Published:Updated:

அவள் பேசுவதையே அதிக நேரம் கேட்பேன்! - அருள்மொழி - குயில்மொழி

அவள் பேசுவதையே அதிக நேரம் கேட்பேன்! - அருள்மொழி - குயில்மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பேசுவதையே அதிக நேரம் கேட்பேன்! - அருள்மொழி - குயில்மொழி

அவள் பேசுவதையே அதிக நேரம் கேட்பேன்! - அருள்மொழி - குயில்மொழி

பெயரில் மட்டுமல்ல... அடுத்தவர்மீது அன்பு காட்டுவதில், நட்பு பாராட்டுவதில், கொள்கைகளில், வாசிப்பதில், சட்டப் படிப்பில்... இப்படிப் பல விஷயங்களிலும் அம்மாவுக்கும் மகளுக்கும் அவ்வளவு ஒற்றுமை.

அவள் பேசுவதையே அதிக நேரம் கேட்பேன்! - அருள்மொழி - குயில்மொழி

``நிறைய பேருக்குத் தெரியாத இன்னோர் ஒற்றுமையும் இருக்கு. எங்கம்மா பிரமாதமான டான்சர்னு அட்வகேட் சுமதியக்கா சொல்லியிருக்காங்க. காலேஜ் கல்சுரல்ஸ்ல சூப்பரா ஆடியிருக்காங்களாம். அந்த ஜீன்தான் என்னையும் டான்சராக்கியிருக்கணும். ஒரே ஒருமுறை எனக்காக ஆடிக்காட்டுங்கம்மானு பல வருஷமா கெஞ்சிட்டிருக்கேன். முடியலையே...'' - அம்மா பற்றிய ரகசியம் உடைத்தபடி ஆரம்பிக்கிறார் குயில்மொழி.

``நாம செய்யற விஷயங்கள் அடுத்தவங்களுக்கு மகிழ்ச்சியைத் தரணும். தண்டனையா மாறிடக் கூடாது. அதனாலதான் ஆடறதில்லை!'' - பதில் தருகிற அம்மாவைச் செல்லமாக முறைத்தபடி பாசக் கதை பேசுகிறார் குயில்.

``என்னுடைய ஆறாவது வயசுலேருந்து அப்பா எங்கக்கூட இல்லை. அவர் எங்களைப் பிரிஞ்சு போய் சில வருஷங்களில் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார். குறிப்பிட்ட வயசுவரைக்கும் எனக்கு எதுவும் புரியலை.  யார் பண்றது சரி... யார் மேல தப்புன்னு தெரியலை. அந்த வயசுல நான் ரொம்ப கோபக்காரியா இருந்திருக்கேன். எல்லார்கிட்டயும் எரிஞ்சு விழுந்திருக்கேன். அம்மாவின் பொறுமையும் அன்பும்தான் என்னை மீட்டெடுத்தது.

என்னைப் படிக்கவைக்கிறதுல அம்மாவுக்கு எந்த பிரஷரும் இருந்ததில்லை. எங்க பாட்டியும் தாத்தாவும் வந்து அம்மாகூட இருக்க ஆரம்பிச்சாங்க. நான் ஒன்பதாவது வந்தபோது தாத்தா பாட்டிக்கு உடம்புக்கு முடியாமப்போனது. அப்போ என்னை நாமக்கல்லில் வித்யவிகாஸ் ஸ்கூலில் சேர்த்துட்டு, ஹாஸ்டலில் விட்டாங்க.

நான் விரும்பினதைப் படிக்கிற சுதந்திரத்தைக் கொடுத்தாங்க அம்மா. பத்தாவதுல 454 மார்க் வாங்கினேன். அந்த நேரம் பாட்டி இறந்துட்டாங்க. பத்தாவது முடிச்சதும் மறுபடியும் அம்மாகிட்ட வந்துடலாம்னு நினைச்சேன். ஆனா, பாட்டியோட இழப்பினால் அம்மா கடுமையான டிப்ரெஷனுக்குள்ளே போயிட்டாங்க. அந்தச் சூழலில் அவங்களால என்னையும் பார்த்துக்க முடியாதுன்னு நான் நாமக்கல்லிலேயே படிப்பைத் தொடர முடிவு பண்ணினேன். அப்போ டீன்ஏஜ்ல இருந்தேன். அந்த வயசுக்கே உண்டான மனநிலை மாற்றங்கள், கோபம்னு எல்லாம் எனக்கும் இருந்தன. அதையெல்லாம் மீறி நான் 92 சதவிகித மதிப்பெண்ணோட ப்ளஸ் டூ முடிச்சேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அவள் பேசுவதையே அதிக நேரம் கேட்பேன்! - அருள்மொழி - குயில்மொழி

அடுத்து என்ன செய்யப்போறேன்னு அம்மா கேட்டபோது `லா படிக்கிறேன்'னு சொன்னேன். `இப்பதான் ஸ்கூல் முடிச்சிருக்கே... மறுபடி அஞ்சு வருஷம் படிக்கிற அந்த கோர்ஸ் வேண்டாம். ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்து ஏதாவது டிகிரி படிச்சு கொஞ்சம் என்ஜாய் பண்ணிட்டு வா'ன்னு சொல்லி என்னை எத்திராஜ் காலேஜ்ல சேர்த்தாங்க. கல்லூரி நாள்கள்தாம் எனக்குள்ளே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவை. அங்கே வந்த பிறகு டான்ஸ்ல ஆர்வம் வந்தது. அங்கிருந்துதான் அம்மாவுக்கும் எனக்குமிடையில் நல்ல நட்பு ஆரம்பமாச்சு. அம்மாகிட்ட நிறைய பேச ஆரம்பிச்சேன்.

இத்தனை வருஷங்களிலும் நான் அப்பாவை மிஸ் பண்ணலை. 2016-ல் அப்பா இறந்துட்டார். அவரைப் பத்தி அம்மா என்கிட்ட எப்போதும் தப்பா பேசினதே இல்லை. நான் வளர்ந்த பிறகு எனக்கே சில விஷயங்கள் தெரியவந்தது. `எனக்கு அவரைப் பிடிக்காமப் போனாலும் நீ அவரை வெறுக்கத்தேவையில்லை'ன்னு சொல்வாங்க. அப்பா இல்லாத வாழ்க்கையில தனி மனுஷியா என்னை வளர்க்க அவங்க சந்திச்ச போராட்டங்கள், கஷ்டங்களை என்னிக்கும் என்கிட்ட காட்டினதில்லை. அம்மா அப்படி ஸ்ட்ராங்கான மனுஷியா இருந்ததாலதான் நானும் அவங்களை மாதிரி இருக்கேன். ஒருவேளை அவங்க தன் பலவீனங்களைக் காட்டியிருந்தா நான் வேற மாதிரி இருந்திருப்பேனோ என்னவோ...'' - குயில்மொழியின் சீரியஸ் பேச்சு, சென்டிமென்ட்டுக்குள் நுழைகிறது.

``போன வருஷம் நடந்த ஒரு விஷயம் இது. ஒருநாள் ராத்திரி எனக்கு காய்ச்சல்... சளி பிடிச்சிருந்தது.  பயங்கரமான காதுவலி. கோர்ட் வேலை முடிச்சிட்டு வந்து அம்மா ரொம்ப டயர்டா படுத்திருந்தாங்க. எனக்கு வலி தாங்கலை. கூகுள் பண்ணிப் பார்த்துட்டு ஏதேதோ கை வைத்தியங்களைச் செய்தும் வலி குறையலை. வேற வழியில்லாம அழுதுகிட்டே அம்மா பக்கத்துல படுத்துட்டேன். அந்தக் களைப்பிலும், அடுத்த நாள் கோர்ட் வேலை களைப் பற்றி யோசிக்காம, என் காதைத் தடவிக் கொடுத்து என்னைத் தூங்கவெச்சாங்க. அவ்வளவு நேரம் இருந்த வலி அம்மாவோட அன்பிலும் ஸ்பரிசத்திலும் மாயமாயிடுச்சு.

எனக்கு மேடைப்பேச்சு வராது. `அருள்மொழி யோட பொண்ணு'ங்கிற ஸ்டேட்டஸ் தலைக்கு மேல தொங்கற கத்தி மாதிரியானது. `அருள்மொழியம்மா பொண்ணா இருந்துட்டு நீ பேச மாட்டேங்கிறியே'னு என்னை நிறைய பேர் கேட்கறாங்க. `அதனாலதான் பேச மாட்டேங்கிறேன்'னு சொல்வேன். ஆனாலும், அது என்னை உறுத்திட்டே இருக்கு. அம்மாவுக்கும் அந்த ஆசை இருக்குமில்லையா? பேச்சாளரா இல்லைனாலும் டான்ஸ்ல  நல்ல பேர் வாங்கி அம்மாவை சந்தோஷப்படுத்த ணும்னு ஆசையிருக்கு. நடனத்தை நம்ம கலையாக்கணும், மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கணும்கிற அம்மாவின் கனவை நனவாக்கிறதுதான் என் கனவும்...'' - அம்மாவை அணைத்துக்கொள்கிறார் குயில். அது அன்பின்மொழி!

``குயில் எனக்கு மகள் என்பதையும் தாண்டி, நல்ல தோழி. குயிலுக்கு அஞ்சு வயசிருக்கும்போது மும்பையில் ஒரு முக்கியமான கான்பெரென்ஸ். இரண்டு நாள்கள் ரயில் பயணத்துல அவளையும் கூட்டிட்டுப் போனேன். காலையில தொடக்க விழாவுக்குப் போகணும். தங்கியிருந்த ஹோட்டலில் ஹீட்டர் வேலை செய்யலை. அது ஜனவரி மாசம். அந்தக் குளிரிலும் பச்சைத் தண்ணீரில் குளிச்சிட்டுக் கிளம்பினாள். பயணங்களுக்கு அட்ஜஸ்ட் செய்துக்கிற குணம் சின்ன வயசுலேயே வந்திருச்சு. அவகூட பயணம் பண்ணும்போது எனக்கு இணையா ஒரு தோழியுடன் பயணம் செய்யறது போல இருக்கும்.

வளரிளம் பருவத்துல குழந்தைகள் பெற்றோர் பேச்சைக் கேட்க மாட்டாங்க. கொள்கைகளை ஏற்க மாட்டாங்கன்னு சொல்றதெல்லாம் சும்மா. அவங்களுக்கு ஏற்றபடி சொல்லணும். அந்தக் குழந்தையோடு வளர்வது பெற்றோருக்கும் பயிலும் பருவம்தான். பெற்றோர்கிட்டருந்துதான் பிள்ளைங்க கத்துக்கணும்னு இல்லை. பிள்ளைகள்கிட்டருந்தும் பெற்றோர் கத்துக்கலாம். நான் இரவு தூங்கறதைவிடவும் அதிக நேரம் அவள் பேசுவதைக் கேட்பேன். கேட்கும்போதே நிறைய விஷயங்களுக்கு அவங்களுக்கு வடிகால் கிடைச்சிடும். நாம் எவ்வளவு பொறுமையாகக் குழந்தைகளைக் கையாளணும் என்பதையே நான் குயிலிடம் பேசிப் பேசி, அவளிடம் நல்ல மாற்றங்களைப் பார்த்துதான் கத்துக்கிட்டேன். என் பேச்சைக் கேட்கற பலரும், `என்ன மேடம்... இவ்வளவு அப்டேட்டடா பேசறீங்க. இன்னிக்கு இருக்கிற இளம்தலைமுறைக்குக்கூட உங்க பேச்சு பிடிக்குதே'ன்னு சொல்வாங்க. அதுக்கும் குயில்தான் காரணம். அவங்க உலகத்தில் நடக்கிற விஷயங்களை நான் குயிலிடமிருந்துதான் கத்துக்கறேன்.

அவள் பேசுவதையே அதிக நேரம் கேட்பேன்! - அருள்மொழி - குயில்மொழி

சின்ன வயசிலிருந்தே அவளும் நிறைய படிப்பாள். என் புத்தக அலமாரியைக் காட்டி, `உலகை'ன்னு எழுதிக் காட்டி, அந்த வார்த்தையுள்ள புத்தகத்தைக் கண்டுபிடிக்கச் சொல்வேன். `உலகைக் குலுக்கிய 10 நாட்கள்'  புத்தகத்தைச் சரியா எடுத்துட்டு வருவாள். இப்படி விளையாட்டு மூலமா அவளுக்கு நிறைய கத்துக்கொடுத்தேன். ப்ளஸ் டூ முடிச்சதும் அவளுக்கு பிடிஎஸ் சீட் கிடைத்தது. அது வேண்டாம், கணிதம் படிக்கிறேன்னு சொன்னாள். கணிதம் முடிச்சபோது, நான் என் வழக்குகளைக் கையாளும் விதத்தையும் மனிதர்களை அணுகும் விதத்தையும் பார்த்து, அது ஏற்படுத்திய தாக்கத்தால் சட்டம் படிக்கிறேன்னு சொன்னாள். `பி.எஸ்சி முடிச்சிருக்கே... எம்.எஸ்சி படிச்சா பேராசிரியராக லாம். அம்மாவின் அலுவலகத்தைப் பார்த்துக்கிறதுக்காக சட்டம் படிக்க நினைக்காதே'ன்னு சொன்னேன். அதையும்மீறி `படிக்கிறேன்'னு சொன்னாள். சம்மதிச்சேன். வெற்றிகரமா அதை முடிச்சிட்டு, இப்போ ஏசிஎஸ் பண்ணிட்டிருக்காள்.

உறவினர் திருமணத்தில் நர்த்தகியின் நடனத்தைப் பார்த்துட்டு, அவங்ககிட்ட சேர்த்துவிடச் சொன்னாள். யோசிக்க நேரம் கொடுத்தேன். ஆறு மாசங்களுக்குப் பிறகு சேர்த்துவிட்டேன். தமிழ்ப் பாடல்களைவெச்சு அரங்கேற்றம் நடந்தது. அது எனக்கும் நர்த்தகிக்கும் பெரிய பெயரை வாங்கித் தந்தது.

`இன்னும் ஏன் கோர்ட்டுக்குக் கூட்டிட்டு வரலை'ன்னு என்னை நிறைய பேர் கேட்பாங்க. பிள்ளைக்கு ரொம்பச் செல்லம் கொடுக்கிறாங்க போலன்னு நினைப்பாங்க. பெற்றோர் பிள்ளைங்க வளர்வதற்கான வெளியை உருவாக்கித்தரணும், அங்கங்கே தடுப்பணை கட்டி தேக்கிடக்கூடாதுன்னு நினைப்பேன். பிள்ளைகளின் வளர்ச்சிதான், நாம போகும் பாதை சரியானதான்னு காட்டும்'' - சரியான பாதைதான் என்று நிரூபித்துவிட்டவர், சிங்கிள் பேரன்ட்டாக குழந்தையை வளர்க்கும் சிரமங்களைவிடவும் சமுதாயத்தின் பார்வையைக் கடப்பதுதான் சிக்கலாக இருந்ததாகச் சொல்கிறார்.

``குயில்கிட்ட அவங்கப்பாவைப் பத்தி எந்தக் காலத்திலும் தப்பா எதையும் நான் சொன்னதில்லை. அவளுக்கு உள்ள நல்ல நினைவுகளை அழிக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அவளை வளர்ப்பதில் என் குடும்பத்தினரின் ஆதரவு பெரிய பலமாக இருந்தது. நான் பயணங்கள் செய்தபோது குயில் தனியே இருந்ததில்லை. வீட்டார் யாராவது பார்த்துக்கிட்டாங்க. அவளுடைய நடன நிகழ்ச்சிகள் நடக்கும்போதும் என்னால் செய்ய முடியாத வேலைகளை என் அக்காக்களும் அண்ணன்களும் செய்தாங்க.

பண்பாடு, நாகரிகம்னு நிறைய பேசறோமே தவிர, எல்லார் மனசிலும் நிறைய குரூர புத்தி இருக்கு. குடும்பத்தில் பெற்றோருக்கிடையில் பிரச்னைகள் இருக்கிறபோது, அந்தக் குழந்தைங்கக்கிட்ட கேட்கக்கூடாத விஷயங்களைக் கேட்பாங்க. `நீ போய் அப்பாவைப் பார்ப்பியா, அவர் வந்து உன்னைப் பார்ப்பாரா' என்கிற கேள்விகள் சம்பந்தப்பட்ட குழந்தைக்கு எந்தளவுக்கு வருத்தம் தரும்னு தெரியாதா, தெரிஞ்சாலும் அக்கறையில்லையா அல்லது அந்தக் கேள்விகளால் குழந்தைகள் படற வேதனை இவங்களுக்கு மகிழ்ச்சியைத் தருதான்னு தெரியலை. குயிலுக்கும் அதெல்லாம் நடந்திருக்கு. `இது நமக்கு மட்டுமல்ல, நிறைய பேருக்கு உள்ள பிரச்னை... நம்ம சமூகம் இன்னும் பக்குவப்படலை. அவங்களுக்குப் புரியாது'ன்னு சொல்லி வளர்த்தேன். இதுதான் வாழ்க்கையின் வலிநிறைஞ்ச பக்கமா இருந்திருக்கு. சமூகத்தின் புரிந்துணர்வில்லாததன் எதிரொலி இது. எல்லாத்தையும் தாண்டி, குயில் மகிழ்ச்சியான குழந்தையா வளர்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தேன். அது போராட்டமானதுதான். குயிலின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் அதுவும் சாத்தியமானது'' - பெருமையாக ஒலிக்கிற அது, தாய்மையின்மொழி!

-ஆர்.வைதேகி

 படங்கள் : க.பாலாஜி