தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

சுத்தம் என்பது சாதிக்கவும் தூண்டும்! - சங்கீதா

சுத்தம் என்பது சாதிக்கவும் தூண்டும்! - சங்கீதா
பிரீமியம் ஸ்டோரி
News
சுத்தம் என்பது சாதிக்கவும் தூண்டும்! - சங்கீதா

நான் இந்தியன்

ளைகுடா நாடான ஓமன் அரசின் ஆலோசகராகப் பணிபுரிந்துகொண்டிருந்த சங்கீதா, தமிழகத்தின் கோவை நகரைச் சேர்ந்தவர். கடந்த 2016-ம் ஆண்டு தந்தையின் மரணத்துக்குப் பிறகு அவரது இறுதி ஆசையான `ஜென்ம பூமி’க்கான தன் சிறு பங்களிப்பு ஏதேனும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பணியை ராஜினாமா செய்துவிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 12 அன்று, பகல் 12 மணிக்கு மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து டாடா நிறுவனம் பரிசளித்த ஹெக்ஸா எஸ்யூவி கார் மூலம் தன் கனவை அடைய கிளம்பிவிட்டார்,

51 வயதான இளைஞி சங்கீதா. இந்தியா முழுவதும் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 150 நகரங்களைக் காரில் தனியாகக் கடந்து, ஒவ்வோர் ஊரிலும் தனிநபர் `க்ளென்லினஸ் ஆடிட்’ எனப்படும் சுகாதாரத்தை அளவிடும் தணிக்கை ஒன்றை மேற்கொண்டுவருகிறார் சங்கீதா. இந்தியா முழுக்கச் சுற்றப்போகும் `க்ளீன் இந்தியா ட்ரெயில்’ (cleanindiatrail.com) மூலம், இந்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டம் எந்த அளவுக்கு வெற்றிகரமாகச் செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அளவீடு செய்வதே இவரது எண்ணம்.

டாடா நிறுவனம் அளித்துள்ள ஹெக்ஸா காரை, தன் 24 சதுரஅடி வீடாக மாற்றியிருக்கிறார் சங்கீதா. கேரவன்போல வடிவு மாற்றம் செய்யப்பட்டுள்ள காரில், காய்கறி மற்றும் பழக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் பயோ-கியாஸ் அடுப்பு ஒன்றும் உள்ளது. ஒவ்வொரு நகரிலும் தான் விட்டுச்செல்லப்போகும் `கார்பன் ஃபுட்பிரின்ட்’டை மட்டுப்படுத்த, அந்தந்த நகரில் ஒரு மரக்கன்றையும் நடுகிறார். காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டுதான் இந்தப் பயணம் என்று கூறும் சங்கீதா, ``சுத்தமாக இருப்பதை தேசத்துக்குப் போதித்தவரின் நினைவைப் போற்றும்விதமாக இந்தப் பயணம் அமைவது பெரும் மகிழ்வு’’ என்று கூறுகிறார்.

சுத்தம் என்பது சாதிக்கவும் தூண்டும்! - சங்கீதா

``இந்தப் பயணம் ஆரம்பித்த நேரம் முதல் இப்போது வரை இந்த உலகத்தின் இரண்டு தைரியமான ஆண்கள் யார் என்றால், என் கணவரையும் மகனையும்தான் சொல்வேன். கணவர் ஸ்ரீதர் அபுதாபியிலுள்ள கல்ஃபார் இன்ஜினீயரிங் நிறுவனத்தின் சி.ஈ.ஓ. மகன் அஷ்வத் ஸ்ரீதர், அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படித்துக்கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் இந்தியாவில் இருக்கும் என் சகோதர சகோதரிகளை மட்டுமே நம்பி என்னை இந்த ஆறு மாத தனிமைப் பயணத்துக்கு வழியனுப்பி வைத்துள்ளார்கள். அவர்கள், இன்றும் என்னைத் தினமும் தொடர்புகொண்டு, என்ன பார்த்தாய், யாரைச் சந்தித்தாய் என்று மட்டுமே கேட்கிறார்கள். துளியளவுகூட பயம் இல்லை. அந்த அளவுக்கு இந்தியாவின் சகோதர சகோதரிகள் மீது எங்கள் குடும்பத்துக்கு நம்பிக்கை!'' என்கிற சங்கீதாவுக்கு, வண்டியிலேயே தங்குவதும் புதிது கிடையாது.

