Published:Updated:

“என் உணர்வை கற்பனையால் கூட உங்களால் உணர முடியுமா!?’’ பத்மஶ்ரீ நர்த்தகி நடராஜன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“என் உணர்வை  கற்பனையால் கூட உங்களால் உணர முடியுமா!?’’ பத்மஶ்ரீ நர்த்தகி நடராஜன்
“என் உணர்வை கற்பனையால் கூட உங்களால் உணர முடியுமா!?’’ பத்மஶ்ரீ நர்த்தகி நடராஜன்

“என் உணர்வை கற்பனையால் கூட உங்களால் உணர முடியுமா!?’’ பத்மஶ்ரீ நர்த்தகி நடராஜன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``வெறுங்கை என்பது மூடத்தனம் 

உன் விரல்கள் பத்தும் மூலதனம்

கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும்

உன் கைகளில் பூமி சுழன்று வரும்

இந்தக் கவிதைதான். இந்த ஒரே ஒரு கவிதைதான் என் வாழ்வை வீறுகொண்டு எழச் செய்தது. ஒரு வெற்றியாளர் தன் இலக்கை அடைய முற்படுவதற்கு முன்பாக எத்தனை எத்தனையோ இடர்களையும் காயங்களையும் வேதனைகளையும் அனுபவித்திருப்பார். அதுபோலத்தான் நானும். நான் நடந்து வந்த பாதைகளில் முட்கள் மட்டும்தான் கிடந்தன. ஆனாலும், தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி, சுயமரியாதை கொண்டு காயங்களைப் பெரிதுபடுத்தாமல் போராடிக் கடந்து வந்தேன். இதோ என் இத்தனை ஆண்டுகாலப் போராட்டத்தின் ரணங்களுக்கு மருந்தாய் முட்கள் நிறைந்த பாதையில் இன்று பூக்கள் தூவப்படுவதைப் பார்க்கிறேன். என்னைப் பின்தொடர்ந்து வந்த பாலைவனம் இப்போது வண்ணப் பூக்கள் கொண்ட சோலைவனமாக மாறியிருப்பதைப் போல உணர்கிறேன். நிச்சயமாக எனக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த ஆனந்த உணர்வை நீங்கள் என்னுடைய இடத்திலிருந்து கற்னை செய்து பார்த்தால் மட்டுமே உணர முடியும் என நினைக்கிறேன்” அத்திப் பூத்தாற்போல அழகாகச் சிரிக்கிறார் நர்த்தகி நடராஜன். அவர் முகம் முழுவதும் அப்படியொரு பூரிப்பு. 

இந்த ஆண்டுக்கான `பத்ம விருதுகள்' குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டது. அதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பெயர்ப்பட்டியலில் மதுரையைச் சேர்ந்த நர்த்தகி நடராஜனும் ஒருவர். பத்மஸ்ரீ விருது பெறும் முதல் மாற்றுப்பாலினத்தவர் என்ற பெருமையை தமிழகத்திற்குக் குறிப்பாக மதுரை மண்ணிற்குத் தேடித் தந்திருக்கிறார் இவர். 

``நான் ஒருபோதும் என்னைப்பார்த்து நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்று  நினைத்ததே இல்லை. ஆனால், அது இந்தச் சமூகத்தின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதோடு இப்படித்தான் வாழ வேண்டும் என்றும் சில வரைமுறைகளை அவர்கள் வகுத்திருந்தார்கள். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. நீங்கள் சொல்லிக் கொண்டே இருங்கள். நான் என் பாதையைப் பார்த்துப் போய்க்கொண்டே இருக்கிறேன் என்று சொல்லி என்னிடம் இருந்த திறமையையும் உழைப்பையும் மட்டும் உறுதுணையாய்க் கொண்டு நடந்தேன். திருநங்கை என்கிற அடையாளம் என் ஆன்மாவுக்கான முகவரி. என் உணர்வுக்கான போர்வை அது. ஆனாலும்கூட, நான் ஒரு திருநங்கை நடனக்கலைஞர். அதனால், எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று எவரிடமும் போய்க் கேட்டதில்லை. அதை நான் வெறுத்தேன். இரக்கத்தால் கிடைக்கக்கூடிய வாய்ப்பு என்பது நிலைத்து நிற்காது என்பதை அறிந்தவள் நான். உழைப்பை நம்பினேன். நர்த்தனம் ஆடுவதில் கை தேர்ந்தேன். அதன்மூலம் எத்தனை எத்தனையோ புகழ்மிக்க மேடைகள் ஏறிவிட்ட பிறகும் பள்ளி, கல்லூரி மற்றும் தமிழ் மன்றங்கள் அழைக்கின்ற மேடைகளில் ஆடுவதை பாக்கியமாகக் கருதுபவள் நான். காரணம், அங்கெல்லாம் என் நாட்டியத்தை மட்டுமல்லாது, என் வாழ்க்கைப் பயணத்தையும் அடுத்தடுத்த தலைவமுறையினரிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடிகிறது” அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தவரிடம் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வானது குறித்தும் இந்த விருது திருநங்கைகள் மத்தியில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் கேட்டோம். 

பத்மஸ்ரீ என்பது இந்தியாவைப் பொறுத்தமட்டில் தலையாய விருது. அப்படிப்பட்ட விருதுக்கு மதுரையைச் சேர்ந்த தமிழச்சி நான் தேர்வாகியிருப்பது என்னளவில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதோடு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதோடு, நான் என் சமூகத்தைச் சேர்ந்த மற்ற திருநங்கைகளின் கையைப் பிடித்து வந்திருக்கிறேன் பார். நீயும் எனைப் பின் தொடர்ந்து வா என்று அழைக்க வேண்டிய நிலையில் இப்போது எங்கள் சமூகம் இல்லை. காரணம், ஏற்கெனவே திருநங்கைகள் சமூகம் முன்னேற்றப் பாதையில் நகர ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் எங்களைப் பின்பற்றும் அளவுக்கு நாங்கள் எங்களுக்கான ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்திவிட்டோம். பத்மஸ்ரீ விருது அறிவித்த அடுத்த நொடி என்னை விட என்னை வளர்த்து உருவாக்கிய என் தோழி சக்தி பாஸ்கர்தான் மிகவும் ஆனந்தமடைந்தார். அவர் இப்போது வரை என்னோடு இருந்து என் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்கிறவர். ஒரு சிற்பி எப்படி தான் வடித்த சிலையை தானே நின்று வியந்து பார்ப்பாரோ அப்படித்தான் சக்தி என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். பத்மஸ்ரீ விருதுக்கு நான் தேர்வானதில் நான் மகிழ்கிறேனோ இல்லையோ என்னைச் சூழ்ந்திருக்கும் அன்பு உள்ளங்கள் அதிகமாகவே சந்தோசப்படுகிறார்கள். தொலைபேசியிலும் நேரிலும் வாழ்த்துகிறார்கள். அழுது குழைகிறார்கள். இப்படியான அன்பு உள்ளங்களைப் பார்க்கும்போது பூரிப்பாக இருக்கிறது. உண்மையிலேயே இவர்களின் அன்பால் நான் ஒரு கோடீஸ்வரியைப் போல் உணர்கிறேன். இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் என்கிறார் புன்னகை மாறாமல். 

பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜனின் புன்னகைச் சத்தம் பூவுலகையும் வெற்றிக் களிப்பில் ஆழ்த்தட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு