தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அந்தப் பாசத்தைப் பார்க்கிறபோது எல்லா கஷ்டங்களும் மறந்துபோயிடும்!

அந்தப் பாசத்தைப் பார்க்கிறபோது எல்லா கஷ்டங்களும் மறந்துபோயிடும்!
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தப் பாசத்தைப் பார்க்கிறபோது எல்லா கஷ்டங்களும் மறந்துபோயிடும்!

அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்தன்னம்பிக்கை மனுஷி உஷா

68 வயது மாநிறம்... சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் உஷாவின் அடையாளம் இது. புறத்தோற்றம் இப்படிச் சொன்னாலும், அகத்தோற்றமோ பேரழகு! `உழைக்காத உடல் உரம்கொள்ளாது' என்பதை உண்மையாக்கும் உதாரண மனுஷி, உஷா. உழைப்பிலிருந்து விலகி, ஓய்வெடுத்தபடி பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி மகிழவேண்டிய வயதில், ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருப்பவர். ``அந்த உழைப்புதான் துன்பங்களிலிருந்து என்னை மீட்டெடுக்கும் மந்திரசக்தி’’ என்கிறார்.

``சும்மா இருக்கிறதைப்போல சோகம், இந்த உலகத்துல எதுவுமில்லை. உழைக்கும்போது கவலைகளை மறக்கிறோம். அடுக்கடுக்கான துயரங்களைக் கொடுத்த கடவுள், கூடவே அவற்றை மறக்கிறதுக்கான வழியா இந்த வயசிலும் என்னை உழைக்க வெச்சிருக்கார்போல’’ - விரக்திச் சிரிப்பில் வெளிப்படும் சோகத்தை, சிரமப்பட்டு மறைக்கிறார்.

அந்தப் பாசத்தைப் பார்க்கிறபோது எல்லா கஷ்டங்களும் மறந்துபோயிடும்!

``அப்பாவுக்கு, என்னை டாக்டர் ஆக்கணும்னு ஆசை. எனக்கு 15 வயசிருக்கும் போதே அப்பா இறந்துட்டார். அவர் போன பிறகு படிப்பே கேள்விக்குறியானதால, டாக்டர் கனவையும் அன்னிக்கே மறந்துட்டேன். ஷார்ட்ஹேண்டு தெரிஞ் சிருந்ததால, ஒரு பிரைவேட் கம்பெனியில ஸ்டெனோ வேலை கிடைச்சது. 18 வயசுல கல்யாணமும் முடிஞ்சிருச்சு. ரெண்டு ஆண் குழந்தைகள் பிறந்தாங்க. எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. ஆனா, அப்பா தவறியது, சின்ன வயசுல கல்யாணம், குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள்னு வாழ்க்கையில அடுத்தடுத்து ஏற்பட்ட மாற்றம், கிட்டத்தட்ட அந்தக் கனவையே மறக்கவெச்சிருந்தது.

என் மூத்த மகன் பத்தாவது படிச்சிட் டிருந்தபோ, திடீர்னு ஒருநாள் `பசங்க வளர்ந்தாச்சு... இனிமே ஏன் என் கனவை நனவாக்கும் முயற்சியைச் செய்யக் கூடாது’னு எனக்குத் தோணவே, அந்த வயசுல பி.ஏ டிகிரி முடிச்சேன். அடுத்து என் மூத்த மகனுக்கு காலேஜ் அட்மிஷன் விஷயமா அலைஞ்சிட்டிருந்தபோ, அழகுக்கலைப் பயிற்சி டிப்ளோமா படிப்புக்கான அறிவிப்பைப் பார்த்தேன். என் கணவர் சப்போர்ட் பண்ணினார்.  பியூட்டிஷியன் கோர்ஸ் முடிச்சேன். அப்போதைக்கு புதுசா ஒரு விஷயத்தைக் கத்துக்கணும்கிறது மட்டும்தான் என் ஆர்வமா இருந்ததே தவிர, பியூட்டிஷியன் ஆவேன்னு நினைச்சுக்கூடப்பார்க்கலை.

அப்பப்போ பிராக்டிஸ் மட்டும் பண்ணிட்டிருந்தேன். பையன் வேலைக்குப் போன பிறகு, இன்னும் நிறைய டைம் கிடைச்சது. கணவர், சிவில் ஏவியேஷன் டிபார்ட்மென்ட்டில் வேலை பார்த்திட்டிருந்தார். `படிச்சதை ஏன் வீணாக்குறே... பியூட்டி பார்லர் ஆரம்பிக்கலாமே’னு அவர்தான் என்கரேஜ் பண்ணினார். அப்பல்லாம் பார்லர்னா தி.நகருக்கோ, எழும்பூருக்கோதான் போகணும். அந்த நிலையில `சென்னை வெஸ்ட் மாம்பலத்தில் முதல் பியூட்டி பார்லர்’ என்ற பெருமையோடு ஆரம்பிச்சேன். முதல் நாள் வந்த வாடிக்கையாளர்கள், இன்னிக்கும் வர்றாங்கங்கிறதுதான் என் தொழில் எனக்குத் தந்த அங்கீகாரம்’’ - அரிதாரமற்ற வார்த்தைகளில் அறிமுகம் தருபவர்,  வாழ்க்கையின் சில அத்தியாயங்களை நினைவுகூரும்போது வார்த்தைகளற்றுத் தவிக்கிறார்.

``இளைய மகன் அருண்குமாருக்கு இப்போ 40 வயசு. அவன் பிறந்த முதல் நாள் குளிப்பாட்டத் தூக்கிட்டுப் போனபோது ஏதோ வித்தியாசம் தெரிஞ்சது. அவன் உடம்பு முழுக்க விரைச்சிருந்தது. அவனைத் தொட்டா மொத்த உடம்பும் திரும்புமே தவிர, தலை மட்டும் திரும்பாது. கைகால்ல அசைவே இல்லை. ஃபோர்செப்ஸ்னு சொல்ற ஆயுதப் பிரசவம் நடந்ததுல, அவன் தலை நரம்பில் பிரச்னை ஏற்பட்டு ஸ்பாஸ்டிக் குழந்தையாகிட்டான். முதல்ல ஃபோர்செப்ஸ் டெலிவரி பார்த்ததா சொன்ன டாக்டர்ஸ், நாங்க சந்தேகப்பட்டு கேள்விகள் கேட்க ஆரம்பிச்சதும் மறுத்துட்டாங்க. தம் மேல எந்தத் தப்பும் இல்லைன்னு உஷாராகி, மூணாவது நாள் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.

அந்தப் பாசத்தைப் பார்க்கிறபோது எல்லா கஷ்டங்களும் மறந்துபோயிடும்!

குழந்தைகள் மருத்துவமனையில அவனை டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு, `ஸ்பாஸ்டிக் சைல்டு'னு உறுதிப்படுத்தினாங்க. அந்தக் காலத்துல ஸ்பெஷல் சில்ரனுக்கான ட்ரீட்மென்ட்ஸோ, கல்வி வசதிகளோ கம்மி. அவனுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் தேடினேன். அவனைத் தூக்கிட்டு ஸ்பீச் தெரபிக்கு ஓர் ஏரியா, பிசியோதெரபிக்கு இன்னோர் ஏரியானு நாள் முழுக்க அவன்கூடவே இருந்தேன். 20 வருஷமா தொடர்ச்சியா கொடுத்த ட்ரீட்மென்ட்ல ஓரளவுக்குத் தேறினான். எங்க காலத்துக்குப் பிறகு அவனை மூத்த மகன் பார்த்துப்பான்கிற எங்க நம்பிக்கையில இடி விழுந்தது...’’ - வெகுநேரம் அடக்கிவைத்திருந்த அழுகை வெடித்துக் கிளம்பியது. ஆறுதலுக்கு அடங்கும் சாதாரண அழுகையல்ல அது. 

``பெரியவன் சஷிகாந்த், பி.காம் முடிச்சிட்டு சொந்தமா பிசினஸ் பண்ணிட்டிருந்தான். கல்யாணமாகி டுச்சு, ஒரு பெண் குழந்தை. `42 வயசுல அவனுக்கு ஹார்ட் அட்டாக் வரும், எங்களையெல்லாம் விட்டுட்டு ஒரேயடியா போயிடுவான்'னு நினைச் சிருப்போமா? அவனுடைய இழப்பு யாருமே எதிர்பார்க்காதது. அதுலேருந்து இன்னமும் என்னால மீள முடியலை. அவன் போனதும் வாழ்க்கையே சூன்யமானது மாதிரி இருந்தது. வீட்டுக்குள்ளேயே முடங்கி யிருந்தேன். `வீட்டைவிட்டு வெளியில வாங்க. நாலு பேர் முகங்களைப் பாருங்க. மனசுவிட்டுப் பேசுங்க. வேலையில கவனத்தைத் திருப்புங்க. நாங்க இருக்கோம்’னு என்னைக் கட்டாயப்படுத்தி மறுபடியும் என்னை வெளியில வரவெச்சவங்க, என் பல வருஷ கஸ்டமர்ஸ்தான்.

`ஒரு பையனை ஸ்பாஸ்டிக்கா படைச் சிட்டே... நல்லா இருந்த இன்னொருத்தனையும் முழுசா வாழவிடாமப் பாதியிலேயே பறிச்சுக்கிட்டியே’னு கடவுள்மேல கோபப் பட்ட நாள்கள், கதறிய தருணங்கள் எக்கச்சக்கம். `இனிமே கோயிலுக்கே வரமாட்டேன்'னெல்லாம் கடவுளோடு சண்டைபோட்டிருக்கேன். ஆனா, அதே கடவுள்தான் என் துயரங்களை மறக்கிறதுக்கான வழிகளையும் காட்டுறதா இப்போ நம்புறேன்.

ஆமாம், எனக்கு என் தொழில்தான் கடவுள். மகனுடைய இழப்புங்கிறது எனக்கு எப்படியிருந்திருக்குமோ, அப்படித்தான் என் கணவருக்கும் இருந்திருக்கும். அவர் தன் சோகத்தை மறைச்சுக்கிட்டு எனக்கு ஆறுதல் சொன்னார். `உனக்காவது ஒரு பிசினஸ் இருக்கு. பார்லருக்குப் போய் நாலு பேரைப் பார்த்தா கொஞ்சம் மனசு மாறும். அதுகூட இல்லாத எத்தனையோ பேர் இருக்காங்க. போய் பிசினஸைப் பாரு’னு சொல்லி அனுப்பினார். வெளியில வந்தப்போதான் என்னைவிட வாழ்க்கையில் துன்பங்களை அனுபவிக்கிறவங்க நிறையபேர் இருக்காங்கனு புரிஞ்சது.

பியூட்டி பார்லர் பிசினஸைப் பொறுத்த வரை, எல்லா நாளும் வருமானம் இருக்கும்னு சொல்ல முடியாது. அதுவும் இன்னிக்கு கார்ப்பரேட் சலூன்கள் பெருகிட்டிருக்கிற காலம். வீட்டுக்கே போய் சர்வீஸ் பண்ற வசதிகள் அதிகமாகிருச்சு. அந்த நிலையிலும் `இந்த பிசினஸே வேண்டாம். வீட்டுலயே இருந்திடலாம்’னு ஒரு நாளும் நினைச்சதில்லை. `பார்லர்ல  ஓர்  ஓரமா கொஞ்சம் இடம் கொடுங்க... நான் ஒரு டெய்லரிங் மெஷின் போட்டுத் தைக்கிறேன்’னு  என் ஃப்ரெண்டு கேட்டாங்க. கொடுத்தேன். ஒருகட்டத்துல அவங்க வேற ஊருக்குப் போயிட்டாங்க. அவங்களைத் தேடி வந்த வாடிக்கையாளர்களுக்காக நானே அந்த பிசினஸையும் எடுத்துச் செய்ய ஆரம்பிச்சேன். ரொம்ப சீக்கிரமே டெய்லரிங் நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். பார்லருக்கு ஆள்கள் வராத நாள்களில் டெய்லரிங்தான் காப்பாத்திட்டிருக்கு. ஆரம்பத்தில எனக்கு தைக்கத் தெரியாது. ஆனாலும், ஸ்டிச்சிங்ல லேட்டஸ்ட்டான விஷயத்தைத் தேடிப்பார்த்து, என்னை அப்டேட் பண்ணிட்டே இருப்பேன். வாடிக்கையாளர்களுக்கு அளவெடுக்கிறது முதல், அவங்க உடல்வாகுக்கு என்ன பேட்டர்ன் பொருத்தமா இருக்கும்னு டிப்ஸ் சொல்றது வரை எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். ஒரு நிமிஷம்கூட மனசை அலைபாயவிடுறதில்லை. புத்திங்கிற பூதத்துக்கு வேலைங்கிற தீனியைக் கொடுத்துட்டே இருக்கிறதாலதான் என்னால எல்லாத்துலேருந்தும் மீள முடியுது.

`ஸ்பெஷல் சைல்டையும் பார்த்துக்கிட்டு, ரெண்டு பிசினஸையும் நடத்திக்கிட்டு எப்படி உங்களால சமாளிக்க முடியுது?’னு நிறையபேர் கேட்பாங்க. என் குழந்தையை நான் ஸ்பெஷல் சைல்டா பார்க்கிறதில்லை. ரொம்ப ஸ்பெஷலான பிறவியா பார்க்கிறேன். அவனால எங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. ஸ்பெஷல் குழந்தைங்க எத்தனை வயசானாலும் குழந்தைங்களாகவே இருப்பாங்க. அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் அன்பும் பாசமும் மட்டும்தான். ஆளைப் பார்த்து பாசம்வைக்கத் தெரியாது. எதிர்ல வரும் எல்லார்கிட்டயும் அன்பா பழகறது தான் அவங்க இயல்பு. அந்தப் பாசத்தையும் அன்பையும் பார்க்கிறபோது வாழ்க்கையில எல்லா கஷ்டங்களும் மறந்துபோயிடும். அவனு டைய எதிர்காலம் மட்டும்தான் இப்போதைக்கு என் ஒரே கவலை. எனக்கும் என் கணவருக்கும் பிறகு, அவன் இதே சந்தோஷத்தோடும் அன்போடும் வாழணும்கிறது மட்டும்தான் என் எதிர்பார்ப்பு.’’

வழியக் காத்திருக்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, வாஞ்சையோடு நம்மை வழியனுப்புகிறார்.

நம்பிக்கை, அவரை நிச்சயம் கைவிடாது!

-ஆர்.வைதேகி

படங்கள் : க.பாலாஜி