோதும் கண்டுணர்ந்து வெறுத்துச் சண்டையிட்டதையும் சொல்கையில், குரலில் உறுதி கூடியிருந்தது.

ஓர் ஆசிரியையாகப் பணியில் சேர்கையில், 'எளிமையும், அறிவும் மட்டுமே உனது அடையாளமும், ஆயுதமுமாக இருக்க வேண்டும்’ என்ற தன் அண்ணனுடைய அறிவுரையைப் பகிர்ந்தபோது, குரல் சற்றுக் கம்மியது. நிலையில் மாட்டிஇருந்த அண்ணனுடைய புகைப்படத்தைப் பார்த்தேன். எல்லா அண்ணன்மாரும் ஏதோ ஒரு வகையில் அப்பாக்களின் சாயலில்தானே இருக்கிறார்கள்!

ஒரு கட்டுப்பாடான கிராமியச் சூழலில் பிறந்து, தன் தாயின் நிலைகண்டுத் துக்கித்துத் துவங்கிய சிறு பொறி, இன்று சமூகத்தில் எங்கெல்லாம் பெண்கள் ஒடுக்கப்படுகின்றார்களோ அங்கெல்லாம் சென்று பற்றி எரியும் தீப்பந்தமாயிருக்கின்ற வளர்ச்சி, என்னைப் பிரமிக்கச் செய்தது.

மார்கழி மாதமென்றால் அம்மாவுக்கு நினைவு நன்றாக இருக்குமெனவும், பாசுரங்களை மிகச் சரியாக முணுமுணுப்பார் எனவும் பேராசிரியை சொன்னார். மரபார்ந்த ஒரு சூழலிலிருந்து வெளிவந்து, மரபுகளை உடைத்து, அறிவின் தெளிவையும், உரிமையின் கௌரவத்தையும் அணிகலன்களாகக் கொண்டிருக்கின்ற அந்த எளிய, ஆனால் மிக உறுதியான பெண்மணி... நேரமாவதை உணர்ந்து, ''பார்க்கலாம், பொண்ணே!'' எனத் தோளணைத்து விடைகொடுத்தார்.

''சென்னையில் ஆப்பிள் பழங்கள் இத்தனை தித்திப்பாக கிடைப்பதில்லையே..?'' என்றேன்.

''இவை, கொடைரோட்டில் வாங்கியவை பொண்ணே!'' என்றார்.

அம்மம்பாளையத்திலிருந்து வந்ததுதான் பேராசிரியை சரசுவதி எனும் இந்த தீப்பழமும்! உள்ளும், புறமும் பகுத்தறிவும், எளிமையும் கனன்று சுடர்விடுகின்ற தீ - என்றாலும் அவர் எனக்கு எப்போதும் கூடுதலாக இனிக்கின்ற ஆப்பிள் துண்டுதான்!

வெளியே மார்கழிக் குளிர் பரவிவிட்டிருந்தது. மேகங்களற்ற இரவின் குளுமையைக் குடித்தபடி, நிலவின் சிறு கீற்று ஒருக்களித்துப் படுத்திருந்தது - கடித்த ஆப்பிள் துண்டென!

- இறகு வருடும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism