Published:Updated:

நேசக்காரிகள்: நாங்கள் ஒருநாள் நாடு திரும்புவோம்!

நேசக்காரிகள்: நாங்கள் ஒருநாள் நாடு திரும்புவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நேசக்காரிகள்: நாங்கள் ஒருநாள் நாடு திரும்புவோம்!

- ஈரம் மிகுந்த ஈழத்துப் பெண் தேன்மொழி

“நான் இலங்கையிலிருந்து அகதியாக இந்தியாவுக்கு வந்தபோது 19 வயது. அங்கிருந்து வந்து 28 வருஷங்களாச்சு’' எனப் பெருமூச்சுவிடும் தேன்மொழியின் மூச்சுக் காற்றில் உறைந்திருக்கிறது மீட்டெடுக்க முடியாத பல கனவுகளின் தேக்கம்.

யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள வேலனை கிராமத்தைச் சேர்ந்தவர், ஈழத்துப் பெண் தேன்மொழி. இலங்கையில் இனக்கலவரம் போராக உருமாற்றம் அடைந்த பிறகு, அங்கிருந்து அகதியாக இந்தியாவுக்கு மக்களோடு மக்களாக வந்தார். அந்நிய நிலத்தில் அடுத்த வேளை உணவுக்காக முகாமில் வரிசையில் காத்திருந்த துயரத்துடன்தான் தொடங்கியிருக்கிறது தேன்மொழியின் அகதி வாழ்க்கை.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் இந்தியாவுக்கு வந்திருந்த நேரம் அது. அந்தப் பெருங்கூட்டத்தை நிர்வகிக்க அப்போதைய இந்திய அரசிடம் போதுமான வசதிகள் இல்லை. தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு உதவின. அப்படியொரு நிறுவனம்தான் தேன்மொழியை, ‘முகாமிலுள்ள உங்கள் மக்களின் நலவாழ்வுக்கு நீ எங்களுடன் இணைந்து பணியாற்றலாம்’ என அழைத்தது.

நேசக்காரிகள்: நாங்கள் ஒருநாள் நாடு திரும்புவோம்!

19 வயது இளம்பெண் தேன்மொழிக்கு மேற்படிப்பின் மீதான ஆசை அப்படியே இருந்தது. ஆனால், வாழ்க்கை என்னவாகப் போகிறது என்பதைச் சரியாக விளங்கிக்கொள்ள இயலாத ஒரு தத்தளிப்பு நிலை. என்ன முடிவு எடுப்பது என்கிற தெளிவும் இல்லை.  இருப்பினும், தன்னுடைய மக்களுக்கு உதவுவதற்குத்தானே அழைக்கப்படுகிறோம் என்கிற காரணத்தால், அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டு 28 ஆண்டுகள் நிறைந்துவிட்டன.

தமிழகத்திலுள்ள 107 முகாம்களில்  இப்போது 65,000 பேர் இருக்கிறார்கள். அந்த மக்களுக்கு இன்றும் அதே அர்ப்பணிப்புடன்  செயல்படுகிறார் தேன்மொழி. குறிப்பாக, முகாம்களிலுள்ள பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, தேன்மொழியின் சிந்தனையும் கால்களும் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கின்றன 

அகதிப் பெண்களுக்குத் தொழிற்பயிற்சி  அளிப்பது, வங்கிக் கடன் பெற்றுத்தருவது, சுயஉதவிக் குழுக்கள் உருவாக்குவது எனப் பல பணிகள். இவை தவிர,  தங்கள் உறவுகளைத் திரும்பப் பார்க்க வேண்டுமென்கிற ஏக்கமும் பரிதவிப்பும் மிகுதியாகி, மனரீதியாகப் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆற்றுப்படுத்துதல் பயிற்சி, லீடர்ஷிப் ட்ரெய்னிங், எய்ட்ஸ் விழிப்பு உணர்வு எனப் பெண்கள் சார்ந்து இவர் செய்யும் பங்களிப்புகள் அதிகம். இதன்மூலம் பயன்பெற்ற பெண்கள், இன்று நம்பிக்கை மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தன்னுடைய 28 ஆண்டுக்கால சேவையை ஈழ மக்களுக்காக மட்டுமே என குறுக்கிக் கொள்ளாமல், தமிழக மக்கள் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீரழிவுகளால் பாதிக்கப்பட்டபோது, களத்துக்கே சென்று சேவை செய்திருக்கிறார் தேன்மொழி. 

“இந்த மக்கள்தானே இத்தனை வருடம் நம்மை அரவணைத்துக் காப்பாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்னை வரும்போது நாம் எப்படி பார்த்தும் பார்க்காததுபோல இருக்க முடியும்? நாடு வேறாக இருக்கலாம். நம்முடைய இனம் ஒன்றுதானே” எனச் சிரிக்கிறார்.

`நீங்கள் மீண்டும் நாட்டுக்குப் போக விரும்புகிறீர்களா?' எனக் கேட்டதும், கண்ணீ ரும் சிரிப்பும் ஒருசேர தேன்மொழியின் குரல் தடுமாற்றம் அடைகிறது.

“இளம் வயதில் நான் எங்க கிராமத்து ஆற்றங்கரையோரத்துல இருக்கிற ஒரு தேவாலயத்துக்கு தினமும் போவேன். மெழுகுவத்திகளுக்கு இடையிலேயே கைகளைக் கூப்பி, எப்பவும் எல்லோரும் நல்லா இருக்கணும்னு வேண்டுவேன். இப்போதும் என் பிரார்த்தனை அதுதான். அதை அந்தத் தேவாலயத்துக்கு மீண்டும் ஒருமுறை போய் வேண்டிக்கணும்னு ஆசையா இருக்கு. நாங்கள் எல்லோரும் எங்கள் நாடு திரும்புவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்கிறவரிடம் மறுவார்த்தை பேச நம்மிடம் சொற்களில்லை.

-தமிழ்ப்பிரபா,  படம் : ப.சரவணகுமார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz