Published:Updated:

வேலு பேசறேன் தாயி!

மண்ணுக்கு அப்புறந்தேன் மத்ததெல்லாம் ...!நகைச்சுவை புயலின் நவரச தொடர் வடிவேலு, ஓவியம் கண்ணா

வேலு பேசறேன் தாயி!

மண்ணுக்கு அப்புறந்தேன் மத்ததெல்லாம் ...!நகைச்சுவை புயலின் நவரச தொடர் வடிவேலு, ஓவியம் கண்ணா

Published:Updated:
##~##

நேரஞ் சரியில்லனா... உத்திரத்துல ஒக்காந்திருந்தாலும் நாய் கடிக்கும்னு சொல்வாகளே... அதக் கேள்விப்பட்டிருக்கீகளா தாயிகளா..? அப்புடித்தான் ஒரு பொங்கல் 'ஃப்ளாஷ்பேக்'கு பொங்குது எனக்கு!

அப்பெல்லாம் பொங்க வந்துட்டாலே கூட்டாளிகளைக் கூட்டிக்கிட்டு ஆட்டம் பாட்டம்னு கௌம்பிடுவோம். பொங்கச் சோறும் கரும்புச் சாறுமா வயிறு நெறயும். அடுத்து நடக்குறதுதான் அமர்க்களமான கச்சேரி. அதாங்க ஜல்லிக்கட்டு. இந்த மதுரக்காரப் பயலுகளுக்கு ஜல்லிக்கட்டுனா அம்புட்டு இஷ்டம். மைக் செட்டு சத்தம் கேட்டாலே, 'மாடு வுடப் போறானுகடா டோய்'னு ஆளா பறப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஜல்லிக்கட்டுல ஒரு கூத்து நடக்கும். வேட்டிய மடிச்சுக் கட்டி தொடையத் தட்டிக்கிட்டு களத்தில நிக்கறவனை எந்த மாடும் முட்டாது. செவனேனு மூங்கிப் படலைப் புடிச்சுக்கிட்டு வேடிக்கைப் பார்க்கறவனைத்தான் வெரட்டிப் புடிச்சு முட்டும். நடுக்களத்தில ஏத்திவிட்ட கையோட நிக்கிறவன், காளை வந்ததும் வாலைப் பிடிச்சுத் திருப்பிடுவான். கோவம் வந்த காளைக்குப் பாதை எது, பாவம் எதுனு தெரியுமா என்ன? அப்பாவியா நிக்கறவனுகளை தூக்கி வீசி கோவத்தை தீர்த்துட்டுப் போயிடும். மந்தையில சிக்காம தப்பிச்ச மாடு தெருக்குள்ள புகுந்து, பேப்பர் படிச்சுக்கிட்டு இருக்குற பெரியவரை முட்டித் தள்ளிட்டுப் போயிடும். எங்கூர்ல டீக்குடிச்சிட்டு இருந்தவனெல்லாம் முட்டு வாங்கி, நடக்க முடியாம கெடந்த கதை நெறையா நடந்திருக்கு.

வேலு பேசறேன் தாயி!

ஒரு தடவை நானும் என்னோட கூட்டாளிகளுமா சேந்து ஜல்லிக்கட்டுக்குப் போனோம். எங்க கூட்டத்தில ஒருத்தன் ரொம்ப பயந்தாங்கொள்ளி. நானும் அப்புடித்தான். என்ன ஒண்ணு... 'எனக்கு பயமா இருக்குடா...’னு அவன் வெளிப்படையா சொல்லிட்டான். நான் மனசுக்குள்ளேயே அய்யனாரை வேண்டிக்கிட்டு அமைதியா இருந்துட்டேன். ஆனா, ஜல்லிக்கட்ட ஆசதீரப் பாக்கணும்கிற வேகம் மட்டும் மட்டுப்படல.

