தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

மருதன் - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

து ஒரு மேடை. கீழேயும் பக்க வாட்டிலும் நடப்பட்டிருந்த வலுவான மரக்கட்டைகள், அந்த மேடையைத் தாங்கிப்பிடித்திருந்தன. மேலே ஏறிச் செல்வதற்கு ஒரு பக்கத்தில் படிக்கட்டுகள் இருந்தன. அதில் ஏறினால், நம்மைவிட இரு மடங்கு உயரத்தில் தூக்குக் கம்பங்கள் எழுந்து நிற்பதைப் பார்க்கலாம். மொத்தம் நான்கு கயிறுகள் அதில் தொங்கிக்கொண்டிருந்தன. அதிகாரிகள் மேடையில் ஏறிச் சென்று, கயிறுகள் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிசெய்தனர். பிறகு, தண்டனைக் கைதிகள் நால்வரும் அழைத்துவரப்பட்டனர். லூயிஸ் பெயின், டேவிட் ஹெரால்டு, ஜார்ஜ் அட்ஸெரோட், மேரி சுர்ரத். 1865-ம் ஆண்டு ஜூலை 7 அன்று, இவர்களுக்குத் தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் 1865 ஏப்ரல் 14 அன்று அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கன், ஜான் வில்க்ஸ் பூத் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பூத்தும் சுடப்பட்டுவிட்டார் என்றாலும், அவர் யாருடன் இணைந்து இந்தக் கொலைக்கான சதித்திட்டங்களைத் தீட்டினார் என்பதை ஆராய்ந்தபோது, மேலே குறிப்பிட்ட நால்வரும் அகப்பட்டனர். லூயிஸ், டேவிட், ஜார்ஜ் மூவரும் பூத்தின் கூட்டாளிகள் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் அவர்களால் திரட்ட முடிந்தது. மதுபான விடுதி ஒன்றில் இவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டதாகவும்விவாதங்கள் நடத்தியதாகவும் தெரியவந்தன. லிங்கன் வழக்கில் அவர்களை இணைக்க, இந்த ஆதாரங்கள் போதுமானவையாக இருந்தன.

எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

மேரி?

மூன்று வலுவான காரணங்கள் சொல்லப் பட்டன. முதலாவது, சதித்திட்டம் தீட்டப் பயன்படுத்தப்பட்ட மது விடுதியை நடத்தி வந்தவர் மேரி. இரண்டாவது, மேரிக்கு பூத்தைத் தெரியும். அந்த விடுதியில் உள்ள ஓர் அறையில்தான் பூத் தங்கியிருந்தான் என்பதையும் உறுதி செய்தாகிவிட்டது. மூன்றாவது காரணம், மேரியின் மகன் ஜான் சுர்ரத், லிங்கன் கொல்லப்பட்ட செய்தி கேள்விப்பட்டவுடன் கனடாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவரும் பூத்தின் கூட்டாளிகளில் ஒருவர்தான் என்பதற்கு இதைவிட வலுவான ஓர் ஆதாரம் இருக்க முடியாது. மேரிக்கும் மற்ற மூவருக்கும் தாமதமின்றி மரண தண்டனை கிடைத்து விட்டது. ஜான் இன்றில்லாவிட்டாலும் நாளை கிடைக்காமலா போய்விடுவான்?

கைதுசெய்யப்பட்ட நாள் தொடங்கி, மேரி திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். `நான் நிரபராதி. எனக்கும் அமெரிக்க அதிபரின் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!’ என்று. ஆனால், அவருடைய தரப்பை ஒருவரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒரு பாதிரியை, அவர் இருந்த சிறைக்கு அனுப்பிவைத்தனர். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்காக வழிபாடு நடத்தி, அவர்களை ஆற்றுப்படுத்துவதுதான் அவர் பணி. மேரிக்கு அநேகமாக அவராலும்கூட ஆறுதல் அளித்திருக்க முடியாது.

மேரி, குழந்தை முதலே ஆழமான இறை நம்பிக்கைகொண்ட ஒரு கத்தோலிக்கராகவே இருந்துவந்திருக்கிறார். அமைதியான குடும்பம். ஜான் ஹாரிசன் சுர்ரத்தை 1840-ம் ஆண்டு மணந்துகொண்டார். மொத்தம் மூன்று குழந்தைகள். ஜான் சுர்ரத் ஜூனியர் இளைய மகன். ஒருகட்டத்தில் அவர் குடும்பம் மேரிலாண்டுக்குக் குடிபெயர்ந்தது. புதிய தொழில் முயற்சிகளில் ஆர்வம்காட்டிவந்த ஜான், மேரிலாண்டில் தங்குமிடம், உணவகம் ஆகியவற்றைத் தொடங்கினார்.

உள்நாட்டுப் போர் நடைபெற்றுக்கொண்டி ருந்த காலகட்டம் அது. `அமெரிக்காவில் பண்ணையடிமை முறை நீடிக்கவேண்டுமா... கூடாதா?’ என்னும் கேள்வியை முன்வைத்து, மாநிலங்கள் ஒன்றோடொன்று மோதலில் ஈடுபட்டுவந்தன.
அடிமைமுறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஆபிரஹாம் லிங்கனின் வாதம். ஒழிக்கப்படக் கூடாது என்றன ஏழு தென்மாநிலங்கள். அவை ஒருங்கிணைந்து, `அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு’ என்று தங்களை அழைத்துக் கொண்டன. `அடிமைமுறையை ஒழித்தால், நாங்கள் அமெரிக்காவிலிருந்து பிரிந்து சென்றுவிடுவோம்!’ என்று அவர்கள் அச்சுறுத்திவந்தனர். அடிமைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டால் பண்ணைகளை யார் கவனித்துக்கொள்வார்கள்? அடிமைகள் இல்லாமல் செல்வம் ஏது... லாபம் ஏது... அமெரிக்காதான் ஏது? இந்த லிங்கனுக்கு ஏன் இது புரியவில்லை?

ஜான் சுர்ரத் மட்டுமல்ல, மேரியின் நிலைப்பாடும் இதுதான். அடிமைகள் வேண்டும் என்று தென்மாநிலங்கள் கருதினால் அனுமதித்துவிட்டுப் போகவேண்டியதுதானே? அவர்கள்மீது லிங்கன் ஏன் தன் விருப்பத்தைத் திணிக்க வேண்டும்? ஏன் இத்தனை குழப்பங்களை விளைவிக்க வேண்டும்? இப்படியே உள்நாட்டுப் போர் தொடர்ந்துகொண்டிருந்தால், அமெரிக்கா துண்டுத்துண்டாக அல்லவா உடைந்துபோகும்? அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்வாரா ஆபிரஹாம் லிங்கன்?

எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

தென்மாநிலங்களில் ஜானுக்கு நண்பர்கள் இருந்தனர். ஆபத்துக் காலங்களில் அவர்கள் ஜானின் விடுதிகளில் தங்கிக்கொள்வது வழக்கம். ஜானின் மறைவுக்குப் பிறகு அவருடைய சொத்துகள் மேரியிடம் வந்துசேர்ந்தன. ஒற்றை ஆளாக எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள முடியாததால், வாஷிங்டனுக்குக் குடிபெயர்ந் தார் மேரி. அங்கே அவர் ஆரம்பித்ததுதான் சர்ச்சைக்குரிய அந்த மது விடுதி.

கைதுசெய்யப்பட்ட பிறகு, மேரியின் வழக்கு ராணுவ நீதிமன்றத்திடம் வந்து சேர்ந்தது. மொத்தம் ஒன்பது நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர். அவர்களில் ஐவர், `மேரிக்குக் கருணைகாட்ட முடியுமா?’ என்று விண்ணப்பித்து, புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருந்த ஆண்ட்ரூ ஜாக்சனை அணுகினர். குற்றவாளியின் வயது, அவருடைய பாலினம் இரண்டின் அடிப்படையில் அவரை மன்னிக்க இயலுமா? அதிபர் மறுத்துவிட்டார். `கருணை மனு, அதிபரிடம் வரவேயில்லை’ என்று சொல்பவர்களும் இருக்கின்றனர். எது எப்படியோ, மரண தண்டனைக்குத் தடையில்லை என்றாகிவிட்டது.

மேரி தனது இறுதிப் பயணத்துக்குத் தயாரானார். சிறையிலிருந்து தூக்குமேடைக்கு அவர் நடத்திச் செல்லப்பட்டார். அப்போது உடன்வந்த அதிகாரிகளிடம், தன் கையில் பூட்டப்பட்டுள்ள விலங்கு மிகுந்த வலியைத் தருவதாக வருந்தினார். அந்த அதிகாரிகளுக்கு முதலில் என்ன சொல்வதெனத் தெரியவில்லை. பிறகு சுதாரித்துக்கொண்டு, ``இன்னும் கொஞ்ச நேரம்தான். அதன் பிறகு வலி தெரியாது’’ என்றனர். படிக்கட்டுகள் மீது ஏறி மேடையை அவர்கள் சென்றடைந்தனர்.

நால்வரும் வந்து சேர்ந்ததும், ஒரு ஜெனரல் அவர்களுடைய மரண தண்டனைத் தீர்ப்பை ஒருமுறை வாசித்துக்காட்டினார். மேடையை யொட்டி அமைந்திருந்த சுவரில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். மேடைக்குக் கீழே சிலர் நின்றுகொண்டிருந்தனர். அப்போது மேரியின் பார்வை மேடைக்குக் கீழிருந்த பள்ளத்தின்மீது பட்டது. கழுத்தைச் சுற்றிக் கயிறு இறுகும்போது, காலுக்குக் கீழே உள்ள பலகைகள் திறந்துகொள்ளும். கழுத்து தூக்குக்கயிற்றில் சிக்கியிருக்க, கால்கள் கீழே உதறிக்கொண்டிருக்கும். அந்தப் பள்ளம் அதற்காகத்தான். மேரி அதைக் கண்டு திடுக்கிட்டுப்போனார். கலக்கத்துடன், ``நான் இதில் தவறி விழுந்துவிட்டால் என்னாவது? என்னை, கீழே விழவைத்துவிடாதீர்கள்!’’ என்று வாய்விட்டுக் கேட்டார்.

யாரிடமும் பதிலில்லை. நால்வரின் முகங்களும் மறைக்கப்பட்டன. தூக்கிலிடப்பட்டபோது மேரியின் உடல் முன்பக்கமாக வளைந்தது. ``இவர் நன்றாகத் தலைவணங்குகிறார்’’ என்று சிரித்தார் ஒரு காவலர். மேரியின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. லிங்கனின் கதை, மேரியோடு நிறைவுபெறுகிறது. படுகொலை செய்யப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் லிங்கன். அமெரிக்கா தூக்கிலிட்ட முதல் பெண், மேரி சுர்ரத்.

ஆனால், இந்த முதல் முடிவு, இன்று வரை சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறது. மேரியின் மகன் ஜான் பிறகு கைதுசெய்யப்பட்டார் என்றாலும், போதுமான சாட்சியங்கள் இல்லாததால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை. உண்மையில் மேரியின் நிலையும் இதுதான் அல்லவா? லிங்கனின் கொலைக்கும் மேரிக்கும் உள்ள உறவு சந்தேகத்துக்கு இடமின்றி சாட்சியங்களால் நிரூபிக்கப்பட்டதா? மேரியோடு தூக்கிலிடப்பட்ட மூவரும் பூத்தின் கூட்டாளிகள்தான் என்பதை நேரடி சாட்சியங்கள் உறுதிசெய்தன. மேரிக்கு எதிராக எத்தகைய சாட்சியங்கள் திரட்டப்பட்டன?

எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

ஆம், அடிமைமுறையை ஆதரித்தவர்களோடு அவருக்கு நட்பு இருந்திருக்கிறது. லிங்கனை அநேகமாக வெறுத்திருக்கலாம். லிங்கனின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் நினைத்திருக்கலாம். ஆனால், லிங்கனைக் கொல்லும் திட்டம் அவருக்கு முன்பே தெரிந்திருந்தது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? லிங்கனின் கொலையாளியும் கூட்டாளிகளும் அவர் விடுதியில் தங்கியிருந்தது உண்மை. ஆனால், தங்கள் திட்டத்தை அவர்கள் மேரியிடம் பகிர்ந்துகொண்டதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

இந்தக் கேள்விகளை எழுப்புபவர்களின் நோக்கம், மேரி நிரபராதி என்று வாதிடுவதல்ல. மரண தண்டனை அர்த்தமற்றது என்பதை நிரூபிப்பதுதான். மேரி நிரபராதியாக இருப் பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை, இன்று பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கின்றனர். எனில், 150 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சந்தேகம் ஒருவருக்கும் ஏற்பட்டிருக்காதா? நிச்சயம் ஏற்பட்டிருக்கும். இருந்தும், மேரியும் மற்றவர்களும் கொல்லப்பட்டதற்குக் காரணம் ஒன்றுதான். லிங்கனின் பரபரப்பான கொலைக்கு அன்றைய அமெரிக்கா பழிதீர்க்க விரும்பியது. நாடு முழுவதும் பரவிய அதிர்ச்சியை, உணர்ச்சிக் கொந்தளிப்பைத் தணிக்க அமெரிக்கா விரும்பியது. பல்லுக்குப் பல். ரத்தத்துக்கு ரத்தம்.

துப்பாக்கிக்கும் தூக்குக்கயிற்றுக்கும் பெருத்த வேறுபாடில்லை. முதலாவதை ஒரு தனிநபர் ஏந்தியிருந்தார். இரண்டாவதை அரசும் நீதிமன்றமும் இணைந்து ஏந்தியிருந்தன. மற்றபடி எல்லோருடைய கரங்களிலும் ரத்தத்தின் கறை சமமாகவே படிந்திருக்கிறது. நீதி, நியாயம், சட்டம் என எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் கொலை, கொலைதான். ஒரு ஜனநாயக நாடு, கொலை செய்யாது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்னும் முழக்கத்தை ஓர் இயக்கமாக முன்னெடுப்பவர்கள், மேரியை இன்றும் நினைவுகூர்ந்துகொண்டிருக்கிறார்கள். மேரி கீழே விழுந்துவிட்டார்.

மற்றவர்களையாவது நாம் காப்பாற்றுவோமா?