தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் உடல் மருந்தகம் - மறுவாழ்வு மையத்தை நிறுவி தலைமையேற்ற முதல் பெண் - `வீல்சேர் டாக்டர்’ மேரி வர்கீஸ்

முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் உடல் மருந்தகம் - மறுவாழ்வு மையத்தை நிறுவி தலைமையேற்ற முதல் பெண் - `வீல்சேர் டாக்டர்’ மேரி வர்கீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் உடல் மருந்தகம் - மறுவாழ்வு மையத்தை நிறுவி தலைமையேற்ற முதல் பெண் - `வீல்சேர் டாக்டர்’ மேரி வர்கீஸ்

ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

2014-ம் ஆண்டு, வேலூரை அடுத்த பாகாயம் என்ற ஊரில் உள்ள பி.எம்.ஆர் நிலையத்தில் (பிசிக்கல் மெடிசின் - ரீஹேபிலிடேஷன் சென்டர்) நான்கு மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட வீல்சேர் கூடைப்பந்து விளையாட்டுக்குழு தொடங்கப்பட்டது. இன்று, `ஸ்பைனல் ஷூட்டர்ஸ்’ என்ற பெயரில் வளர்ந்து நிற்கும் மாற்றுத்திறனாளிகள் அணி, உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வென்று வருகிறது. இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் மறுவாழ்வு மையம், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் கீழ் அமைக்கப்பட்ட இந்த ரீஹேப் சென்டர்தான். இதை நிறுவி, அதன் முதல் தலைவராக இயங்கிய பெண்தான், டாக்டர் மேரி வர்கீஸ்.

1925-ம் ஆண்டு, மே 26 அன்று கொச்சியை அடுத்த சேரை என்ற சிற்றூரில், பெரும் நிலச்சுவான்தார் மகளாகப் பிறந்தவர் மேரி. எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும்போதுதான் மேரிக்கு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் மருத்துவர் ஐடா ஸ்கட்டர் கதையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதன்பின், வேலூர் சி.எம்.சி-தான் தன் வாழ்க்கையின் லட்சியம் என்று எண்ணியவர், அங்கேயே மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். சி.எம்.சி-க்கு அழைக்கப்பட்டதும், அவரிடம் ஐடா சொன்னது இதுதான்... “ஒரு சிறந்த மருத்துவராகத் தேவையான அனைத்தும் உன்னிடம் இருக்கின்றன.”

முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் உடல் மருந்தகம் - மறுவாழ்வு மையத்தை நிறுவி தலைமையேற்ற முதல் பெண் - `வீல்சேர் டாக்டர்’ மேரி வர்கீஸ்

1952-ம் ஆண்டு, பட்டப்படிப்பை முடித்ததும், இரண்டாண்டு உயர் படிப்பாக மகப்பேறு மருத்துவம் பயில அங்கேயே சேர்ந்தார் மேரி.

மேரியின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நாள், 1954-ம் ஆண்டு, ஜனவரி 30. விடுமுறை தினமான அன்று மகப்பேறு பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் கரோல் ஜேம்சன் தன் மாணவிகளுடன் சேர்ந்து பிக்னிக் கிளம்பினார். காரில் துள்ளி ஓடி ஏறிய மேரிக்கு அதுதான் தன் இறுதி ஓட்டம் என்று தெரிந்திருக்கவில்லை. பேருந்து ஒன்றை முந்த முயன்ற கார், ரோட்டோர மைல்கல்லில் இடித்து மூன்று குட்டிக்கரணங்கள் அடித்துக் கவிழ்ந்தது. மயங்கிச் சரிந்திருந்த மேரிக்கு முகம் முழுக்க காயங்கள். இடுப்புக்குக் கீழே உடல் தன் செயல்பாட்டை இழந்தது. எண்ணற்ற அறுவை சிகிச்சைகள். சி.எம்.சி மருத்துவர்களின் அன்பு, செவிலியர்கள் கவனிப்பு எல்லாவற்றையும் தாண்டி, மனதின் வைராக்கியம் மேரியை எழுப்பி அமரவைத்தது வீல்சேரில்.

`இனி அறுவைசிகிச்சைகள் எதுவும் செய்ய இயலாதே’ என்று கவலையுற்றார். டாக்டர் பால் பிராண்ட் அவருக்குத் தந்த அறிவுரை - `நிற்கத்தானே முடியாது... ஏன் உட்கார்ந்துகொண்டே கைகளால் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது?' யோசித்தார் மேரி. அடுத்த நாளே டாக்டர் பாலிடம் தொழுநோயாளிகளுக்கான கை அறுவைசிகிச்சைகளைத் தான் செய்ய விரும்புவதாகத் தெரிவித்து, களத்தில் இறங்கினார். கால், கைகளை இழந்தவர்கள், அவரைக்கண்டதும் பெரும் உற்சாகம்கொண்டனர்.

1957-ம் ஆண்டு, குடும்பத்தினர் உதவியுடன் பெர்த் நகரத்துக்குப் பயணமானார். அங்கு, ரீஹேப் சென்டரில் சில மாதங்கள் தங்கி, யார் உதவியும் இன்றி தன் அன்றாட வேலைகளைச் செய்யும் அளவுக்குத் தேர்ந்தார். அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைத்தது. நியூயார்க் நகரின் பிசிக்கல் மெடிசின் மற்றும் ரீஹேப் சென்டரில் படித்தால், இந்தியாவில் அதுபோன்ற மையம் தொடங்கலாம் என்று தோன்ற, வேர்ல்டு ரீஹேபிலிடேஷன் ஃபண்ட் உதவியுடன் அமெரிக்கா பயணமானார் மேரி.

நியூயார்க்கின் பி.எம்.ஆர் தலைமை மருத்துவர், ஹோவர்ட் ரஸ்க்கிடம் மாணவியாகச் சேர்ந்தார். நியூயார்க் நகரில் கார் ஓட்டிச் செல்லும் அளவுக்குத் தேர்ந்து விட்டார் மேரி. 1962-ம் ஆண்டு சிகாகோ நகரில் தேர்வெழுதினார். வெற்றிகரமாக ஃபெல்லோஷிப் படிப்பை முடித்து, இங்கிலாந்துக்குப் பயணமானார் மேரி. அங்கும் ரீஹேப் நுணுக்கங்கள் கற்றபின் வேலூர் திரும்பினார். 1963-ம் ஆண்டு, ஜனவரி 5 அன்று, அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனால் சி.எம்.சி மருத்துவமனையில் பி.எம்.ஆர் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது. ரீஹேப் மருத்துவம் பயின்ற ஒரே மருத்துவரான மேரி வர்கீஸ், அதன் தலைவரானார். மேரியின் மூன்றாண்டு முயற்சிக்குப்பின் 1966-ம் ஆண்டு, நவம்பர் 26 அன்று பாகாயத்தில் தொடங்கப்பட்டது இந்தியாவின் முதல் பி.எம்.ஆர் ரீஹேப் மையம். மேற்கத்திய பாணியில், இந்தியக் கிராமங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உபயோகிக்க எளிதாக, `பிராஸ்தடிக்’ கருவிகளை வடிவமைத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார் மேரி.

ரீஹேப் சென்டர், கைகால்கள் சரியாக இயங்காதவர்களுக்கான மருத்துவமனை என்பதாக மட்டுமில்லாமல், அவர்கள் சுயதொழில் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ வழி ஏற்படுத்திக்கொடுக்கும் மையமாகவும் செயல்பட்டது. மேரியின் பணியைப் பாராட்டி, இந்திய அரசு 1972-ம் ஆண்டு, பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது. உடல்நலக்குறைவால் 1976-ம் ஆண்டு பணி ஓய்வுபெற்று, கேரளா சென்ற மேரி, இரண்டே ஆண்டுகளில் மீண்டும் வேலூர் திரும்பினார். 1981-ம் ஆண்டு, `மேரி வர்கீஸ் டிரஸ்ட்' தொடங்கப்பட்டது.

1985-ம் ஆண்டு, எட்வர்ட் பியர்ஸ் விருது பெற்றார். அதற்குக் கிடைத்த 10,000 டாலர் ரொக்கப்பணத்தையும் ரீஹேப் மையத்துக்கே செலவிட்டார். தன் மொத்த சொத்தையும் அதற்கே எழுதிவைத்தார். உடல்நலம் குன்றிய டாக்டர் மேரி வர்கீஸ், வேலூரில் 1986-ம் ஆண்டு டிசம்பர் 17 அன்று மறைந்தார்.

எழுத்தாளர் டாரதி கிளார்க் வில்சன், மேரியின் கதையை `டேக் மை ஹேண்ட்ஸ்’ என்ற பெயரில் எழுதினார். `வீல்சேர் சர்ஜன்’, `வீல்சேர் டாக்டர்’, `ஷீ பெர்சிஸ்டட்’ போன்ற பல நூல்கள் மேரியின் கதையைச் சொல்கின்றன. மேரி வர்கீஸ் டிரஸ்ட், ஆண்டுதோறும் ரீஹேப் விழாவை நடத்துகிறது. 2016-ம் ஆண்டு, பொன்விழாவை விமரிசையாகக் கொண்டாடியது பி.எம்.ஆர். எந்தப் பிசகும் இல்லாமல் 50 ஆண்டுகளாக இயங்கிவரும் மறுவாழ்வு மையம், இந்தியாவில் இதுவே!