தைரியம் உள்ளவனுக களத்துலயும், லேசுபாசான ஆட்கள் வெளியிலயும் நிப்போம்னு பேசிக்கிட்டோம். நம்பர் ஒன் பயந்தாங்கொள்ளிப் பய மட்டும் உசரமான ஒரு எடத்தில கும்பலோட கும்பலா ஏறி நின்னுக்கிட்டான். மாடுக ஒண்ணுக்கு ஒண்ணு சீறிப் பாய, அதைப் பாக்குறப்பவே கழிச்ச வந்திடும்போல இருந்துச்சு. 'அந்தப் பய மாதிரி நாமளும் உச்சத்துல ஒக்காந்து இருக்கலாம்’னு நெனச்சு அவன நோக்கி ஓடினேன். சரியா நான் போன நேரம் அவன் 'ஆத்தாடி’னு பின் பக்கம் தெறிக்கிற மாதிரி தொபுக்கடீர்னு விழுந்தான் பாருங்க..! ரெண்டு மாடுக ஒண்ணா சேந்து மரத்தால செஞ்சிருந்த தடுப்ப மோத, அதோட உச்சியில ஒக்காந்திருந்த எங்கூட்டாளி பொத்துனு விழுந்துட்டான். அள்ளித் தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய்த்தான் காப்பாத்த முடிஞ்சுது.

பொங்கப் பண்டிகை நெருங்க ஆரம்பிச்ச ஒடனேயே... இந்த நெனவெல்லாம் மனசுக்குள்ள ஓடுது. மாடு புடிச்சு, தாய் புள்ளைகளோட ஏலேலோ பாடி, கும்மி கொட்டி, அங்காளி- பங்காளிகளுக்கு துணிமணி எடுத்துக் கொடுத்து, ஆசாபாசமா கொண்டாடுற காலமெல்லாம் இப்போ மலையேறிப் போயிருச்சு. வாசல்ல பொங்க வைக்கறப்ப சூரியனைப் பார்த்து நெடுஞ்சாங்கிடையா கும்புட்டு விழக்கூட நமக்கு நேரம் இல்லாம போயிருச்சு. சர்க்கரைய அள்ளிப்போட, எப்படா கொதி கௌம்பும்னு காத்திருந்து 'பொங்கலோ பொங்கல்’னு போட்டி போட்டு கூவுற வழக்கம் எல்லாம், இப்போ எங்கே போச்சு?

பொங்கச்சோறு பொங்கி வழியறது முக்கியம் இல்ல... அது எந்த தெசையில பொங்குதுங்கறதத்தான் கூர்ந்து பார்ப்பாக. கெழக்கு மொகமா பொங்கி வழிஞ்சா, 'கதிரவன் நம்மளக் கைவிடாது’னு நம்பிக்கையா சொல்லுவாக. அதுக்காகவே அத்தைமாரு, சின்னம்மாமாரு எல்லாம் கெழக்குப் பக்கமா பானைய லேசா சாய்ச்சு வெச்சு சமைக்கிற கூத்தெல்லாம் நடக்கும்.

இப்போ டி.வி. பொட்டிக்குள்ளதான் எந்தத் திருநாளையும் கொண்டாடு றதுங்கிற நெலைக்கு ஆளாகிட்டோம். நாம கண்டுகளிச்ச கூத்துகளையும், ஆடிப்பாடின சந்தோஷத்தையும் இன்னிய தலைமுறை பறிகொடுத்துட்டு நிக்கறதைப் பார்க்க பரிதாபமா இருக்கு. கரும்பை நட்டு வெச்சு, சாணத்துல புள்ளையார் புடிச்சு, அதுல அருகம்புல்லையும் கன்னிப்பூவை கலந்து சொருகி, பொங்கப் பானைக்கு திருநீரு பூசி, வீட்டு வாசல்ல மா எலைய தோரணங் கட்டி.... அப்பப்பா... சொல்றப்பவே அந்தக் காட்சி எல்லாம் கண்ணுக்குள்ள விரியுதே!

ஆயிரந்தான் வேலை, வெட்டி, சோலி, சுண்ணாம்புனு இருந்தாலும்... இந்தத் தடவை பழைய வழக்கப்படியே பொங்கலைக் கொண்டாடி, இப்போ இருக்கிற எளைய தலைமுறைகளுக்கு நம்ம பாரம்பரிய மகத்துவத்தை சொல்லுங்க தாயிகளா. மண்ணுக்கு அப்புறந்தேன் மத்ததெல்லாம்... அத ஞாவகம் வெச்சு பொங்கலை சந்தோஷமா கொண்டாடுங்க தாயிகளா... பொங்கலோ பொங்கல்..!

        - நெறைய்ய பேசுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism