Published:Updated:

''சீக்கிரம் ஆத்துக்கு வந்திடுங்கோ. ஆம்பளைகளை நம்ப முடியாதுன்னு சொன்னாங்க!'' - சாந்தா தனஞ்ஜெயன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
''சீக்கிரம் ஆத்துக்கு வந்திடுங்கோ. ஆம்பளைகளை நம்ப முடியாதுன்னு சொன்னாங்க!'' - சாந்தா தனஞ்ஜெயன்
''சீக்கிரம் ஆத்துக்கு வந்திடுங்கோ. ஆம்பளைகளை நம்ப முடியாதுன்னு சொன்னாங்க!'' - சாந்தா தனஞ்ஜெயன்

''அவருடைய ஒழுக்கமும் என்னுடைய நம்பிக்கையும்தான் எங்களுடைய தாம்பத்தியத்தைக் காப்பாத்தின விஷயங்கள்னு நான் நம்பறேன்.'' 

மீபத்தில் வெளியான 'சர்வம் தாளமயம்' படத்தில் நெடுமுடி வேணுவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடன மேதை சாந்தா. இரண்டு வருடங்களுக்கு முன்னால், கணவர் தனஞ்செயனுடன் ஜோடியாக வோடபோன் விளம்பரத்தில் நடித்திருந்தார். சாந்தாவும் தனஞ்செயனும், மிக நீண்ட, அதாவது 53 வருடத் தாம்பத்தியம் கொண்டவர்கள் என்பதால், உங்களைப் போலவே மிக நீண்ட தாம்பத்திய வாழ்க்கை வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்றோம். தங்களுடைய வாழ்க்கையில் இருந்தே ஓர் உதாரண சம்பவத்துடன் மனம் திறந்து பேசினார் சாந்தா. 

''என் கணவர்கிட்டே இருந்து எனக்கு எல்லாமே பாசிட்டிவாதான் கிடைச்சிருக்கு. இதுவொரு கொடுப்பினைன்னுதான் சொல்லணும். இதையும்தாண்டி சொல்லணும்னா, எங்களுடைய தாம்பத்தியத்தில் அவர் நேர்மையா நடந்துக்கிட்டார். அவரோட அந்த நேர்மை மேலே எனக்குத் துளியும் சந்தேகம் இல்லாத அளவுக்கு நம்பிக்கை இருந்தது'' என்றவர், தன் இள வயது சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். 

''அவருடைய இள வயசில் நிறைய டீன் ஏஜ் பெண்களுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுத்திருக்கார்.  ஸோ, அவங்க எல்லாம் எங்க வீட்டுக்குச் சகஜமா வருவாங்க, போவாங்க. இதை ஏன் சொல்றேன்னா, ஒரு குருவா அவருடைய மரியாதையை காப்பாத்திண்டு, கெட்டப் பெயர் எதுவும்  வராம ஒரு ஒழுக்கமான வாழ்க்கை வந்தவர். இந்த விஷயத்துல அவர் மேலே எனக்கு கம்ப்ளீட்டா  நம்பிக்கை இருந்தது. 

நான் என்னோட முதல் பையனை பிரசவிக்க கேரளாவில் இருக்கிற என் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். அப்ப ஒரு நாள், எனக்கு நெருக்கமான மாமி ஒருத்தங்க, 'கொஞ்சம் சீக்கிரமா ஆத்துக்கு வந்திடுங்கோ. ஆம்பளைங்களை நம்ப முடியாது. வீட்டில் வைச்சு சின்னப் பெண்களுக்கெல்லாம் நாட்டியம் சொல்லிக் கொடுத்திண்டிருக்கார் இல்லையா? உங்காத்துக்காரரை தப்பா சொல்லலை. ஆனா, ஜென்ரலா ஊரு உலகத்துலே இப்படித்தானே நடக்குது. சீக்கிரம் ஆத்துக்கு வரப் பாருங்கோ' என்றார். எனக்கு அவங்களோட பயம் ரொம்ப வேடிக்கையா இருந்துச்சு. ஏன்னா, அவரை நான் அந்தக் கோணத்துல நினைச்சுப் பார்த்ததுக் கூட கிடையாது. அந்தளவுக்கு அவர் மேலே எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. அவருடைய ஒழுக்கமும் என்னுடைய நம்பிக்கையும்தான் எங்களுடைய தாம்பத்தியத்தைக் காப்பாத்தின விஷயங்கள்னு நான் நம்பறேன்.'' 

உங்கள் கணவர் ரொம்ப கோபக்காரர்னு கேள்விப்பட்டோமே.. அது உங்க தாம்பத்தியத்தை  டிஸ்டர்ப் பண்ணியிருக்கா?

''அது கோபமில்லை. கண்டிப்பு. ஒரு டைம் சொன்னா, அந்த டைமுக்குள்ள  தானும் போகணும், மத்தவங்களும் வரணும்னு நினைப்பார். ஒரு காரியம் கொடுத்தா அதைச் சரியா செஞ்சு முடிக்கணும்னு நினைப்பார். அதை சம்பந்தப்பட்டவங்ககிட்ட நேரடியா சொல்லவும் செய்வார். நான் அப்படியில்லை. மனசுக்குள்ளேயே வைச்சுப்பேன். இல்லன்னா பாலிஷ்டா சொல்லுவேன். இந்த ஒரு விஷயத்துல மட்டும்தான் நாங்க வித்தியாசப்படுவோம். அவர்கூட, 'நீ மனசுலேயே வைச்சுட்டு நல்லப் பேர் எடுத்துடுறே... முகத்துக்கு நேரா சொல்றதால் எனக்கு கோவக்காரன்னு பேர் வந்துடுச்சு' என்று சிரிப்பார். ஆனா, அவர் ரொம்ப ரொம்ப மென்மையான மனிதர். யாருக்காவது உடம்பு சரியில்லாம போயிட்டா, அப்படியே கரைஞ்சுப் போயிடுவார். அவங்களுக்கு உதவி செய்ய முதல் ஆளா போய் நிற்பார்'' என்றவரிடம், அவர் செல்போன் வைத்துக் கொள்ளாததற்கான காரணத்தைக் கேட்டோம். 

''அவர்கிட்டே இருந்தாலே போதும். எங்கே போனாலும் நாங்க ஒண்ணாதான் போய் வருவோம். அதனால், இப்ப உங்களை மாதிரி யார் என்கிட்ட பேசணும்னாலும் அவர் உடனே என்கிட்ட போனைக் கொடுத்திடுவார். அதனால், எனக்குத் தனியா செல்போன் வேணும்னு என் மனசுக்குத் தோணவே இல்லை. உலகத்திலேயே செல்போன் இல்லாதவள் நான் தான்'' என்று கலகலப்பாக பேசி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு