Published:Updated:

ஆடுகளம்: ஆசைப்பட மட்டுமல்ல... அடம்பிடிக்கவும் தெரியணும்!

ஆடுகளம்: ஆசைப்பட மட்டுமல்ல... அடம்பிடிக்கவும் தெரியணும்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடுகளம்: ஆசைப்பட மட்டுமல்ல... அடம்பிடிக்கவும் தெரியணும்!

ஹேமலதா

`கிரிக்கெட்’ - இந்தியாவில் உச்சரிக்கப்படும் மந்திரச்சொல். இது ஆண்களுக்கான விளையாட்டு மட்டுமல்ல என்பது சமீப காலமாக நிரூபணமாகி வருகிறது. மகளிர் கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளில் வெற்றியோ, தோல்வியோ... அவையும் கவனிக்கப்படுகின்றன; விவாதிக்கப்படுகின்றன. ஆனால், ஆண்கள் கிரிக்கெட்டில் இருக்கும் அதே பிரச்னை இங்கேயும் உள்ளது. இந்திய அணியில் இடம்பெறுவது யார்?

ஆடுகளம்: ஆசைப்பட மட்டுமல்ல... அடம்பிடிக்கவும் தெரியணும்!

2018-ம் ஆண்டு வெளியான `கனா’ திரைப்படம், கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் இளம் பெண்ணின் கதையைக் களமாக்கியது. சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண், இந்திய அணியில் இடம்பெறுவது எவ்வளவு பெரிய போராட்டம்? 

வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், மகளிர் இந்திய அணியின் முதல் கேப்டன் தமிழரே. இதுவரை, தமிழகத்திலிருந்து ஏழு வீராங்கனைகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர். கனவுகளைத் துரத்திய இந்தப் பெண்கள், இந்திய கிரிக்கெட் அணியில் தடம் பதித்து சாதித்தவர்கள். அவர்களில் ஆறு பேரைப் பற்றி பெட்டி செய்தியில் படிக்கலாம்.  அதற்கு முன், சமீபகாலமாக வெற்றிகளைக் குவித்துக்கொண் டிருக்கும் கிரிக்கெட்டர் ஹேமலதாவிடம் பேசலாம்.

``பெண்ணாகப் பிறந்துட்டோம் என்பதற்காக ஆசையை அடமானம் வைக்கமுடியுமா சொல்லுங்க? நாம நியாயமா ஆசைப்பட்டதை அடைய அவமானப்பட்டால்தான் நமக்கான அடையாளம் கிடைக்கும் என்றால், அந்த அவமானங்களே நமக்கான அடையாளம்'' - வாழ்வின் எதார்த்தங்களோடு தொடர்கிறார் ஹேமலதா.

 ``நான் பக்கா சென்னைப் பொண்ணு. படிப்புதான் எதிர்காலம்னு நம்பும் சராசரிக் குடும்பம். ஆனா, என் கனவுக்காக, அடையாளத்துக்காக நான் இன்னும் போராடிட்டுதான் இருக்கேன். ஒரு பெண்ணுக்கான எந்த ஒரு புது விஷயத்தையும் இந்தச் சமுதாயம் எளிதில் ஏற்றுக்கொள்ளாது. பெண்ணா பொறந்துட்டா ஆசைப்பட்டதுக்கு இல்ல... ஆசைப்படுறதுக்குக்கூட போராடணும் என்பதுதான் இன்னமும் இங்க நிலைமை'' - அனுபவமும் பக்குவமும் கலந்த வார்த்தைகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆடுகளம்: ஆசைப்பட மட்டுமல்ல... அடம்பிடிக்கவும் தெரியணும்!

``பள்ளியில் படிக்கும்போது எங்க ஏரியா பசங்களுக்கு இணையா கோலிக்குண்டு, கிட்டி, கபடியில் கலக்குவேன். ஆம்பளப்புள்ளைங்ககூட சேர்ந்து விளையாடுறேன்னு பலரும் கிண்டல் பண்ணுவாங்க; கண்டிப்பாங்க. நான் எதையும் கண்டுக்கமாட்டேன். வீட்டுக்கு வந்ததும் அரை மணி நேரத்தில் ஹோம்வொர்க் முடிச்சுட்டு பசங்களோடு விளையாட ஓடிருவேன். என் விளையாட்டு ஆர்வத்தைத் தாங்கமுடியாம எங்கம்மா என்னை டியூஷன்ல சேர்த்துவிட் டாங்க. ஆனாலும், விடுமுறை நாள்களில் பச்சைக் குதிரை தாண்டுவது, மரம் ஏறுவதுனு தெருவையே அமர்க்களப்படுத்திடுவேன். நான் பூப்பெய்தியப்போ, 'இனி பசங்ககூட விளையாடக் கூடாது'ன்னு வீட்டுல கண்டிப்பா சொல்லிட்டாங்க. ஆனாலும், வீட்ல பொய் சொல்லிட்டு ஓடிடுவேன். பசங்ககூட சேர்ந்து விளையாடினப்போ கத்துக்கிட்டதுதான் கிரிக்கெட். நான் ஆடுற ஸ்டைலைப் பார்த்துட்டு, `சவுத் ஆப்ரிக்கன் கிரிக்கெட்டர் ஜான்டி ரோட்ஸ் மாதிரி விளை யாடுறே'ன்னு பசங்க சொல்லுவாங்க. அந்த வயசுல அவரு யாருன்னுகூட எனக்குத் தெரியாது!

ஸ்கூல்ல கிரவுண்ட்தான் எனக்கு க்ளாஸ்ரூம். கோ-கோ, பூப்பந்து, கூடைப்பந்துனு எல்லா விளையாட்டுகளிலும் ஆல்ரவுண்டர் நான். ப்ளஸ் டூ தேர்வில் 85% மதிப்பெண் எடுத்திருந்தேன். வீட்டில், `ஐ.டி துறையில் வேலைபார்க்கிற மாதிரி படிப்பைத் தேர்ந்தெடு'னு சொன்னாங்க. நான் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தும்விதமா, பி.ஏ சோஷியாலஜியில் சேர்ந்தேன். கிரிக்கெட்டை முறைப்படி கத்துக்கிறதுக்கான வாய்ப்பா எடுத்துக்கிட்டு, கல்லூரி கிரிக்கெட் அணியில் சேர்ந்தேன். அப்பா கொஞ்சம் தயங்கினாங்க. `பெண்கள் கிரிக்கெட்டுக்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைக்காது; நான் அடையாளம் இல்லாமல் போயிருவேன்' என்கிற பயம் அப்பாவுக்கு. ஆனா, என் அண்ணனும் அக்காவும் அப்பாகிட்ட பேசி, என்னை நிரூபிக்க மூன்று வருஷம் டைம் வாங்கிக் கொடுத்தாங்க.

கல்லூரி கிரிக்கெட் டீம் மூலமாக மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைச்சது. அப்போ என்கிட்ட நல்ல பேட்கூட இல்லை. ஆனா, இந்தியாவுக்காக விளையாடணும் என்கிற கனவுக்கு மட்டும் குறைச்சலில்லை. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கையில் அணியும் கிளவுஸில் இருந்து பேட் வரை எல்லாமே மிடில் க்ளாஸ் மக்களின் அன்றாட சாப்பாட்டுச் செலவைவிட அதிகம். சொன்னா நம்பமாட்டீங்க... மாநில அளவிலான போட்டிகளுக்குப் போகும்போது கல்லூரி சீனியர்களிடம் இருந்து பேட், கிளவுஸ் எல்லாம் கடன் வாங்கிட்டுப் போவேன்.

ஒருமுறை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு அப்பாவும் வந்திருந்தாங்க. நான் பேட்டிங் செய்வதைப் பார்த்த கோச், `இந்தப் பொண்ணுக்கு கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருக்கு'னு அப்பாகிட்ட சொன்னாங்க. அதுக்கு அப்புறம்தான் எங்க வீட்ல, நான் ஒரு கிரிக்கெட்டர்னு நம்பினாங்க. அதிலிருந்து, `என்ன பொண்ணை கிரிக்கெட்ல போய் விட்டிருக்கீங்க, வேஸ்ட்...'னு யாராச்சும் அப்பாகிட்ட சொன்னா, `என் பொண்ணு சாதிப்பா'னு அப்பா நம்பிக்கையோடு சொல்ல ஆரம்பிச்சாங்க.

முதுகலையில் ஹெச்.ஆர் படிப்பில் சேர்ந்தேன். கிரிக்கெட்டில் அடுத்தகட்ட பயிற்சிக்குச் சென்னையில் உள்ள ஒரு கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தேன். அங்க நான் ஒருத்திதான் பெண். எல்லாரும் என்னை வித்தியாசமாகப் பார்ப்பாங்க. பயிற்சிக்கு சேர்ந்து விளையாட வராம ஒதுக்குவாங்க. இந்த அவமானங்களையெல்லாம் கடக்கும் மன தைரியம் இருந்தால் மட்டும்தான் இதில் அடுத்தடுத்துப் போக முடியும்னு எனக்கு நானே சொல்லிக்குவேன். மாதவிடாய் அவஸ்தையிலும், வலியிலும் எப்போதும்போல முழு கவனத்துடன் வெறித்தனமா பயிற்சி செய்வேன். இதன் பலனாக அடுத்தடுத்து மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒருநாள் மைதானத்தில் பயிற்சி செய்துட்டு இருந்தப்போ என் பிரெண்ட்ஸ் ஓடிவந்து, `நீ இந்தியாவுக்காக விளையாட சர்வதேசப் போட்டிக்கு செலெக்ட் ஆகியிருக்கேன்னு  நியூஸ் வந்திருக்கு'னு சொன்னாங்க. கலாய்க்கிறாங்கனு நினைச்சு நம்பலை. பிசிசிஐ-யில (Board of Control for Cricket in India) இருந்து போன் பண்ணி, `நீங்க இந்தியாவின் பெண்கள் கிரிக்கெட் அணியில் இணைந்து சர்வதேசப் போட்டியில் விளையாடத் தேர்வாகியிருக்கீங்க'னு சொன்னாங்க. சந்தோஷத்தில் அழுதேன். என் தோழிகள் அந்தத் தருணத்தைக் கொண்டாடினாங்க. அப்பாவுக்கு போன் பண்ணி சொன்னேன். `என் பொண்ணு ஜெயிச்சுட்டா'னு அப்பா அழுத அந்த நொடி மறக்க முடியாதது. இப்போகூட அதை நினைச்சா அழுகை வந்துடும். உண்மையைச் சொல்லணும்னா, புள்ளை சாதிக்கணும் என்ற ஆசையைவிட தோத்துடக் கூடாது என்கிற பயம் அப்பாக்களுக்கு அதிகமா இருக்கும். அந்தத் தவிப்புதான் சில நேரங்களில் கட்டுப்பாடா வெளிப்படுது.

அடுத்தடுத்து டி-20, உலகக்கோப்பை, ஒருநாள் போட்டிகள்னு இந்திய கிரிக்கெட் அணிக்கான என் பங்களிப்பை அளித்தேன். ஒவ்வொரு வெற்றியின் போதும் இந்தியாவுக்கான பரிசைக் கையில் வாங்கும் அந்தத் தருணத்தில் உடம்பு புல்லரிச்சுப் போகும். இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் அடுத்தடுத்த வெற்றி, எங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கு. கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் அதிகரிக்கவும், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டி, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டினு பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வர்றது மகிழ்ச்சியைத் தருது. இதில் தமிழக வீராங்கனைகளுக்கு ஒரு முன்மாதிரியாக நான் நிச்சயம் இருப்பேன்.

கேர்ள்ஸ்... ஸ்போர்ட்ஸைப் பொறுத்தவரை ஆசைப்பட மட்டுமல்ல, அதில் தொடர்ந்து பயணிக்க அடம்பிடிக்கவும் தெரியணும்!'' - தம்ஸ் அப் செய்கிறார் ஹேமலதா.

தமிழகத்திலிருந்து ஏழு வீராங்கனைகள் (ஹேமலதா உட்பட) இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர்.

சாந்தா ரங்கசாமி - 1976

1975-ம் ஆண்டு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அமைக்கப்பட்டது. இந்திய அணியின் முதல் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த சாந்தா ரங்கசாமி. 1954-ம் ஆண்டு பிறந்தவர், 22 வயதில் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானார். சாந்தா ரங்கசாமியின் கிரிக்கெட் பயணத்தில், `முதல்’ சாதனைகள் அதிகம். மகளிர் இந்திய அணியின் முதல் கேப்டன், முதல் டெஸ்ட் வெற்றி, முதல் சிக்ஸர்,  முதல் சதம் என சாந்தாவின் சாதனைகளைப் பட்டியலிடலாம்.

ஆடுகளம்: ஆசைப்பட மட்டுமல்ல... அடம்பிடிக்கவும் தெரியணும்!

1976 அக்டோபர் 31 அன்று, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே, அணியின் கேப்டனாக வழிநடத்தினார். 1977-ம் ஆண்டு, முதன்முறையாக வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் டெஸ்டில் அதிரடியாக விளையாடிய சாந்தா, சதம் அடித்தார். சாந்தாவின் முதல் சதம், மகளிர் இந்திய கிரிக்கெட்டின் முதல் சதமாகவும் வரலாற்றில் பதிந்தது.

மகளிர் இந்திய அணியின் ஆரம்ப காலகட்டத்திலிருந்து உடன் பயணித்துவரும் சாந்தா, ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டர். 1976 முதல் 1991 வரை 16 டெஸ்ட் போட்டிகளிலும் 19 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். சாந்தா ரங்கசாமியின் சாதனைகளுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரமாக, 1976-ம் ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கெளரவிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கும் பி.சி.சி.ஐ 2017-ம் ஆண்டு முதல் பெண்களுக்கும் வழங்கத் தொடங்கியது. பிசிசிஐ-யின் மகளிருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற முதல் பெண், சாந்தா ரங்கசாமி!

ஃபவுசியா கலிலி - 1976

ஆடுகளம்: ஆசைப்பட மட்டுமல்ல... அடம்பிடிக்கவும் தெரியணும்!

சென்னையைச் சேர்ந்த ஃபவுசியா கலிலி, 1976-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் அறிமுகமானார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்வுமனான ஃபவுசியா, எட்டு டெஸ்ட் போட்டிகளிலும், 13 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர். ஓப்பனிங் பேட்ஸ்வுமனாக களமிறங்கிய இவர், டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 84 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 88 ரன்களும் எடுத்துள்ளார்.

சுஜாதா ஸ்ரீதர் - 1982

தமிழ்நாடு, கர்நாடகா மாநில அணிகளில் விளையாடிய சுஜாதா ஸ்ரீதர், 1982-ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பெற்றார். பெளலரான சுஜாதா, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

லிஸ்ஸி சாமுவேல் - 1995

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான லிஸ்ஸி சாமுவேல், இந்திய அணிக்காக ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 1995-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான லிஸ்ஸி சாமுவேல், அதற்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை.

திருஷ் காமினி - 2006

ஆடுகளம்: ஆசைப்பட மட்டுமல்ல... அடம்பிடிக்கவும் தெரியணும்!

20016-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானவர், சென்னையைச் சேர்ந்த திருஷ் காமினி. 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு என்ட்ரியானவர், இந்திய அணியின் முக்கிய வீராங்கனைகளுள் ஒருவராகத் தன்னை நிலைநாட்டியவர்.

2013-ம் ஆண்டு உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான குரூப் போட்டியில் திருஷ் காமினி சதம் அடித்தபோது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். உலகக்கோப்பையில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்கிற சாதனைக்குச் சொந்தக்காரர். காமினியின் அதிரடி, 2017-ம் ஆண்டு உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளிலும் தொடர்ந்தது. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் களமிறங்கிய திருஷ் காமினி, 113* ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். கிரிக்கெட் வாரியத்தின் `பிளேயர் ஆஃப் தி இயர்’ விருதை மூன்றுமுறை பெற்றுள்ள திருஷ் காமினி, தமிழகத்தின் கிரிக்கெட் இன்ஸ்பிரேஷன்!

நிரஞ்சனா நாகராஜன் - 2008

ஆடுகளம்: ஆசைப்பட மட்டுமல்ல... அடம்பிடிக்கவும் தெரியணும்!

10 வயதிலே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நிரஞ்சனா நாகராஜன், சென்னையைச் சேர்ந்தவர். 2008-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான நிரஞ்சனா, ஒரு வேகப்பந்து வீச்சாளர். 2014-ம் ஆண்டு ஆகஸ்டில் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.  எட்டு அறிமுக வீராங்கனைகளுடன் களமிறங்கிய இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியைக் கைப்பற்றி சாதனை படைத்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்திய நிரஞ்சனாவுக்கு, பாராட்டுகள் குவிந்தன. இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 22 ஒருநாள் போட்டிகள், 14 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் இந்த வேகப்புயல்!