Published:Updated:

பொங்கல்...உணவுகளுக்கெல்லாம் தாய் !

கரு.முத்து

பொங்கல்...உணவுகளுக்கெல்லாம் தாய் !

கரு.முத்து

Published:Updated:
##~##

''பொங்கல், தை மாதத்தின் முதல் நாளில் மட்டுமல்ல... ஆண்டு முழுக்கவே பொங்கிக் கொண்டுதான் இருக்கிறது நம் வாழ்க்கையில். அதுதான் எல்லாவற்றுக்குமான தொடக்கம்!'' என்று பெருமையோடு இங்கே தை மகளை வரவேற்கிறார்... வரலாற்று ஆராய்ச்சியாளர் 'குடவாயில்' பாலசுப்ரமணியன்.

''உழவர்களின் திருநாள், தமிழர்களின் திருநாள் என்பது மட்டுமல்ல... உணவு நாகரிகத்துக்கே தாயும்கூட இந்த பொங்கல்தான்'' என்று பேசும் பாலசுப்ரமணியன், அதன் வரலாற்றுச் சிறப்புகளை வரிசைப் படுத்தினார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆதி காலத்தில் எந்த உணவையும்  அப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்த மனிதன்,  சிக்கிமுக்கி கல்லில் நெருப்பைக் கண்டதும், உணவைச் சுட்டு தின்ன ஆரம்பித்தான். அது தான், உணவு நாகரிகத்தின் தொடக்கம். நெல்லை விளைவித்து, அரிசி உணவுக்கு மாறியவன், அதை தண்ணீரோடு சேர்த்து வேக வைத்தான். ஆனால், தண்ணீரை வடிகட்டும் நுட்பம் அப்போது அவனுக்குப் புரிபடவில்லை.  அப்படித் தண்ணீரும் அரிசியும் ஒன்றாகக் கலந்து அன்று அவன் உண்டதுதான்... இன்றைய பொங்கல்.

அன்று, உணவு நாகரிகத்தின் தொடக்கமாக இருந்த பொங்கல், இன்று மனிதன் வளர்ந்து நாகரிகத்தின் உச்சிக்கு போன பின்னரும் அவன் வாழ்வின் முக்கிய உணவாக, தொடர்ந்து வாழ்வின் எல்லா நிலைகளுக்குமான புதிய தொடக்கமாக விளங்குகிறது'' என்றவர், வாழையடி வாழையாக நம்முடன் வந்துகொண்டிருக்கும் அந்த நம்பிக்கைகளைப் பட்டியலிட்டார்.

பொங்கல்...உணவுகளுக்கெல்லாம் தாய் !

''மக்களின் மகிழ்ச்சியை வெளிக்காட்டக் கூடிய உணவாக பொங்கல் விளங்குகிறது. குழந்தை பிறந்து 16 நாள் கழித்து சில சம்பிரதாயங்களைச் செய்வது தமிழர்களின் வழக்கம். அந்தத் சம்பிரதாயங்களில் முக்கியமானது பொங்கல். பொங்கல் வைத்து அதை எல்லோருக்கும் கொடுத்து, தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வார்கள்.

திருமணமாகி வீட்டுக்கு வரும் மருமகளை, முதன் முதலில் பொங்கல் சமைக்கச் சொல்லித்தான் குலமகளாக ஏற்றுக்கொள் கிறார்கள். வீட்டில் ஒரு சந்தோஷம் என்றால், பொங்கல் வைத்து அதைக் கொண்டாடிய நம் முன்னோர்களின் பழக்கம்தான்... இன்று பிறந்த நாள், திருமண நாள், வேலை கிடைத்தால், வெளிநாடு சென்றால்... என எல்லா சந்தோஷங்களையும் நாம் இனிப்புடன் கொண்டாடுவதற்கான அடிப்படை.

ஓர் உயிர் மறைந்த பிறகு நடத்தப்படும் இறுதிக்காரியங்களில்கூட, 16-ம் நாள் அவருடைய பங்காளிகள் கூடி உப்பில்லாத பொங்கல் வைத்து படையலிட்டு பிரார்த்திக்கிறார்கள். இப்படி மனிதனின் வாழ்க்கை முழுக்க கலந்தே ஓடிவந்து கொண்டிருக்கும் பொங்கல், அவனது சாமியை மட்டும் விட்டுவிடுமா என்ன? குலசாமி கோயிலுக்கு போய் பொங்கல் வைக்காதவர்கள் இங்கே குறைவு. காது குத்து, பெயர் வைப்பு, கல்யாணம் என்று எதற்காக கோயிலுக்குச் சென்றாலும், பொங்கல் வைத்து படையலிட்டால்தான் சாமிக்கும் திருப்தி, பக்தனுக்கும் மகிழ்ச்சி. கருப்புசாமி, முனியாண்டி என்று ஆண்

பொங்கல்...உணவுகளுக்கெல்லாம் தாய் !

தெய்வங்களுக்குப் படையல் போடுகிறவர்கள் பொங்கல் பொங்கி, அதை உருண்டை பிடித்து, பலிகொடுத்த ஆட்டின் இறைச்சியையும் அதில் சேர்த்துக் கொடுப்பார்கள்.

'திருவிழா' என்றாலும்... அது பொங்கல் வைத்தால்தான் முழுமைபெறும் நம் கிராமங்களில். ஊர்ப் பெண்கள் அனைவரும் குறிப்பிட்ட நாளில் கோயிலில் கூடி ஒட்டுமொத்தமாக பொங்கல் வைத்து வழிபடுவது இன்றும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது குலவைச் சத்தம் தெறிக்க!

பண்டைய சேர நாடான இன்றைய கேரளாவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைக்கத் திரளும் பல லட்சம் பெண்களின் கூட்டம், பொங்கலின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் நிகழ்கால உதாரணம்'' என்று நம் பண்பாட்டுப் பக்கங்களில் அழகாகப் பொங்கல் பரிமாறிய பால சுப்ரமணியன்,

''ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவே பொங்கல் நம் மக்களிடம் புழங்கி வருகிறது. ஆரம்பத்தில் வெறும் அரிசி, பருப்பு போட்டு பொங்கிய கும்மாயம்தான்... பொங்கலுக்குத் தாய். நாளடைவில் அதில் சர்க்கரை சேர்த்து பொங்கியிருக்கிறார்கள். சர்க்கரைப் பொங்கலுக்கு அக்கார அடிசல் என்று பெயர். இறைவன் தந்ததை இறைவனுக்கே அர்ப்பணிப்பது என்ற அர்த்தத்தில்தான் கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடப்படுகிறது. பலிபீடத்தில் பொங்கலை உருண்டை பிடித்து வைத்து, நீர் ஊற்றி நைவேத்தியம் செய்வார்கள். ஆம்... மனிதன், கடவுள் இரண்டு பேருக்கும் அத்தியாவசியமானதாக இந்தப் பொங்கல் இருந்திருக்கிறது, இன்றும் இருந்து வருகிறது!'' என்றார் சர்க்கரைச் சுவையுடன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism