Published:Updated:

ஸ்ஸ்ஸ்...கூல் மம்மி...கூல் !

படங்கள்: எம்.குணசீலன், பா.சரவணகுமார், செ.பாலநாகஅபிஷேக்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

ப்ளஸ் டூ-வுக்கான பொதுத்தேர்வுகள், மார்ச் 8-ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4-ம் தேதியும் ஆரம்பிக்கவிருக்கின்றன. மாணவர்களுடன் சேர்ந்து அவர்கள் பெற்றோர்களும் பதற்றம் சூழ இருக்கிறார்கள். காரணம், பிள்ளைகள் மீதான அவர்களின் எதிர்பார்ப்புதான்.

நன்றாகப் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம், 'ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்கிடுவாளா..?’ என பிரஷர் ஏற்றுவது, சுமாராகப் படிக்கும் குழந்தையின் பெற்றோரிடம், '50% மார்க்காச்சும் வாங்கிடுவான்ல..?’ என குத்திக்காட்டுவது... என்று சுற்றங்கள் வேறு பதற்றத்தைக் கூட்டும்.  இதனால் பல வீடுகளிலும் பிள்ளைகளை முந்திக் கொண்டு, அம்மாக்களுக்கு எக்ஸாம் ஜுரம் ஆரம்பித்தாகிவிட்டது.

''என் பொண்ணு பூஜா டென்த் எழுதப்போறா. டைம் டேபிள் வந்ததில் இருந்து எனக்குத் தூக்கம் போச்சு. பூஜா 70% வாங்குவானு எதிர்பார்க்கிறேன். ஆனா, மேத்ஸ்தான் எப்பவும் அவளுக்குத் தகராறு. 'கணக்குல அவ வீக் தானே..?’, 'மேத்ஸ்ல மார்க் குறைஞ்சா ப்ளஸ் ஒன்-ல பயோ மேத்ஸ் குரூப் எடுக்க முடியாதே..?’, 'மேத்ஸ் வரலைனா எப்படி இன்ஜினீயரிங் சேர்றது?’னு பத்தாவது எழுதப் போற என் பொண்ணுக்கு, காலேஜ் அட்மிஷன் வரை கவலைப்படுற சுற்றங்களோட கேள்விகளை எதிர்கொள்றதுதான் பெரிய வேதனையா இருக்கு'' என்கிறார் கோவை கீதா.

ஸ்ஸ்ஸ்...கூல் மம்மி...கூல் !

தஞ்சாவூரைச் சேர்ந்த அனுராதா... ''நிவேதா, எங்களுக்கு ஒரே பொண்ணு. அவ ப்ளஸ் டூ வந்ததில் இருந்து இந்த மூணு வருஷமா நான் கல்யாணம், காதுகுத்துனு ஒரு விசேஷத்துக்கும் போகல. இப்படி அவளுக்காக பார்த்துப் பார்த்துச் செய்றதால, பிரதிபலனா அவ நல்ல மார்க் வாங்கணும்னு எதிர்பார்க்கிறது தவிர்க்க முடியாததாகிடுது. அவளோட ஃபியூச்சருக்கான முக்கியமான அசஸ்மென்ட் இந்த மார்க்குங்கறதால, ரொம்ப டென்ஷனா இருக்கு!'' என்று படபடக்கிறார்!

''என் பொண்ணு ஐஸ்வர்யா டென்த் படிக்கிறா. இப்போ 80% வாங்கிட்டு இருக்கா. இருந்தாலும், சமச்சீர் கல்வி வந்திருக்கறதால... கலக்கமா இருக்கு. இப்போ ரிவிஷன் டெஸ்ட் நடக்குது. ஒரு மார்க் அவ விட்டுட்டு வந்தாலும் எனக்கு டென்ஷன் ஏறுது. பரீட்சை முடிஞ்சாதான், என்னால ரிலாக்ஸ் ஆக முடியும்!'' என்று பெருமூச்சு விடுகிறார் சென்னையைச் சேர்ந்த கீதா ஸ்ரீனிவாசன்.

ஸ்ஸ்ஸ்...கூல் மம்மி...கூல் !

