தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அந்தப் பார்வையே மாற்றத்தை ஏற்படுத்தும்!

அந்தப் பார்வையே மாற்றத்தை ஏற்படுத்தும்!
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தப் பார்வையே மாற்றத்தை ஏற்படுத்தும்!

நம் உடல் நம் உரிமை இந்து ஹரிகுமார்

ன்ஸ்டாகிராமில் `ஐடென்டிட்டி’ என்ற பக்கம், மகிழ்ச்சி, சோகம், பரிகாசம், தாழ்வுமனப்பான்மை எனக் கலவையான உணர்வுகளுடன் அனுபவக் கதைகளால் நிரம்பி வழிகிறது. அத்தனை உணர்வுகளுக்கும் மையப்பொருள், பெண்களின் அடையாள மாகப் பார்க்கப்படும் மார்பகங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும், மார்பகங்கள் தொடர்பான பருவ வயது நினைவுகளும் பாலியல் அத்துமீறல் அனுபவங்களும் இருக்கக்கூடும். மனதுக்கும் உடலுக்கும் நெருக்கமான நபர்களிடம்கூடப் பேச முடியாத இந்த விஷயத்தைக் கொட்டித் தீர்க்க, களம் அமைத்துக்கொடுத்திருப்பவர் இந்து ஹரிகுமார். மும்பையைச் சேர்ந்த ஓவியரான இந்து, இதற்கு முன்பும் இதே போன்ற புரட்சி முயற்சிகளை முன்னெடுத்தவர்.

அந்தப் பார்வையே மாற்றத்தை ஏற்படுத்தும்!

``ஃபேஷன் டெக்னாலஜி படித்திருக்கிறேன். குழந்தைகளுக்கான புத்தகங்களுக்காகப் பணி யாற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும்’’ - க்யூட் அறிமுகம் தருபவருக்கு, எந்த விவாதப் பொருளையும் ஓவியமாக்குவதில் ஆர்வம் அதிகம்.
 
`டிண்டர்’ என்கிற ஆப்பை இந்தியர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்துகொள்ளும் முயற்சியாக, 2016-ம் ஆண்டில் `100 இந்தியன் டிண்டர்டேல்ஸ்’ என்ற புராஜெக்டை ஆரம்பித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக டேட்டிங், பாலியல், மாதவிலக்கு குறித்த மக்களின் கருத்துகளை வெளிப்படையாக விவாதிக்க அழைப்பு விடுத்திருக்கிறார். அந்தக் கதைகளை ஓவியங்களாக வரைந்து, தன் இன்ஸ்டா கணக்கில் ஏற்றியிருக்கிறார். ஜெர்மனியில் ஒரு மியூசியத்தில் நடந்த `லவ் த்ரூ த ஏஜஸ்’ என்ற கண்காட்சியில், இவருடைய சில ஓவியங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

அந்தப் பார்வையே மாற்றத்தை ஏற்படுத்தும்!

``2017-ம் ஆண்டில் `பாடி ஆஃப் ஸ்டோரீஸ்’ என்று ஒரு புராஜெக்டை ஆரம்பித்தேன். உடல் பரிகாசங்களைச் சந்தித்தவர்களுடைய கதைகளுக்கான முயற்சி அது. உறவுகள், டேட்டிங், நட்பு, பாலியல்... இப்படி எல்லா உணர்வுகளையும் நான் ஓவியங்களாக்குகிறேன். இந்த முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பு என்னை மிரள வைத்தது.

இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணுடனான உரையாடலில்தான் அடுத்த முயற்சி ஆரம்பமானது. பெரிய மார்பகங்களைக்கொண்ட அந்தப் பெண், `ஆண்களின் பார்வை, தன் மார்பகங்களைத் தவிர்த்து வேறு எங்கேயும் போவதில்லை’ என வருத்தத்தோடு சொன்னார். ஒவ்வொரு பெண்ணுக்கும் அடையாளம், அவளுடைய மார்பகங்கள். அவை சிறியதாகவோ, பெரியதாகவோ எப்படி இருந்தாலும் அவர்களுக்குக் கவலையையே தருகின்றன. `உன் உடம்புல ரெண்டு பக்கங்கள்லயும் கொழுப்பே இல்லையே... உன் கணவருக்கு நீ எதைக் கொடுக்கப்போறே?’ங்கிற மாதிரியான வார்த்தைகளை நானும் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். பெரும்பாலான பெண்களுக்கும் மார்பகங்கள் குறித்த வித்தியாச அனுபவங்கள் இருக்கின்றன எனப் புரிந்தது. பல பெண்களின் அனுபவங்களைக் கேட்டபோது, மார்பகங்கள் பெண்ணுடல் பரிகாசங்களுக்கான பொதுவான, முக்கியமான காரணமாக இருப்பதையும் உணர்ந்தேன். அந்தப் பெண்ணிடம் `உங்க அனுபவத்தைப் பகிர்ந்துக்கத் தயாரா?’ எனக் கேட்டபோது, உடனே சம்மதித்தார். அப்படித்தான் `ஐடென்டிட்டி’ ஆரம்பமானது’’ என முதல் பத்திச் செய்திக்கான முதல் புள்ளியை விவரிக்கிறார் இந்து.

அந்தப் பார்வையே மாற்றத்தை ஏற்படுத்தும்!

பெண்கள் தம் மார்பகங்களின் படங்களையும், அவை தொடர்பான அனுபவங்களையும் இந்துவுக்கு அனுப்ப வேண்டும். மார்பகங்களின் படங்கள் என்றதும் நிர்வாணக் கோலத்தில் கற்பனைசெய்துவிட வேண்டாம். அழகிய உடைகளுடன், ஓவியங்களுடன், மலர் அலங்காரங்களுடன், மெஹந்தியுடன்... எப்படி விருப்பமோ அப்படி அனுப்பலாம். அந்தப் படங்களை டிஜிட்டல் ஓவியங்களாக மாற்றி, இன்ஸ்டாவில் அவரவர் அனுபவங்களுடன் பதிவேற்றுவார் இந்து. தன்னுடைய படங்கள் எப்படிப்பட்டப் பின்னணியில் வரையப்பட வேண்டும் என்கிற கண்டிஷன் களையும் சம்பந்தப்பட்ட பெண்கள் இந்துவுக்கு வலியுறுத்தலாம்.

``எனக்கு வந்த படங்களும் பகிர்வுகளும், அசாதாரணமான அனுபவங்களைத் தாங்கியவையே. `எனக்கு `கோத்ரெஜ் கபோர்டு’னு பட்டப்பெயர் வெச்சிருக்காங்க. கபோர்டு எப்படி முன்னாடியும் பின்னாடியும் ஃபிளாட்டா இருக்குமோ, நானும் அப்படித்தான் இருக்கேனாம்’ என ஒரு பெண் எழுதியிருந்தார். இன்னொருவருக்கு `மிஸ் சோமாலியா’ எனப் பட்டப்பெயர். பெரிய மார்பகங்களைக்கொண்ட பெண்களும் பரிகாசங்களிலிருந்து தப்பவில்லை என இந்தப் பதிவுகள் புரியவைத்தன. ஒருசில கதைகள் பயங்கரமான மனவலியைத் தந்திருக்கின்றன. அவற்றிலிருந்து என்னை மீட்டெடுப்பதே பெரிய சவாலாக இருந்ததுண்டு. உடனடியாக `அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே!’ என மனசு பதறும்.

அந்தப் பார்வையே மாற்றத்தை ஏற்படுத்தும்!

என்னுடைய எந்த முயற்சியையும், பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றோ, இந்த உலகத்தையே மாற்றிவிடும் என்றோ நினைத்து நான் செய்வதில்லை. பொதுவெளிகளில் பலரும் பேசத் தயங்கும், விவாதிக்கத் தயங்கும் விஷயங்களைத்தான் நான் என் புராஜெக்ட்டுக்கான கருப்பொருளாக எடுத்துக் கொள்கிறேன். என்னுடைய முயற்சிகளுக்கு ஒரே நோக்கம்தான். இந்தப் பதிவுகளைப் பார்க்கிறவர்கள், `நான் மட்டும் இதை அனுபவிக்கவில்லை... நிறையபேர் இருக்காங்க’ என நினைக்க வேண்டும். நான் என் பிரச்னைகளை அப்படித்தான் பார்ப்பேன். இத்தனை பேரின் அனுபவங்களைப் படிப்பவர், அவற்றிலிருந்து அவர்களுக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்வார்கள். அந்தப் பார்வையே மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்ற இந்துவின் நம்பிக்கையே, நம் நம்பிக்கையும்!

-  சாஹா