Published:Updated:

நேசக்காரிகள்: இவர் ஒரு சிறப்புத் தாய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நேசக்காரிகள்: இவர் ஒரு சிறப்புத் தாய்!
நேசக்காரிகள்: இவர் ஒரு சிறப்புத் தாய்!

மோனிகா

பிரீமியம் ஸ்டோரி

“எனக்கு அந்த நாலரை வருஷங்கள்தாம் பொற்காலம்” என நினைவுகூரும்போதே ததும்பும் அழுகையை அடக்குகிறார் மோனிகா. உடல் இயக்கங்களில் பல்வேறு முடக்கங்கள் கொண்ட சிறப்புக் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் அவர்.

நேசக்காரிகள்: இவர் ஒரு சிறப்புத் தாய்!

மகன் தியோடர் நாலரை வயது வரை, `அம்மா' என்கிற சொல்லைத் தவிர வேறெதுவும் பேசத் தெரியாதவன். அவனது உலகத்தின் ஒரே மனுஷியாக இருந்தார் மோனிகா. `மகனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிறது. உன் மகன் தாக்குப்பிடிப்பது கடினம்' எனச் சுற்றத்தார் கூறியதைக் கேட்டு, ஆத்திரமும் அழுகையும் தாண்டி அவனைப் பாதுகாத்து வந்தார். ஆனால், தியோடர் ஒரு கட்டத்தில் அம்மாவைக் கைவிடுகிறான். “என் பையன் போன இடத்துக்கே நாமும் போயிடணும். அவனால தனியா அங்கே என்ன செய்ய முடியும்? இப்படியெல்லாம் யோசிச்சுட்டு இருந்தேன். அந்த நேரத்தில்தான் `அவள் விகடன்' 24.5.2011 இதழில் வெளியான ‘இவள் ஒரு தெய்வத்தாய்’ (http://bit.ly/avalthaai) கட்டுரையைப் படிச்சேன்” என அதன் ஒளிநகலைக் காட்டுகிறார்  மோனிகா.

திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தன் ஐந்து குழந்தை களையும் வறுமையின் பிடியில் வளர்க்கும் தாயைப் பற்றிய கட்டுரை அது. அதைப் படித்த பிறகு, தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டார் மோனிகா. மகனைப்போல உள்ள குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என எண்ணி, தியோடர் இறந்த பத்து நாள்களிலேயே அவன் பெயரில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்க எண்ணுகிறார். அறக்கட்டளை பதிவுபெற்றதற்கான சான்றிதழ் கிடைத்த அன்றுதான் தியோடர் பிறந்தநாள்.

நேசக்காரிகள்: இவர் ஒரு சிறப்புத் தாய்!

அடுத்து, சிறப்புக் குழந்தைகளை எங்கு தேடி உதவ வேண்டும் என்கிற தேடலில், அண்ணாநகரில் சிறப்புக் குழந்தைகளுக்கென இயங்கிவரும் `மித்ரா' பள்ளியின் தொடர்பு எண் கிடைத்திருக்கிறது. அங்கே, அலைப்பேசியில் தொடர்பு கொண்டார். ஒரு செவிலியர் எடுத்துப் பேசினார்.

“உங்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையா இருப்பேன்... கவலைப்படாதீங்க” என்று சொல்லிய அவர் அலைப்பேசியை வைக்கும்போது, ``உங்கள் பெயர் என்ன?'' என மோனிகா கேட்க, அதற்கு அந்தச் செவிலியர் “என் பெயர் தியோடர்” எனச் சொல்ல, மோனிகாவினால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

மித்ரா சிறப்புப் பள்ளியுடன் 2011-ல்  இணைந்து, சிறப்புக் குழந்தைகளுக்கான சேவைசெய்ய ஆரம்பித்த மோனிகா, இன்றளவும் தன் வேகம் குறையாமல் செயல்பட்டுவருகிறார். ‘என் வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறப்புக் குழந்தைகளோடுதான் பகிர்ந்துட்டு வர்றேன். அவங்களாகவே துணி மாத்திக்கிறது, சாப்பிடுறதுனு, யாருடைய உதவியும் இல்லாமல் தினசரி தேவைகளைச் செய்துகொள்கிற மாதிரி குழந்தைகளுக்கு நிறைய பயிற்சிகள் கொடுக்கிறேன். தன்னுடைய வேலைகளைத் தானாகவே செய்ய இயலும்போது அவங்க முகத்தில வர்ற சந்தோஷம் இருக்கே... அதுக்கு இணையே இல்லை. என் தியோடர் இதையெல்லாம் கவனிச்சுட்டு `அம்மா நன்றிம்மா'ன்னு பாராட்டி என் தலையைத் தடவிக் கொடுத்துட்டு இருக்கான்னு நம்புறேன். அவனுடைய ஆசீர்வாதம்தான் என்னைத் தொடர்ந்து இயங்க வெச்சுட்டிருக்கு” என்கிறார் அழுகையும் புன்னகையுமாக.

-தமிழ்ப்பிரபா 

படங்கள் : பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு