Published:Updated:

ஏஞ்சல்ஸ்: அவ சிரிப்பு போதும் இந்த வாழ்க்கைக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏஞ்சல்ஸ்: அவ சிரிப்பு போதும் இந்த வாழ்க்கைக்கு!
ஏஞ்சல்ஸ்: அவ சிரிப்பு போதும் இந்த வாழ்க்கைக்கு!

தேஜஸ் ஸ்ரீதத்தா - ரமா

பிரீமியம் ஸ்டோரி

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸன் 6’ நிகழ்ச்சியில் அனைவரையும் தன் வசம் ஈர்க்கும் குட்டித் தேவதை, தேஜஸ் ஸ்ரீதத்தா. தேஜு குட்டியின் சிரிப்புக்கு ரசிகராகாமல் இருக்க யாராலும் முடியாது. ‘`ஆட்டிஸம் குழந்தைகள்னா வீட்டுக்குள்ளேயே இருக்கணும்கிற சமூக எண்ணத்தை தேஜு மாத்தியிருக்கா. சூப்பர் சிங்கர் மேடைக்கு வந்ததுக்கப்புறம் எங்க பொண்ணுகிட்ட நாங்க பல மாற்றங்களை உணர்றோம்’’ என்று பூரிப்புடன் சொல்லும் தேஜுவின் அம்மா ரமா, அந்தக் குட்டித் தேவதையைப் பற்றி மேலும் பேச ஆரம்பித்தார்.

ஏஞ்சல்ஸ்: அவ சிரிப்பு போதும் இந்த வாழ்க்கைக்கு!

‘’தேஜு பிறந்தப்போ, குடும்பமே அவளைக் கொண்டாடினோம். அவ அழுகை, சிரிப்புனு ரசிச்சு ரசிச்சு வளர்த்தோம். அவளுக்கு ரெண்டரை வயசு ஆனப்போ, ‘குழந்தை இன்னும் பேசலையே’னு சொந்தக்காரங்க கேட்டாங்க. அப்புறம்தான் அதை நாங்க கவனிச்சு, ஹாஸ்பிடலுக்குப் போனோம். தேஜுவுக்கு ஆட்டிஸ பாதிப்புன்னு தெரிந்ததும் ஒட்டுமொத்த சந்தோஷமும் எங்களை விட்டுப்போன மாதிரி இருந்தது. ஆனாலும், `இதுதான் இனி வாழ்க்கை; இந்த வாழ்க்கைக்கு ஏற்ப தேஜுவை வளர்க்கணும்’னு முடிவெடுத்தோம்.

அந்த நேரம் நாங்க ஓசூர்ல இருந்தோம். அங்க தேஜுவுக்கு ஸ்பீச் தெரபியும் நிறைய பயிற்சிகளும் கொடுக்க ஆரம்பிச்சோம். எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பு களை நார்மல் ஸ்கூல்ல படிக்க வெச்சோம். ஸ்கூல்ல எதையும் எழுத மாட்டா. ஆனா, மிஸ் சொல்லிக்கொடுக்கிற ரைம்ஸைப் பாடிடுவா. அதனால, ஸ்கூல்ல ரிட்டன் எக்ஸாம்ஸ் இல்லாம ஓரல் எக்ஸாம்ஸ் மட்டும் பண்ண வெச்சோம். வீட்டிலும் ஓர் இடத்துல உட்காரலைன்னாலும், ஏதாச்சும் ராகம் போட்டுப் பேசிட்டேயிருப்பா; பாடிட்டேயிருப்பா. கோபம் வந்தா தேஜுவை கன்ட்ரோல் பண்ணவே முடியாது. இடத்தின் சூழலை அவளால் புரிஞ்சிக்க முடியாது. அவளுக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னா, பிடிக்கலை... அவ்வளவுதான். வற்புறுத்தி எதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. அதே மாதிரி ஒரு தடவை நீங்க சொன்ன விஷயத்தை அப்படியே நினைவில் வெச்சுப்பா. அதனாலேயே அவகிட்ட ரொம்பக் கவனமா பேசணும். குப்பையைக் கீழே போடுறது, கோபத்துல வார்த்தைகள்விடுறதுனு தப்பா ஒரு விஷயத்தை அவ பார்த்துட்டாலோ, கேட்டுட்டாலோ அது அப்படியே அவளுக்குப் பதிவாகிடும். எங்ககிட்ட இருந்துதான் அவ நிறைய கத்துக்கிறாங்கிறதுனால நாங்க எப்பவும் பாசிட்டிவிட்டியோட இருக்கோம்’’ என்கிறவரின் குரலில் தாய்மையின் வலிமை.

‘`ஒருகட்டத்தில் தேஜுவின் சிகிச்சைக் காகச் சென்னைக்குக் குடிவந்துட்டோம். ஒன்றாம் வகுப்புவரை நார்மல் ஸ்கூல்லதான் படிச்சா. வகுப்புல திடீர் திடீர்னு பாடுறதால மற்ற குழந்தைங்க பாதிக்கப்பட்டாங்க என்பதால், அவளை சாலிகிராமத்திலுள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு மாத்திட்டோம். நார்மல் பசங்க படிக்கிற பள்ளியா இருந்தாலும், அங்கே சிறப்புக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கவும் டீச்சர்ஸ் இருக்காங்க. இப்போ மூன்றாம் வகுப்பு படிக்கிறா’’ என்று ரமா சொல்ல, தன் தேன் குரலால் ஒரு பாடல் பாடி அந்த உரையாடலுக்கு ஓர் இனிய இடைவேளை தந்தாள் தேஜு.

ஏஞ்சல்ஸ்: அவ சிரிப்பு போதும் இந்த வாழ்க்கைக்கு!

‘`தேஜு பாடுறதை நாங்க விளையாட்டா வீடியோ எடுத்துப் போட ஆரம்பிச்சோம். அதைப் பார்த்துட்டு இசைக்கலைஞர் அபிநயா செண்பகராஜ் எங்களைத் தொடர்புகொண்டு, தேஜுவுக்கு இசை கத்துக்கொடுக்கச் சொன்னாங்க. அவங்ககிட்ட மூணு வருஷங்களா கர்னாடக சங்கீதம் கத்துட்டிருக்கா தேஜு. மியூசிக் தெரபியும் அவங்க பண்றதால நல்லா செட்டாகிட்டா. அங்கே போனதுக்கு அப்புறம்தான், தேஜுவுக்கு எந்தளவுக்கு இசையறிவு இருக்கு என்பதை நாங்க உணர்ந்தோம். பிறகு, சினிமாட்டிக் வோக்கல் வகுப்பில் சேர்த்தோம். அந்த நேரத்துலதான் ‘சூப்பர் சிங்கர்’ ஆடிஷன் பற்றிக் கேள்விப்பட்டோம். ஒரு பெரிய மேடையை தேஜு எப்படிப் பயன்படுத்துறாங்கிறதைப் பார்க்கிறதுக்காக மட்டுமே ஆடிஷனுக்கு அவளைக் கூட்டிட்டுப் போனோம். அந்த நிகழ்ச்சி எங்களுக்கு இப்படி ஒரு திருப்புமுனையா அமையும்னு நாங்க எதிர்பார்க்கலை’’ என்கிறவர்...

‘` ‘சூப்பர் சிங்கர்’ மேடை, பாப்பாவை ரொம்பவே மாத்தினதை எங்களால உணர முடிஞ்சது. அதுவரை எந்தப் பசங்க கூடவும் தேஜுவால் எமோஷனலா கனெக்ட் ஆக முடியாது. ஆனா, அந்த செட்டுக்குப் போனதுக்கப்புறம் அஹானா கூட எமோஷனலா தேஜு கனெக்ட் ஆனாள். அவ அங்கே இங்கேனு ஓடினாலும் சித்ரா அம்மா, சங்கர் மகாதேவன் சார், எஸ்.பி.பி சரண் சார், கல்பனா மேம் இவங்க என்ன சொன்னாலும் உடனே கேட்டுப்பா. திடீர்னு அவங்ககிட்ட போய் சத்தமா பாடுவா. ‘எங்களால தேஜுவைப் புரிஞ்சுக்க முடியுது, நாங்க பார்த்துக்கிறோம்’னு அவங்க எல்லோரும் புன்னகை மாறாமல் சொல்லுவாங்க. நேர்ல ஒரு தடவை பார்த்துட மாட்டோமான்னு நினைச்ச அந்த ஆளுமைகளுடன் சேர்ந்து தேஜு பாடுறாங்கிறது மிகப்பெரிய வரம். அந்த செட்டுல அவளை அவளா இருக்க விடுறதால, அவ செய்ற விஷயங்களை என்ஜாய் பண்ணி செய்றா. ஒருத்தரை மிஸ் பண்றது, ஒருத்தர் பாடும்போது எமோஷனலாகிறது, மத்த பசங்களைப் பார்த்து சில விஷயங்கள் பண்றதுன்னு புது தேஜுவை இப்போ நாங்க பார்க்கிறோம்’’ என்கிறபோது ரமாவிடம் அவ்வளவு பரவசம்!

ஏஞ்சல்ஸ்: அவ சிரிப்பு போதும் இந்த வாழ்க்கைக்கு!

‘`தேஜுவைப் புரியாத குழந்தைன்னு சொல்றோம். யாராவது கவலையாயிருந்தா, அதை அவங்க வெளிப்படுத்தாம இருந்தாலும் தேஜு உணர்ந்துடுவா. அவங்களைக் கட்டிப்பிடிச்சு தட்டிக்கொடுப்பா’’ என்கிறவர் தன் இரண்டாவது மகள் ஸ்ரேயாஸை அறிமுகப்படுத்தினார்.

‘`ஸ்ரேயாஸ் வந்ததுக்கு அப்புறம் தேஜு அவகிட்டயிருந்து நிறைய விஷயங்களைக் கத்துக்க ஆரம்பிச்சா. தேஜு `உம்’முன்னு இருந்தாலும் இவ விடமாட்டா. அவகிட்ட ஏதாச்சும் வம்பு பண்ணிட்டேயிருப்பா. இவ வந்ததுக்கு அப்புறம்தான் தேஜு விளையாட, சண்டைபோடவெல்லாம் ஆரம்பிச்சா. நானும் என் கணவரும் தேஜுவை இண்டிபெண்டன்ட் பெர்சனா வளர்க்க விரும்புறோம். எங்க காலத்துக்குப் பிறகு அவளே அவளை டேக் கேர் பண்ணிக்கணும். `குட் டச் பேட் டச்' பற்றியெல்லாம் தேஜுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கேன். நான் சொல்லி தேஜு கேட்கிறதைவிட ஸ்ரேயாஸ் சொன்னா உடனே கேட்டுப்பா.

ஏதாச்சும் பிரச்னைன்னா, தேஜு எப்படி அதை அணுகுறாங்கிறதை கவனிக்கிறோம். அவளுடைய அணுகுமுறையைத் திருத்த வேண்டியிருந்தா அதைச் செய்றோம். இப்போ தேஜுவுக்குப் பாட்டுல ஆர்வமிருக்கு. திடீர்னு அவ, ‘அம்மா நான் இனிமே பாடமாட்டேன்’னு சொல்லிட்டானா, அவ்வளவுதான். அடுத்து, அவ வேற எதில் ஆர்வமா இருக்காளோ அதில் கவனம் செலுத்த வைப்போம். ஏன்னா, அவ விருப்பத்தை மீறி எங்களால எதுவும் செய்ய முடியாது. அதுதான் எங்க குழந்தை. இப்போ இந்த செட்டுல அவ ஜாலியா சிரிச்சுட்டிருக்கா. இப்படி அவ சிரிச்சிட்டிருக்கிறதே போதும் இந்த வாழ்க்கைக்கு!’’ - தன் குட்டித் தேவதையை அணைத்துக்கொள்கிறார் இந்த அம்மா தேவதை.

தாய்மை வலிமையானது!

-வெ.வித்யா காயத்ரி 

படங்கள் : தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு