Published:Updated:

முதல் பெண்கள்! - முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண்... நாடாளுமன்ற உறுப்பினர் - அக்கம்மா தேவி

முதல் பெண்கள்! - முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண்... நாடாளுமன்ற உறுப்பினர் - அக்கம்மா தேவி
பிரீமியம் ஸ்டோரி
முதல் பெண்கள்! - முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண்... நாடாளுமன்ற உறுப்பினர் - அக்கம்மா தேவி

ஹம்சத்வனி, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

முதல் பெண்கள்! - முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண்... நாடாளுமன்ற உறுப்பினர் - அக்கம்மா தேவி

ஹம்சத்வனி, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
முதல் பெண்கள்! - முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண்... நாடாளுமன்ற உறுப்பினர் - அக்கம்மா தேவி
பிரீமியம் ஸ்டோரி
முதல் பெண்கள்! - முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண்... நாடாளுமன்ற உறுப்பினர் - அக்கம்மா தேவி

“இப்போது ஆண்களைவிட சமூகப் பணிகளில் சிறப்பாகப் பங்கேற்கும் பெண்களை நாம் காண்கிறோம். இனிவரும் காலங்களில், அரசியலில் பெண்களை இன்னும் அதிகம் பார்க்கலாம்!” - அக்கம்மா தேவி, 2011.

1918 செப்டம்பர் 5 அன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள பியர்ஹட்டி கிராமத்தில் எம்.கே.மோதா கவுடர், சுப்பி ஆகிய படுகர் இனத் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் அக்கம்மா தேவி. உதகைப் பகுதியின் புகழ்பெற்ற பாஸ்டர் நிறுவனத்தில் கம்பெளண்டராகப் பணியாற்றினார் மோதா கவுடர். குன்னூரின் செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் சேர்க்கப்பட்டார் சிறுமி அக்கம்மா. பள்ளிக்கு அருகில் இருந்ததால், பள்ளி செல்ல வசதியாக பாஸ்டர் நிறுவன குவாட்டர்ஸில், தந்தை மோதா கவுடரின் அரவணைப்பில் வளர்ந்தனர் மகள்கள் இருவரும். ஆண் பிள்ளைகளோ, தாய் சுப்பியின் கவனிப்பில் கிராமத்தில் வசித்தனர். படுகர் இன மக்களில் அப்போது பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பியவர்கள் மிகச் சிலரே.

வீட்டிலிருந்து 8 கிலோமீட்டர்  தொலைவில் இருந்த பள்ளிக்கு தன் மூத்த மகள் அக்கம்மா வின் கைகளைப் பிடித்துக்கொண்டு, இளைய மகளை தோளில் தூக்கிக் கொண்டு மழையிலும், கடும் குளிரிலும் நடந்து செல்வார் மோதா கவுடர். கேம்பிரிட்ஜ் இளையோர் தேர்வு மற்றும் ஆங்கிலோ - இந்திய உயர்நிலைப் பள்ளி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்தார் அக்கம்மா. தெரிந்தவர் உதவியுடன், மதர் சுப்பீரியரைச் சந்தித்து, எர்ணாகுளத்தில் உள்ள தூய தெரசாள் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரப் படிப்பில் மகளைச் சேர்த்தார் மோதா கவுடர். கல்லூரி வாசல் மிதித்த முதல் படுகர் இனப் பெண் அக்கம்மா!

1938-ம் ஆண்டு, படுகர் இனப் பெண்களில் முதல் பட்டதாரியாக அக்கம்மா தேவி தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார். தன் வாழ்நாள் பணி நிறைவேறியதாக மகிழ்ச்சிகொண்டார் தந்தை.

சிறுமி அக்கம்மாவின் மனதில் விடுதலை வேட்கையைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது மகாத்மா காந்தியின் குன்னூர் வருகை. சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கிய அக்கம்மா, 1942-ம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்கினார். `வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றார். நீலகிரி மாவட்டப் பெண்கள் - குறிப்பாக மலைவாழ் இனப்பெண்களின் நலனில் அக்கறைசெலுத்தினார்.

முதல் பெண்கள்! - முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண்... நாடாளுமன்ற உறுப்பினர் - அக்கம்மா தேவி

1943  ஜூன் 16 அன்று, உபதலை கிராமத்தைச் சேர்ந்த முதல் படுகர் இன சட்டமன்ற உறுப்பினரான ஆரிகவுடரின் தம்பியான ஹெச்.பி.ஜோகி கவுடருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார் அக்கம்மா. நாடு விடுதலையடையும் வரை நடைபெற்ற போராட்டங்களில் அவ்வப்போது பங்கேற்று வந்தார். தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய பெண்களுக்கு, ஆண்களுக்கு சமமான கூலி வாங்கித்தருவது, மகளிர் நலத் திட்டங்கள்குறித்த சரியான தெளிவை மலைவாழ் பெண்களுக்கு அறிவுறுத்துவது என்று முழு நேர சமூகப் பணியாற்றினார்.

1954-ம் ஆண்டு மத்திய சமூக நல வாரியத்தின் மக்கள் நல நீட்டிப்பு திட்டத்தை இந்தியா முழுக்கப் பரவலாக்கினார் துர்காபாய் தேஷ்முக். நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த களப்பணியாற்றினார் அக்கம்மா.

1956-ம் ஆண்டு, முதல் 1961-ம் ஆண்டு வரை மாநில மக்கள் நல ஆலோசனை வாரியத்தில் உறுப்பினராகச் செயல்பட்டார். அனைத்து இந்திய மகளிர் கான்ஃபரன்ஸ் அமைப்பிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

200 பேர் கலந்துகொண்ட அதன் சந்திப்பை குன்னூர் நகரில் தனியொருவராக நின்று நடத்திக்காட்டினார். மகளிர் சேமிப்புத் திட்டத்தின் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்கான மாவட்ட கமிட்டியின் தலைவராகவும் செயலாற்றினார். உதகை அனைத்து இந்திய மகளிர் கான்ஃபரன்ஸ் அமைப்பின் தலைவராகவும் சமூகப் பணியாற்றினார். கணவர் ஜோகி கவுடரின் தந்தை ராவ் பகதூர் பெல்லி கவுடர் பெயரில் உபதலையில் தொடங்கப்பட்ட உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் இயங்கினார்.

தொடர்ச்சியாக மகளிர் நலன் மற்றும் மலைவாழ் மக்கள் நலனுக்காகக் குரல் கொடுத்த வரின் புகழ், அன்றைய மாநில முதல்வர் காமராஜரை எட்டியது. 1962-ம் ஆண்டு, ஜோகி கவுடர் - அக்கம்மா தம்பதியை சென்னைக்கு வரச்சொல்லி அழைப்பு அனுப்பினார் காமராஜர். சந்திக்கச் சென்றவர்களுக்கு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நீலகிரி தொகுதியில் நிற்குமாறு அக்கம்மாவிடம் வலியுறுத்தினார். ஆங்கிலம் நன்றாக பேசத் தெரிந்தவர், பெண்மணி, மலைவாழ் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்று பல காரணங்களை காமராஜர் அடுக்க, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக 1962-ம் ஆண்டு களமிறங்கினார் அக்கம்மா. எதிர்த்துப் போட்டியிட்ட மாதண்ணனைவிட இரண்டு மடங்கு வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

மலைவாழ் படுகர் இனத்தின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கத் தொடங்கியது. சரோஜினி நாயுடு, நேரு ஆகியோரின் நேரடி அறிமுகமும் நட்பும் கிடைக்க, நேருவின் அன்புக்குரியவர் ஆனார். துரதிர்ஷ்டவசமாக 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். அதன்பின்னும் தன் சமூகப் பணிகளைத் தொடர்ந்தார். பூத்தையல் செய்வதில் பெரும் ஈடுபாடுகொண்டவர் அக்கம்மா.

அனைத்திந்திய மகளிர் கான்ஃபரன்ஸ் புனே நகரில் நடத்திய பிளாட்டினம் ஜூப்ளி நினைவுக் கூட்டத்தில், 50 ஆண்டுக்கால பொதுச்சேவையைப் பாராட்டி அக்கம்மாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தன் 94-வது வயதில், 2012  நவம்பர் 23 அன்று காலமானார்.