Published:Updated:

அசத்தல் அம்மா - மகள்: என் அம்மா எனக்குக் குழந்தை மாதிரி!

அசத்தல் அம்மா - மகள்: என் அம்மா எனக்குக் குழந்தை மாதிரி!
பிரீமியம் ஸ்டோரி
News
அசத்தல் அம்மா - மகள்: என் அம்மா எனக்குக் குழந்தை மாதிரி!

இந்திரஜா ரோபோ சங்கர்

“அப்பாவை நான் மிஸ் பண்ற நேரமெல்லாம் அம்மாதான் அப்பாவாகவும் இருந்து என்னைப் பார்த்துக்குவாங்க”

- இந்திரஜா சொல்ல, தன் மகளைக் கட்டியணைத்துக்கொள்கிறார், பிரியங்கா ரோபோ சங்கர். ஆம், இது ரோபோ சங்கரின் அன்புக் கூடு. அணில்கள் விளையாடும் தாழ் வாரம் ஆசீர்வதிக்கப்பட்ட அவர்களுடைய வீட்டில், இந்த அம்மா - மகள் ஜோடியைச் சந்தித்தோம்.

அசத்தல் அம்மா - மகள்: என் அம்மா எனக்குக் குழந்தை மாதிரி!

‘`இன்னிக்கு ரோபோ சங்கர் ஒரு செலிபிரிட்டி. இந்த நிலைக்குவர அவர் கடந்திருக்கும் போராட்டங்கள் நிறைய நிறைய. அவருடைய கனவுக்காகத்தான் நாங்க சென்னைக்கு வந்தோம். ஒரு மனைவியா, அவருடைய எல்லா முயற்சிகளுக்கும் நான் உறுதுணையாயிருக்கேன். அவரின் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும்தான் அவருக்கு இந்த வெற்றியைக் கொடுத்திருக்கு. என் கணவருக்கு வாழ்க்கை கொடுத்த ‘கலக்கப் போவது யாரு’ மேடையில இன்னிக்கு நானும் போட்டியாளரா கலந்துக்கிறதை நினைக்கும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஹியூமர் சென்ஸ் எங்க குடும்பத்துக்கே அதிகம். டைமிங் காமெடியில அசத்துவோம். அதனால முயன்று பார்க்கலாமேனு களத்தில் இறங்கினேன். இப்போ நானும் ஷூட்ல பிஸியா இருக்கேன்; என் கணவரும் பிஸியா இருக்கார். ஆனாலும், என் பொண்ணுக்காக நான் செலவு பண்ற நேரத்தை மட்டும் எப்பவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்’’ என்கிற அம்மாவைத் தொடர்ந்தார், இந்திரஜா.

‘`என் அம்மா ரொம்ப ஸ்வீட். அதே நேரம் 98% ஸ்டிரிக்ட். நிறைய விஷயங்களை அம்மாகிட்டேயிருந்து கத்துக்கிட்டேன். அம்மா சூப்பரா சமைப்பாங்க. அம்மா மாதிரியே நானும் சமைக்கிறேன்னு அடிக்கடி அப்பா சொல்லுவார். நான் இப்போ ப்ளஸ் ஒன் படிக்கிறேன். அம்மாகிட்ட எந்த விஷயத்தையும் மறைக்க மாட்டேன். அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சொல்ற விஷயம், நாம செலிபிரிட்டிங்கிற எண்ணம் இருக்கக் கூடாதுங்கிறதுதான். அதனால, நான் ரோபோ சங்கர் பொண்ணுன்னு எங்கேயுமே சொல்லிக்க மாட்டேன்’’ என்கிறார் இந்திரஜா சமர்த்தாக.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அசத்தல் அம்மா - மகள்: என் அம்மா எனக்குக் குழந்தை மாதிரி!

‘`செலிபிரிட்டிங்கிற வளையத்துக்குள்ள இருக்குறதால நாம சில விஷயங்களில் கவனமாயிருக்க வேண்டியிருப்பதையும் அவளுக்குச் சொல்லியிருக்கேன். ரோபோ சங்கர் பொண்ணு ஒரு விஷயத்தைச் செய்தாங்க அப்படீங்கிறது, நாம செய்ற விஷயத்தைப் பொறுத்து நியூஸ் ஆகலாம். அதனால எப்பவும் நல்ல விஷயங்களை, கவனத்துடன் செய்யணும்னு நான் சொன்னதையும், அதுக்காக நான் காட்டின கண்டிப்பையும் இந்திரஜா இப்போ நல்லா புரிஞ்சுக்கிட்டா. நானும் என் கணவரும் அவளை பர்ஸ்ட் குரூப் எடுக்கச் சொன்னோம். அவ வணிகவியலைத் தேர்ந்தெடுத்தா. இப்படி அவளுடைய விருப்பங்கள், தேர்வுகளுக்கு நாங்களும் மதிப்பு கொடுக்குறோம். 12 வருஷத்துக்கும் மேலே பரதநாட்டியம் கத்துட்டிருக்கா; சூப்பரா வீணை வாசிப்பா. அவங்க அப்பா மாதிரி இந்திரஜாவும் ஹார்டு வொர்க்கர். எங்க ரெண்டு பேரைவிடவும் எங்க பொண்ணுதான் எங்க வீட்டுல மாஸ்” என்றதும் அவரை முத்தமிட்டு இந்திரஜா தொடர்ந்தார்.

“அம்மாவுடைய நடனத்தில் நளினம் இருக்கும். அப்பா சூப்பரா குத்துப்பாட்டுக்கு ஆடுவாரு. இவங்க ரெண்டு பேர்கிட்டயிருந்தும் நளினத்தையும் நடனத்தையும் எடுத்துக் கிட்டேன். டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அம்மா, அப்பாவுக்காகத்தான் டிகிரி படிக்கப் போறேன். எனக்குப் பரதநாட்டியம், வீணைன்னு கலைகளில் சாதிக்கணும்னுதான் ஆசை. `கனவை நோக்கிப் பயணம் செய்... நிச்சயம் வெற்றி கிடைக்கும்’னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. நிச்சயமா செய்வேன்” என்றவரிடம், டிக்டொக்கில் கலக்கிக்கொண்டிருப்பதைப் பற்றிக் கேட்டோம்.

“சும்மா விளையாட்டாதான் டிக்டொக் வீடியோ பண்ண ஆரம்பிச்சேன். என் அம்மாவையும் அப்பாவையும் குழந்தையாகப் பார்க்க எனக்குப் பிடிக்கும். அதனால டிக்டொக்கில் அம்மா, அப்பாவுக்குக்  குழந்தை வேஷம் போட்டு செய்ய வைப்பேன். அவங்களும் எனக்காக அதையெல்லாம் செய்வாங்க” என அம்மாவைப் பார்க்க, பிரியங்கா தொடர்ந்தார்.

அசத்தல் அம்மா - மகள்: என் அம்மா எனக்குக் குழந்தை மாதிரி!

“பாப்பா பண்ண டிக்டொக்  வீடியோவைப் பார்த்துட்டு அட்லி சாருடைய ஆபீஸ்ல இருந்து என் கணவருக்கு போன் வந்தது. ஆரம்பத்துல என் வீட்டுக்காரர் கொஞ்சம் யோசிச்சாரு. பாப்பா, படிப்பையும் நடிப்பையும் மேனேஜ் பண்ணிப்பேன்னு சொன்னா. அவ நடிக்க ஆர்வமா இருந்தால் ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப் போனோம். ‘தளபதி 63’-ல் பாப்பா அறிமுகமாகிறாங்குறது எங்களுக்கு கிடைச்ச வரம். ஆடிஷன் முடிஞ்சிடுச்சு. இன்னும் ரிசல்ட் வரலை. ‘பாப்பா பொதுத்தேர்வை  நல்லபடியாக எழுதட்டும்... அப்புறம் பேசிக்கலாம்’னு சொல்லியிருக்காங்க. நல்ல செய்தி சொல்லுவாங்கங்கற நம்பிக்கையில் இருக்கோம்.

நான் சோர்ந்து போறப்போதெல்லாம், `உன்னால முடியும்மா’ன்னு பெரிய மனுஷியாட்டம் என் பொண்ணுதான் எனக்குத் தைரியம் சொல்லுவா. அவ வயசுல இந்தப் பக்குவம் எனக்கிருந்ததில்ல. அந்தளவுக்குப் பொறுப்பான பொண்ணு. நாம வாழ்க்கையில் என்னவாகப் போறோம் என்கிற தெளிவான  ரூட் மேப் அவகிட்ட இருக்கு. நான் அவளிடம் எடையைப் பத்தி கவலைப்படச்   சொல்லலை; ஆனா,  ஆரோக்கியம் முக்கியம்னு சொல்லி யிருக்கேன். `தோற்றத்தைவிட திறமையில நம்பிக்கை வை; அதுல கவனம் செலுத்து’ என்பது என் பொண்ணுக்கு நான் எப்போதும் சொல்லும் அட்வைஸ்” என்ற அம்மாவைத் தொடர்ந்தார் இந்திரஜா.

“அப்பா, ஷூட்ல பிஸி; நான் படிப்புல பிஸி. நாங்க மூணு பேரும் சேர்த்து உட்கார்ந்து பேசுற நேரம், எங்க தெருவுக்கே சிரிப்புச் சத்தம் கேட்கும். அவ்வளவு ஜாலியா இருப்போம். அம்மா சரியான கைப்பை பைத்தியம். எங்கே போனாலும் ஒரு பேக் வாங்கிடுவாங்க.  நானும் அம்மாவும் ஷாப்பிங் போகும்போது, சின்னக் குழந்தை மாதிரி, இந்த பேக் எனக்கு வேணும்னு அடம்பிடிப்பாங்க. அப்போ அவங்களைப் பார்க்க அவ்வளவு க்யூட்டா இருக்கும். வீட்டுல என்னைச் செல்லமா ‘பாப்பூ’ன்னு கூப்டுவாங்க.

எனக்கு என் பேமிலிதான் எல்லாமே. அஜித் சாரை மீட் பண்ணினப்போ, ‘பெத்தவங்களை நல்லா பார்த்துக்கோ’ன்னு சொன்னாங்க. என் அப்பா அம்மாவை என் சம்பளத்துல நல்லா பார்த்துக்கணும்னு விரும்புறேன். நிச்சயமா பார்த்துப்பேன்” என்கிறார் இந்திரஜா.

எதிர்காலம் சிறக்கட்டும்!

-வெ.வித்யா காயத்ரி 

படங்கள் : ப.சரவணகுமார்