Published:Updated:

இது இனிய இல்லம்: உடையில் மட்டுமல்ல... உள்ளத்திலும் ஒரே மாதிரி!

இது இனிய இல்லம்: உடையில் மட்டுமல்ல... உள்ளத்திலும் ஒரே மாதிரி!
பிரீமியம் ஸ்டோரி
இது இனிய இல்லம்: உடையில் மட்டுமல்ல... உள்ளத்திலும் ஒரே மாதிரி!

- 28 ஆண்டுக்கால வரலாறு இது

இது இனிய இல்லம்: உடையில் மட்டுமல்ல... உள்ளத்திலும் ஒரே மாதிரி!

- 28 ஆண்டுக்கால வரலாறு இது

Published:Updated:
இது இனிய இல்லம்: உடையில் மட்டுமல்ல... உள்ளத்திலும் ஒரே மாதிரி!
பிரீமியம் ஸ்டோரி
இது இனிய இல்லம்: உடையில் மட்டுமல்ல... உள்ளத்திலும் ஒரே மாதிரி!

ந்தையின் பெயர் தமிழ்வாணனில் இருந்து ‘தமிழ்’,  தாயின் பெயர் மணிமேகலையில் இருந்து ‘மணி’. இரண்டையும் சேர்த்து, ‘தமிழ்மணி இல்லம்’ என்று பெயர் தாங்கிய அழகிய இல்லம். கறுப்புத் தொப்பியும் கண்ணாடியும் போட்டாலே தெரியுமளவுக்குத் தன் அடையாளத்தைப் பிரபலப்படுத்திய பிரபல துப்பறியும் எழுத்தாளர், ‘கல்கண்டு’ ஆசிரியர் தமிழ்வாணனின் இல்லம் அது. வரவேற்ற தமிழ்வாணனின் வாரிசுகள் இருவரும் ஒரே மாதிரி உடையில். இன்று நேற்றல்ல, ஆண்டுகள் பலவாக இந்த வழக்கத்தைப் பின்பற்றிவரும் அபூர்வ சகோதரர்கள்!

‘‘ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அந்தச் சகோதரர்களின் மனைவிகள், வேறு வேறு குடும்பங்களிலிருந்து வந்தவங்க. அவங்களும் வேறுபாடு இல்லாம அதே ஒற்றுமையோடு வாழ்வதுதான் அபூர்வம். எங்க வீட்டில் அந்த அதிசயம் 30 ஆண்டுகளுக்கும் மேலா நடந்துட்டுவருது. அதுக்கு ஓர் உதாரணம்தான் இந்த ஓருடை, சீருடை வழக்கம்’’ என்று அட்டகாசமான முன்னுரையோடு வரவேற்றார் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லேனா தமிழ்வாணன். தந்தையைப் போல கறுப்புக் கண்ணாடி, புன்னகை மாறாத முகம், இனிய தமிழ்... லேனாவுக்கான சில அடையாளங்கள் இவை. அவருடைய மனைவி ஜெயம். இல்லத்தை அழகாக நிர்வகிக்கும் மூத்த மருமகள். இந்தத் தம்பதியின் இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடிந்து, பேரன், பேத்தி எடுத்துவிட்டார்கள்.

இது இனிய இல்லம்: உடையில் மட்டுமல்ல... உள்ளத்திலும் ஒரே மாதிரி!

லேனாவின் தம்பி, ரவி தமிழ்வாணன். ‘இவர்கள் புத்தகமாகப் பதிப்பிக்காத தலைப்புகளே இல்லை’ என்கிற அளவுக்கு ஆயிரக்கணக்கான நூல்களைப் பதிப்பித்து வரும் ‘மணிமேகலை’ பிரசுரத்தை நிர்வகித்து வரும் பதிப்பாளர். இவருடைய மனைவி வள்ளி. கார் டிரைவிங் முதல் கணக்கு, வழக்கு வரை எதுவாக இருந்தாலும் பின்னிப்பெடல் எடுப்பவர். இந்தத் தம்பதிக்கும் இரு மகன்கள். மூத்தவருக்குத் திருமணமாகி பேத்தி உண்டு.

ஜெயமும் வள்ளியும் 28 ஆண்டுகளாக ஒரே மாதிரி புடவைகளைத்தான் அணிந்து வருகிறார்கள். கோயில், விருந்து, விழாக்கள், விசேஷங்கள் என்று வீட்டைவிட்டு வெளியே கால்வைத்தாலே, அவர்களை ஒரே மாதிரி புடவையில்தான் பார்க்க முடியும். இன்னும் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், லேனாவும் ரவியும் தங்கள் மனைவிகளின் ஒற்றுமையைப் பார்த்துத்தான், தாங்களும் அதேபோல உடை அணிய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

‘‘எப்படிங்க இது சாத்தியம்?’’

‘‘எங்களுக்கு 1991-ல் கல்யாணமாச்சு. கல்யாணமாகி வந்ததுமே அக்காவுக்கும் எனக்கும் நல்ல புரிந்துணர்வு வந்துருச்சு. எங்க செட்டிநாட்டுப் பகுதியில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் மாதிரி விழாக்களுக்கு நெருங்கிய சொந்தங்களுக்கு ஒரே மாதிரி சேலைகள் வாங்கிக்கொடுப்பது வழக்கம். அப்படி வாங்கிக்கொடுத்த சேலையை, ஒரு கல்யாணத்துக்கு ரெண்டு பேரும் ஒரே மாதிரி கட்டிட்டுப் போயிருந்தோம். எங்களுக்கும் ரொம்ப நல்ல உணர்வை அது கொடுத்தது. அதிலிருந்து, ஒரே மாதிரி வாங்க ஆரம்பிச்சோம். ‘எப்போதும் இதுபோல ஒரே மாதிரி சேலைகளையே கட்டுவோமே’னு நானும் அக்காவும் முடிவெடுத்து, உடுத்தவும் ஆரம்பிச்சிட்டோம். ஆக, 28 ஆண்டுக் கால வரலாறு இது’’ - அழகாகச் சிரித்தபடி சொன்னார் வள்ளி. உரையாடலுக்குள் வந்த லேனா, ‘`உடை விஷயத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் ஜெயமும் வள்ளியும் வேறுபாடுகளை மறந்து இணைந்திருப்பது எங்கள் இல்லத்தின் பெரிய பலம்’’ என்று புகழாரம் சூட்டினார்.

‘‘இந்த மாதிரி புடவை கட்ட ஆரம்பிச்சதுமே, எங்கே போனாலும் ஒரே மாதிரி ரெண்டு புடவைகள் வாங்க ஆரம்பிச்சாங்க அண்ணியும் வள்ளியும். அவங்களுக்கு புடவைகளைப் பரிசாகக் கொடுக்கிறவங்களும் ஒரே மாதிரியான புடவைகளையே கொடுக்க ஆரம்பிச்சாங்க. வள்ளியின் பிறந்தநாளுக்கு, எங்கள் திருமண நாளுக்கெல்லாம் என் மனைவிக்குப் புடவை எடுக்கும்போது அதே மாதிரி அண்ணிக்கும் வாங்கிட்டு வந்துடுவேன்’’ என்று ரவி சொல்ல, ‘‘நான் புடவையெல்லாம் எப்போதும் வாங்கிப் பழக்கமில்லை. ரவி எங்கே போனாலும் ரெண்டு பேருக்கும் வாங்கிடுவார்’’ என்கிறார் லேனா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது இனிய இல்லம்: உடையில் மட்டுமல்ல... உள்ளத்திலும் ஒரே மாதிரி!

‘‘எங்களைப் பார்த்துத்தான் அவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி டிரஸ் போடுறதுன்னு முடிவெடுத்தாங்க. 2008-ம் வருஷம் புத்தகக் காட்சியின்போது, அந்த 10 நாளும் அரங்குக்கு வரும்போது ஒரே மாதிரி டிரஸ் போட்டாங்க. நண்பர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு. அதை அப்படியே அவங்க தொடர ஆரம்பிச்சு 11 வருஷங்களாச்சு’’ என்கிறார் வள்ளி. இந்த ஓருடை வழக்கத்தினால் நட்பு, உறவு என்று செல்லும் இடங்களிலெல்லாம் தனித்துத் தெரிகிறார்கள் இந்தத் தம்பதிகள்.

‘‘சேலைகளை எப்படித் தேர்ந்தெடுப்பீங்க?’’ என்றதும் ஜெயம் வள்ளியைப் பார்க்க, அவர்தான் பேசினார். ‘‘எந்த ஊரில், எந்தக் கடைக்குப் போனாலும், ஒரே நிறம், ஒரே டிசைனில் ரெண்டு சேலை இருக்கான்னுதான் கேட்போம். இதனால, ஒரே மாதிரி 100-க்கும் மேல புடவைகள் இருக்கு எங்ககிட்ட. என் பிறந்த வீட்டில் எங்க அண்ணன்கள் குடும்பங்களில் ஏதாவது விசேஷம்னா, எனக்கு வாங்குவது போலவே அக்காவுக்கும் வாங்கிடுவாங்க. அதேபோலத்தான் அக்கா குடும்பத்திலும். விசேஷங்களில் புடவையில் தொடங்கி, நகைகள், பொட்டு வரை யூனிபார்மாக  அணிந்து அசத்துவோம்’’ என்று வள்ளி முடிக்க, ரவி தொடர்கிறார்.

‘‘எங்ககிட்டயும் கிட்டத்தட்ட 100 சட்டை களுக்கு மேல சீருடைகள் இருக்கு. பேன்ட் எப்போதுமே வெள்ளைதான். சட்டைதான் மாறும். தினமும் அலுவலகத்துக்குப் போனாலும் விழாக்களுக்குப் போனாலும் அண்ணன்தான் என்ன சட்டை என்று முடிவெடுப்பார். ஏதாவது துக்க நிகழ்ச்சிக்குப் போகணும் என்றால், அண்ணன் என்ன சட்டை போடுறாரோ, அதே மாதிரி சட்டை பதிப்பகத்துக்கு வந்துடும். நான் அதை மாத்திக்கிட்டு, நேரே துக்க வீட்டுக்குப் போயிடுவேன்’’ என்றார் ரவி.

‘துவைச்சு, அயர்ன் பண்ணி வரும்போதெல் லாம் எது யாரோட புடவைனு எப்படித் தெரிஞ்சுக்குவீங்க?’ என்றோம் ஓர்ப்படிகளிடம்.

``புடவையின் உள்தலைப்பில் இனிஷியல் தைச்சுக்குவோம். அதோடு, என் புடவைகளில் எல்லாம் உள் தலைப்பை ‘பீகோ’ என்னும் கிராஸ் ஸ்டிட்ச் போட்டு தைச்சிடுவேன்’’ என்று வள்ளி கூறியதும், ‘‘அட... இந்த விஷயம் இதுவரை எங்களுக்கே தெரியாது! நல்ல டெக்னிக்கா இருக்கே...’’ என்று சுவாரஸ்யமானார்கள் சகோதரர்கள் இருவரும்.

`‘பேரன் பேத்திகள் எடுத்த பிறகும் இத்தனை வருஷங்கள் கூட்டுக் குடும்பமாகவே இருக்கும் ரகசியத்தைச் சொல்லுங்கள்!’'

‘‘ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் பெண் களின் ஒற்றுமைதான் ஆண்களின் ஒற்றுமையும் பலமும். ஜெயமும் வள்ளியும் அந்த விஷயத்தில் ஸ்ட்ராங்கா இருப்பதனாலதான் எங்க குடும்பத்தில் இது சாத்தியமானது. லெஷ்மி, சகுந்தலானு எங்களோட ரெண்டு சகோதரிகளுக்கும் இவங்க ரெண்டு பேரும் தோழிகள் மாதிரி. கூட்டுக் குடும்பத்தில் பிரச்னை வரும் வாய்ப்புள்ள இன்னொரு விஷயம், பிள்ளைகளுக்கிடையே வரும் சண்டை. அதை நாம பெருசா எடுத்துக்கவே கூடாது.

அடுத்ததா, கருத்து மோதல் வேறு, மன மோதுதல் வேறு. எங்களுக்குள்ளான கருத்து மோதல்களை ‘நான் ஜெயிச்சேன்; தோற்றேன்’ என்ற நிலை வரும் அளவுக்கு முற்றவிடுறதில்லை. கருத்து உரசும் இடத்தில் புரிந்துகொண்டு விலகினா, ரெண்டு பேரோட மனசும் மோதாது இல்லையா?’’ - மிகப் பெரிய தத்துவத்தை இயல்பாகச் சொல்கிறார்கள் சகோதரர்கள். ஓர்ப்படிகளுக்குள் மனத்தாங்கல்கள் வருவதில்லையாம். எப்போதாவது மனஸ்தாபம் வந்தால்கூட, வள்ளி அமைதியாகிவிடுவாராம். ‘`அப்புறம் அதுவாகவே சரியாயிடும்’’ என்று வள்ளி கூற, சிரிப்பால் ஆமோதிக்கிறார் ஜெயம். இருவரும் தங்கள் மருமகள்களோடும் நட்புறவோடும் இருப்பதைச் சொல்லி மகிழ்கிறார்கள்.

‘‘பிள்ளைகள் பெற்றோர் கண்முன்னே சண்டை போட்டுக்கிறதுதான் இருப்பதிலேயே மிகப் பெரிய வலி பெத்தவங்களைப் பொறுத்தவரை. நாங்க அந்த வலியை எங்க பெற்றோருக்குத் தந்ததில்லை. இந்தக் கூட்டுக்குடும்பத்தின் இன்பத்தை நுகர அப்பாவுக்குக் கொடுத்துவைக்கலை. ஆனா, அம்மா இந்த மகிழ்ச்சியை 10 வருஷங்கள் பார்த்து சந்தோஷப்பட்டாங்க. அவங்க கடைசிக் காலத்தில் படுத்த படுக்கையானபோது மலம் அள்ளுவதுவரை கவனிச்சுக்கிட்டாங்க ரெண்டு மருமகள்களும். எனக்கு எப்போதாவது ஜெயம் மீது கடும் கோபம் வந்தா, அம்மாவை அவங்க கவனிச்சுக்கிட்ட பரிவை நினைச்சுக்குவேன். கோபத்தின் வீரியம் குறைஞ்சு, கொஞ்ச நேரத்தில் காணாமல் போயிடும்” என்கிறார் லேனா.

என்ன பார்க்கிறீங்க... நம்ம வீட்டு ஒற்றுமைக்கும் இதுதாங்க பார்முலா!

-பிரேமா நாராயணன்

படங்கள் : க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism