Published:Updated:

பெண்களுக்காக பேசும் பெண் பேனாக்கள்!

ஆர்.ஷஃபி முன்னாபடங்கள்: ஷிவ்குமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் வாரப் பத்திரிகை... 'கபர் லெஹரியா’! 'செய்தி அலைகள்’ என்பது தமிழில் இதன் பொருள். இந்த ஆக்கபூர்வமான முயற்சி வெளிவந்திருப்பது, பெண்களுக்கான பிரச்னைகளும், வறட்சியும் பெருகிக்கிடக்கும் புண்தில்கண்ட் பகுதியில் இருந்துதான்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய, மிகவும் பின்தங்கிய பகுதிதான் புண்தில்கண்ட். பெரும்பான்மையாக வாழும் தலித் மற்றும் பழங்குடிகளுக்கு வறட்சியும், வறுமையும் பழகிப்போன ஒன்று. அவர்களின் முக்கிய அங்கமான பெண்களுக்கோ, பல்வேறு பிரச்னைகள். அதையெல்லாம் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்துக்கு கொண்டு செல்ல, இங்குள்ள ஆண் பத்திரிகையாளர்களாலும் முடிவதில்லை. காரணம்... சம்பல் கொள்ளைக்காரர்கள் மற்றும் உயர்குடி சமூகத்தினரின் பிடியில் அந்தக் கிராமங்கள் இருந்ததுதான். இத்தனைக்கும், பாதுகாப்புக்காக இடுப்பில் லைசென்சுடன் கூடிய கைத்துப்பாக்கிகளுடன் பணியாற்றுபவர்கள்தான் அந்த நிருபர்கள்!

இப்படிப்பட்ட சூழலில், இக்கிராமப் பெண்களுக்காக நகரப் பெண்களால் 2002 ஜூன் மாதத்தில் பிறந்து, வளர்ந்து வருகிறது... 'கபர் லெஹரியா’. இந்தப் பத்திரிகையின் நிறுவனர்கள் தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஏழு பெண்கள்தான். தற்போது, 18 பேர் பணியாற்றுகிறார்கள். நிருபர்களாக, புகைப்படக்காரர்களாக இருக்கும் நஜ்மின், கீதாசுனிதா, பிரமிளா, அனார்கலியில் இருந்து ஆபீஸ் கேர்ளாக இருக்கும் கிருஷ்ணா வரை அனைவரும் பெண்களே! சுமார் 200 கி.மீ. தொலைவிலுள்ள அலகாபாத் சென்று, பிரதிகளை அச்சடித்து வருபவரும் பெண்தான். கடைகள் மற்றும் கிராமங்களில் விற்பனை செய்வதும்...  இதே பெண்கள் குழுதான்!

பெண்களுக்காக பேசும் பெண் பேனாக்கள்!

பத்திரிகையின் ஆசிரியர், 39 வயது மீரா. ''இந்தப் பகுதியில் உள்ள பெண்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க ஆட்கள் கிடையாது. அதைப் பற்றி தோழிகளுடன் இணைந்து நடத்திய ஆலோசனையின் வெளிப்பாடுதான், இந்த பத்திரிகை. பெண்களை மட்டும் வைத்து பெண்களுக்காக நடத்த வேண்டும் என்பதும் இதன் முக்கிய அம்சம். இதற்காக டெல்லியில் உள்ள 'சுவாமித்துவ நிரந்தர் டிரஸ்ட்’ எனும் சமூக சேவை அமைப்பை அணுகினோம். அது நிதி உதவிக்கு உறுதியளித்தது.

சித்திரகுட் மாவட்டத்தில் இருந்து மாத பத்திரிகையாக வெளியான முதல் பிரதிக்கு நல்ல வரவேற்பு. அடுத்த மாதமே மாதம் இரு முறையாக்கினோம். 2008 முதல், எட்டுப் பக்கங்களில் வார பத்திரிகையாக, பாந்தா பதிப்பும் வெளியாகிறது. எங்கள் பத்திரிகையின் எழுத்துக்கள் இந்தி வரிவடிவங்களில் இருக்கின்றன. ஆனால், அதன் மொழியானது கிராமத்தினர் பேசும் புண்தேலி மொழியில்தான் இருக்கிறது!'' என பெருமிதம் கொள்ளும் மீரா, 57 கி.மீ தொலைவில்உள்ள மொவ் எனும் இடத்திலிருந்து வாரம் இரு முறை வந்து பத்திரிகை பணியை முடிக்கிறார்.

ஆசிரியர் குழுவில் இருக்கும் அனைவரும் வெறும் பள்ளிக் கல்வியை மட்டும் முடித்து, பத்திரிகைக்கு வந்தவர்கள். பணிக்கு வந்த பின் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தபாலில் படித்து பட்டம் பெற்று வருகிறார்கள்.

''சம்பல் கொள்ளைக்காரர்கள் மற்றும் உயர்குடி சமூகத்தினரின் பிடியில் இருக்கும் புண்தில்கண்ட் கிராமங்களில் புகுந்து செய்தி திரட்டுவது சுலபமல்ல. ஒருமுறை, மாணிக்பூரின் ஒரு கிராமத்தில், ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வரதட்சணையாகக் கேட்டு நடந்த கொடுமையை செய்தியாக்க முனைந்தபோது, என்னைத் தாக்க முயன்றனர். பயந்து கொண்டு உள்ளூர் நிருபர்கள் இந்தச் செய்தியை வெளியிடாமல் தவிர்த்துவிட்டனர். ஆனால் நாங்கள், 'டி.வி வேண்டுமா... இல்லை மனைவியா?’ என முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டோம். இது ஒரு பொய் செய்தி என மாப்பிள்ளை வீட்டார் தொடுத்த வழக்கையும் நாங்கள் சந்தித்தோம். ஆரம்பத்தில் எங்கள் செய்திகள் மீது சற்று அசட்டையாக இருந்த அரசு நிர்வாகம், இப்போது எல்லாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது!'' என   தன் அனுபவம் சொன்னார் தலைமை நிருபர் சாந்தி தேவி.  

கிராமத்துச் செய்திகள்; மாவட்ட, மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு செய்திகள்; இன வேறுபாடுகளைச் சாடும் கட்டுரைகள்; சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வு தேடும் கட்டுரைகள்; ஊழல்கள்... பொழுதுபோக்கு அம்சங்கள்... என விரிகிறது பத்திரிகை.

பெண்களுக்காக பேசும் பெண் பேனாக்கள்!

''ஆரம்பத்தில் ஆயிரம் பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்ட 'கபர் லெஹரியா’, இப்போது 12,000 பிரதிகளாக உயர்ந்துள்ளது. எங்களது பெண்கள் மற்றும் கிராமப்புற சேவைகளைப் பாராட்டியும், பெண்களே நடத்தும் பத்திரிகை என்பதாலும் 'யுனெஸ்கோ’ சார்பில் 2008-ல் பாரீஸ் நகரில் விருது வழங்கி கௌரவித்தார்கள். இதுபோன்ற பல விருதுகள் மற்றும் பாராட்டுகளால் உந்தப்பட்டு, 'கபர் லெஹரியா’வின் மூன்றாம் பதிப்பு, பாந்தாவின் அருகிலுள்ள மஹோபாவில் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது. பீகாரின் சீதாமடியில், உள்ளூரில் பேசப்படும் 'வஜிகா’ எனும் மொழியிலும் தற்போது வெளியாகிறது. இதுபோல் மேலும் பல இடங்களில் கிராமப்புற பெண்களின் பிரச்னைகளுடன் உலகை இணைப்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம்!''

- அக்கறையும், உறுதியும் கலந்து இருக்கின்றன கன்வீனர் கவிதாவின் வார்த்தைகளில்!

பேனா பெண்களின் நோக்கம் பலிக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு