Published:Updated:

உணவு வீணாவதைத் தடுப்போம்... பசிப் பிணி போக்குவோம்! - பாலக் - நாயிஷா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உணவு வீணாவதைத் தடுப்போம்... பசிப் பிணி போக்குவோம்! - பாலக் - நாயிஷா
உணவு வீணாவதைத் தடுப்போம்... பசிப் பிணி போக்குவோம்! - பாலக் - நாயிஷா

அசத்தல் அம்மா-மகள்

பிரீமியம் ஸ்டோரி

‘`தினமும் ஒருவேளை சாப்பாடுகூடக் கிடைக்காம எத்தனையோ பேர் பசியில் கஷ்டப்படுறாங்க. ஆனா, நாம தேவைக்கு அதிகமா சமைச்சோ, அளவுக்கு அதிகமா ஆர்டர் பண்ணியோ சாப்பாட்டைக் குப்பைத்தொட்டியில் போடுறோம். ஒருநாள்ல, தமிழ்நாடு முழுக்க வீணாக்கப்படுற உணவைச் சேகரிச்சா, ஒரு லட்சம் பேருக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுக்க முடியும் தெரியுமா?” - வயதுக்கும் வார்த்தைகளுக்கும் சம்பந்தம் இல்லாமல்தான் இருக்கிறது 12 வயது சிறுமி நாயிஷா பேசும்போது. இவரும் இவரின் அம்மா பாலக்கும் சேர்ந்து, வீணாகும் உணவுகளைச் சேகரித்து ஆதரவற்றவர்களுக்கு வழங்கும் சேவையை ஐந்து ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர்.

“எல்லா புகழும் என் மகளுக்கே” என்று ஆரம்பித்தார் பாலக். “நாயிஷாவின் ரெண்டு வயசிலிருந்தே, அவளாகச் சாப்பிடப் பழக்கினோம். தட்டில் வைக்கும் சாப்பாட்டை வீணாக்காம எல்லாத்தையும் சாப்பிடணும்னு சொல்லிக்கொடுப்போம். அவளும் அழகா எல்லாத்தையும் சாப்பிட்டுடுவா. ஸ்கூலிலும் அப்படியே சாப்பிட்டதோடு, ஃபிரெண்ட்ஸ்கிட்டயும் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணக்கூடாதுனு சொல்லி சாப்பிடவெச்சிருக்கா. இதை அவங்க மிஸ் அடிக்கடி என்கிட்ட சொல்லி ஆச்சர்யப்படுவாங்க. மூணு வயசிலேயே இந்த விஷயத்தில் இப்படிப் பொறுப்பா இருக்காளேனு பிரமிப்பா இருக்கும். வளர வளர, வீட்டில் ஏதாச்சும் சாப்பாடு மீதமானால் அதை எடுத்துட்டுப் போய் தெருமுனையில் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்துட்டு வருவா. பாக்கெட் மணியைச் சேமித்து பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி, பசியோடு இருக்கிறவங்களுக்குக் கொடுப்பா. விடுமுறை நாள்களில் அவ்வப்போது நாங்களே வீட்டில் உணவு செய்து ஆதரவற்றவர்களுக்குக் கொடுத்துட்டு வருவோம்.

உணவு வீணாவதைத் தடுப்போம்... பசிப் பிணி போக்குவோம்! - பாலக் - நாயிஷா

நாயிஷாவின் ஏழு வயதில், எங்க குடும்ப நண்பர் வீட்டின் பிறந்தநாள் விழாவுக்குப் போயிருந்தோம். அங்கே நிறைய சாப்பாடு மீந்துபோக, எல்லோரும் அதை வருத்தமா சொல்லிப் பேசிட்டிருந்தாங்க. உடனே நாயிஷா, ‘இதை பார்சல் பண்ணி, எங்க ஸ்கூலுக்குப் போகும் வழியில் பிளாட்பாரத்தில் தங்கியிருக்கிறவங்களுக்குக் கொடுக்கலாம்’னு சொன்னா. அங்கேயிருந்த எல்லோரும் நாயிஷாவை ஆச்சர்யமாகப் பார்த்துப் பாராட்டினாங்க. அந்தப் பாராட்டுதான் அவளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போச்சு’’ என்கிற தன் அம்மாவைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்  நாயிஷா.

“ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் வீணான சாப்பாட்டைச் சேகரிச்சு 10 பேருக்குச் சாப்பாடு கொடுக்க முடியும்னா, இதே மாதிரி ஒவ்வொரு வீட்டிலும் வீணாகும் உணவைச் சேகரிச்சா எத்தனை பேர் பசியில்லாமல் தூங்குவாங்கனு தோணுச்சு. அதை அம்மாகிட்ட சொன்னேன். ‘நம்மளால எத்தனை வீட்டில் உணவு சேகரிக்க முடியும்?’னு கேட்டாங்க. ‘நமக்குத் தெரிந்த வீடுகள்ல மட்டுமாவது வீணாகும் உணவுகளைச் சேகரிக்க ஆரம்பிப்போம்’னு சொன்னேன். அப்பாவும் அம்மாவும் அதில் எனக்கு உதவியா இருக்க முன்வந்தாங்க. எங்க அப்பார்ட்மென்ட்டில் இருந்தே தொடங்கியது ‘நோ ஃபுட் வேஸ்டேஜ்’ என்ற எங்களுடைய பணி” என்று நாயிஷா சொல்ல, பெருமையுடன் அவரைப் பார்த்துப் பூரிக்கிறார் பாலக்.

உணவு வீணாவதைத் தடுப்போம்... பசிப் பிணி போக்குவோம்! - பாலக் - நாயிஷா

‘`எங்களுக்குத் தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும் என் போன் நம்பரைக் கொடுத்து, அவங்க வீட்டில் உணவு வீணாகும்போது கூப்பிடச்  சொல்லியிருந்தோம். தினமும் சுமார் 10 போன் கால் வர ஆரம்பிச்சது. அடுத்தவங்க வீடுகளில் உணவு கலெக்ட் பண்றதெல்லாம் சரியா  வருமான்னு கேட்டவங்ககூட, எங்ககூட சேர்ந்து வேலைபார்க்க ஆரம்பிச்சாங்க. விளையாட்டா ஆரம்பிச்ச விஷயம், தினமும் 40 பேருக்கு ஒருவேளை உணவை வழங்குற அளவுக்கு வளர்ந்துச்சு. சில நேரங்களில், பிறந்தநாள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மிஞ்சிய உணவை எடுத்துட்டுப் போக முடியுமானு கேட்டு போன் வரும்போது, அது கொஞ்சம் பெரிய வேலை என்பதால என் கணவரும் உதவிக்கு வந்துடுவார்.

எங்களுடைய சர்வீஸைப் பார்த்த நண்பர் ஒருவர், ‘ஃபீடிங் இந்தியா’ அமைப்பைப் பற்றிச் சொன்னார். நாங்க சின்ன அளவில் பண்ணிட்டிருந்த இதே விஷயத்தை, நிறைய வாலன்டியர்களைச் சேர்த்து அந்த அமைப்பு பெரியளவில் பண்ணிட்டிருந்தது. அந்த அமைப்பில் நானும் நாயிஷாவும் இணைந்தோம். அன்றாடம் நிறைய பேர் அந்த அமைப்புக்கு போன் பண்ணுவாங்க. அவங்க சொல்லும் முகவரிக்கு அருகில் வசிக்கும் எந்த வாலன்டியரால் உணவை கலெக்ட் பண்ணிக்க முடியுமோ, அவங்க அங்க போய் உணவை எடுத்துட்டுவந்து தேவைப்படுறவங்களுக்குக் கொண்டுபோய் கொடுத்துடுவாங்க. இப்படி, எங்களுக்கு இன்னும் நிறைய பேருக்கு உதவும் வாய்ப்பு கிடைச்சது. நாயிஷாவோட இந்த முயற்சியைப் பார்த்து சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன. நிறைய பள்ளிகளிலிருந்து ஃபுட் வேஸ்டேஜ் பற்றிய வகுப்புகள் எடுக்க நாயிஷாவையும் என்னையும் அழைக்க ஆரம்பிச்சாங்க. மத்தவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமா, அதில் நாங்க ஆர்வமா பங்கெடுக்க ஆரம்பிச்சோம்’’ என்கிறவர்,‘`ஒரு வருஷத்துக்கு முன் என் கணவரின் வேலை காரணமா துபாயில் செட்டில் ஆகிட்டோம். துபாயில் நாயிஷா படிக்கும் பள்ளியிலும் ஃபுட் வேஸ்டேஜ் பற்றி கலந்துரையாடல்கள் நடத்தி, உணவு வீணாவதைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வாங்கினா. இப்போ பள்ளியிலேயே  ஒரு குழு அமைத்து அதன் மூலம் நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட்டிருக்கா. துபாயிலும் வீணாகும் உணவுகளைச் சேகரிச்சுத் தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பதைத் தொடர்ந்து செய்துட்டிருக்கோம்’’ என்று பாலக் சொல்ல, இறுதியாக அம்மாவும் மகளும் சேர்ந்து சொல்கிறார்கள் ஸ்லோகன்... ‘`பசிப் பிணி போக்குவோம்!”

-சு.சூர்யா கோமதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு