Published:Updated:

``அன்னிக்குதான் என் உயிர்மேல எவ்வளவு ஆசையிருக்குனு தெரிஞ்சுது!’’ - ரேச்சல் ரெபெக்கா

``அன்னிக்குதான் என் உயிர்மேல எவ்வளவு ஆசையிருக்குனு தெரிஞ்சுது!’’ - ரேச்சல் ரெபெக்கா
``அன்னிக்குதான் என் உயிர்மேல எவ்வளவு ஆசையிருக்குனு தெரிஞ்சுது!’’ - ரேச்சல் ரெபெக்கா

ரேச்சலின் அப்பா வேறொரு வேலையாக வெளியில் சென்றுவிட, வீட்டுக்குள் நுழைந்து ரேச்சலின் அம்மாவைத் தள்ளிவிட்டு, ரேச்சலின் மார்பிலும் வயிற்றிலும் கத்தியால் குத்திய கைகளுக்கு, இன்று வரை தோல்வியைப் பரிசளித்துக்கொண்டே இருக்கிறார் ரேச்சல்.

``ஆயுர்வேதிக் காலேஜ்ல சேர்ந்துட்டேன். ஸ்கூலோ, காலேஜோ... நல்லா படிக்கிற சமத்துப்பொண்ணு நான். அம்மாவும் அப்பாவும் `வீட்டைப் பூட்டிக்கோடா'ன்னு சொல்லிட்டு வெளியே போயிருந்தாங்க. அன்னிக்குத்தான் எனக்கு ஆண்ட்ராய்டு போன் வாங்கிக் கொடுத்திருந்தாங்க. போன் வாங்கின சந்தோஷத்துல வீடியோஸ் பார்க்கிறது, சாங்ஸ் கேக்குறதுனு எப்போதும்போல சந்தோஷமான ஒரு விடுமுறை நாள் அது. கதவ தட்டினதும் போய்த் திறந்து பார்த்தப்போ, என்னைத் தேடி வீடு வரைக்கும் வந்து சேர்ந்த பிரச்னையைப் பார்த்தேன். கையில் வெச்சிருந்த மொபைல்போனைப் பிடிங்கிட்டு, `பஸ் ஸ்டாண்ட்ல வந்து போனை வாங்கிட்டுப் போ'ன்னு சொன்னான் அவன். அந்த நாள்தான் என் வாழ்க்கையை மாத்தின நாள்” -  மரணத்தைக் கொஞ்சம் தள்ளி நின்று நிதானித்துப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்திருக்கும் மருத்துவர், மாடல், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ரேச்சல் ரெபெக்கா, விழிப்புஉணர்வு பேச்சாளரும்கூட.

பார்க்கும் எவருக்கும் தருவதற்கு உள்ளங்கை முழுவதும் நம்பிக்கை விதைகளை வைத்திருக்கிறார் ரேச்சல். சிகிச்சைக்காக தன் அலுவலகத்தை, வீட்டை அடையும் ஒவ்வொருவருக்குள்ளும், இன்றைய நாளை மட்டும் நம்பும் மேஜிக்கைச் சொல்லித்தருகிறார் ஆயுர்வேத மருத்துவரும், முதுகலை மெளலிகச் சித்தாந்த (உளவியல்) நிபுணருமான ரேச்சல் ரெபெக்கா.

எப்போதும் பின்தொடர்ந்து வந்து `காதல்' என்ற பெயரில் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த நபர், வீட்டுக்கே வந்தபோது மன உளைச்சலுக்குள்ளான ரேச்சலுக்கு, தற்கொலை மட்டுமே தீர்வாகத் தோன்றியிருக்கிறது. `ஒரு முறை ப்ரேயர் பண்ணிட்டுத் தற்கொலை பண்ணிக்கலாம்’ என முடிவெடுத்த ரேச்சலுக்கு, அவரது வீட்டின் ஆளுயரக் கண்ணாடிதான் கடைசி நேரக் கடவுளாக மாறியிருக்கிறது. கண்ணாடியில் தன்னைப் பார்த்து பேசத் தொடங்கிய ரேச்சலுக்கு, தற்காலிகப் பிரச்னைகளுக்காக தற்கொலை செய்துகொள்வது மூடத்தனம் எனப் புரியத் தொடங்கியிருக்கிறது.

அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வரும் வரையில் காத்திருந்து, நடந்த விஷயத்தைச் சொன்ன ரேச்சலிடம், ``போலீஸ் கம்ப்ளெய்ன்ட் கொடுத்து போனை வாங்கிடலாம்டா. இதுக்கெல்லாம் கவலையே படக் கூடாது'' எனத் தேற்றியிருக்கிறார்கள் இருவரும். ரேச்சலின் அப்பா வேறொரு வேலையாக வெளியில் சென்றுவிட, வீட்டுக்குள் நுழைந்து ரேச்சலின் அம்மாவைத் தள்ளிவிட்டு, ரேச்சலின் மார்பிலும் வயிற்றிலும் கத்தியால் குத்திய கைகளுக்கு, இன்று வரை தோல்வியைப் பரிசளித்துக்கொண்டே இருக்கிறார் ரேச்சல். 

``எங்கிருந்து ரத்தம் வழியுதுன்னே தெரியல. ரத்தத்துல நனைஞ்ச என்னை, சி.எம்.சி-க்குக் கூட்டிட்டுப் போனாங்க அம்மா. அவங்க அழுகுரல் நல்லா ஞாபகமிருக்கு. தன் உயிரை இன்னொரு உடம்புக்குள்ள வெச்சிட்டு அவஸ்தைப்படுற மாதிரி அழுதாங்க. வயித்துக்குள்ள 5 லிட்டர் ரத்தம் உறைஞ்சதா டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. முக்கிய உறுப்புகள் எல்லாத்துலயும் காயங்கள்தான். அட்மிட் பண்ணும்போது `சிப்ரோஃப்ளாக்ஸின் கொடுங்க'ன்னு நர்ஸ் பேசிக்கிட்டப்போ, `எனக்கு சிப்ரோஃப்ளாக்ஸின் அலர்ஜி'னு, பதறியடிச்சு சொன்னேன். அன்னிக்குதான் என் உயிர்மேல எனக்கு எவ்வளவு ஆசையிருக்குனு தெரிஞ்சுது. இப்போ வரைக்கும் அப்படித்தான். இன்னிக்கு முழுசா சந்தோஷமா வாழணும்னு பெரிய படிப்பினையைக் கொடுத்தது அந்த நாள்தான். அந்தச் சம்பவம்தான் என் லைஃப் சேஞ்சர்” என ஒரு க்ரைம் எபிஸோடை சிரித்துக்கொண்டே சொல்கிறார் ரேச்சல்.

``முன்னாடி இருந்ததைவிட இன்னும் அழகான ரேச்சலை உருவாக்குறது அவ்வளவு சுலபமா இல்ல; ஆனா, சந்தோஷமா இருந்தது. அறுவை சிகிச்சை காயங்களை நானே சுத்தப்படுத்த ஆரம்பிச்சேன். ஒரு மேஜிக் என்ன தெரியுமா, அம்மாவும் அப்பாவும் அதே நம்பிக்கையோட என்கூட இருந்தாங்க. திரும்பவும் வீடு திரும்பினதும், எனக்காக நான் எடுத்துக்கிட்ட மருந்து, படிப்புதான். இந்த வருடத்தோட அந்தச் சம்பவம் நடந்து 11 வருஷம் ஆகுது. அந்த விபத்துக்கு அப்புறம்தான் நான் வாழ ஆரம்பிச்சிருக்கேன். ஏன்னா, வாழ்றதுக்கும் பிழைக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல..!" - மீண்டெழுந்த ரேச்சலின் குரலுக்கு இப்போது டெசிபல் அதிகம். சிகிச்சையிலோ, விழிப்பு உணர்வு மேடைகளிலோ இவர் சந்திக்கும் மனிதர்களுக்கு இன்னொரு முறை பிறக்கும் ரகசியம் சொல்கிறார், ரேச்சல்.

மாடலிங், தியேட்டர் ஆக்டிங் எனத் தன்னுடைய ஃபேஷனைச் செய்துகொண்டே வெற்றிகரமான மருத்துவராகவும் இயங்கிவரும் ரேச்சல், ``நாளையைப் பற்றிப் பேசுவதற்கு எதுவும் இல்லை'' என்கிறார். இன்றின் இப்போதை மட்டும் கவனத்தில் வைத்து உழைக்கிறார். ஹெச்.ஐ.வி நோய் பற்றிய விழிப்புஉணர்வு, மனநலத்துக்கான சிகிச்சைகள் எனப் பொது விஷயங்களுக்காக அவர் முன்னெடுக்கும் எல்லா காரியங்களிலும், அந்தச் சம்பவத்திலிருந்துதான் கற்றுக்கொண்ட பாடம்தான் இன்ஸ்பிரேஷன் என்கிறார். கொடூரமான அந்த ஸ்டாக்கிங் வன்முறையால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவமனையில் சந்தித்த ஜாக்சன் ஜெரிமியாவோடு நித்தியக்காதல் ரேச்சலுக்கு. ஜாக்சனைத் திருமணம் செய்திருக்கிறார். பாடல்களை, மனிதர்களை, அன்பை, இன்னும் எல்லாவற்றையும் பேசித்தீர்க்க வாழ்நாள் நண்பன் கிடைத்திருக்கிறான் என, காதலாகும் ரேச்சல் இப்போது பலருக்கு ஆதர்சம்!

அடுத்த கட்டுரைக்கு