Published:Updated:

மரமேறுவது முதல் கொத்தனார் வரை...

56 வயதிலும் அசத்தும் மேரியம்மா! இ.கார்த்திகேயன், இ.சண்முகநிஷா படங்கள் : ஏ.சிதம்பரம்

மரமேறுவது முதல் கொத்தனார் வரை...

56 வயதிலும் அசத்தும் மேரியம்மா! இ.கார்த்திகேயன், இ.சண்முகநிஷா படங்கள் : ஏ.சிதம்பரம்

Published:Updated:
##~##

''ஆம்பளைங்க செய்ற வேலைகளை எல்லாம் பொம்பளைங்களால செஞ்சுட முடியாதுனு எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக்கிட்டு இருப்பாங்க? பொம்பளைங்க செய்ற எல்லா வேலைகளையும் ஆம்பளைங்களால செய்ய முடியாதுங்குறதுதான் நெசம்!''

- அடித்து ஆரம்பிக்கிறார் மேரியம்மா. மரம் ஏறுவது, விறகு வெட்டுவது, கூரை வேய்வது, பெயின்ட் அடிப்பது, கொத்தனாரினி(!), உழத்தி (விவசாயி) என்று நீள்கிறது இப்பெண்மணி தடதடக்கும் வேலைகளின் பட்டியல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தூத்துக்குடி மாவட்டம், ஒய்யான்குடி கிராமத்துக்கு தேடிச் சென்றபோது, உயர்ந்து வளர்ந்த பனை ஒன்றிலிருந்த மேரியம்மா. ''இதோ வந்துடறேன்...'' என்றபடியே சர்ர்ர்ரென இறங்கி வந்ததைப் பார்த்தபோது, ஆச்சர்யத்தில் விழிகள் மூடவில்லை நமக்கு. பேச்சிலும் அதே வேகம் மேரியம்மாவுக்கு...

''சொந்த ஊர் நாசரேத் பக்கத்துல இருக்கிற தோப்பூர். வறுமைப்பட்ட குடும்பம். எட்டாவது வரைக்கும்தான் படிச்சேன். 17 வயசுலயே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாக. வீட்டுக்காரருக்கு கூலி வேலை. அதைவிட குடிதான் முக்கிய வேலை. ஒரு பையன் பொறந்த நிலையில, விட்டுட்டு ஓடிப் போனவருதான்... என்ன ஆனாருனுகூட இதுவரைக்கும் தெரியல.

மரமேறுவது முதல் கொத்தனார் வரை...

சொந்தச் சொரத்துக இருந்தாலும்... உழைக்க ஒடம்பு இருக்கு, ஆண்டவன் துணை இருக்கான்னு இடுப்புல புள்ளையையும், ஒரு தகரப்பெட்டியில உடுமாத்துக்குப் புடவையையும், கையில 10 ரூபாயையும் எடுத்துக்கிட்டு நடந்தே இந்த ஒய்யான்குடி வந்து சேர்ந்தேன்.

ஊரைச் சுத்தி ஒரே பனைமரமும், கருவேல மரமும்தான். வாடகைக்கு வீடு புடிச்சுக் குடியேறி, கொஞ்ச நாளைக்குப் பசியாறினேன். பொழப்புத் தேடி ஊருக்குள்ள போனவ, களைப்புல ஒரு தென்னை மரத்துக்கு அடியில சாஞ்சேன். 'மரம் ஏறி தேங்காய் பறிச்சுப் போட்டா, மரத்துக்கு 5 ரூபா கொடுப்பாக. நாம மரத்துல ஏறி பார்ப்போமே'னு ஏறினேன். கீழ விழுந்து, ரத்தம் ஒழுகி, களிமண்ணை அந்த இடத்துல பூசினு வீட்டுக்கு வந்துட்டேன். விடாம நெதமும் மரம் ஏறி பயிற்சி எடுத்து, ஒருவழியா உச்சியில ஏறி தேங்காயைப் பறிச்சுப்போட்ட அன்னிக்கு, ஒடம்புல ஏதோ சாமி புகுந்த மாதிரி தைரியம்!

தோட்டந்தொரவு தேடிப் போயி, காய் பறிக்கணும்மானு கேட்பேன். 'இதென்னடா பொம்பள வந்து நிக்கிறாளே'னு அதிர்ச்சியா பார்த்தவுகளுக்கு, நான் மரம் ஏறுற வேகமும் வேலையும் புடிச்சுப்போச்சு. பனைமரத்துல நொங்கு, ஓலை, பாளை வெட்டுறது, வேப்ப  மரம், புளியமரத்துல விறகு வெட்டுறதுனு ஒவ்வொண்ணா பழகிட்டேன்.

கிணத்துல தூர் வாருவேன், வீட்டுக்கு கூரை மேய்வேன், மீன் வாங்கிட்டு வந்து சைக்கிள்ல விப்பேன். சிமென்ட் மூட்டை இறக்குவேன், ஆட்டோ ஓட்டுவேன். நெலத்தை குத்தகைக்கு எடுத்து காய்கறி, பூ பயிர் செய்றேன். இப்படி ஆம்பளைங்க செய்ற வேலைக எல்லாத்தையும் அசராமக் கத்துக்கிட்டேன். பசி ஆறி கொஞ்சம் நிமிர்ந்ததும் இடம் வாங்கி வீட்டைக் கட்டினேன். அப்போ கட்டட வேலைகளும் அத்துப்படியாயிடுச்சு. 'தனியாளா பொழைக்க வந்த பொம்பள, கஷ்டத்துல இருந்து வெளிய வந்து இன்னிக்கு காலூன்றி நின்னுடுச்சே!’னு ஆச்சர்யமா பார்த்தாக ஊருக்குள்ள!

மரமேறுவது முதல் கொத்தனார் வரை...

நம்மள மாதிரியே கஷ்டப்படுற பொம்பளைங்களையும் கை தூக்கி விடணும்னு தோணுச்சு. 'பெண் தொழிலாளர் நலச் சங்கம்’ உருவாக்கினேன். நாலு பேரோட ஆரம்பிச்ச சங்கத்துல... இன்னிக்கு 40 பேர் இருக்காங்க. பொதுவா இங்க ஆம்பளைங்கதான் கொத்தனாரா இருப்பாங்க. பொம்பளைங்கள சித்தாள் வேலைக்குத்தான் வெச்சுக்குவாங்க. 'ஏன் கொத்தனார் வேலையை பொம்பளைங்களால பார்க்க முடியாதா?'னு சங்கத்துல எல்லாருக் கும் வேலையைச் சொல்லிக் கொடுத்து, கட்டட வேலைகளுக்குக் கூட்டிட்டுப் போறேன்.

இப்போ 56 வயசாகுது. பேரன், பேத்தி பார்த்துட்டேன். ஆனாலும் உஸ்சுனு ஒட்கார இந்த ஒடம்புக்குப் புடிக்காது. என் வீட்டுக்காரர் விட்டுப் போனதையே நெனச்சு அழுதுட்டு இருந்திருந்தேன்னா, இன்னிக்கு நாலு பேரு நல்ல விதமா பேசுற அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது. ஆம்பளைங்களுக்குச் சமமா மட்டுமில்ல... அதுக்கு மேலயும் நம்மால ஒழைக்க முடியும், பொழைக்க முடியும்!''

- ஆக்ரோஷ அருவி கொட்டி ஓய்ந்ததுபோல் இருந்தது மேரியம்மா முடித்தபோது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism