Published:Updated:

சிரிப்புக்குப் பின்னாடி நிறைய நிறைய கண்ணீர் இருக்கு - அர்ச்சனா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிரிப்புக்குப் பின்னாடி நிறைய நிறைய கண்ணீர் இருக்கு - அர்ச்சனா
சிரிப்புக்குப் பின்னாடி நிறைய நிறைய கண்ணீர் இருக்கு - அர்ச்சனா

அம்மா ஓர் அதிசயம்

பிரீமியம் ஸ்டோரி

``என் கணவர் வினீத், டிஃபென்ஸ்ல இருக்கார்.  புல்வாமா தாக்குதல் நடந்தபோது, `கடவுளே என் கணவர் இறந்து போனவங்கள்ல ஒருத்தரா இருக்கக் கூடாது’னுதான் வேண்டிக்கத் தோணுச்சு. அது தப்பு, சுயநலம்னு தெரியும். ஆனாலும், அதுதான் மனித இயல்பு. தொடர்ந்து நாலஞ்சு நாள்கள் அவர் குரலைக் கேட்கலைனா கலங்கிப் போயிடுவேன். ‘கராச்சி பார்டர்ல இருக்கேன்’னு சொல்வார். ‘ஆப்பிரிக்கா போறேன். 35 நாள் கழிச்சுக் கூப்பிடறேன்’னு சொல்வார்.  ‘ஏர் கிராஃப்ட் ஒன்று கடலில் விழுந்தது. அப்போது ஒரு கப்பல் அடிபட்டது’னு அப்பதான் நியூஸ் வரும். ஒருத்தரை இழந்துடுவோமோங்கிற பயமே இவ்வளவு பீதிக்குள்ளாக்கும்னா, காதலிச்சு, ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவர்தான் வாழ்க்கைனு  நம்பிக்கிட்டிருந்த ஒரு பெண்ணுக்கு அந்த அன்புக்குரியவரை இழந்துட்டு நிக்கறது எப்படியிருக்கும்? எங்கம்மா நின்னாங்க. ஆனாலும், அந்த 43 வயசுல தன் ரெண்டு பெண் குழந்தைகள்தான் உலகம், அவங்களுடைய எதிர்காலம்தான் லட்சியம்னு மனசைத் தேத்திக்கிட்டு எழுந்தாங்க. அதுல அம்மா ஜெயிச்சிட்டாங்க. அம்மா இல்லாம எனக்கிந்த வாழ்க்கை, அடையாளம், அங்கீகாரம் எதுவுமே சாத்தியமாகியிருக்காது. இந்த உலகத்துலயே நான் பார்த்து வியந்த, இன்னும் வியக்கிற பெண், எங்கம்மா’’ - காஜலைக் கரைக்கும் கண்ணீரை அடக்க முடியாமல் பேச ஆரம்பிக்கிறார் சின்னத்திரை பிரபலம் அர்ச்சனா. 

சிரிப்புக்குப் பின்னாடி நிறைய நிறைய கண்ணீர் இருக்கு - அர்ச்சனா

``2000 செப்டம்பர் 21... ஸ்கூல்ல அடுத்தடுத்து நாலு பேச்சுப்போட்டி... எல்லாத்துலயும் ஜெயிச்சிட்டேன். ஒரு சைனீஸ் ரெஸ்டாரன்ட்டுல கிஃப்ட் கூப்பன் கொடுத்திருந்தாங்க. எங்க குடும்பத்துல எல்லாருக்கும் சைனீஸ் ஃபுட் பிடிக்கும். அப்பாவுக்கு தினமும் அவருடைய ஃபேவரைட் கூல் டிரிங்க் குடிச்சாகணும். ‘நான் போய் வாங்கிட்டு வந்துடறேன். அப்புறம் ரெஸ்டாரன்ட் போகலாம்’னு சொல்லிட்டு என் தங்கையைக் கூட்டிக்கிட்டு பைக்குல கிளம்பினார். கூல் டிரிங்க் வாங்கி, வண்டியில வெச்சவர்,  ஏதோ ஒரு காரணத்துக்காக யூடர்ன் எடுத்து, வண்டியை ஸ்டாண்டு போட்டு நிறுத்தியிருக்கார். நடு ரோடு... என் தங்கை மடியில் சரிஞ்சவர் அப்படியே இறந்துட்டார். அவருக்கு ஏதோ உள்ளுணர்வு சொல்லியிருக்குபோல...  பைக் ஓட்டிக்கிட்டிருக்கும்போது விழுந்தா, குழந்தைக்கும் அடிபடுமேனு யோசிச்சுதான் உயிரைப் பிடிச்சுக்கிட்டு, வண்டியை நிறுத்தி உயிரைவிட்டிருக்கார். அப்பாவுக்கு ஆஸ்துமா உண்டு. என்ன நடந்ததுன்னு தெரியாம என் தங்கை, அப்பாவோட முதுகைத் தடவிக்கொடுத்துட்டே இருந் திருக்கா. அக்கம்பக்கத்துல இருந்தவங்க பார்த்துட்டு அப்பாவைப் பக்கத்துல இருந்த ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க. எங்களுக்குத் தகவல் வந்தது. 18 வயசுல நானும், 16 வயசுல என் தங்கையும் என்ன செய்யறதுன்னே தெரியாம நின்னுட்டிருந்தோம். அப்பா வேலை பார்த்த பேங்க்ல அம்மா ரிசப்ஷனிஸ்ட்டா இருந்தாங்க. ரெண்டு பேரும் லவ் மேரேஜ் பண்ணினவங்க. வாழ்க்கை திடீர்னு அப்படியே நின்னுட்டிருக்கு. அடுத்து என்னன்னு யோசிச்சா ஒண்ணும் தெரியலை’’ - மீண்டும் பொங்குகிறது அழுகை. அருகிலிருக்கும் அம்மாவின் கண்களும் குளமாவது கண்டு, அவரை சிறிது நேரத்துக்கு அங்கே இருக்க வேண்டாமென அனுப்பிவிட்டுத் தொடர்கிறார் அர்ச்சனா.

‘`அப்பா பஞ்சாபி. அம்மா தமிழச்சி. பஞ்சாபி முறைப்படி அப்பாவின் இறுதிச் சடங்குகளை முடிச்சோம். அப்பா இறந்ததும் எங்களுக்கு குறைஞ்சது ஆறு லட்ச ரூபாய் வரும், அதை எஃப்.டி-யில போட்டுட்டு ரெண்டு பொண்ணுங்களையும் படிக்கவெச்சு, கல்யாணம் பண்ணிடலாம்னு அம்மா நினைச்சிட்டிருந்தாங்க. பேங்க்லேருந்து போன் வந்தது. அப்பாவுக்கு வெறும் 25,000 ரூபாய்தான் வரும்னு சொன்னாங்க. கிரெடிட் கார்டு ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி முடிச்சுவைக்கும்னு அந்த நிமிஷம்தான் புரிஞ்சது. கிட்டத்தட்ட 13 லட்ச ரூபாய் கடன்வெச்சிட்டுப் போயிருந்தார் அப்பா. ஜெயா டி.வி-யில நான் இங்கிலீஷ் நியூஸ் ரீடராகியிருந்த டைம் அது. மாசம் 250 ரூபாய் சம்பளம். அம்மாவுக்கு 6,000 ரூபாய் சம்பளம். கிரெடிட் கார்டு கடனை வசூல் பண்ண அப்பல்லாம் வாட்டசாட்டமான ஆட்கள் வீட்டு வாசல்ல வந்து நிப்பாங்க.

அப்பா இருந்தவரை மூணு பெட்ரூம் அபார்ட்மென்ட்ல நல்ல வாழ்க்கை வாழ்ந்திட்டிருந் தோம். சொந்தக்காரங்க ‘இதுக்கு மேல எதுக்கு இவ்வளவு பெரிய வீடு’ன்னு கேட்டாங்க. ‘பொண் ணுங்களுக்கு சாதாரண குடும்பத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்துடு’ன்னாங்க. நாம இங்கேயே சரிஞ்சு விழுந்துடக் கூடாதுன்னு முடிவெடுத்தோம். 

காலேஜ்லேருந்து என்னையும் என் தங்கையையும் அம்மா கையைப் பிடிச்சுக்கிட்டுக் கூட்டிட்டு வருவாங்க. ஒருமுறை ஒருத்தன் பின்னால வந்து தொட்டான். வேற யாராவதா இருந்தா அழுது, குற்ற உணர்வுக்குள்ளே போயிருப்பாங்க. எங்கம்மா அந்த இடத்துலேயே செருப்பைக் கழற்றி அவனை அடிச்சு ஒருவழியாக்கிட்டாங்க. அவ்வளவு தைரியசாலியான அம்மா, அப்பா தவறினதும் நாலே நாள்களில் தன் சோகத்தை மறைச்சுக்கிட்டு, `இனி என் பிள்ளைங்களுக்கு நான் மட்டும்தான்'னு எழுந்து நின்னாங்க.

அப்பா போனதும் எனக்கு பேங்க்ல டீ, காபி கொடுக்கிற வேலை கிடைச்சது. அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்க. என்னை எம்.ஏ கம்யூனிகேஷனும், தங்கையை எம்.பி.ஏ-வும் படிக்கவெச்சாங்க. மீடியாவில் எனக்குக் கிடைச்ச கொஞ்ச சம்பளம், அம்மாவின் சம்பளம், அம்மாவின் நகைகளையும் பாத்திரங்களையும் வித்த பணம்னு எல்லாத்தையும் வெச்சு அப்பா வெச்சுட்டுப் போன கடன்களைக் கொஞ்சம் கொஞ்சமா அடைக்க ஆரம்பிச்சோம். தமிழ்லேருந்து இங்கிலீஷ், இங்கிலீஷ்லேருந்து தமிழுக்கு டாகுமென்ட்டுகளை ட்ரான்ஸ்லேட் பண்ற வாய்ப்பும் வந்தது. ஒரு டாகுமென்ட்டுக்கு 30 ரூபாய் தருவாங்க. அந்த வேலையையும் அம்மா செய்தாங்க. அப்பதான் எனக்கு ‘இளமை புதுமை’ வாய்ப்பு வந்தது.

வினீத், என் ஃபிரெண்டோட அண்ணன். அப்பா இறந்த பிறகு எங்களைப் பார்க்க ரெண்டு பேரும் வந்தாங்க. முதல் சந்திப்பிலேயே வினீத்துக்கு என்னைப் பிடிச்சுப் போச்சாம். அடுத்த நாள் காலையில தன் சம்பள சர்ட்டிஃபிகேட்டோடு வந்து, அம்மாகிட்ட என்னைப் பெண் கேட்டார். 19 வயசுலேயே எனக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சு. ‘இளமை புதுமை’ பீக்ல இருந்த டைம்... ‘கரியர் சூசைடு பண்றே... இப்பபோய் யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா’னு பலரும் திட்டினாங்க. சினிமா வாய்ப்புகளும் எக்கச்சக்கமா வந்திட்டிருந்த டைம்... அம்மா சீக்கிரமே என் கல்யாணத்தையும் முடிச்சிட்டாங்க. வினீத் தங்கமானவர். ஆனாலும், கல்யாணத்துக்குப் பிறகு எல்லாம் மாறிடுமோன்னு எனக்குள்ள ஒரு பயம் இருந்தது. ஆனா, அப்படி எதுவும் நடக்கலை. இந்த வாழ்க்கை எனக்கு சரியாதான் இருக்கும்னு அம்மா எடுத்த அந்த முடிவு, எங்க எல்லாருடைய வாழ்க்கையிலும் ஆகச் சிறந்த முடிவு.

2017, ஆகஸ்ட் மாசம் சென்னையில இருக்கிற ஸ்டார் ஹோட்டலில் அம்மாவுக்கு 60-வது பர்த் டே பார்ட்டியை பிரமாண்டமா கொண்டாடினோம். அம்மாவுக்கு ஊஞ்சல் பிடிக்கும். பர்த் டே அன்னிக்கு அவங்களை ஊஞ்சலில் உட்காரவெச்சோம். ‘நறுமுகையே’ பாட்டுல பானுப்ரியா ஓடிப்போய் குளத்துக்கு மேல இருக்குற ஊஞ்சலில் உட்கார்றது மாதிரியே உட்காரணும்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. அதனால புது வீடு வாங்கும்போதே குளம் வெச்சு, அதுக்கு மேல ஊஞ்சல் செட் பண்ணி, அம்மா உட்கார முடியுமானு பார்த்துதான் ஓகே பண்ணினேன். பொதுவா குழந்தைகளின் கனவுகளை பெற்றோர் நிறைவேற்றுவாங்க. நான் எங்கம்மாவின் கனவுகளை நனவாக்கிட்டிருக்கேன்.

என் குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடியே, ‘நீ நிச்சயம் குழந்தையை ஒழுங்கா பார்த்துக்க மாட்டே’ன்னு சொல்லி வேலையிலேருந்து ரிட்டையர்டு ஆகிட்டாங்க. என் குழந்தை ஸாராவுக்கு எட்டு வயசிருந்தபோது ஓர் ஆபரேஷன் பண்ணினாங்க. அன்னிக்குத்தான் எனக்கு வாழ்க்கையில அன்புக்குரியவங்களை இழந்துட்டா என்னாவேன்கிற பயம் வந்தது. 

சிங்கிள் மதரா வாழ்க்கையை நடத்தறது மிகப்பெரிய சவால். கணவன் மனைவிக்குள்ளே சண்டை வந்து, ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்கன்னா அது வேற விஷயம். ஆனா, காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அந்நியோன்யமா வாழ்ந்துக்கிட்டிருந்தபோது திடீர்னு அந்த அந்நியோன்யமே சூன்யமாகிப் போனால்... ஒரு போட்டோவை மட்டும் பார்த்துக்கிட்டு வாழறது எவ்வளவு கொடுமை?

20 வருஷங்களான பிறகும் எதுக்கெடுத்தாலும் அப்பாவைத்தான் நினைப்பாங்க அம்மா. அப்பாவை எங்களால திரும்பக் கூட்டிட்டு வர முடியாது. எங்களால முடிஞ்சதெல்லாம் எப்போதும் ஏதாவது காமெடி பண்ணிட்டே இருப்போம்.

எங்கப்பாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவர் இருக்கிற இடத்துல மக்கள் சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. அப்பா போகும்போது ஒரு சொத்தா தன் நகைச்சுவை உணர்வை எனக்குக் கொடுத்துட்டுப் போயிட்டார்போல. மீடியாவில் மத்தவங்களைச் சிரிக்கவைக்கிற நாங்களும் கிட்டத்தட்ட கோமாளிகள்தான். அவங்க சிவப்பு கலர் மூக்கு வெச்சிருக்காங்க. நாங்க வைக்கிறதில்லை... அவ்வளவுதான் வித்தியாசம். எங்களுடைய சிரிப்புக்குப் பின்னாடி நிறைய நிறைய கண்ணீர் இருக்கு’’ - கண்ணீர் மறைத்துச் சிரிப்பவர், அம்மாவுக்காகத் திட்டமிட்டிருக்கும் ஆசையைச் சொல்கிறார்.

‘`அம்மாவுக்கு உலக அதிசயங்கள் ஏழையும் காட்டணும்..!’’ - அப்பாவின் ஆசீர்வாதம் அதையும் செய்யவைக்கும் அர்ச்சனா!

-ஆர்.வைதேகி,  படங்கள்: ப.சரவணகுமார்

சிரிப்புக்குப் பின்னாடி நிறைய நிறைய கண்ணீர் இருக்கு - அர்ச்சனா

ர்ச்சனாவின் தலைக்குப் பின்னால் எப்போதும் ஒளிவட்டம் சுற்றியதில்லை. அவரை அப்படி வளர்த்ததில் அவரின் அம்மா நிர்மலாவின் பங்கு மிகப் பெரியது.

‘`எனக்குக் கடவுள் நம்பிக்கை ரொம்ப அதிகம். எந்தப் பிரச்னைக்கும் பயப்பட மாட்டேன். கடவுள்கிட்ட சொல்லிடுவேன். என் கணவர் போனதும், அவர் இருந்திருந்தா எப்படிப் படிக்க வெச்சிருப்பாரோ அதே மாதிரி ரெண்டு பொண்ணுங்களையும்  படிக்கவைக்கணும்னு ஆசைப்பட்டேன். அர்ச்சனா குழந்தையா இருந்தபோது ராஜா முத்தையா ஹாலைக் கடக்கும்போதெல்லாம், ‘அம்மா இந்த மண்டபத்துலதான் எனக்குக் கல்யாணம் பண்ணணும்’னு சொல்வா. அவ ஆசைப்படியே அதே ஹாலில் கல்யாணம் பண்ணினேன். தன் தங்கைக்கும் அதே இடத்துல இன்னும் பிரமாண்டமா கல்யாணம் பண்ணிவெச்சா அர்ச்சனா. எவ்வளவு பணம் வந்தாலும் சரி, எவ்வளவு புகழின் உச்சத்துக்குப் போனாலும் கால் தரையில படற மாதிரி இருக்கணும்கிறதுதான் ரெண்டு பேருக்கும் என் அட்வைஸ். ரெண்டு பேரும் அப்படித்தான் இருக்காங்க. ‘நிம்மியோட பொண்ணு’னு சொன்ன காலம் மாறி, ‘அர்ச்சனாவோட அம்மா’னு அடையாளப்படுத்தப்படற டைம் வந்தது. இப்போ அதுவும் மாறி, ‘ஸாராவோட பாட்டி’னு என்னை அடையாளப்படுத்தறாங்க. இதைவிடப் பெருமை வேற என்ன இருக்கப் போகுது? `நீங்க நினைச்சதைவிடவும் என் கடமைகளைச் சிறப்பா செய்து முடிச்சிட்டேன்’னு நாளைக்கு மேலபோய் அவர்கிட்ட என்னால பெருமையா சொல்ல முடியும்ல...’’ - அன்பும் ஆனந்தமும் கலந்த கண்ணீரில் சிரிக்கிறார் நிர்மலா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு