Published:Updated:

ஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்! - பவித்ரா

ஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்! - பவித்ரா
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்! - பவித்ரா

புதிய முயற்சி

ஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்! - பவித்ரா

புதிய முயற்சி

Published:Updated:
ஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்! - பவித்ரா
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்! - பவித்ரா

``டீச்சர் வேலைக்குப் போயிருக்கலாம். 4 மணிக்கு வீட்டுக்கு வந்துடலாம். வாரத்துல ரெண்டு நாள் லீவு. வருஷத்துல ஒன்றரை மாசம் லீவுன்னு சொகுசு வாழ்க்கை அவங்களுடையது’’ - வேலைக்குப் போகிற பலரும் இப்படிப் புலம்புவது இயல்பு. என்ன செய்வது? எப்போதுமே அக்கரை பச்சையாகத்தான் தெரியும்.

``நிஜத்துல, ஆசிரியர்களின் வாழ்க்கை அப்படி சொகுசா இல்லைங்கிறதுதான் நிஜம்’’  - கவலையுடன் சொல்கிறார் பவித்ரா.

`ஃபின்வீகோ’ (Finwego) என்ற பெயரில் இவர் தொடங்கியிருக்கும் ஸ்டார்ட் அப் பிசினஸ், முழுக்க முழுக்க ஆசிரியர் நலனுக் கானது. பொருளாதாரத் தேவையில் இருக்கும் ஆசிரியர்களுக்கு, குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் இவரது இந்த முயற்சி, இந்தியாவிலேயே  முதன்முறை.

``கடலூர்ல பிறந்து வளர்ந்தேன். சின்ன வயசுல, எனக்கு ஸ்கூலுக்குப் போகவே பிடிக்காது. அந்த வயசுல பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது தெரிஞ்சு, எங்க அம்மாவே ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சாங்க. `ஹேப்பி ஸ்கூலிங்’தான் அதன் கான்செப்ட். அதாவது, டீச்சரைப் பார்த்து குழந்தைங்க பயப்படக் கூடாது. ஸ்கூலுக்குப் போறதை வெறுப்பான விஷயமா பார்க்கக் கூடாது. அதே மாதிரி டீச்சர்ஸும் சந்தோஷமான மனநிலையோடு வேலைபார்க்கணும். அவங்க அப்படி இருந்தால்தான் ஸ்டூடன்ட்ஸும் சந்தோஷமா இருப்பாங்க. படிப்பு விஷயத்துல டென்ஷனோ, அழுத்தமோ இருக்கக் கூடாது. இப்படி எல்லா விஷயங்களையும் பார்த்துப் பார்த்து அம்மா அந்த ஸ்கூலை டிசைன் பண்ணினாங்க.  ரெண்டாவதுலேருந்து ப்ளஸ் டூ வரைக்கும் நான் அந்த ஸ்கூல்லதான் படிச்சேன்.

ஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்! - பவித்ரா

டெல்லி  லேடி  ஸ்ரீராம் காலேஜ்ல எக்னாமிக்ஸ் படிச்சிட்டு, சென்னை வந்தேன். எங்க ஸ்கூல்லயே வேலைக்குச் சேர்ந்து வகுப்புகள் எடுத்திட்டிருந்தேன். நான் படிச்ச காலத்துல ஸ்கூல் சின்னதா இருந்தது. ஹேப்பி ஸ்கூலிங் முறையை முழுமையா செயல்படுத்த முடிஞ்சது. அத்தனை வருஷங்கள்ல ஸ்கூல் வளர்ந்திருந்தது. ஆனா, அந்த செட்டப்பில் அதே கான்செப்டைத் தொடர்ந்து பண்றதுல சிக்கல் இருந்தது. அத்தனை நாள்களா ஸ்டூடன்ட்டாவே ஸ்கூலைப் பார்த்த நான், அங்கே வேலைக்குச் சேர்ந்த பிறகு டீச்சர்ஸ் தரப்புலேயிருந்து பார்க்க ஆரம்பிச்சேன். எனக்குப் பாடம் எடுத்த டீச்சர்ஸோடு சேர்ந்து வேலை பார்க்கிற வாய்ப்பும், பெற்றோர்களைச் சந்திக்கிற வாய்ப்பும் கிடைச்சது.

ஒரு குழந்தையை சந்தோஷமா ஸ்கூலுக்கு வரவழைக்கவும், சந்தோஷமா படிக்கவைக்கவும் தூண்டும் விஷயம் என்னன்னு யோசிச்சேன். வகுப்பறையா, சூழலா, ஏசி மாதிரியான வசதிகளா... இப்படி எனக்கு நானே நிறைய கேள்விகளைக் கேட்டுக்கிட்டே இருந்தேன். இந்த எல்லா விஷயங்களையும் சரியா பண்ணினாலும் ஆசிரியர்களின் மனநிலை தான் அன்னிக்கு வகுப்பில் பிரதிபலிக்கும்னு புரிஞ்சுக்கிட்டேன். அவங்க கோபமா வகுப்புக்குள்ளே போனாங்கன்னா, பசங்க அடிவாங்குவாங்க. அவங்க சந்தோஷமா இருந்தாங்கன்னா அன்னிக்கு வகுப்பும் கலகலப்பா இருக்கும்.

டீச்சர்ஸ் காலையில 7.30 மணிக்கு ஸ்கூலுக்கு வந்துட்டு, மாலை 4.30 மணி வரை இருக்காங்க. ஆசிரியர்களோடு நெருங்கி வேலைபார்க்க ஆரம்பிச்ச பிறகுதான் அவங்களுடைய சம்பளம் எவ்வளவு, அவங்களுடைய வாழ்க்கை முறை எப்படியிருக்குனு தெரியவந்தது. பள்ளிக்கூட நிர்வாகத்தால் குறிப்பிட்ட தொகைக்குமேல் சம்பளம் கொடுக்க முடியறதில்லை.

ஒவ்வொரு டீச்சருக்கும் ஒவ்வொருவிதமான தேவையும் பிரச்னையும் இருந்தது. புதுசா பி.எட் முடிச்சிட்டு வந்தவங்களுக்கு அவங்களுடைய கல்யாணத்தைப் பற்றிய கவலை பெருசா இருந்தது. கல்யாணம் ஆனவங்களுக்கு குழந்தைகளுடைய படிப்பு பற்றிய கவலை. ஓரளவு பெரிய பிள்ளைகள் இருக்கும் ஆசிரியர்களுக்கு, பசங்களுடைய உயர்கல்வி தொடர்பான கவலைகள். `என் பையன் வெளிநாட்டுல படிக்கணும்னு ஆசைப்படுறான். அதுக்கு எவ்வளவு செலவாகும், எங்கே கடன் வாங்கலாம்?’னு கேட்பாங்க. எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் பொருளாதாரத் தேவை இருக்கிறது புரிஞ்சது. கல்வியின் மகத்துவம் தெரிந்தவங்க ஆசிரியர்கள். ஆனா, அவங்க தன் பிள்ளைங்களுக்கே ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாத நிலையில இருக்காங்கங்கிறது எவ்வளவு பெரிய சோகம்!

வீட்டுல அப்படியொரு பிரச்னையை வெச்சுக்கிட்டு அந்த மனநிலையில வகுப்பறைக்கு வரும் ஆசிரியரால், மற்ற பிள்ளைங்களுக்கு எப்படி மகிழ்ச்சியான சூழலை உருவாக்க முடியும்?

ஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்! - பவித்ரா

இந்தச் சூழல்லதான், ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் எம்.எட் படிக்கப் போனேன். கூடவே அமெரிக்காவில் ஆசிரியர்களின் நிலை எப்படியிருக்குன்னும் தகவல் திரட்டினேன். அங்கேயும் ஐ.டி கம்பெனியில வேலை பார்க்கிறவங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சம்பளத்துல பத்து மடங்கு  வித்தியாசம் இருந்தது.

ஒரு டீச்சர், தன் சம்பளத்தைவெச்சு குடும்பத்தைச் சமாளிக்க முடியாம, ரத்ததானம் பண்ணி சம்பாதிக்கிறதா `டைம்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை படிச்சேன். இந்தப் பிரச்னைக்கு ஏதாவது செய்தே தீரணும்கிற வெறி அதிகமாச்சு. எம்.எட் படிக்கும்போது அங்கே `ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்' மூலமா `ஃபின்வீகோ’ ஸ்டார்ட் அப் கம்பெனியை ஆரம்பிச்சேன். படிப்பின் கடைசி வருஷம் யுனிவர்சிட்டி சார்பா நடந்த போட்டியில என்னுடைய ஃபின்வீகோ ஜெயிச்சது. 25,000 டாலர்களைக் கொடுத்து, `இந்தியாவில் உங்க முயற்சிக்கான முதலீடா யூஸ் பண்ணிக்கோங்க’னு சொன்னாங்க. கடந்த வருஷம்  இந்தியாவில் ஃபின்வீகோவை ஆரம்பிச்சேன்’’ - நீண்ட அறிமுகத்துடன் நிறுத்துகிறார் பவித்ரா.

இவரது இந்த நிறுவனம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஏரியாக்களில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களைத் தேடிச் சென்று கடன் வழங்குகிறது.

``இதுவரைக்கும் 150 பள்ளிக்கூடங்களில் 4,000 ஆசிரியர்களைச் சந்திச்சிருக்கோம். 300 ஆசிரியர்களுக்கு லோன் கொடுத்திருக்கோம். 20,000 ரூபாய் முதல் ஒரு லட்சம்  ரூபாய் வரை கடன் கொடுக்கிறோம். வீட்டு ரிப்பேர், எம்.எட் படிப்பு, குழந்தைங்களுக்கான படிப்புச் செலவு - இந்த மூன்று தேவைகள்தாம் பெரும்பாலான ஆசிரியர்களுக்குப் பிரதானமா இருக்கு.

`டீச்சர்ஸ்ல நிறைய பேர் அஞ்சு வட்டிக்கும், பத்து வட்டிக்கும் கடன் வாங்குறாங்க. நகையை அடகுவைக்கிறவங்களும் இருக்காங்க. ஆசிரியர்களுக்கு வங்கிக்கடன் வாங்குவதிலும் நடைமுறைச் சிக்கல் இருக்கு. 18,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கினாத்தான் லோன் தருவாங்க. பல தனியார் பள்ளிக்கூட ஆசிரியர்களின் சம்பளம் அதிகபட்சமா 12,000 ரூபாய். ஸ்கூல் நிர்வாகத்தாலும் கடன் கொடுக்க முடியாது.  அமெரிக்காவில் ஆர்மியில் வேலை பார்த்தவங்களுக்கு எங்கே போனாலும் டிஸ்கவுன்ட் கிடைக்கும். தேசத்தைப் பாதுகாக்கிறதால அந்தச் சலுகை. அப்படிப் பார்த்தா டீச்சர்ஸ் நம்ம எதிர்காலத்தைப் பாதுகாக்கிறவங்க. அவங்களுக்கு ஏதாவது செய்யணும்கிற எண்ணம்தான் இதன் முக்கிய நோக்கம்’’ - நல்ல முயற்சியின் பின்னணி சொல்லும் பவித்ரா, கடன் கொடுக்கும் முன் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் தேர்வுசெய்வதிலும் சில விதிமுறைகள் வைத்திருக்கிறார்.

``ஸ்கூல் ஆரம்பிக்கப்பட்டு மூணு வருஷங்கள் ஆகியிருக்கணும். சிபிஎஸ்இ அல்லது ஸ்டேட் போர்டு அங்கீகாரம் இருக்கணும். பேங்க்ல சம்பளம் கிரெடிட் பண்ற ஸ்கூலா இருக்கணும். ஆன்லைனிலேயே எங்களுக்கு லோன் அப்ளை பண்ணலாம். ஆதார் கார்டு, பான் கார்டு, பேங்க் ஸ்டேட்மென்ட், ஸ்கூல் ஐடி கார்டு... இவ்வளவுதான் தேவை, டாக்குமென்ட்டுகளையும் ஆன்லைன் மூலமாகவோ, வாட்ஸ் அப்பிலோ அனுப்பலாம். அதையெல்லாம் சரிபார்த்துட்டு, சம்பந்தப்பட்ட டீச்சரின் வீட்டுக்குப் போய் கையெழுத்து வாங்கிட்டு வருவாங்க. அடுத்த நாளே அவங்க அக்கவுன்ட்டுக்கு பணம் போயிடும்.

குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்களுக்கு பெரும்பாலும் எந்த வங்கியும் கடன் கொடுக்கிறதில்லை. அந்த நிலையில் அவங்க கடன் பெற `நான் பேங்க்கிங் ஃபைனான்ஷியல்' நிறுவனங்களையே நாட வேண்டியிருக்கு. அவை 33 சதவிகிதத்துக்கும் அதிகமான வட்டி வாங்குகின்றன. ஃபின்வீகோவில் வட்டிவிகிதம் 24.5 சதவிகிதம்.

அடுத்தகட்டமா ஸ்கூல் நிர்வாகத்துக்கும் பெற்றோர்களுக்கும் இந்தக் கடன் வசதிகளை நீட்டிக்கிற ஐடியா இருக்கு. இப்போ தமிழ்நாட்டில் மட்டும் பண்ணிட்டிருக்கோம். இதை தேசிய அளவில் கொண்டுபோகணும். டீச்சரா வேலை பார்க்கிற யாரும் பணத் தேவைக்காகக் கஷ்டப்படக் கூடாது. டீச்சரா இருக்கிறது எவ்வளவு பெருமையான விஷயம்னு உணரணும். இன்னிக்கு நகரத்துல உள்ள பள்ளிக்கூடத்துக்குப் போய், எத்தனை பேருக்கு டீச்சராகணும்னு ஆசைன்னு கேட்டா, ஒரு கை உயர்ந்தாலே பெரிய விஷயம். அந்தத் தொழிலுக்கான மதிப்பு அப்படித்தான் இருக்கு.  அந்த மதிப்பைத் திரும்ப மீட்டெடுக்கிறதுக்கான ஒரு வழியாத்தான் இந்த முயற்சியைப் பார்க்கிறேன்.’’

அடுத்த தலைமுறை ஆசிரியர்களுக்கு நம்பிக்கையளிக்கிறது பவித்ராவின் முயற்சி!

-ஆர்.வைதேகி

படம்: சொ.பாலசுப்ரமணியன்