Published:Updated:

திருமணம் இனி... இருக்குமா?

``என்னைப் பொறுத்தவரை லிவ்விங் டுகெதர் தாம்பத்தியம், திருமண சிஸ்டத்தை குலைத்துவிடும் என்று பயப்படவே தேவையில்லை இந்தச் சமூகம் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும். அந்தளவுக்கு ஆழமாக வேரோடிய மரபுகளைக் கொண்டது நம் தமிழ் மரபு."

திருமணம் இனி... இருக்குமா?
திருமணம் இனி... இருக்குமா?

ல நூறு ஆண்டுகளாக 'சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்த வேண்டும்' என்ற கேட்டுக்கொண்டிருந்த நம் திருமண முறை, சில வருடங்களாக 'இரு மனது ஒன்றானதால் ஒரு வீட்டுக்குள் வாழ்கிறோம். இதற்கு அடையாளங்களும் சடங்குகளும் எதற்கு' என்று கேட்க ஆரம்பித்திருக்கிறது. கூடவே, 'நம் ஆதி சமுதாயத்தில் தற்போது நடப்பது போன்ற திருமண முறையே இல்லை. எங்களைப்போல் நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தார்கள்' என்று தன் தரப்புக்கு நியாயமும் சேர்த்துக்கொண்டிருக்கின்றன 'லிவ்வின் தாம்பத்தியங்கள்'. இந்த மாற்றம் நம் திருமண முறையின் ஆணி வேரை அசைத்து விடுமா என்று பேராசிரியரும் பட்டிமன்ற பேச்சாளருமான பர்வீன் சுல்தானாவிடம் கேட்டோம்.  

''திருமணம் என்பது நம் ஆதி சமுதாயத்தில் இல்லையென்பதற்காக அப்போது ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை இருந்தது என்று அர்த்தமில்லை. அப்போது ஒழுக்கமின்மை என்பது இல்லவே இல்லை என்பதுதான் அர்த்தம்'' என்று மிகக் கூர்மையாக தன் பேச்சை ஆரம்பித்தவர், சடங்குகளுடனான திருமண முறை நம் சமுதாயத்துக்குள் வந்த கதையை தொல்காப்பிய உதாரணத்துடன் சொல்ல ஆரம்பித்தார்.  

''ஒரு ஆணும் பெண்ணும் மனமொத்து நான்கு பேர் அறிய வாழ ஆரம்பித்துவிட்டால், அதுதான் திருமணம்.  அதற்கென்று தனிச் சடங்குகள் எதுவும் நம் தமிழ் சமுதாயத்தில் ஆரம்பத்தில் இல்லை. பிறகு ஏன் அந்த சடங்குகள்  வந்தன என்றால், ஆண்கள், வேறொரு இடத்தில் இருக்கிற பெண்களை உடலளவில் பயன்படுத்திவிட்டு, அவர்களுக்கு ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு, அந்த களவு (காதல்)  வாழ்க்கையோடு செல்ல ஆரம்பித்தார்கள். அதாவது, ஆண்கள் பெண்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய ஆரம்பித்தார்கள்.   

தொல்காப்பியத்தில் 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப' என்றொரு சூத்திரம் இருக்கிறது. 'கரணம்' என்றால் திருமணம். 'வழு' என்றால் குற்றம். அதாவது, ஒரு சமூகத்தில் பொய்யும் குற்றமும் மலிந்த பிறகுதான், ஐயர்கள் (ஐயர்கள் என்றால் இங்கே பெரியவர்கள் என்று பொருள்)  திருமணம் என்ற முறையைக் கொண்டு வந்தார்கள் என்கிறது தொல்காப்பியம். 

பரஸ்பரம் இருவருக்கு மட்டுமே தெரிந்தால் அது களவு (காதல்) வாழ்க்கை. அவர்களுடைய தோழர்களைத்தாண்டி நான்காவதாக ஒருவருக்குத் தெரிய வாழ்ந்தால் அது கற்பு (திருமணம்) வாழ்க்கை. ஆக, தமிழர் மரபில் களவு, கற்பு என இரண்டிலும் ஒரே பெண்தான் இருந்தாள். சில காலங்களுக்குப் பிறகு இதில் ஏமாற்றுதல்கள் நிகழ ஆரம்பித்த பின்னர், பெரியவர்கள் சேர்ந்து ஒரு அக்ரிமெண்ட் போடுவதுபோல திருமணம் என்ற பெயரில் சில சடங்குகளை செய்ய ஆரம்பித்தார்கள்'' என்றவர், தற்கால திருமணங்கள் குறித்து பேசத் தொடங்கினார். 

''ஒரு மனைவியுடன் வாழ்ந்துகொண்டே இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பது இங்கே காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.  அதற்கெல்லாம் சமூக அங்கீகாரம் கிடைத்ததில்லை. ஆனால், தற்போது நான் அங்கீகாரம் பெறாமல் வாழ்வதற்குச் சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்று கேட்கிறார்கள். அதனால்தான் சில பிரச்னைகள் எழுகின்றன. என்னைப் பொறுத்தவரை லிவ்விங் டுகெதர் தாம்பத்தியம், திருமண சிஸ்டத்தை குலைத்துவிடும் என்று பயப்படவே தேவையில்லை இந்தச் சமூகம் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும். அந்தளவுக்கு ஆழமாக வேரோடிய மரபுகளைக் கொண்டது நம் தமிழ் மரபு. லிவ்விங் டு கெதரில் பாதிப்புகள்  கூடுகிறபோது மறுபடியும் சடங்குகளுடன் பல பேர் அறியத் திருமணம் செய்துகொள்கிற ஒப்பந்தத்துக்குள் வந்துவிடுவார்கள் அவ்வளவுதான். திருமண நம்பிக்கைகள் முன்னே பின்னே போகும், வரும். பிறகு காயம்பட்டு புரிந்துகொள்ளும். திருமணம் என்பது பொறுப்புணர்ச்சி. அதை யாரும் சொல்லித் தர முடியாது. தானாக வரும்'' என்று அழுத்தமாகச் சொல்லி முடித்தார் பர்வீன் சுல்தானா.