Published:Updated:

என்னைச் சுற்றி நிறைய அன்பு இருக்கு! - டாக்டர் தேன்மொழி

என்னைச் சுற்றி நிறைய அன்பு இருக்கு! - டாக்டர் தேன்மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
என்னைச் சுற்றி நிறைய அன்பு இருக்கு! - டாக்டர் தேன்மொழி

என்னைச் சுற்றி நிறைய அன்பு இருக்கு! - டாக்டர் தேன்மொழி

பொதுவாக, மருத்துவர்களின் முகநூல் பதிவுகளில் சுயதம்பட்டமும் சாதனை விளம்பரங்களுமே பிரதானமாக இருக்கும். கோவையைச் சேர்ந்த டாக்டர் தேன்மொழியின் முகநூல் பதிவுகளோ வித்தியாசமானவை, நகைச்சுவை யானவை, எவரையும் காயப்படுத்தாதவை. `மனஅழுத்தம் நிறைந்த மருத்துவத் துறையில் இப்படியும் ஒருவரா!’ என வியந்துபோகிறவர்கள், அவரது வாழ்க்கைக் கதை தெரிந்தால் பிரமித்து நிற்பர். வாழ்க்கையை நிறைத்த துன்பங்களையும் துயரங்களையும், தன் சிரிப்பாலும் நகைச்சுவை உணர்வாலும் விரட்டிக்கொண்டிருக்கும் நம்பிக்கை மனுஷி, டாக்டர் தேன்மொழி!

என்னைச் சுற்றி நிறைய அன்பு இருக்கு! - டாக்டர் தேன்மொழி

``அப்பா, தலைமை ஆசிரியரா இருந்தவர். சின்ன வயசுல இருந்தே `டாக்டர் ஆகணும்’னு சொல்லி என்னை வளர்த்தார். அது மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு. பயங்கரமா ஹார்டு வொர்க் பண்ணினேன். அரசுப் பள்ளியில்தான் படிச்சேன். ப்ளஸ் டூ முடிச்சதும் ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்ல மெரிட்ல இடம் கிடைச்சது. காலேஜ் சூழல் எனக்குப் புதுசாவும் பொருந்தாமலும் இருந்தது. நகரத்துப் பெண்கள் நிறைய பேர் இருந்தாங்க.  நான் தமிழ் மீடியத்துல படிச்சிருந்தேன். என்கூட காலேஜ்ல சேர்ந்த பலரும் இங்கிலீஷ் மீடியத்துலயிருந்து வந்தவங்க. ஆனாலும், நான் வெறித்தனமா படிச்சு பாஸ் பண்ணினேன்’’ - அறிமுகம் சொல்லும் டாக்டரம்மா, அப்போதே அப்படி! அப்புறமும் அப்படியே இருந்திருக் கலாம். ஆனால்...

``ஹவுஸ் சர்ஜனா வொர்க் பண்ணிட் டிருந்தப்போ, குழந்தைகள் வார்டுல ஒரு குழந்தைக்கு ஸ்டெதாஸ்கோப் வெச்சு செக் பண்ணிட்டிருந்தேன். `இயர் பீஸ்’னு சொல்ற பகுதியை காதுகள்லயும், `டயப்ரம்’ என்ற பகுதியை நெஞ்சுலயும் வெச்சு செக் பண்ணுவோம். அந்தக் குழந்தையை செக் பண்ணும்போது இயர் பீஸ் மட்டும் என் காதுகள்ல இருந்தது. பிரிஸ்கிரிப்ஷன் எழுதிட்டிருந்தேன். அந்தக் குழந்தைக்கு ஒன்றரை வயசிருக்கும். டயப்ரம் வெச்சு விளையாடிக்கிட்டிருந்தது. திடீர்னு அதை டேபிள்மேல ஓங்கி அடிச்சிருச்சு. இடி இடிச்ச மாதிரி ஒரு சவுண்டு. அன்கான்ஷியஸ் ஆயிட்டேன். கண்விழிச்சப்போ எனக்கு எந்தச் சத்தமும் கேட்கலை. ஒரு வாரம் ட்ரீட்மென்ட் எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என்னைச் சுற்றி நிறைய அன்பு இருக்கு! - டாக்டர் தேன்மொழி

கடைசியா ஈ.என்.டி டாக்டரைப் பார்த்தப்போ, அவர்தான் இது `சடன் சென்சோரிநியூரல் லாஸ்’னு சொன்னார். டயப்ரம் அடிச்ச சத்தத்தால காதுல இருந்த நரம்பு செல்கள் இறந்துபோயிட்டதா சொன்னார். இடப்பக்கக் காதுல கேட்கும் திறன் முழுக்கவே போயிடுச்சு. வலப்பக்கத்துல வெறும் 20 சதவிகிதம்தான் இருந்தது. அப்போ எனக்கு வயசு 22. அந்த வயசுல அதை ஏத்துக்கிறது சிரமமா இருந்தாலும், `நடந்தது நடந்துபோச்சு. இனிமே மாத்த முடியாது’ங்கிற எதார்த்தத்தையும் புரிஞ்சுக்கிட்டேன்.’’

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தேன்மொழி யால் நோயாளிகளின் இதயத்துடிப்பைக் கேட்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், எல்லோரின் இதயங்களிலும் இடம்பிடித்த மருத்துவராகியிருக்கிறார்.

``ஹவுஸ் சர்ஜன்சி முடிச்சதும் ரெண்டு, மூணு க்ளினிக்ல வேலைபார்த்தேன். அப்புறம்  பத்து பெட் போடுற அளவுக்கு ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்து க்ளினிக் தொடங்கினேன். வீட்டுல கல்யாணப் பேச்சுவார்த்தை ஆரம்பமாச்சு. தூரத்து உறவுலயிருந்தே ஒருத்தங்க பெண் கேட்டு வந்தாங்க. எனக்கு ட்ரீட்மென்ட் எடுத்திட்டிருக்கிற விஷயத்தை மறைக்காம சொன்னோம். எல்லாருக்கும் பிடிச்சுப்போய் முடியுற நேரம், இன்னோர் உறவினர் அதை நடக்கவிடாம செஞ்சிட்டாங்க.

அடுத்து இன்னொருத்தர் வந்தார். அவர்கிட்டயும் உண்மையைச் சொன்னோம். எந்தத் தயக்கமும் இல்லாம என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அப்போ அவர் கோயம்புத்தூர்ல எம்.ஈ படிச்சிட்டிருந்தார்.  நான் ஊர்ல க்ளினிக்கைக் கவனிச்சுக்கிட்டிருந்தேன்.  குழந்தை பிறந்து ரெண்டு வருஷங்கள் கழிச்சு, என் கணவர் வேலைபார்த்திட்டிருந்த கோயம்புத்தூருக்கே வந்துட்டேன். மறுபடி சின்னதா ஒரு க்ளினிக் ஆரம்பிச்சு, டெலிவரி உட்பட எல்லா கேஸ்களையும் பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு வருஷம் கடுமையா உழைச்சு சம்பாதிச்ச பணத்துல டூவீலர் வாங்கினேன். கோயம்புத்தூர்ல நாலு இடங்கள்ல க்ளினிக் ஆரம்பிச்சு, காலை 7 மணி முதல் நைட் 11 மணி வரைக்கும் கடுமையா உழைச்சேன். கொஞ்சம் பெருசா ஒரு மருத்துவமனை கட்டி, ஆபரேஷன் தியேட்டர், லேபர் வார்டு எல்லாம் கொண்டுவந்தேன்’’ - விக்ரமன் பட ஸ்டைலில் இவரது வாழ்க்கை படிப்படியாக வளர்ச்சியை எட்டிக்கொண்டிருந்த அதே நேரம், அத்தனைக்கும் திருஷ்டிபோல தொடர்ந்திருக்கின்றன அடுத்தடுத்த சம்பவங்கள்.

``ஒருமுறை டூவீலர்ல போகும்போது எதிர்ல வந்த வண்டி இடிச்சுக் கீழே விழுந்ததுல, என் கை ஃபிராக்ச்சர் ஆயிடுச்சு. உடனே டாக்டரைப் பார்த்து மாவுக்கட்டு போட்டுக்கிட்டு க்ளினிக் போயிட்டேன். ஒருநாள்கூட லீவு எடுக்கலை. கொஞ்ச நாள் கழிச்சு இருட்டுல தவறி விழுந்ததுல கால் ஃபிராக்ச்சர் ஆயிடுச்சு.

தொடர்ச்சியா டூவீலர் ஓட்டினதுல எனக்கு கழுத்துல டிஸ்க் புரோலாப்ஸ் ஆயிடுச்சு. அதாவது டிஸ்க் நழுவி, நரம்பை அழுத்த ஆரம்பிச்சதுல இடதுபக்க உடம்புல கடுமையான வலி. கையை அசைக்கவோ, தூக்கவோ முடியாது. அந்தச் சூழல்லயும் டெலிவரி பார்த்திருக்கேன். ஒருகட்டத்துல வலி தாங்க முடியாம, ஸ்பைனல் சர்ஜரி பண்ணினோம்.  இன்னிக்கு வரை அந்த வலி எனக்குச் சரியாகலை.

கொஞ்ச நாள் கழிச்சு, மேலிருந்து கீழே விழுந்து இடுப்பு ஃபிராக்ச்சர். ஆறு மாசங்கள் படுத்த படுக்கையாயிட்டேன். எனக்கு பெட் பேன் வைக்கிறது, சாப்பாடு ஊட்டுறதுனு எல்லாம் பைனல் இயர் மெடிசின் படிச்சிட்டிருந்த என் மகள்தான் செய்தாள். கீழே க்ளினிக், மாடியில வீடுங்கிறதால பேஷன்ட்ஸை மேலே வரச்சொல்லி, படுத்த நிலையிலேயே பார்த்து பிரிஸ்க்ரிப்ஷன் கொடுத்திட்டிருந்தேன். அதைத் தாண்டி எமர்ஜென்சின்னா ஸ்ட்ரெச்சர்ல வெச்சுத் தூக்கிட்டுப் போகச் சொல்லி, கீழே போய்ப் பார்த்திருக்கேன்.

என்னைச் சுற்றி நிறைய அன்பு இருக்கு! - டாக்டர் தேன்மொழி

மாசக்கணக்குல படுக்கையில இருந்ததால, எனக்கு `ஜெர்டு’ என்கிற பிரச்னை வந்திருச்சு. அதாவது உணவுக்குழாய் திறந்து, அமிலம் மேலே வரும் பிரச்னை அது. எது சாப்பிட்டாலும் மேலே ஏறிக்கும். ராத்திரியில தூங்க முடியாது. படுத்த நிலையில என்னால தூங்க முடியாது. இப்போவரைக்கும் உட்கார்ந்துகிட்டேதான் தூங்குறேன். இதுக்குப் பழகிய கொஞ்சநாள் கழிச்சு, மார்பகங்களில் கட்டிகள் இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணினேன். நாளாக ஆக பிரச்னை அதிகமானதால மேமோகிராம் பண்ணிப்பார்த்தேன். ப்ரீகேன்சரஸ் கட்டிகள்னும், எடுக்காமவிட்டா கேன்சரா மாறிடும்னும் சொன்னாங்க. எடுத்தாச்சு. ஆனாலும், மறுபடி மறுபடி அந்தக் கட்டிகள் வந்துட்டுதான் இருக்கு.

இப்போதும் சளிபிடிக்கும்போதெல்லாம் காது அடைச்சுக்கும். சுத்தமா கேட்காது. டாக்டர்கிட்ட போய் உள்ளே இருக்கிற சீழை எல்லாம் எடுத்த பிறகுதான் சரியாகும். சமீபகாலமா வலப்பக்கக் காதுல வெறும் 10 சதவிகிதம்தான் கேட்கும் திறன் இருக்கு. `முற்றிலும் கேட்காத காதுல மட்டும் ஆபரேஷன் பண்ணினா 80 சதவிகிதம் கேட்கும்னு டாக்டர் சொன்னதை நம்பி அதையும் செய்துக்கிட்டேன். ஆனா, திரும்ப வந்ததோ வெறும் 15 சதவிகிதம்தான். அந்த சர்ஜரியோட பக்கவிளைவா, `பேஷியல் பால்சி’னு சொல்லப்படுற முகவாதம் வந்திருச்சு. கண்களையும் வாயையும் மூட முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது. சிரிக்க முடியாது. இப்படியே ஒரு வருஷம் கஷ்டப்பட்டேன். பிசியோதெரபி பண்ணி, ஸ்டீராய்டெல்லாம் கொடுத்த பிறகுதான் அந்தப் பிரச்னை சரியானது.

இன்னொரு பக்கவிளைவா `வெர்டிகோ’னு சொல்ற தலைச்சுற்றல் பிரச்னை வந்திருச்சு. வேகமா நடக்க முடியாது, நிமிர முடியாது, குனிய முடியாது, திரும்பிப் படுக்க முடியாது, அண்ணாந்து படுக்க முடியாது. ரெண்டு வருஷம் ட்ரீட்மென்ட்ஸ் எடுத்தும் சரியாகலை.

இடப்பக்கம் காக்ளியர் இம்ப்ளான்ட் பண்ணினதுல 15 சதவிகிதம்தான் காது கேட்குது. வலப்பக்கம் 10 சதவிகிதம் கேட்டுக்கிட்டிருந்தது. காக்ளியர் இம்ப்ளான்ட் பண்ணி ஒரு மாசம் கழிச்சு சளிபிடிச்சதுல அதுவும் போயிடுச்சு.  இப்போ 5 சதவிகிதம் மட்டும் கேட்குது. இத்தனைக்கும் பிறகு இவங்க எப்படி பேஷன்ட்ஸைப் பார்ப்பாங்கனுதானே யோசிக்கிறீங்க? பேஷன்ட்ஸ்கிட்ட முதல்ல சிஸ்டர்ஸ் கேஸ் ஹிஸ்டரி போட்டுடுவாங்க. நான் அதைப் பார்த்துட்டு, பேஷன்ட்கூட சிஸ்டர்ஸையும் வெச்சுக்கிட்டு கன்சல்டேஷன் கொடுக்கிறேன்’’ - சிறிய இடைவெளியுடன் நிறுத்துகிறார் தேன்மொழி.

மருத்துவத்துக்கான நேரம் போக, மற்ற நேரத்தில் சமையல், தோட்டம், வளர்ப்புப் பிராணிகள், குடும்பம் என, தன்னைக் குதூகல மனுஷியாக வைத்திருக்கும் விசித்திர மனுஷி டாக்டர் தேன்மொழி.

'' அன்பான கணவர், அக்கறையான மகள், மருமகன், பேரக்குழந்தை... என்னுடைய அத்தனை கவலைகள்லயிருந்தும் என்னை மீட்டெடுக்க என்னைச் சுற்றி நிறைய அன்பு இருக்கு’’ - அந்த அன்பை மட்டுமே அடுத்தவருக்கும் பகிரத் தெரிந்த தேன்மொழிக்கு, இத்தனைக்கும் பிறகு வாழ்க்கையின் மீது வெறுப்போ, கோபமோ வரவில்லையா?

``எதுக்கு வரணும்? எல்லா நன்மைகள்லயும் கொஞ்சம் தீமைகளும், எல்லா தீமைகள்லயும் கொஞ்சம் நன்மைகளும்  மறைஞ்சிருக்கும். நாம நல்லதுல உள்ள கெட்டதைத் தேடாம, கெட்டதுல உள்ள நல்லதைப் பார்க்கப் பழகிட்டா, லைஃப் ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையை நான் அப்படித்தான் ஏத்துக்கிட்டேன். எனக்கு இனிமே காது கேட்காதுனு திடீர்னு ஒருநாள் தெரியவந்தப்போ, நல்ல விஷயங்களைக் கேட்க முடியாதேங்கிறதைவிடவும், நல்லவேளை கெட்ட விஷயங்களைக் கேட்கவேண்டியிருக் காதுனுதான் சந்தோஷப்பட்டேன். எல்லா நெகட்டிவ் விஷயங்களையும் இப்படி பாசிட்டிவா பார்க்கப் பழகிட்டதாலோ என்னவோ, எந்தச் சூழலிலும் என்னால சிரிக்க முடியுது’’ - பெரிதாகச் சிரிக்கிறார். அருகில் இருக்கும் அனைவரையும் தொற்றிக் கொள்கிறது அந்தச் சிரிப்பு!

-ஆர்.வைதேகி

 படங்கள் : தி.விஜய்