Published:Updated:

ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும்?
ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும்?

பிருந்தா ஐ.ஏ.எஸ்

பிரீமியம் ஸ்டோரி

“பிறக்கும்போது சாதாரண ஆளா பிறந்தாலும், இறக்கும்போது சாதனையாளரா இருக்கணும்” - புதிய நம்பிக்கை விதைக்கிறார் பிருந்தா ஐ.ஏ.எஸ். ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும் தமிழ்ப் பெண். பழங்குடி மக்கள் அதிகம் வாழும் அம்மாவட்டத்தில் கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுத்து அதை வளர்ச்சி மாவட்டமாக்கியுள்ளார். சமீபத்தில் மறைந்த ‘சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’யின் நிறுவனர் சங்கரின் தங்கையான பிருந்தா, தன் வாழ்வின் பவர்ஃபுல் நிமிடங்களைப் பகிர்கிறார்.

ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும்?

“பிறந்து வளர்ந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிராமம். விவசாயக் குடும்பம். நான் டாக்டராகணும்னு ஆசைப்பட்டாங்க  என் பெற்றோர். என் அண்ணன் சங்கர், ஐ.ஏ.ஏஸ் ஆகணும் என்கிற லட்சியத்தோடு வளர்ந்தார். வீட்டு வறுமையை எங்ககிட்ட சொல்லாம, எங்களைப் படிக்கவெச்சாங்க அப்பாவும் அம்மாவும். என்னை டாக்டராகப் பார்க்க ஆசைப்பட்ட எங்கப்பா, துரதிஷ்டவசமா நான் முதலாமாண்டு மருத்துவம் படிக்கும்போதே மாரடைப்பில் இறந்துட்டார். என் அண்ணன் எனக்கு அப்பாவானார். அவர் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இரவு பகலாகப் படிக்கிறதைப் பார்க்கும்போது எனக்கும் அந்த வைராக்கியம் தொத்திக்கும். ஐ.ஏ.எஸ் இறுதிகட்டம் வரை போயும் அண்ணனுக்கு வெற்றி கிடைக்கலை. வாழ்க்கையை லட்சியத்துக்காக அடமானம் வெச்சு தோற்றுப்போகும் வலியை நாங்க உணர்ந்த நாள்கள் அவை. ஆனாலும், அண்ணன் மனசு தளரலை. ‘நான் ஐ.ஏ.எஸ் ஆகலைன்னா என்ன? ஆயிரம் ஐ.ஏ.எஸ்-களை உருவாக்குவேன்’னு சொல்லி, ‘சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’யை நிறுவினார். பல ஐ.ஏ.எஸ்-களை உருவாக்கினார். அண்ணனின்  ஐ.ஏ.எஸ் ஏக்கத்தை நான் நிறைவேற்றணும்னு, என் மனசுக்குள்ளும் ஒரு பொறி விழுந்தது.

அப்போ நான் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தேன். அண்ணன்கிட்ட, ‘நானும் சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்கிறேன்’னு சொன்னேன். ‘ரொம்பக் கஷ்டப்படணும்’னு சொன்னார். ‘என்னால முடியும்’னு உறுதியா சொன்னேன். அண்ணன் நிறைய வழிகாட்டினார். யாருமே எதிர்பார்க்காத அளவில், 2009-ம் ஆண்டு முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் 152-வது இடம்பெற்றுத் தேர்ச்சிபெற்றேன். என்னைவிட சந்தோஷப்பட்டார் என் அண்ணன். அவர் உருவாக்கிய ஆயிரம் ஐ.ஏ.எஸ்-களில் நானும் ஒருத்தி!

ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும்?

சிவில் சர்வீஸ் தேர்வில் எடுத்த ரேங்க் மற்றும் காலியிடங்களின் அடிப்படையில் ஒடிசா மாநிலம் கியோஞ்சார் மாவட்டத்தில் சப் கலெக்டராக என் பணியைத் தொடங்கினேன். சவால்கள் காத்துக்கிட்டிருந்தன. பழங்குடி மக்கள் நிறைந்த அந்த மாநிலத்தில், நக்ஸலைட்களின் ஆதிக்கம் அதிகம். பலமுனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கிராமங்களின் மூலைமுடுக்குகளில்கூடத் தொலைத்தொடர்பு வசதிகளையும், சாலை வசதிகளையும் சாத்தியப் படுத்தி, நக்ஸலைட்டுகளின் செயல்பாடுகளை முடக்கினேன். ஒரு பெண்ணால என்ன செய்துட முடியும்னு நினைச்சவங்களுக்கு, ஒரு பெண்ணால என்னவெல்லாம் செய்ய முடியும் என்கிறதை செயல்ல காட்டினேன்.

அடுத்தகட்டமா, கந்தமால் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரா நியமிக்கப்பட்டேன். அதுவும் பழங்குடி மக்கள் நிறைந்த மாவட்டம் என்பதால சுகாதாரம், கல்வியில் விழிப்பு உணர்வே இல்லாமல் இருந்தாங்க. அவங்களைப் பார்க்கப்போனாக்கூட, அரசு வாகனத்தைப் பார்த்துப் பயப்படுவாங்க. அவங்கள்ல ஒருத்தியா இருந்து, அவங்களுக்காகத்தான் செயல்படப் போறேன்னு மெள்ள மெள்ள புரியவெச்சேன். அங்கே சுகாதாரம்தான் மிகப்பெரிய பிரச்னையா இருந்தது. அவங்களை டாய்லெட்டைப் பயன்படுத்துற வைக்கிறதுதான் எனக்கு மிகப்பெரிய சவாலா இருந்தது. கடும் முயற்சிக்குப் பின், ரெண்டு வருஷங்களில் 69,266 டாய்லெட்டுகள் சாத்தியமானது.

ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும்?

என்ன வேலையிருந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும் தினமும் மக்களைச் சந்திக்கிறதை வழக்கமாக்கினேன். எத்தனையோ விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளுக்கு அப்புறம்தான் பள்ளிக்கே பிள்ளைகளை அனுப்பினாங்க. இந்த நிலையில, பெண் கல்விக்கு இன்னும் போராட்ட வேண்டியிருந்தது; அது இன்றும் தொடருது. அந்த மாவட்ட மக்களைப் பொறுத்தவரை, வீட்டில் பிரசவம் பார்க்குறதுதான் அவங்க  பாரம்பர்யம்னு சொல்லுவாங்க. இதனால பிறக்கும் குழந்தைகள் பலவிதமான தொற்று நோய்களுக்கு ஆளாவாங்க. குழந்தைகளின் மரணமும் அடிக்கடி நிகழும். இதைத் தடுக்க மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதை ஊக்கப்படுத்தி, மொபைல் மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் பிரசவ வேன்களை அறிமுகப்படுத்தினேன். மெதுவாக மக்களும் மாற்றங்களை ஏத்துக்கிட்டாங்க.

‘வேர்ல்டு டாய்லெட் டே’ போட்டியில், இந்திய அளவில் கந்தமால் மாவட்டம்  ஆறாவது இடத்தைப் பெற்றது. ஆரம்பத்தில் கழிப்பிட வசதியை ஏற்க மறுத்த மக்கள் மூலமே அதைப் பெற்றது, அவங்க ஒத்துழைப்புக்குக் கிடைச்ச பரிசுதான். மக்களின் மனநிலையில் ஆரோக்கியமான மாற்றத்தைக் கொண்டுவந்த ஆத்மதிருப்தி எனக்குக் கிடைச்சது. அடுத்தடுத்த வருடங்களிலும், எந்த மாவட்டத்தில்  என்ன பணியில் இருந்தாலும், இப்படியான தடங்களைப் பதிக்கணும் என்பதே எனக்கு நான் சொல்லிக்கிற உத்வேகம். என் சாதனைகளுக்குக் கைதட்டவும், அருகில் இருந்து அரவணைக்கவும் இப்போ எங்க அண்ணன் சங்கர் இல்லை. என்றாலும், நான் இப்போ சுமந்திட்டிருக்கிறது, கைகூடாமல் போன அவரது கனவு. அவர் எனக்குக் கொடுத்திருக்கும் தன்னம்பிக்கை, அடுத்தடுத்த பணியிடப் போராட்டங்களுக்கும் என்னைத் தயாரா வெச்சிருக்கு!”

-அ.சையது அபுதாஹிர், சு.சூர்யா கோமதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு