Published:Updated:

“விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அம்மா பத்மஸ்ரீ விருதை என் கையில கொடுத்ததும்...'' - நெகிழும் கல்லூரி மாணவி சிவசங்கரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அம்மா பத்மஸ்ரீ விருதை என் கையில கொடுத்ததும்...'' - நெகிழும் கல்லூரி மாணவி சிவசங்கரி
“விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அம்மா பத்மஸ்ரீ விருதை என் கையில கொடுத்ததும்...'' - நெகிழும் கல்லூரி மாணவி சிவசங்கரி

"அம்மா பத்மஸ்ரீ விருதை என் கையில கொடுத்து பார்க்கச் சொன்னப்போ உடம்பெல்லாம் அப்படியே புல்லரிச்சுப் போயிடுச்சு. 'நீ எழுதின கவிதையும் எங்களுக்கு இந்த விருதுக்குச் சமமா தெரியுதும்மா'ன்னு ஐயா சொன்னப்போ நான் உடைஞ்சு அழுதுட்டேன்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ம் சந்ததியினர்க்கு
எமது முப்பாட்டன் இசைத்த 
பறையிசைக்கு;

திண்ணைக் கிழவிகள் 
வாய் சமைத்த 
குலவைக்கு;

அவள் காதுகளில் 
ஆடும் தண்டட்டிக்கு,

குமரிப் பெண்களின் 
கும்மிக்கு;

அவள் கைகளில் குலுங்கும் 
சங்கு வளையலுக்கு;

இது அந்தக் கவிதையின் சில வரிகளே. மேற்கண்ட இவ்வரிகள் நாட்டுப்புற இசைக்காகப் பத்மஸ்ரீ விருது பெற்ற விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அம்மாவிற்காகக் கல்லூரி மாணவி சிவசங்கரி என்பவர் எழுதியவை. தமிழ் பாரம்பர்யமும் கிராமிய மண் மணமும் கமகமக்க முத்து மணி எழுத்துகளால் கவி மாலை தொடுத்திருக்கிறார் சிவசங்கரி. 

“எங்களோட நாற்பது வருட உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்தான் பத்மஸ்ரீ விருது. அடுத்த மாதம் 25 ஆம் தேதி வந்தா சரியா ஒரு வருஷம் ஆகிடும். இப்போ நினைச்சாலும் ஆச்சரியமாத்தான் இருக்கு. ஏன்னா, நாங்க இதுவரை எந்த ஒரு விருதுக்கும் விண்ணப்பம் கொடுத்ததே இல்ல. 'என் கடன் பணி செய்து கிடப்பதே'ன்னு திருநாவுக்கரசர் சொல்ற மாதிரி நாங்க பாட்டு, எழுத்து, ஆராய்ச்சின்னு போய்க்கிட்டே இருக்கோம். ஆனாலும், உரிய பருவம் வரும்போது இதுமாதிரியான கௌரவமிக்க விருதுகள் எங்களைத் தேடி வந்துடுது. அதை இறைவனோட அருள்னுதான் சொல்லணும். ஒருபக்கம் விருதுகள் கிடைச்சாலும் நம்ம கலையும் நாகரிகமான பண்பாடும் நம்ம தமிழ்ச் சந்ததியினரிடம் சரியா போய்ச் சேர்ந்துடணும்னு நானும் விஜயலட்சுமியும் நினைப்போம். சிவசங்கரி மாதிரியான இளைஞர்களைப் பார்க்கும்போது அந்த எண்ணத்துக்கு கூடுதலா வலு சேருது” என்கிறார் நவநீதகிருஷ்ணன் ஐயா. 

“சிவசங்கரி வீட்டுக்கு வந்ததும் எங்க ரெண்டு பேருக்கிட்டயும் ரொம்ப அன்பா நடந்துக்கிச்சு. 'அம்மா, நான் ஒரு சாதாரண கூலித்தொழிலாளியோட மக. உங்களைப் பார்க்க வரும்போது வெறும்கையோட வரக்கூடாதுன்னு நினைச்சு இந்தக் கவிதையை எழுதிட்டு வந்திருக்கேன். எனக்கு கிடைச்ச வரம் கவிதை எழுதுறதுதான். நீங்க படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க'ன்னு சொன்னுச்சு. நாங்க அந்தக் கவிதையை வாசிச்சதும் அப்படியே மண் வாசனை எங்க காதுகள்ல ஒலிக்கிற மாதிரி இருந்துச்சுய்யா. அவ்வளவு பிரமாதமா எழுதியிருந்துச்சு. அப்போ இருந்தே சிவசங்கரியை எனக்கு ரொம்ப புடிச்சு போயிடுச்சு. ரெண்டு பேரும் இப்போ அம்மா பொண்ணு மாதிரி ஆகிட்டோம்” விஜயலட்சுமி அம்மா மெல்லிய குரலில் பூரிப்போடு சொல்ல, “அதுதான் நான் செய்த பாக்கியம் அம்மா” என்றபடியே பக்கத்தில் அமர்ந்திருந்த சிவசங்கரி தொடர்கிறார். 

“நான், மதுரை இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் காலேஜ்ல எம்.எஸ்.டபிள்யூ படிக்கிறேன். ஸ்கூல் படிக்கும்போது டான்ஸ் ஆடணும்னு சொன்னாலே எல்லோரும் அம்மா பாடின 'தோட்டுக்கடை ஓரத்திலே' பாட்டைத்தான் செலக்ட் பண்ணுவாங்க. தமிழ்நாடு முழுக்க அந்தப் பாட்டு அவ்ளோ ஃபேமஸ். அப்போவே நான் அம்மாவைப் போய்ப் பார்க்கணும்னு ஆசைப்பட்டுருக்கேன். ஆத்துக்குக் குளிக்கப் போகும்போது, 'இதுதான் அம்மாவோட வீடு'ன்னு அப்பா காட்டுவாங்க. ஒரே ஊருலதான் இருந்திருக்கோம். ஆனா, இதுவரை ஐயாவையும் அம்மாவையும் சந்திச்சது கிடையாது. சமீபத்துல என் அப்பா, ஐயாவை சந்திச்சு, 'எம் பொண்ணு உங்களைப் பார்க்கணும்னு சொல்றா. கூட்டிட்டு வரலாமா'ன்னு கேட்டுருக்காங்க. ஐயாவும் தாராளமா வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. தமிழ்ப் பண்பாட்டுக்காகவும் பாரம்பர்யத்துக்காகவும் தங்களோட வாழ்க்கையையே அர்ப்பணிச்சவங்க அவங்க. இப்போதும் கிராமியக்கலைக்காக ஆத்மார்த்தமா பணி செய்துட்டு இருக்காங்க. அப்படிப்பட்டவங்களைப் பார்க்கப் போகும்போது வெறும் கையோட போகக்கூடாதுன்னு நினைச்சு கவிதை எழுதிட்டுப் போனேன்.

அம்மா என்னை அவங்க பக்கத்துல உக்கார வெச்சு ரொம்ப மரியாதையா நடத்துனாங்க. ரெண்டு பேரும் தமிழ் சார்ந்து நிறைய பேசிட்டு இருந்தோம். அவங்களோட பொண்ணு மாதிரி என்னைய பக்கத்துலயே வெச்சிக்கிட்டாங்க. அம்மா பத்மஸ்ரீ விருதை என் கையில கொடுத்து பார்க்கச் சொன்னப்போ உடம்பெல்லாம் அப்படியே புல்லரிச்சுப் போயிடுச்சு. 'நீ எழுதின கவிதையும் எங்களுக்கு இந்த விருதுக்குச் சமமா தெரியுதும்மா'ன்னு ஐயா சொன்னப்போ நான் உடைஞ்சு அழுதுட்டேன். நான் சின்னப் பொண்ணு. என்னை என்கரேஜ் பண்றதுக்காகக்கூட அவங்க அப்படி சொல்லியிருக்கலாம். ஆனாலும், பத்மஸ்ரீ வாங்கின வேற யாராவது இப்படி சொல்லுவாங்களானு தெரியல. அந்த நிமிஷம்தான் நாமளும்  நம்ம மண்ணுக்கு ஏதாவது பண்ணனும்னு உறுதியா நினைச்சேன். அம்மாவோட கைய இறுகப் பிடிச்சிக்கிட்டேன். அவங்களும் என்னை விடவே இல்ல. 'நீ என்னோட பொண்ணு மாதிரி. நீ உன் வாழ்க்கையில எடுக்கிற முடிவுகள்ல இனி எனக்கும் பங்கு இருக்கு'ன்னு அம்மா சொன்னதை என்னிக்கும் நான் மறக்கவே மாட்டேன்” சிவசங்கரியின் விழியோரம் நீர் கசிய அதைத் துடைத்துக்கொண்டவர் இறுதியாக,

“அம்மாவையும் ஐயாவையும் பார்த்துட்டு வந்த பிறகு மண் சார்ந்த கலைகளையும் பாரம்பரிய விளையாட்டுகளையும் தொடர்ந்து பதிவு பண்ணலாம்னு இருக்கேன். நான் பி.எஸ்.டபிள்யூ படிக்கும்போது விழிப்புஉணர்வுகள் சார்ந்த தெருக்கூத்துகள் நிறைய பண்ணியிருக்கேன். இனி நம்ம மண் சார்ந்த கலைகளைப் பாதுகாக்கத் தேவையான விழிப்புஉணர்வைத் தெருக்கூத்தாக மக்கள்கிட்ட கொண்டு போவேன். என் கல்லூரியில் அனுமதி வாங்கி முன்பு விட்ட பயணத்தை மீண்டும் தொடருவேன். இனி மதுரையிலுள்ள வீதிகள் தோறும் என் தெருக்கூத்து அரங்கேறும்” என்கிறார் புத்துணர்ச்சியுடன். 

நமது மரபு சார்ந்த பாரம்பரித்தையும் கலாசாரத்தையும் வழி வழியாகத் தொடர சிவசங்கரியைப் போன்ற இளைஞர்கள் ஏராளமானோர் முன் வரும்போது எட்டுத் திக்கெங்கிலும் தமிழரின் புகழ் மணம் வீசும். 

பத்மஸ்ரீ விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அம்மாவிற்காக சிவசங்கரி எழுதிய கவிதையை முழுவதுமாகப் படிக்க... 

சில பூக்களைக் 
கதிரவன் அவிழ்ப்பான்;

சிலவை 
தன் நிலவின் 
கீற்றுபட்டு அவிழும்;

சிலவற்றைத் 
தென்றல் காற்று உரசிச் செல்லும்
சிலவையோ,
வண்டினத்தின் முத்தத்திற்காகவே
இதழ் விரிக்கும்.

ஆனால், 
வசீகரம் கொண்ட பல பூக்களை
ஓவியனின் 
தூரிகையால் மட்டுமே அவிழ்க்க முடியும்.

குழலிசை,
யாழிசை, 
கூவும் குயிலிசை,
கத்தும் கடலிசை,

சலசலக்கும் நதியின் இசை,
காதல் இளைப்பாறுதலின் 
மெல்லிசை, 
வான் பிறந்து 
மண் சேரும் 
மழைத் துளியின் துல்லிசை, 
இவை அனைத்தையும்விட 
நம் மனதிற்கு 
நிம்மதி தருவது

தாயின் தாலாட்டிசை
மட்டுமே;

உங்கள் பாடல்களும் 
எம் தமிழுக்குக் கிடைத்த 
தாலாட்டுதான். ஆம்;

உறங்கச் செய்வதல்ல
உறங்கியது போதுமென
எம்மை விழித்தெழச் செய்யும்
வீரத் தாலாட்டு. 

உங்களுக்குக் கிடைத்த 
பாராட்டு. 
உங்கள் சங்கீதத்திற்கு அல்ல

நம் சந்ததியினர்க்கு
எமது முப்பாட்டன் இசைத்த 
பறையிசைக்கு;

திண்ணைக் கிழவிகள் 
வாய் சமைத்த 
குலவைக்கு;

அவள் காதுகளில் 
ஆடும் தண்டட்டிக்கு,

குமரிப் பெண்களின் 
கும்மிக்கு;

அவள் கைகளில் குலுங்கும் 
சங்கு வளையலுக்கு;

உழைப்பின் நிறமா?
இல்லை,

வறுமையின் நிறமா?
என 
அறிய முடியாத,

கீழ் வானச் சிவப்புத் தாவணிகளுக்கு,
பின் கொசுவச் சேலைகளுக்கு;

எங்கள் ஏர்க்கலப்பைகளுக்கும்,
இரட்டைச் சோடி மாட்டு வண்டிகளுக்கும்,
ஏர் பிடித்து ஏற்றம் கண்ட
தோள்களுக்கு;

அவற்றின் கிடுக்கு பிடிக்குள்
அடங்கக் காத்திருக்கும்
வாடிவாசல் காளைகளுக்கும்,

கேப்பைக் கூழிற்கும்,
கம்மங்களிக்கும்

உப்புக் கருவாட்டிற்கும்,
கருப்பட்டிக் காப்பிகளுக்கும்

விருந்தோம்பலின் 
கண்ணியம் காக்கும்
தாம்பூலத்திற்கும்;

கண்ணியம் மாறாத
தாம்பத்தியத்திற்கும்;

மருதாணிக் கால்களுக்கும்,
மரப்பாச்சி பொம்மைகளுக்கும்,

பல்லாங்குழிக்கும்,
பனையோலையுள் பதனீருக்கும்

பம்பரச் சட்டைகளுக்கும்,
செம்முத்துக்கள் விளையும்
வய கடலுக்கும்,

ஊர் காக்கும் அய்யனார்களுக்கும்,
மாரி கொடுக்கும் மாரிம்மாக்களுக்கும்,
ஒற்றைப் பன கொடுக்கும் மரப்பேய்களுக்கும்,

அன்பு மட்டுமே நிறைந்த 
கூட்டாஞ் சோறுக்கும்

தோகைச் சிறுமிகள் பாடும் 
மாத்தான் முழுக்கு
பாவை இலக்கியமாய்ப் படைத்த
கோதை ஆண்டாளுக்கும்;

தமிழ் பண்பாட்டிற்கும்;
பாரம்பர்யத்திற்கும்,
தமிழ் மண் வாசனைக்கும் கிடைத்த 
அங்கீகாரம்.

சாதியால், 
இனத்தால்,
பிரிந்து கிடந்த
தமிழினம்,

உங்கள் இசையால்
இணைந்து கைகோர்க்கும்.

உங்கள் பாடல்கள் 
எங்கள் காதுகளில் 
தோடுகளாய் மட்டுமல்ல;

மனங்களில் 
விதைகளாக விதைக்கப்பட்டுள்ளன.

விழுந்த விதை 
விருட்சமாகும்

எங்கள் தமிழ்ச் சமுதாயம் 
இளைப்பாற,
உங்களுக்குக் கோடான கோடி
நன்றிகள்.

உறங்கிக் கிடந்த 
எனது எழுதுகோலை
விழித் தெழச் செய்தமைக்காக,

உங்கள் சங்கீதம் கலையல்ல
கதை!
வாழ்வியலின் வரலாறு;

எமது தமிழ் மொழியால்
உங்கள் இசைமொழியை
வணங்குகிறேன்.

நமது வரலாற்றைப் பதியமிட்டமைக்காக
வரையப்படாத ஓவியங்கள் உள்ளவரை
ஓவியனின் தூரிகை
வரைந்து கொண்டேயிருக்கும்.

உலகம் உள்ளவரை,
தமிழ் வரலாறு பதியப்பட்டுக் கொண்டிருக்கும்
உங்கள் குரலால்.  

- சிவசங்கரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு