தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நேசக்காரிகள்: நடமாடும் இதயம்

நேசக்காரிகள்: நடமாடும் இதயம்
பிரீமியம் ஸ்டோரி
News
நேசக்காரிகள்: நடமாடும் இதயம்

கஸ்தூரி

திருக்கழுக்குன்றத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள சிறிய கிராமம் ஒரகடம். அந்தக் கிராமத்தினுள் ஒதுக்குப்புறமாக இருக்கிறது இருளர் குடியிருப்பு. 40 குடும்பங்களாக உள்ள இருளர்கள்,  அங்கே தனியாக வசித்துவருகிறார்கள். அங்குள்ள சிறுவர்களுக்கெல்லாம் கடந்த 10 வருடங்களாகப் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார் அதே இருளர் சமூகத்தைச் சார்ந்த கஸ்தூரி. 

நேசக்காரிகள்: நடமாடும் இதயம்

கஸ்தூரிக்கு ஏழாம் வகுப்பு படிக்கும்போதே இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. எந்த விஷயத்திலும் அதிக சிரமம் எடுக்கக்கூடாதென்று மருத்துவர்களால் அறிவுறுத்தப் பட்டிருக்கிறார். பெற்றோர் விவசாயக்கூலிகள். வயிற்றுக்குப் பஞ்சம் என்றாலும், பள்ளிக்கூடம், வேலை என எங்கேயும் அனுப்பாமல், அவள் உயிரோடு இருந்தால் போதுமென்று மகளை அடைகாத்து இருக்கிறார்கள். கஸ்தூரிக்கோ அடைந்து கிடக்க மனமில்லை. படிப்பை மட்டும் விட்டுவிடக் கூடாதென்று தன் கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் நடந்து, பிரதான சாலைக்கு வந்து பஸ் ஏறி பள்ளிக்கூடம், கல்லூரி என பி.காம் முடித்தார். ஆசிரியர் பணிக்குப் படித்தால் படிப்பு வாசனையே இல்லாமலிருக்கும் தன் சமூகத்துப் பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கலாம் எனத் தோன்ற டீச்சர் ட்ரெய்னிங்கும் முடித்திருக்கிறார். அந்தக் கிராமத்திலுள்ள பள்ளியிலேயே ஆசிரியர் வேலையும் கிடைத்திருக்கிறது. நீண்டநாள் கனவு நிறைவேறிய துடிப்பில் தொண்டைத் தண்ணீர் வற்ற மாணவ மாணவிகளுக்குப் பாடம் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த கஸ்தூரியை மீண்டும் தடுத்தது அவருடைய இதயம். அதிகம் சோர்வடைய ஆரம்பித்திருக்கிறார். இருப்பினும், வேலையை விட முடியவில்லை. ஒருகட்டத்தில் கஸ்தூரியின் லட்சியத்தை அவர் உடல் வெற்றிகொண்டது. மேலும் மேலும் உடல் பலவீனமாகி, ஒருகட்டத்தில் வேலையை விட்டுவிட்டார் கஸ்தூரி. சில மாதங்கள் ஓய்வு. மீண்டும் ஆசிரியர் வேலைக்குப் போக முடியாத அளவுக்கு இதயப் பிரச்னை. வீட்டிலேயே இருந்திருக்கிறார். பள்ளிக்கூடத்துக்குப் போய்தானே பாடம் நடத்த முடியாது? நம் வீட்டு வாசலிலேயே நம் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தால் என்ன? இந்த எண்ணம் தோன்ற, தன் வீட்டு வாசலை சற்று விசாலப்படுத்தி சிமென்ட் தரையாக்கி, அங்கேயே கடந்த பத்து வருடங்களாகக் காலை மாலை இருவேளையும் கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார் கஸ்தூரி. வெயில் ஏறுகிற, இறங்குற வேளையில் அருகேயுள்ள ஒரு மரத்தின் கீழே தார்ப்பாய் போட்டு வகுப்பு தொடர்கிறது.

இருளர் சமூகத்துப் பிள்ளைகளுக்கு கஸ்தூரி பாடம் நடத்துவதைப் பார்த்து, மற்ற சமூகத்துப் பிள்ளைகளும் அவரிடம் வந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இவர்களிடம் எதைத்தேடியும் வராத ஊர்க்காரர்கள், இன்று கஸ்தூரியிடம் தன் பிள்ளைகள் பாடம் படிக்க வேண்டும் என  இந்தப் பகுதிக்கு வந்துபோகிறார்கள்.

பெண் குழந்தைகள் என்றால் திருமணமும், ஆண் குழந்தைகள் என்றால் வேலைக்கும்  வெகு சீக்கிரத்தில் அனுப்பிவிடும் தன் சொந்தங் களிடம் சென்று, கல்விக்கான அவசியத்தைச் சொல்லி, பிள்ளைகளை வரவழைத்துப் பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி.

“சின்ன வயசுலேயே எனக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணதால, அப்பப்போ மயக்கம் வரும், பதற்றம் வரும். இதுக்கு அப்புறம்கூட எனக்கு என்ன நடக்கும்னு தெரியாது. ஆனா, நாம இருக்கிறவரைக்கும் நம்ம ஜனங்களுக்கு என்ன செஞ்சிட்டுப் போறோம்னு ஒண்ணு இருக்குல்ல. கொடுக்கிறதுக்கு நான் கத்துக்கிட்ட கல்வி மட்டும்தானே இருக்கு'' எனப் புன்னகைக்கிறார் கஸ்தூரி.

சில புன்னகைதான் நமக்கு கண்ணீரை வரவழைக்கும். அந்தக் கண்ணீருடன் கஸ்தூரியுடனான உரையாடல் நிறைகிறது.

-தமிழ்ப்பிரபா

 தே.அசோக்குமார்