தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

`தேஜஸ்' விமானத்தின் முதல் பெண் கோ-பைலட்!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெங்களூரு நகரில் சமீபத்தில் நிறைவடைந்த ‘ஏரோ இந்தியா’ விமானக் கண்காட்சியில் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட தேஜஸ் ரக விமானத்தைத் துணை பைலட்டாக ஓட்டினார் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. லைட் காம்பாட் விமானமான லகு ரக தேஜஸ் விமானத்தில் துணை பைலட்டாகப் பயணித்த முதல் பெண் என்ற சாதனையை இதன்மூலம் நிகழ்த்தியிருக்கிறார் சிந்து. ஏரோ இந்தியா காட்சியின் இறுதி நாளான பெண்கள் தினத்தன்று சக பைலட் சித்தார்த்துடன் விமானம் ஏறிய சிந்து, கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் விமானத்தில் பறந்தார்.

5-ஜி அழுத்தம் வரை விமானம் சென்றதாகப் பின்னர் குறிப்பிட்ட சித்தார்த், சிந்து அருமையாகச் சமாளித்தார் என்றும் கூறினார். “தேஜஸை ஓட்டியது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது” என்று கூறிய சிந்து, “இந்த விமானத்தை ஓட்டிய முதல் பெண் என்பதில் பெருமிதம்கொள்கிறேன். பெண்களுக்கான இந்த நாளை மறக்கவே மாட்டேன்” என்றும் கூறினார்.

சூப்பர் வுமன் சிந்து!

காதலர் தினத்தன்று இதய தானம்

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

டந்த காதலர் தினத்தன்று கடலூரைச் சேர்ந்த கவுதம் ராஜ் என்ற இளைஞர், மூளைச்சாவு அடைந்த தன் மனைவியின் உடல் உறுப்புகளைத் தானம் செய்தார். பெங்களூரில் பொறியாளராகப் பணியாற்றிவரும் கவுதம் ராஜுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கோகிலாவுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. கர்ப்பமான கோகிலாவின் எடை திடீரெனக் குறையத் தொடங்கியது. எட்டு மாதக் கர்ப்பிணியான கோகிலா, கடந்த பிப்ரவரி 4 அன்று வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 7-ம் தேதி திடீர் வலிப்பு ஏற்பட்டதால், உடனடியாக அறுவைசிகிச்சை செய்து மருத்துவர்கள் அழகான பெண் குழந்தையை எடுத்துள்ளனர். ஆனால், குழந்தை பிறந்த பின்னும் சுயநினைவு திரும்பாமலே இருந்துள்ளார் கோகிலா. ஒரு வாரம் கடந்து, காதலர் தினத்தன்று கோகிலா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

கதறித் துடித்த கவுதம் ராஜ், அந்த நிலையிலும் திடமான மனதுடன் தன் மனைவியின் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாகத் தர முன்வந்தார். கோகிலாவின் இதயம், கணையம், நுரையீரல், கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் போன்றவை காதலர் தினத்தன்றே தானமாக அளிக்கப்பட்டன. காதல் மனைவியின் இதயம் எங்கோ துடித்துக்கொண்டிருக்கிறது என்ற நிம்மதியில், பச்சிளம் குழந்தையுடன் நிற்கிறார் கவுதம் ராஜ்.

காதல் மரிப்பதில்லை!

கருப்பை, சினைப்பை இழந்தும் தாயான பெண்!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

கேரள மாநிலம் கொச்சி நகரில் வசித்து வந்த பெண் ஒருவருக்குக் 2014-ம் ஆண்டு கருப்பையில் கேன்சர் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. 26 வயதான அந்த இளம்பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்து கேன்சர் கட்டி மற்றும் கருப்பை, சினைப்பை ஆகியவற்றை அகற்றினார் மருத்துவர் சித்ரதாரா. கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த இடது சினைப்பை, கருப்பை, ஃபல்லோப்பியன் குழாய்கள் போன்றவற்றை அகற்றப்பட்டன. அவரது வலது சினைப்பை நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக இருந்ததால், வெளியே எடுக்கப்பட்டு வயிற்றின் மேல் பகுதியில், தசைக்கு அருகிலேயே பொருத்தப்பட்டது. அதன்பின்னர் கொடுக்கப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சையால் எந்தவிதப் பாதிப்பும் சினைப்பைக்கு நேரவில்லை.

2018-ம் ஆண்டு அந்தப் பெண்ணை கருத்தரிப்பு சிகிச்சைக்காகப் பரிந்துரைத்து அனுப்பினார் சித்ரதாரா. மருத்துவர் பிரியா செல்வராஜின் மேற்பார்வையில், மூன்று முறை முயற்சித்தபின் சினைப்பையில் இருந்து கருமுட்டை எடுக்கப்பட்டு, டெஸ்ட் டியூப் முறையில் கருத்தரிப்பு செய்து வாடகைத் தாயின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி 16 அன்று 2.6 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அவர். பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பை நோய்க்குறியும் கேன்சர் பாதித்த பெண்ணுக்கு இருந்தது என்று கூறிய பிரியா செல்வராஜ், நாள்பட்ட பி.சி.ஓ.எஸ் கேன்சராக மாற சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு என்றும் தெரிவித்தார்.

தாய்மையே வெல்லும்!

சிகரங்களை எட்டும் பூர்ணா!

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

தெலங்கானா மாநிலம் பாகாலாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணான மலாவத் பூர்ணா சமீபத்தில் தென்னமெரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான `அகான்காகுவா'வைக் கைப்பற்றினார். ஏற்கெனவே தன் 13-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தைக் கைப்பற்றி, எவரெஸ்டை எட்டிய இளம் பழங்குடிப் பெண் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார் இவர். “இதுவரை நான் எவரெஸ்ட் (ஆசியா), கிளிமஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்பிரஸ் (ஐரோப்பா) மற்றும் இப்போது அகான்காகுவா(தென்னமெரிக்கா) ஆகிய நான்கு கண்டங்களின் உயர்ந்த சிகரங்களைத் தொட்டுவிட்டேன். இன்னும் மீதமுள்ள மூன்று கண்டங்களின் மிக உயரமான சிகரங்களையும் தொட்டுவிடுவேன். உலகெங்கும் இந்தியாவின் - தெலங்கானாவின் பெயரைப் பெருமைப்படுத்துவேன்” என்று கூறியிருக்கிறார் பூர்ணா.

தெலங்கானாவைச் சேர்ந்த `தெலங்கானா சமூகநல தங்கும் கல்வி நிலையங்கள் சங்க'த்தின் உறுப்பினர் பூர்ணா. நூற்றுக்கணக்கான பழங்குடியின மாணவர்கள் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி போன்ற பொறியியல் கல்லூரிகளில் நுழையத் தேவையான பயிற்சியைத் தந்துகொண்டிருக்கிறது இந்தச் சங்கம். பூர்ணாவை உற்சாகப்படுத்திவரும் இந்தச் சங்கத்தின் தலைவர் பிரவீன் குமார், “வறுமையில் உழலும் பழங்குடியினப் பெண்களுக்கு பூர்ணா ஒரு நல்ல உதாரணமாக இருப்பார்” என்று கூறி பாராட்டியிருக்கிறார். `டிரான்செண்ட் அட்வென்ச்சர்ஸ்' என்ற நிறுவனம் பூர்ணாவுக்குத் தேவையான அனைத்து பொருளாதார உதவிகளையும் செய்து வருகிறது.

சிகரம் தொட்ட பெண்ணை சிரம்தாழ்த்தி வணங்குவோம்!

-நிவேதிதா லூயிஸ்

அவள்  செய்திகள்

தொடங்கிய சில ஆண்டுகளிலேயே 1,000 மில்லியன் டாலர் மதிப்பை அடையும் நிறுவனங்கள் `யூனிகார்ன்' நிறுவனங்கள். அந்த நிலையை அடைந்திருக்கிறது ‘சிலிங்கோ’ என்ற இ-காமர்ஸ் நிறுவனம். அதன் நிறுவனர் மற்றும் முதன்மைத் தலைமை அதிகாரியான அங்கிதி போஸ் இதன் மூலம் யூனிகார்ன் நிறுவனத்தைத் தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பெண் என்னும் பெருமையை அடைந்திருக்கிறார்.

புல்வாமா தாக்குதலைக் கண்டித்து எந்த அறிக்கையும் தரவில்லை என்று ட்ரால்களின் தாக்குதலுக்கு உள்ளான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, “இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறும் ஒவ்வொரு முறையும் அறிக்கை வெளியிட்டுத்தான் என் நாட்டுப்பற்றை நிலைநாட்ட வேண்டும் என்பதில்லை. அமைதிக்காக வேண்டிக்கொள்வேன். இந்த உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்பது என் தீர்க்கமான எண்ணம். செலிபிரிட்டி என்பதால் நினைப்பதை எல்லாம் சமூக ஊடகங்களில் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

திருச்சி நவல்பட்டு காவலர் காலனி பகுதியில் `ஆதலினால் காதல் செய்வீர்' என்கிற அறக்கட்டளை புதிதாக திருமணமான, ஆகவிருக்கும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த இளம் காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் தர சிறிய பாதுகாப்பகம் ஒன்றை அமைத்திருக்கிறது. இங்கு வந்து தங்கும் ஜோடிகளுக்கு ஒரு வாரத்துக்குப் பாதுகாப்பு, உணவு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

புல்வாமாவின் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த பீகாரைச் சேர்ந்த சஞ்ஜய் குமார் மற்றும் ரத்தன் குமார் ஆகிய இரு வீரர்களின் மகள்கள் இருவரைத் தத்து எடுத்திருக்கிறார் அம்மாநில பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இனாயத் கான். அவர்களின் கல்விச் செலவையும், ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் அவர்.

நெல்லை மாவட்டத்தின் பீடி சுற்றும் தொழிலாளியின் மகளான சரோஜா, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று டி.எஸ்.பி-யாகப் பணியேற்றிருக்கிறார். முழுக்க தொலைதூரக் கல்வி முறையில் பயின்ற மிக எளியப் பின்புலம் கொண்டவர் இவர்!

முதன்முறையாக 1976-ம் ஆண்டு காலில் சலங்கை கட்டி, பரதநாட்டியம் ஆடினார் நடிகை சுஹாசினி மணிரத்னம். அதன் பிறகு, இப்போதுதான் சென்னை சரசாலயா நாட்டியப்பள்ளியின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மீண்டும் ஆடியிருக்கிறார்.

ந்தியாவைக் கதைக்களமாகக்கொண்ட முற்றிலும் பெண்கள் தயாரித்து இயக்கிய மாதவிடாய் பிரச்னைகள் குறித்த ஆவணப்படமான `பீரியட்: எண்ட் ஆஃப் சென்டன்ஸ்' சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் ஓர் ஊரின் பெண்களுக்குத் தரும் பொருளாதார மற்றும் உடல் சார்ந்த விடுதலை உணர்வைப் பேசுகிறது இந்தப் படம்.