``லேண்ட் க்ரூஸர் வண்டியை  அவ்வப்போது எடுத்துக்கொண்டு பாலைவனங்களில் செல்வதுண்டு. ஏதாவது வியூ என் மனதைத் தொட்டால், அங்கேயே கூடாரம் அமைத்து இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை திரும்புவது வாடிக்கையான ஒன்றுதான்'' என்கிறவரின் பயணத்துக்கு சமூக வலைதளங்களும் துணைபுரிகின்றன. 

``முகநூல் மற்றும் சோஷியல் மீடியாக்களில் பகிரும் பதிவுகள்தாம் நான் குடும்பத்தினருக்குத் தகவல் சொல்லும் வழி. காரில், `மேப் மை இந்தியா’வின் டிராக்கிங் மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நான் எங்கு இருக்கிறேன் என்பதைக் குடும்பத்தினரும் மருத்துவர் குழுவும், என் பயணத்தை நிர்வகிக்கும் ரவுட்டிங் டீமும் கண்காணிக்கிறார்கள். என் கணவரும், `இன்று சனிக்கிழமை. நீ இருக்கும் இடத்துக்கு அருகில்தான் யுனேஸ்கோ சைட் இருக்கிறது. போய் வாயேன்’ என்று சொல்வதுண்டு. இப்படி, தொழில்நுட்பம் எந்த அளவுக்குக் குடும்பத்தை எனக்கு அருகில் வைக்கிறது என்பதை உணர்கிறேன். தனியாகப் போகும் பயமே எனக்கு இல்லை. எப்போது வேண்டுமானாலும் ஒரு வாட்ஸ்அப் காலில் குடும்பத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்கிற தைரியத்தில் தனியாகப் பயணிக்கிறேன்'' என்கிறவரின் பார்வையில் ஸ்வச் பாரத்  எப்படி பளிச்சிடுகிறது?

``ஸ்வச் பாரத்  என்பது, ஓர் அரசுத் திட்டம் என்பதைத் தாண்டி,  மக்களின் இயக்கமாகவே மாறிவிட்டது என்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். ஐ.நா சபையின் `சஸ்டெயினபிள் டெவலப்மென்ட் கோல்ஸ்’ திட்டத்தின் ஆறாவது இலக்கு, தண்ணீர் மற்றும் துப்புரவு பற்றியது. உலகின் ஒவ்வொரு நாட்டையும் தன் அளவுகோளின்படி ஆய்வுசெய்து வருகிறது ஐ.நா. இந்தத் திட்டத்தை மனதில்கொண்டே ஸ்வச் பாரத் திட்டம் இங்கு அமல்படுத்தப்பட்டது. எந்தவோர் அரசியல் அல்லது நிறுவனத்தின் சார்பும் இல்லாமல், தனியாக நான் செய்யும் இந்த `எக்ஸ்பீரியன்ஷியல் ஆடிட்’டுக்கு மதிப்பு உண்டு'' என்கிற சங்கீதா, `இ-கவர்ன்மென்ட் கன்சல்டன்ட்’ என்பதால், உலக வங்கி மற்றும் ஐ.நா அறிக்கைகள் சார்ந்து பல திட்டங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

``நான் இப்போது மேற்கொள்ளும் கழிவறைகளின் தனிநபர் தணிக்கைக்கு, நல்ல ரேங்கிங் கொடுத்து இதை வலுவான ஓர் ஆதாரமாக ஐ.நா எடுத்துக்கொள்ளும். என் பணியால், இந்தியாவின் மதிப்பு கூடினால் அது மிகவும் நல்லதுதானே?

உணவுப்பொருள்களுக்கு எப்படி அக்மார்க் முத்திரை இருக்கிறதோ, அதுபோல நான் கடக்கும் ஒவ்வோர் ஊரிலும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் பொதுக் கழிவறைகளை என் தேவைக்குப் பயன்படுத்தி, அதற்கு சர்வதேசத் தரக்கட்டுப்பாட்டு விதிகளின்படி தணிக்கை செய்கிறேன்.

சுத்தம் என்பது சாதிக்கவும் தூண்டும்! - சங்கீதா

ஜி.பி.எஸ் புள்ளிகள், புகைப் படங்கள், ஒவ்வொரு டாய்லெட் டுக்கும் ஐம்பது கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை நிதானமாக நிரப்புகிறேன்'' என்கிறவருக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது?

``எங்கு நிறுத்திக் கேட்டாலும் மக்கள் சரியாக வழிகாட்டுகிறார்கள். இரவு 11 மணி வரை பயமின்றி ஹைவேக்களில் தனியாக என்னால் வண்டி ஓட்ட முடிகிறது. எனது `க்ளீன் இந்தியா ட்ரெயில்’ நிச்சயம் உலகின் மிகப் பிரமாண்ட தனிநபர் துப்புரவுப் பயணம். பெட்ரோல் பங்க் ரசீதுகள், டோல் ரசீதுகள், சிறு கடைகளின் பில், சர்வீஸ் ஸ்டேஷங்களின் பில் என, இந்தப் பயணத்தை ஓர் உலக சாதனையாக்கும் அத்தனை ஆதாரங்களையும் திரட்டிக் கொண்டிருக்கிறேன். லிம்கா சாதனைப் புத்தகம் அல்லது கின்னஸ் சாதனைக்கான என் முனைப்பு இது.

அந்தந்த ஊர் மக்களைப் போன்றே உண்டு, உடுத்தியிருப்பதால் என் சொந்த ஊரின் பெயரைச் சொல்லவே தயக்கமாக இருக்கிறது. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்றோ, தெலுங்கு மொழி பேசி வளர்ந்தவள் என்றோ, வளைகுடா நாட்டில் வசித்துவருகிறேன் என்பதையோ இப்போது சொல்வதில்லை. யார் கேட்டாலும், `நான் இந்தியன்’ என்று பெருமையுடன் சொல்கிறேன். ஜீன்ஸ், டி-ஷர்ட் அணியாமல், அந்தந்த ஊரின் பெண்களைப்போல உடையணிந்து செல்வதால், சாதாரணமான பெண் ஒருவர் இந்தப் பயணம் மேற்கொண்டாலும் பாதுகாப்பான, சுத்தமான பயணத்தை மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையைப் பிறருக்கும் தர வேண்டும் என விரும்புகிறேன்'' என்கிற சங்கீதா, இரண்டாண்டுகளாக இந்தப் பயணத்துக்கான திட்டத்தைப் பொறுமையுடன் தீட்டியிருக்கிறார். இந்தத் திட்டமிடலால்தான் `இன்கிரெடிபிள் இந்தியாவின் தூதர்’ என்கிற தனித்துவத்தை  இவருக்கு இந்திய அரசின் சுற்றுலாத் துறை  அளித்திருக்கிறது.

``பவகடாவில் உள்ள இந்தியாவின் பெரிய சோலார் பிளான்ட்களில் ஒன்று, சனந்த் என்ற குஜராத்தின் முதல் எலெக்ட்ரானிக் வண்டிகளின் தொழிற்சாலை. தோலாவீராவில் உள்ள ஹரப்பா நாகரிக எச்சங்கள் என நான் இதுவரை பார்த்த இடங்கள் அனைத்தும் பிரத்யேகச் சிறப்புடன் இருக்கின்றன'' என்கிறவர், தன் சொந்தப் பணத்தில்தான் அத்தனை செலவுகளையும் செய்துகொள்கிறார்.

``இந்தியாவின் மக்கள் அனைவரும் எனக்குத் துணை நிற்கின்றனர். காந்தியின் கனவு, அவரது 150-வது ஆண்டில் நிறைவேறியிருக்கிறது என்பதை இந்த ஆறு மாதப் பயணத்தின் முடிவில் ஆணித்தரமாக நிரூபித்துவிடலாம் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது'' என்கிறவரின் வேண்டுகோள் இது...

``எனக்காக உங்கள் பிரார்த்தனைகளில் சிறு இடம் கொடுங்கள். நான் வரும் இடங்களில் என்னைச் சந்தியுங்கள். புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். இந்தியாவின் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தப் பயணத்தைச் சமர்ப்பிக்கிறேன். இதுபோன்ற அவர்கள் கனவுகள் எதுவானாலும் அவர்கள் அதை நனவாக்க முயல வேண்டும். இந்தியாவுக்கான என் சிறு பணி இது என்ற திருப்தியும் பெருமையும் கொள்கிறேன்’’ என்று  நிறைவு செய்கிறார் சங்கீதா.

காந்தியின் கனவு நனவாகட்டும்!

- நிவேதிதா லூயிஸ்