அம்மாக்களின் இந்த படபடப்பு பற்றி பேசும் தஞ்சாவூர், 'மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன்’ பள்ளியின் பிரின்சிபால் வரதராஜன், ''முதல்ல குழந்தைகளோட ஆரோக்கியத்துல கவனம் செலுத்தணும். தேர்வு நேரம் வெயில் காலமா இருக்கும்ங்கிறதால நிறைய தண்ணீர் குடிக்க வைக்கணும். 'இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு’னு டென்ஷன் ஆக்காம, 'இன்னிக்கு நீ ஆரம்பிச்சாக்கூட முடிச்சுடலாம்... இன்னும் ஒரு மாசம் டைம் இருக்கு’னு நம்பிக்கையாப் பேசுங்க. அதுக்காக, 'நீ எதுக்கும் கவலைப்படாதே’னு ஓவர் நம்பிக்கை கொடுக்கக்கூடாது.

'அவன் எவ்வளவு நேரம் படிக்கிறான் பாரு’னு மத்த குழந்தைகளோட ஒப்பீடு செய்றது வேண்டாம். இந்தப் பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தா, நாளை என்னவெல்லாம் பலன்கள் காத்திருக்குனு அன்பா, பக்குவமா சொல்லலாம். இதைச் செய்றதுதான், உங்க மகன், மகள் சிறப்பாக தேர்வெழுதறதுக்கான வழி'' என்று ஆலோசனைகளை வழங்கினார்.

எப்படிப் பார்த்தாலும், 'உனக்கு வேற வேலையே இல்லை' என்று ஒட்டுமொத்த தேர்வு டென்ஷனையும்  குழந்தைகள் காட்டுவது... அம்மாவிடமாகத்தான் இருக்கிறது! இந்தச் சூழலை அழகாக கையாள வழிகாட்டுகிறார்... உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

''பொதுவா, எல்லா அம்மாக்களும் செய்யும் ஒரே தப்பு, பிள்ளைகளின் எக்ஸாம் ரிசல்ட்டை தங்களின் சமுதாய மதிப்பை நிர்ணயிக்கும் காரணியா பார்ப்பதுதான். 'நம்ம சொந்தக்காரங்கள்ல எல்லா பசங்களும் 400-க்கு மேலதான்... குறைச்சு எடுத்து  கேவலப்படுத்திடாதே’, 'எல்லார்கிட்டயும் மானம் போயிடாம நல்ல மார்க்கா எடு’ இப்படியான பிரஷரை திணிக்காதீர்கள்.

ஸ்ஸ்ஸ்...கூல் மம்மி...கூல் !

தேர்வு நெருங்குகிறது என்பதற்காக எந்நேரமும் உங்கள் குழந்தை அருகிலேயே உட்கார்ந்து 'படி படி’ என்று படுத்தாதீர்கள். 'உன் பக்கத்துல அம்மா உட்கார்றது உனக்கு கம்ஃபர்டபிளா இருந்ததுனா இருக்கேன்... இல்லைனா நீயா படிச்சுக்குறியா..?’ என்று கேட்டு, அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே அருகில் இருங்கள்.

படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க... கேபிள் கனெக்ஷனை கட் செய்வது, வீட்டில் இன்வர்டர் பொருத்துவது என வசதிகளை செய்து கொடுங்கள். அதற்காக அவர்கள், 'நீ இதை செஞ்சாதான் நான் படிப்பேன்’ என்று பிடிவாதம் பிடிப்பது மாதிரியான சூழ்நிலையை உருவாக்காதீர்கள்.

'ஏண்டா ரிவிஷன்ல மார்க் குறைஞ்சிருக்கு..?’ என்று அதட்டாமல், 'உன்னால முடியும்ங்கறதாலதான், உனக்கு அந்தத் திறமை இருக்குங்கிறதாலதான் அம்மா ஸ்ட்ரெஸ் பண்றேன். இன்னும் கொஞ்சம் தீவிரமா முயற்சி பண்ணு’ என்று நம்பிக்கை கொடுங்கள். நெகட்டிவ்வாக பேசுபவர்களை பிள்ளைகளிடம் அணுகவிடாதீர்கள். குழந்தைக்கான ஒரு நல்ல கல்விச் சூழலை, அம்மாவைவிட சிறப்பாக வேறு யாராலும் ஏற்படுத்தித் தர முடியாது. வாழ்த்துக்கள்!'' என்றார் பிருந்தா.

கூல் மம்மீஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு