Published:Updated:

மைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு! - மோகனா - சப்ரீனா

மைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு! - மோகனா - சப்ரீனா
பிரீமியம் ஸ்டோரி
மைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு! - மோகனா - சப்ரீனா

உலகம் சுற்றும் தோழிகள்

மைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு! - மோகனா - சப்ரீனா

உலகம் சுற்றும் தோழிகள்

Published:Updated:
மைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு! - மோகனா - சப்ரீனா
பிரீமியம் ஸ்டோரி
மைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு! - மோகனா - சப்ரீனா

பெண்கள் உள்ளூரில் அவுட்டிங் செல்வதற்கே ஆயிரத்து எட்டு பிளான்கள் போடவேண்டியிருக்கும். கடைசியில் அது ஃபிளாப் ஆன வரலாறுதான் மிஞ்சும். ஆனால், வருடத்துக்கு நான்கு ஃபாரின் டூர், 10 ஸ்டேட் டூர் என ‘லைஃப் கோல்’ வைத்து அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகிறார்கள், சப்ரீனா மற்றும் மோகனா. சென்னையைச் சேர்ந்த தோழிகளான இவர்கள், தங்களின் ‘ஆன் ரோடு அட்வென்ச்சர்’ வாழ்க்கையைப் பகிர்கிறார்கள்!

“நாங்க ரெண்டு பேரும் 11 வருஷமா பெஸ்ட்டீஸ். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சிக்கு சேர்ந்தப்போ தோழிகள் ஆனோம். எங்க நினைவுகளில் ததும்பத் ததும்ப சேகரிச்சு வெச்சிருக்கிறதெல்லாம் பயண அனுபவங்கள்தாம்’’ என்கிற சப்ரீனாவைத் தொடர்கிறார் மோகனா.

மைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு! - மோகனா - சப்ரீனா

“காலேஜ்ல படிக்கும்போது வீட்டில் கொடுக்குற பாக்கெட் மணியை சேர்த்து வெப்போம். 30 ரூபாய் சேர்ந்துட்டா போதும், பஸ்ல சென்னையைச் சுத்திப் பார்க்கக் கிளம்பிடுவோம். சம்பாதிக்க ஆரம்பிச்சதும் வெளிநாடு டூரெல்லாம் போகணும்னு ஆசை ஆசையா பேசிக்குவோம். படிப்பு முடிந்ததும் நான் எம்.பி.ஏ படிக்க சிங்கப்பூர் போயிட்டேன். சப்ரீனாவுக்கு துபாயில் வேலை கிடைச்சது. 2014-ம் வருஷம், ரெண்டு பேரும் சேர்ந்தாற்போல இந்தியா வந்தோம். ‘எங்கேயாச்சும் டூர் போகலாமா’ன்னு சப்ரீனா கேட்க, இமயமலை டிரெக்கிங்கை டிக் அடிச்சோம். ‘ரெண்டு பேரும் தனியா போறீங்களா... வேண்டாம்’னு வீட்டுல பதற, அடம்பிடிச்சு சம்மதம் வாங்கினோம். எந்தத் திட்டமிடலும் இல்லாம, டெல்லிக்கு டிக்கெட் புக் பண்ணிட்டுக் கிளம்பிட்டோம். டெல்லியிலிருந்து வாடகை கார் எடுத்துட்டு செல்ஃப் டிரைவ் பண்ணி மணாலி போனோம். பனியும் குளிரும், ரெண்டு பொண்ணுங்க தனியா உலகை ரசிக்கிற சுதந்திரமும்னு, வாழ்க்கையில் அதுவரை அனுபவிக்காத ஒரு சந்தோஷமா அது இருந்தது. ஒரு டிரெக்கிங் குரூப்கூட சேர்ந்து இமயமலைக்குக் கிளம்பினப்போ, ஒரு சம்பவம் நடந்துச்சு’’ என மோகனா சிரிக்க, “அந்த திகில் நிமிடத்தை நான் சொல்றேன்’’ எனத் தொடர்ந்தார் சப்ரீனா.

“மணாலியிலிருந்து டிரெக்கிங் போகும் வழியில், ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மிஸ் பண்ணிட்டோம். டிரெக்கிங் கைடுகிட்ட நான் யோசனை கேட்க, ‘மலையில ஏறிட்டே இருங்க... வழியில எங்கயாச்சும்தான் நிப்பாங்க’ன்னு சொன்னார். அதே மாதிரி நானும் ஏற, மோகனா அங்க என்னைத் தேடி அழுதுட்டு நின்னுட்டிருந்தா. மைனஸ் 8 டிகிரி குளிரில், அந்தக் கண்ணீரின் கதகதப்பு என்னையும் அவளையும் இன்னும் பிணைச்சது; எங்களை டிராவலோடும் பிணைச்சது. அந்தப் பயணம் முடிந்து வந்ததும், என்னென்ன தவறுகள் செய்தோம்னு லிஸ்ட் எடுத்து, இனி அதைத் திருத்திக்கணும்னு கத்துக்கிட்டோம்’’ என்று சப்ரீனா நிறுத்த... தொடர்கிறார் மோகனா.

``2015-ம் ஆண்டு நான் சிங்கப்பூர்ல படிப்பை முடிச்சதும் சென்னையில் பிசினஸ் தொடங்கிட்டேன். அந்த வருஷம், ரெண்டு வெளிநாட்டு டூருக்கு பிளான் பண்ணி ஸ்ரீலங்கா, பிலிப்பைன்ஸ் போனோம்’’  எனும் மோகனா, தங்கள் வானவில் பயணங்களின் நிறங்கள் பற்றிச் சொன்னார்.

‘`எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கேயிருக்கிற வரலாற்றுப் பின்னணியுள்ள இடங்களுக்குப் போயிடுவோம். முதல்லயே இங்கே தங்கறோம், இங்கெல்லாம் போறோம்னு பிளான் பண்ணிக்கிட்டா பயணத்தை என்ஜாய் செய்ய முடியாது. போட்டு வெச்சிருக்கிற பிளானை நோக்கித்தான் ஓடுற மாதிரி இருக்கும். அதனால நாங்க ப்ரீ-பிளான் செய்றதில்லை. பயணங்களிலிருக்கும் சின்னச்சின்ன அழகையும் எங்களால ரசிக்க முடியிறதுக்கு அதுதான் காரணம்’’ என்று டிப்ஸ் தருகிறார் மோகனா.

“திருமணத்துக்கு அப்புறம் குடும்பம், கமிட்மென்ட்ஸ்னு வந்தாலும் அதையெல்லாம் சமாளிச்சு, நாங்க எங்க பயணங்களைத் தொடர்றோம். திருமணத்துக்கு முன்பே, எங்களுடைய டிராவல் காதல் பத்தி என் கணவர்கிட்ட சொல்லிட்டேன். ‘அடுத்த முறை நானும் உங்களோட வர்றேன்’னு சொன்னார். ஆனா, அப்போ சப்ரீனாவுக்கு திருமணம் ஆகலை என்பதால, `ஃபேமிலி டிரிப் இப்போ வேண்டாம்'னு தவிர்த்துட்டு, எப்பவும்போல நாங்க ரெண்டு பேரும் மட்டும் வெளிநாடுகளுக்குப் பறந்துட்டிருந்தோம். ஏழு வருஷங்களில் தாய்லாந்து, மாலத்தீவு, இந்தோனேசியா, துபாய், சிங்கப்பூர், கத்தார், கம்போடியா, ஸ்ரீலங்கா, பிலிப்பைன்ஸ்னு நிறைய நாடுகளை சுத்திப் பார்த்தாச்சு. இந்தியாவுக்குள்ளேயும் பல ரோடுகளையும் அளந்தாச்சு. அதில் மறக்க முடியாதது, வயநாடு டிரிப்” என்கிற மோகனா, தங்களின் டிராவல் புகைப்படங்களைக் காட்டுகிறார். மிரட்டல்!

“எனக்குத் திருமணமான மறுநாளே, எங்க கணவர்களுடன் சேர்ந்து மாலத்தீவு டிரிப்புக்குக் கிளம்பினோம். ஃபேமிலியா நாங்க போன அந்த முதல் டிரிப், ரொம்ப ஜாலியா இருந்துச்சு. ஆனா, அதையே வழக்கமாக்கிக் காம, இப்பவும் நானும் மோகனாவும் தனியா போற பயணங்கள்தாம் அதிகம். அதை எங்க கணவர்களும் புரிஞ்சுக்கிறாங்க. திருமணத்துக்கு அப்புறமும் ரெண்டு பேரும் வருஷத்துக்கு நாலு வெளிநாட்டு டூர் போயிட்டிருக்கோம். ஒரு டூர் போயிட்டு வந்ததும், அடுத்த டூருக்காக ஒரு தொகையைச் சேமிக்க ஆரம்பிச்சிடுவோம். அடுத்த பிளான், யூரோப். ‘தொடரும்’ போட்டுக்கோங்க” என்று கெத்தாகச் சொல்கிறார் சப்ரீனா.

பயணங்கள் முடிவதில்லை!

-சு.சூர்யா கோமதி