Published:Updated:

சீரு சுமந்த...சாதி சனமே !

இரா.முத்துநாகு

சீரு சுமந்த...சாதி சனமே !

இரா.முத்துநாகு

Published:Updated:

சீர், செனத்தி... இது தமிழர்களின் பரம்பரைச் சொத்து. இதில் கை வைத்தால்... மாமனும் இல்லை மச்சானும் இல்லை என்று உறவுகளே தூள் தூளாகிவிடும். நாட்டுப்புற பாடல்கள், புதினங்கள், சினிமாக்கள், சீரியல்கள் என்று அனைத்து மீடியாக்களுமே சீர் விஷயத்தை நீக்கமற இப்போதும் பதிவு செய்துகொண்டேதான் இருக்கின்றன. காலச்சக்கரம் கன்னாபின்னாவென்று சுழன்று கொண்டிருக்கும் வேகத்திலும்கூட, இன்றைக்கும் இந்த சீர், செனத்தி என்பது... உயிரோடு உறவாடிக் கொண்டிருப்பதுதான் அதன் சிறப்பே!

அதிலும் இந்த பொங்கல் சீருக்கு இருக்கும் மரியாதையே தனிதான்! தை பிறப்பதற்கு முன்பே புதுப்பெண்ணுக்கு பொங்கல் சீர் சென்றுவிடும் அவள் புகுந்த வீட்டுக்கு. தன் பிறந்த வீட்டில் இருந்து எடுத்து வந்த சீரில் உள்ள பச்சரிசி, வெல்லத்தில் பொங்கல் வைப்பதில் அத்தனை சந்தோஷ மும், கௌரவமும் நம் தமிழ்ப் பெண்களுக்கு!

இதோ... தேனி மாவட்டம், முல்லை ஆற்றங்கரை கிராமமான கோகிலாபுரத்தில், பிறந்த வீட்டு பொங்கல் சீர்வரிசையுடன் புகுந்து வீடு கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறார் ரமாபிரபா. அவரையும், கணவர் ராஜாவையும்... மாமன், மச்சான்கள் கேலி செய்து கோலி விளையாடிக் கொண்டிருக்க... பொங்கல் சீர் சந்தோஷங்களை நம்மிடம் பகிர்ந்தார் உறவுப்பெண்களில் ஒருவரான இன்பவள்ளி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீரு சுமந்த...சாதி சனமே !

''கல்யாணமான முதல் வருஷம் புதுப்பொண்ணுக்கு பொறந்த வீட்டுல இருந்து சீரும் சிறப்புமா பொங்கச் சீர் கொடுப்பாக. மாப்பிள்ள, பொண்ணை மார்கழியில ஒரு நல்ல நாளாப் பார்த்து பொறந்த வீட்டுக்கு அழைச்சு, புதுப்பானை, பொங்கல் அரிசி, வெல்லம், பருப்பு, பழம், காய்கறி, கெழங்கு, மஞ்சக்கொத்து, அடுப்பு, துடுப்பு, பிரிமனை, கரும்புக்கட்டுனு எடுத்து வெச்சுருக்குற சீரோட பொண்ணையும் மாப்பிள்ளையையும் புகுந்த வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயி விடுவாக. சீர் எடுத்துட்டு வந்த சம்பந்தி வீட்டுக்கு, விருந்து வெச்சு வரவேற்பாக மாப்பிள்ள வீட்டுக்காரக. புகுந்த வீட்டுல செல்வமும், சந்தோஷமும் பொங்கணும்னு வேண்டிக்கிட்டு பானை, அரிசி, அடுப்பு, துடுப்புனு பொறந்த வீட்டுச் சீருலதான் பொங்க வைப்பாக பொண்ணுக'' என்ற இன்பவள்ளி,

சீரு சுமந்த...சாதி சனமே !

''என்னதான் புகுந்த வீட்டுல செல்வச் செழிப்போட இருந்தாலும், பொறந்த வீட்டுச் சீர் அரிசியில பொங்க வெச்சு கொலவை போட்டாதான்... மனசு நெறையும் நம்ம பொண்ணுங்களுக்கு. வசதி இருக்குறவுக வருசா வருசம் சீர் கொடுப்பாக. முடியாதவுக பொங்கலுக்கு துணிமணி மட்டும் எடுத்துக் கொடுப்பாக. பொதுவா பொண்ணக் கட்டிக் கொடுத்ததுக்கு அப்புறம், மூணாம் வருஷம் வரைக்குந்தேன் தீபாவளி விருந்து இருக்கும். ஆனா, பொங்கப் பண்டிகைதேன் தலைபோற வரைக்கும் அவ பொறந்த வீட்டு உறவு தூர்ந்துடாம தொடரும். எனக்கு கல்யாணமாகி 15 வருஷம் ஆகுது. எம் பொறந்த வீட்டுல இருந்து அஞ்சாறு வருஷம் பொங்கப்பானை வந்தது. இப்ப எங்கப்பா துணிமணி மட்டும் எடுத்துக் கொடுக்குறாரு. அவர் மறந்தாலும் என் அண்ணன், தம்பிக சேலை எடுத்துக் கொடுத்துருவாக'' என்றார் சந்தோஷமாக!

சீர்வரிசைக் கூட்டம் பஸ் ஸ்டாப்புக்கு வந்திருக்க, சிறிது நேரத்தில் பேருந்தும் வந்தது. சீரும் உறவும் சேர்ந்து கிளம்பியது மாப்பிள்ளையின் ஊருக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism