தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி

முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி
பிரீமியம் ஸ்டோரி
News
முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி

முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி

‘`இந்த விருது, சுதந்திரப் போராட்ட வீரரான என் தாத்தா உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு சமர்ப்பணம்’’ - காக்கி கம்பீரத்துடன் சொல்கிறார் காமினி. 70-வது குடியரசு தினத்தில் ஜனாதிபதி விருதுக்குத் தேர்வானவர்; ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ராமநாதபுரம் சரகத்தின் காவல்துறை துணைத் தலைவராகப் பணியாற்றிவரும் முதல் பெண் டி.ஐ.ஜி என்கிற பெருமைக்குரியவர்.

‘`ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் உள்ள எண்ணமங்கலம் கிராமம்தான் சொந்த ஊர். அப்பா நடராஜன் வழக்கறிஞர் என்றாலும், விவசாயம்தான் எங்கள் பாரம்பர்யத் தொழில். எங்கப்பாவிடம் எங்க கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பலரும் இலவச சட்ட ஆலோசனை பெறுவாங்க. இப்படி நற்பெயர் எடுத்திருந்த எங்கப்பாவுக்கு, அறிஞர் அண்ணா, 1967-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட வாய்ப்பளித்தார். அந்தத் தேர்தலிலும், அதற்கு அடுத்து வந்த தேர்தலிலும் வெற்றி பெற்று இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எங்கம்மா லீலாவதி, பி.யூ.சி படிச்சவங்க.  அம்மாவின் தந்தை ராமசாமி, சுதந்திரப் போராட்டத் தியாகி.

முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி

நான் நான்காம் வகுப்புவரை எங்க கிராமப் பள்ளியில்தான் படிச்சேன். மேற்படிப்புக்கு சென்னை, ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்களில் அங்குள்ள நூலகம்தான் என் அறிவை விசாலமாக்கியது. அதன் பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றேன்’’ என்கிறவர், அரசுப் பணிக்கான தன் முயற்சிகள் மற்றும் பணி அனுபவங்கள் பற்றித் தொடர்ந்தார்.

‘`நான் தேடித் தேடிப் படிச்ச புத்தகங்கள், சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமலே டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வில் என்னை வெற்றிபெற வைத்தன. 1996-ம் ஆண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணிக்குத் தேர்வாகி, அசோக் நகர் காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றேன். சேலத்தில் பயிற்சி டி.எஸ்.பி-யாகப் பயிற்சி பெற்ற பின்னர் விருத்தாசலம் டி.எஸ்.பி-யாகப் பணியேற்றேன்'' என்கிறவர், பெண்கள் பட்டாலியன் உட்பட பல பொறுப்புகளில்  பணியாற்றியிருக்கிறார். வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணும் இவரே. கோவையில் போக்குவரத்துத் துணை ஆணையராக இவர் பணியாற்றியபோதுதான், ஏரியல் டிராஃபிக் சிஸ்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது.

``16 மாவட்டங்களை உள்ளடக்கிய பொருளாதாரக் குற்றப்பிரிவு கண் காணிப்பாளராகச் சென்னையில் நான்கு ஆண்டுகள் வேலைபார்த்தபோது, பல சவால்களைக் கையாள வேண்டியிருந்தது. தண்டையார்பேட்டை துணை கமிஷனராக இருந்தபோது, ஒரு முக்கிய அரசியல் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடந்தது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இரு அணிகளாகப் பிரிந்து மோதலில் ஈடுபட, அந்த நேரத்தில் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதன் மூலம் 25 உயிர்களைக் காப்பாற்றினோம். பெண் என்பதால் என் மேலதிகாரிகள் என்னைக் குறைவாக மதிப்பிடாததும் என் வெற்றிக்கு உறுதுணையா இருந்தது. இப்போது இந்த ஜனாதிபதி விருது, இன்னும் நிறைய சாதிக்கணும் என்ற ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கு’’
என்று சொல்கிறார் காமினி. இவரின் கணவர் பாலமுருகன், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். மகன் நித்திலன் எட்டாம் வகுப்பு படிக்கிறார்.

‘`மற்ற துறைகளைவிட காவல்துறை சவால் நிறைந்த முழு நேரப் பணி. இதில் எந்த சார்பும் இல்லாமல் சுயமாகச் சிந்தித்து முடிவு எடுக்க எனக்குத் துணையாக இருப்பது, என் வாசிப்புப் பழக்கம்தான். `நல்ல புத்தகங்களைப் படிங்க' என்பதுதான் மத்தவங்களுக்கு நான் கொடுக்கும் பரிந்துரை. புத்தகங்கள் தரும் அறிவும் நிறைவும் நிகரற்றவை” என்கிறார் காமினி.

-இரா.மோகன் 

படம் : உ.பாண்டி