Published:Updated:

வினை தீர்க்கும் விரதங்கள் !

வைகுண்ட ஏகாதசிசாரதா நம்பி ஆரூரன்ஓவியம் : மணியம் செல்வன்

வினை தீர்க்கும் விரதங்கள் !

வைகுண்ட ஏகாதசிசாரதா நம்பி ஆரூரன்ஓவியம் : மணியம் செல்வன்

Published:Updated:

 பாரம்பரியம் பேசும் பக்தி தொடர்

##~##

வைகுண்ட ஏகாதசி, ஆன்மிக அன்பர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு நாள். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி... ஜனவரி 5 அன்று வருகின்றது. அன்றைய நாளில் விரதமிருப்பவர்கள், அதன் மூலமாக அடையும் ஆனந்தம்... பரமானந்தம் என்றே சொல்லலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்திரனில் வளர்பிறை, தேய்பிறை இரண்டும் பதினைந்து, பதினைந்து நாட்கள். பதினோராம் பிறையே 'ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது! ஓர் ஆண்டுக்கு 24 ஏகாதசிகள். தனுர் (மார்கழி) மாதத்தில் வருகின்ற ஏகாதசியைத்தான்... 'வைகுண்ட ஏகாதசி' என்று சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

திரேதாயுகத்தில் சந்திராவதி என்ற நகரில், முரன் என்கிற அசுரன்   ஆண்டு வந்தான். அவன், தேவர்களுக்கு எல்லையற்ற துன்பத்தை அளித்து வந்ததால், பாற்கடலில் துயில் கொள்ளும் பரந்தாமனை அணுகித் தம்மைக் காக்கும்படி முறையிட்டனர் தேவர்கள். வைகுண்டத்திலிருந்து புறப்பட்ட பரந்தாமன், மார்கழி ஏகாதசியில்தான் அந்த அரக்கனை அழித்தார். ஆதலால்தான், அதற்கு 'வைகுண்ட ஏகாதசி' என்றழைக்கப்படுகிறது.

வினை தீர்க்கும் விரதங்கள் !

அரக்கர்களுடன் போரிட்டபோது, திருமாலுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது அவருடைய உடலிலிருந்து பேரொளியுடன் ஒரு கன்னிகை தோன்றி அரக்கனை அழித்ததாகவும், அவளுடைய பெயரே 'ஏகாதசி' என்றும் கூறப்படுகிறது. ஏகாதசி நாளில் விரதமிருப்பவர்களுக்கு வேண்டிய வரங்களை அளிக்க வேண்டுமென்று அப்பெண் வேண்டியதால், திருமால் சம்மதித்து வரம் அளித்ததாகவும் விஷ்ணுவின் அம்சமான ஏகாதசியின் அருளைப் பெறவே ஏகாதசி விரதம் மேற்கொள்ளப்படுகிறது என்பர்.

'பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருள்ளானே..'

- இப்படி தொண்டரடிப் பொடியாழ்வார் போற்றும் அரங்கநாதன் பள்ளி கொண்டிருக்கும் திருவரங்கத்தில் அதிகாலையில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கப்படும் திருவிழா முதன்முதலாக கொண்டாடப்பட்டு, பின்னர் ஏனைய வைணவத் தலங்களிலும் கொண்டாடப்படுகிறது.

ஏகாதசி நாளன்று இருபது அந்தணர்களுக்கு அன்னதானம் செய்வதற்காக, சோழ மன்னன் ராஜகேசரி வர்மன் தன் 13-ம் ஆட்சி ஆண்டில் தங்க நாணயங்கள் தானம் வழங்கிய செய்தியைத் திருச்செங்கோட்டில் உள்ள கல்வெட்டுக்களால் அறிகிறோம்.

'யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை’ என்பார் திருமூலர். வைகுண்ட ஏகாதசியன்று பசுவுக்கு நம்மால் இயன்ற கீரை வகைகளை அளித்தல், மிகுந்த புண்ணியத்தைத் தருமென்பது நம்பிக்கை!

  - கொண்டாடுவோம்...

விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில், ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு, ஏகாதசியன்று அதிகாலை கண்விழித்து குளித்து, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் பட்டினி இருக்க வேண்டும். உண்ணாமல் இருக்க முடியாது என்கிற நிலையில் உள்ளவர்கள் நெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை, காய்கனிகள், பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பகவானுக்கு படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்வதுமாக இருக்க வேண்டும். மறுநாள், துவாதசியன்று உணவு அருந்த வேண்டும். இதை 'பாரணை' என்று கூறுவர். துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை... இவற்றைச் சேர்த்து பல்லில் படாமல் 'கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!' என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism