தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சாதி மறுப்பு... ஒரு புதிய வெளிச்சம்! - வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா

சாதி மறுப்பு... ஒரு புதிய வெளிச்சம்! - வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா
பிரீமியம் ஸ்டோரி
News
சாதி மறுப்பு... ஒரு புதிய வெளிச்சம்! - வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா

வித்தியாசம்

`சாதிகள் இல்லையடி பாப்பா’ என்கிற பாரதியின் கனவைச் சட்டப்படி சான்றிதழ் பெற்று நிஜமாக்கியிருக்கிறார், வேலூர் மாவட்டம்  திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன் பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா. ‘நான் இந்தச் சாதியைச் சேர்ந்தவர்; இந்த மதத்தைச் சேர்ந்தவர்’ என்று அடையாளப்படுத்துவதற்கு ஒரு சான்றிதழ் இருப்பதைப் போல, ‘நான் சாதி, மதம் அற்றவர்’ என்பதற்கும் ஒரு சான்றிதழ் வேண்டும் என்று ஒன்பது வருடங்களாகப் போராடி, ‘சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழைப் பெற்றிருக்கிறார் சிநேகா. நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், ‘வா மகளே புதுயுகம் படைப்போம்’ என்று சிநேகாவுக்கு ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். சிநேகாவுடன் பேசினோம்.

சாதி மறுப்பு... ஒரு புதிய வெளிச்சம்! - வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா

‘`இது என் அம்மா மணி மொழியும், அப்பா ஆனந்த கிருஷ்ணனும் போட்ட விதை. மூணு வயசுல என்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறப்போ, ‘என் மகளுக்கு சாதி, மதம் இல்லை’னு பதிய வெச்சது மூலமா, எனக்கு முன்னோடியா இருந்தது அவங்கதான். நான் அதன் அடுத்தகட்டமா, சாதி, மதம் அற்றவர்களுக்கான சான்றிதழ் வேணும்னு முயற்சி எடுக்க ஆரம்பித்தேன். சாதி சான்றிதழுக்கு எப்படி அப்ளை பண்ணுவாங்களோ அதே முறையிலேயே, எனக்கு `சாதியில்லை சான்றிதழ் கொடுங்க'ன்னு போராடியதற்கு கிடைச்ச பலன்தான் இது. முதல் பார்வையிலேயே என்னுடைய கோரிக்கை மனு ரிஜெக்ட் செய்யப்பட்ட சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு. சில தாசில்தார்களும், சப் கலெக்டர்களும், ‘இதுக்கு  முன்னுதாரணம் இல்லை. அதனால் கொடுக்க முடியாது. சாதி இருக்குன்னு சொல்லத்தான் எங்களுக்கு அதிகாரம் இருக்கு. இல்லைன்னு சொல்றதுக்கு அதிகாரம் இல்லை’ன்னு சொல்லி தொடர்ந்து என் மனுவைத் தள்ளுபடி பண்ணிட்டே இருந்தாங்க.

அதுக்கப்புறம் என்னுடைய தரப்பில் இருந்து, ‘நான் இப்படிப்பட்ட ஆவணத்தை வாங்குவது என்னுடைய லாபத்துக்கோ, அரசாங்கத்திடம் இருந்து பலன் பெறுவதற்கோ இல்லை; இதன் மூலம் யாருடைய உரிமையையும் நான் தட்டிப் பறிக்க முயலவில்லை; யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை’ என்று விளக்கினேன். பிறகுதான்,  அந்தப் பாயின்ட்டுகளின் அடிப்படையிலேயே நான் கேட்டபடி `சாதி, மதம் அற்றவள்' என்கிற சான்றாவணத்தை வழங்க திருப்பத்தூர் சப் கலெக்டர் பிரியங்கா பரிந்துரை செய்ய, தாசில்தார் சத்தியமூர்த்தி வழங்கினார்’’ என்கிறவர், இந்தப் போராட்டத்தில் தான் சந்தித்த சில இடர்கள் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார்.

``முகநூலில், ‘சாதியில்லைன்னு சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டீங்கன்னா உடனே சாதி ஒழிஞ்சுடுமா; நீங்க இப்படி செய்வதால் சாதி சர்ட்டிஃபிகேட் வாங்கி பலன் அடைபவர்களுக்குக் குற்ற உணர்ச்சி வந்துடும்’ என்பது போல நிறைய பதிவுகள் வர ஆரம்பிச்சது. ‘சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டு கல்வி, வேலை வாய்ப்புன்னு முன்னேறுவதற்கு இடஒதுக்கீடு ரொம்ப ரொம்ப அவசியம். அதனால நான் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவள் கிடையவே கிடையாது’ன்னு அவங் களுக்கெல்லாம் புரியவெச்சேன்’’ என்கிறார்.

‘`என்னுடைய இணையர் பார்த்திபராஜா தமிழ்ப் பேராசிரியர். அவருக்கும் எனக்கும் ஒரே சிந்தனை. அதுதான் எங்களைக் காதலிக்க வைத்தது. திருமணத்திலும் இணைத்தது.  அதனால், என்னுடைய முயற்சிகளுக்கும் செயல்களுக்கும் துணை அவர்தான்’’ என்று பெருமிதப்படுகிற சிநேகாவுக்கு ஆதிரை நஸ்ரீன், ஆதிலா ஐரின், ஆர்ஃபா ஜெஸ்சி என மூன்று பெண் குழந்தைகள்.

 ‘`என் அப்பா தரப்பு சொந்தக்காரர்கள் என்னை பாசிட்டிவ்வா பார்க்குறாங்க. மாமியார் வீட்டுப்பக்கம், ‘தாலிகூட போட்டுக்க மாட்டாளா’ன்னு ஆரம்பத்துல என்னை ஆச்சர்யமாகப் பார்த்தாங்க. அப்புறம்,  நானும் என் வீட்டுக்காரரும் பெண்ணுரிமை, தாலி பத்தியெல்லாம் விளக்கிச் சொன்ன பிறகு புரிஞ்சுக்கிட்டாங்க. தவிர, தாலியைவிட என்னுடைய குணம் அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. இப்ப என்னுடைய பழக்கவழக்கம், கொள்கைகள் எல்லாவற்றையும் அங்கீகரிக்க ஆரம்பிச்சிட்டாங்க’’ என்று மகிழ்கிறார்.

‘`திருப்பத்தூரைப் பொறுத்தவரை என்னை வழக்கறிஞராகத் தெரியும். சமூகப் போராளியாகத் தெரியும். சில போராட்டங்கள் காரணமாக நான் கைதுசெய்யப்பட்டது தெரியும். ஈழத் தமிழர்களுக்காக நான் உண்டியல் ஏந்திப் போராடியது தெரியும். என்னை சாலை மறியல் செய்து பார்த்திருக் கிறார்கள். பல மேடைகளில் பேசிப் பார்த் திருக்கிறார்கள். இப்போது, சாதி, மதம் அற்றவர் என அரசு சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமை கிடைச்சிருக்கு.  இதைவிட மகிழ்ச்சி, சாதி, மதங்களில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு நான் முன்னோடியாக ஒரு பாதை வகுத்துத் தந்திருக்கிறேன் என்பதுதான்’’ என்கிற சிநேகாவின் குரலில் மிகுந்த திருப்தி ஒலிக்கிறது.

-ஆ.சாந்தி கணேஷ்