தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சூப்பர் 10 பெண்கள் - இந்தியா

சூப்பர் 10 பெண்கள் - இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் 10 பெண்கள் - இந்தியா

முகங்கள்

சூப்பர் 10 பெண்கள் - இந்தியா
சூப்பர் 10 பெண்கள் - இந்தியா

இந்து மல்ஹோத்ரா

நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியான முதல் வழக்குரைஞர்!

சூப்பர் 10 பெண்கள் - இந்தியா

30 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய இந்து மல்ஹோத்ரா, 2018 ஏப்ரல் மாதம் நேரடியாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் நபர் இவரே. பெங்களூரைச் சேர்ந்த இந்து, அதன் பிறகு அளித்த தீர்ப்புகள் அதிரடி சரவெடிதான்!

பிறர்மனை உறவு குறித்த இந்திய தண்டனைச் சட்டப் பிரிவை நீக்கத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்தவர், ``இந்தச் சட்டம் அப்பாவிகள் சிலருக்கு எதிராக இயங்கக் கூடியது’’

என்று சாடினார். ``ஒரு பாலின ஈர்ப்பு மற்றும் பாலியல் தொடர்பை தண்டனைக்குரியதாக்கும் சட்டப் பிரிவை நீக்கிய தீர்ப்பில், அடிப்படை உரிமைகளில் தலையிடும் இந்தச் சட்டம் ஒழிக்கப்படுவதே சரி’’ என்று தீர்ப்பளித்ததோடு, ``நூற்றாண்டுகளாக வரலாறு அவர்களுக்கு இழைத்திருக்கும் அநீதிக்கு, மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றும் தெரிவித்தார்.

ரகிபாய் சோமா போப்பெரே

விதை வங்கி மூலம் மரபு விதைகளைக் காப்பாற்றிய விதைத் தாய்!

சூப்பர் 10 பெண்கள் - இந்தியா

மகாராஷ்டிர மாநிலம் கொம்பல்னி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது விவசாயி, ரகிபாய். தனது நிலத்தில் சிறிய குட்டை ஒன்றை அமைத்து, அதையே நீராதாரம் ஆக்கிக்கொண்டார். தேடிச் சென்று பாரம்பர்ய விதைகளை வாங்கி, சேமிக்கத் தொடங்கினார். அவற்றை தன் சுயஉதவிக் குழு பெண்கள் மூலம் ரசாயனம் இல்லாமலே விதைத்து, முன்பைவிட 30 சதவிகிதம் அதிக லாபம் ஈட முடியும் என நிரூபித்தார். கொடுக்கும் விதையைவிட இரண்டு மடங்காகத்திருப்பித் தர வேண்டும் என்கிற ஒற்றை நிபந்தனையுடன், கேட்போருக்கெல்லாம் `இல்லை’ என்று சொல்லாமல் விதைகளை வழங்கினார். மாவட்டம் முழுக்க பாரம்பர்ய விதை சாகுபடி அதிக மகசூலைத் தர, இவரைக் கொண்டாடத் தொடங்கினர் விவசாயிகள். இவர் நிறுவிய மரபு விதை வங்கி, 32 பயிர்களின் 122 வகை விதைகளை வழங்குகிறது. பிபிசி நிறுவனத்தின் டாப் 100 பெண்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார் இந்த விதைத் தாய்!

அவனி சதுர்வேதி

போர் விமானத்தை, தனித்து இயக்கிய முதல் பெண் விமானி!

சூப்பர் 10 பெண்கள் - இந்தியா

2018 பிப்ரவரி 19 - அன்று இந்திய விமானப்படையின் மிக்-21 பைசன் போர் விமானம் ஒன்றை குஜராத்தின் ஜாம் நகரில் ஓட்டி சாதனைபுரிந்தார் அவனி சதுர்வேதி. மத்தியப்பிரதேசத்தின் ரேவா என்னும் சிற்றூரில் பிறந்த அவனி, தியோலந்து என்ற சிற்றூரில் பள்ளிக்கல்வியை முடித்தவர்.

ஜெய்ப்பூரின் பானஸ்தலி பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்த அவனி, கல்லூரியின் `ஃப்ளையிங் கிளப்'பில் சேர்ந்து ஒருமுறை தோழிகளுடன் பயிற்சி விமானத்தில் பறந்தார். பறத்தலின் மீதான அதீத ஆர்வம், அவரை இந்திய விமானப்படை நோக்கி நகர்த்தியது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். ஹைதராபாத் விமானப்படைப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து தேர்ச்சிபெற்றார். 2016-ம் ஆண்டு விமானப்படைக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக் கப்பட்ட பெண்கள் அணியில் அவனியும் ஒருவர்.

உலகின் தலைசிறந்த போர் விமானங்களை இயக்கி, நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தன் விருப்பம் என்று கூறும் அவனியின் வயது 24-தான்!

ஹிமா தாஸ்

உலக ஜூனியர் தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண்!

சூப்பர் 10 பெண்கள் - இந்தியா

ஹிமா தாஸ், அசாம் மாநிலம் திங் கிராமத்தின் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தடகள ஓட்டத்தில் பேரார்வம் கொண்டிருந்தவர். ஆனால், அதற் கான சரியான வாய்ப்பு களோ, வசதியோ அவரிடம் இல்லை. கௌஹாத்தியின் தடகளப் பயிற்சியாளர் நிப்பன் தாஸின் கண்களில் பட்டார் சிறுமி ஹிமா.

``ஹிமாவுக்கு, யாரைக் கண்டும் பயமில்லை. வெற்றி ஒன்றின் மீதே மொத்த கவனமும் இருந்தது” என்று கூறும் நிப்பன் தந்த கடும்பயிற்சியில், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் பின்லாந்து நாட்டின் டாம்பியர் நகரில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகளப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார். தங்கம் வென்று வரலாறு படைத்தார்.

அடுத்து இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப்பதக்கங்களை வென்றார் ஹிமா. வெறுங் காலுடன் திங் கிராமத்து வயல்வெளிகளில் ஓடிய ஹிமா, இன்று அடிடாஸ் காலணி நிறுவனத்துக்கு பிராண்டு அம்பாசடர்!

பல்லவி துருவா

இந்தியாவின் முதல் பழங்குடியின ராணி பட்டம் வென்ற பெண்!

சூப்பர் 10 பெண்கள் - இந்தியா

ஒடிசா மாநிலத்தின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, மாநில அரசு, ஒடிசா மாநிலச் சுற்றுலாத் துறை இணைந்து 2018-ம் ஆண்டு, ஜூன் மாதத்தில் இந்தியாவின் முதல் ஆதி ராணி கலிங்கா ராணி பட்டத்துக்கான போட்டியை புவனேஷ்வர் நகரில் நடத்தியது. மாநிலம் முழுவதும் உள்ள பழங்குடி மற்றும் மலைவாழ் இனப்பெண்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர்.

இதில் கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லவி துருவா என்கிற பழங்குடியினப் பெண், ராணி பட்டம் வென்றார். பஞ்சமி மாஜி இரண்டாவது இடத்தையும், ரஷ்மிரேகா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மும்பையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் இயக்கவிருக்கும் திரைப்படத்தில் இந்த மூவரும் நடிக்கவுள்ளனர்.

``என்னைப் போன்ற பல பழங்குடியினப் பெண்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படுவதில்லை. நான் ஒரு முன்னுதாரணமாக இருந்து, அவர்கள் நம்பிக்கையுடன் உலகை அணுக உதவுவேன்” என்கிறார் இந்த ராணி!

மேரி கோம்

உலகக் குத்துச்சண்டைப் போட்டிகளில் ஆறாவது முறை சாம்பியன் பட்டம் வென்ற பெண்!

சூப்பர் 10 பெண்கள் - இந்தியா

36 வயதான மேரி கோம், கடந்த 2018-ம் ஆண்டு, நவம்பர் மாதம் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டிகளின் 48 கிலோ பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். மூன்று குழந்தைகளுக்குத் தாயான மேரியின் கடும்பயிற்சிக்கும் தன்னம் பிக்கைக்கும் கிடைத்த வெற்றி இது.

இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளை வென்றதன் மூலம், `உலகக் குத்துச்சண்டைப் போட்டிகளில் ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்ற பெண்’ என்ற பெருமையை அடைந்தார் கோம். போட்டியில் வென்றவர், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.

``என் அடுத்த லட்சியம், 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி. அதில் 48 கிலோ பிரிவு இல்லாத காரணத்தால் 51 கிலோ பிரிவில்தான் நான் போட்டியிட வேண்டும். வெற்றிக்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும், என்னால் இயன்ற அளவு நிச்சயம் போராடுவேன்” என்று உறுதி கூறியிருக்கிறார் மேரி. சாதிக்க, வயது தடையில்லை என நிரூபித்திருக்கிறார்!

தேப்ஜனி கோஷ்

நாஸ்காமின் முதல் பெண் தலைவர்!

சூப்பர் 10 பெண்கள் - இந்தியா

தேசிய மென் பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் அமைப்பான நாஸ்காமின் தலைவராக, பிப்ரவரி 2018-ல் நியமிக்கப் பட்டார் தேப்ஜனி கோஷ். இன்டெல் இந்தியா மென்பொருள் நிறுவனத்தின் முதல் பெண் தலைவரான தேப்ஜனி, மென்பொருள் துறையில் பாலின சமத்துவம் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர். நாஸ்காம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தலைவராகப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மென்பொருள் துறையில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருந்தாலும், உயர் பதவிகளில் பெரும்பாலும் ஆண்களே கோலோச்சும் நிலை இருக்கிறது. ``இந்த நிலை மாற வேண்டும். திறமையான பெண்கள் பாதிக் கிணறு தாண்டிய பிறகு பணியைக் கைவிடுவது ஏன் என்று ஆராய வேண்டும். அதைச் சரிசெய்ய வேண்டும்” என்று சொல்லும் தேப்ஜனி, ``பொறியியல் கல்லூரிகளிலிருந்து இருபாலரும் சமவிகிதமாகவே பணிக்கு வரும்போது, இந்த இடைவெளி ஏன் என்று நாம் ஆலோசிக்க வேண்டும்” என்றும் கூறுகிறார். 2,400 மென்பொருள் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமை வெற்றிகரமாக வழிநடத்திவருகிறார் தேப்ஜனி!

விஜி - பெண்கூட்டு

`இருப்பு சமரத்தை’ வெற்றிகரமாக நடத்திய சமூக ஆர்வலர்!

சூப்பர் 10 பெண்கள் - இந்தியா

50 வயதான விஜி, கேரளாவின் `இருப்பு சமரம்’ என்கிற பணியிடங்களில் உட்காரும் உரிமைக்கான போராட்டத்தை முன்னெ டுத்துச் சென்றவர். 2009-ம் ஆண்டு, அமைப்பு சாரா பெண் தொழிலாளிகளுக்குக் கழிவறை வசதி வேண்டும் என்ற பிரசாரத்துக்காக `பெண் கூட்டு’ அமைப்பை நிறுவினார் விஜி. கோழிக்கோடு நகரின் முக்கிய வணிக நிறுவனங்களில் பணியாற்றிவரும் பெண்களுக்கு, கழிவறையைப் பயன்படுத்த நேரம் ஒதுக்கப்படுவதில்லை; உட்கார அனுமதி வழங்கப்படுவதில்லை. தொடர்ந்து 12 மணி நேரம் நின்றபடி துணி மற்றும் நகைக் கடைகளில் பணியாற்றிவந்த பெண்களின் இன்னல் போக்க, `உட்காரும் உரிமை’ கேட்டு, போராட்டத்தைத் தொடங்கினார் விஜி.

எட்டு ஆண்டுகள் கடும்போராட்டத்துக்குப் பிறகு, வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு அமரும் வசதி கட்டாயம் செய்து தர வேண்டும் என்ற சட்டத் திருத்தத்தை 2018 டிசம்பர் மாதம் கொண்டுவந்தது கேரள அரசு. தையல் தொழிலாளியான விஜி, இப்போது அசங்காடித மேகலா தொழிலாளர் சங்கத்தின் (ஏ.எம்.டி.யூ) தலைவராகச் செயலாற்றிவருகிறார். பிபிசி நிறுவனத்தின் டாப் 100 பெண்கள் வரிசையில், விஜி இடம்பிடித்திருக்கிறார். ``பெண்ணாகப் பிறந்தது எங்கள் தவறில்லை. நாங்களும் மனிதர்கள்தானே?” என்று கேள்வி எழுப்புகிறார் விஜி.

சுதா பாலகிருஷ்ணன்

ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை நிதி அதிகாரி!

சூப்பர் 10 பெண்கள் - இந்தியா

`என்.எஸ்.டி.எல்’ எனப்படும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் உதவித் தலைவராகச் செயல்பட்டு வந்த சுதா பாலகிருஷ்ணனை, மே 2018-ல் ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை நிதி அதிகாரியாக அறிவித்தது அரசு.

இந்தப் பதவிக்கு வரும் முதல் நபர் இவரே. `ரிசர்வ் வங்கியின் முதலீடுகள், அரசு மற்றும் வங்கிக் கணக்குகள், பட்ஜெட், பி.எப் விகிதம் போன்ற முக்கிய முடிவுகளை சுதா எடுப்பார்’ என்று அரசு அறிவித்தது. மூன்றாண்டுக் காலம் இந்தப் பதவியில் இவர் நீடிப்பார்.

பட்டயக்கணக்காளரான சுதா, ரிசர்வ் வங்கியின் 12-வது எக்ஸிக்யூட்டிவ் இயக்குநர் ஆவார். ரிசர்வ் வங்கியின் முக்கிய முடிவுகள் மற்றும் மாற்றங்களுக்குக் காரணம் இவரே!

ஜமிதா பீவி

இருபாலர் தொழுகையை முன்னின்று நடத்திய முதல் இஸ்லாமியப் பெண்!

சூப்பர் 10 பெண்கள் - இந்தியா

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜமிதா பீவி. 2018-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வண்டூரில் சுமார் 30 நபர்களது தொழுகையைத் தலைமையேற்று நடத்தி, எதிர்ப்புகளுக்கு ஆளாகியுள்ளார், ஜமிதா பீவி. வழக்கமாக இதுபோன்ற கூட்டுத்தொழுகை இமாம்களால்தான் நடத்தப்படும். பெண் இமாம்கள் எங்கும் இல்லை. அப்படி இருந்தாலும் பெண்கள் மட்டுமே செய்யும் கூட்டுத்தொழுகையில்தான் பெண்கள் தலைமை ஏற்கலாம் என்கிற கட்டுப்பாடு உண்டு. ஆனால், ஆண்களும் பெண்களும் சேர்ந்து செய்த தொழுகையை, ஜமிதா தலைமை ஏற்று நடத்தியுள்ளார். இதற்கு முன் ஆமினா வதூத் என்கிற பெண், 2005-ம் ஆண்டு நியூயார்க் நகரில் தலைமையேற்று, தொழுகை நடத்தியுள்ளார்.

இஸ்லாத்தில் மாற்றம் வேண்டும் என முயற்சி செய்யும் `குர்-ஆன் சுன்னத் சொசைட்டி' என்கிற சிறுபான்மை அமைப்பைச் சேர்ந்தவர் ஜமிதா. குழந்தைகளுக்கு அரபுமொழி பயிற்றுவிக்கும் இவர், இலவச குர்-ஆன் வகுப்புகளும் எடுத்துவருகிறார். ``எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சப்போவதில்லை!’’ என்று சொல்லும் ஜமிதா, ``இஸ்லாம், பெண்களுக்கு சம உரிமையை எப்போதும் போதித்துவந்திருக்கிறது’’ என்கிறார்.