பிரீமியம் ஸ்டோரி
##~##

''நிமிர்ந்து நடக்கும் உயிரினமாக மனித இனம் படைக்கப்பட்டது... பரிணாம ஆச்சர்யம்! ஆனால், நிமிர்ந்து நடக்கும் உயிரினத்துக்கென்று விதிக்கப்பட்ட பல்வேறு விதிமுறைகளையும் நாகரிக வளர்ச்சியின் காரணமாக, நாம் மீறிக் கொண்டே போக... முதுகு வலியும், மூலநோயும் இலவச இணைப்பாக வந்து சேர்ந்துவிட்டன!

ஆம்... வீடு, அலுவலகம், பேருந்து என்று எங்கும், எந்த நேரத்திலும் மனிதன் உட்கார்ந்த நிலையிலேயேதான் இருக்கிறான். இதனால், ஆசன வாயில் உள்ள ரத்த நாளத்தில் தொடர் அழுத்தம் ஏற்படுவதால், மூலநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துவிட்டன''

- தெளிவான விளக்கம் கொடுத்து ஆரம்பித்தார் இரைப்பை, கல்லீரல் மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர், லேப்ராஸ்கோப்பி மற்றும் லேசர் சிகிச்சை நிபுணர் டாக்டர் கண்ணன். மூலநோய் பற்றி டாக்டர் கொடுத்த தெளிவுரைகள்... இன்று மிக பிரதானமாகத் தேவைப்படும் மருத்துவ விழிப்பு உணர்வு!

''அவசர உலகில், மூளைக்குத்தான் அதிக வேலைப்பளு. உடல் உழைப்பு என்பது அறவே அற்றுப்போய்விட்டது. அடிப்படையான இந்தப் பிரச்னைதான் மனித ஆரோக்கியத்துக்கே வேட்டு வைக்கிறது. நார்ச்சத்து குறைந்த உணவுகளை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி இல்லாதது, அலுவலக வேலை நிமித்தம் நெடுநேரம் உட்கார்ந்தே இருப்பது போன்ற செய்கைகளால், உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளில் ஒருவித மந்த நிலை ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாக நேரிடுகிறது. நாள்பட்ட இந்த மலச்சிக்கல் பிரச்னையே... மூலநோய்க்கான மூல காரணமாக இருக்கிறது. ஜீரண மண்டலத்தின் கடைசிப் பகுதியான ஆசன வாயில் உள்ள ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்படுவதைத்தான் மூலம் என்கிறோம். இதில்.. உள்மூலம், வெளிமூலம் மற்றும் உள்வெளி மூலம் என மூன்று வகைகள் இருக்கின்றன.

உட்கார்ந்தே இருக்கிறீர்களா... உஷார் உஷார்!

பெண்களைப் பொறுத்தவரை உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்வதாலும், நேரம் போவதே தெரியாமல் டிவி, கம்ப்யூட்டர் முன் பழியாய் கிடப்பதும் மூலநோய் வருவதற்கு வழி வகுக்கும். கர்ப்ப காலங்களில் பெண்களின் கீழ் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவதாலும், புரோஜெஸ்ட்ரோன் (Progestrone) ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் இந்நோய் வரும். பரம்பரை, உடல் பருமன், நாள்பட்ட வயிற்றுப்போக்கு, மலக்குடல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய் போன்ற காரணங்களாலும் மூலநோய் வரும். மலம் கழிக்கும்போது ஆசன வாயில் வலியற்ற ரத்தப் போக்கு ஏற்படுதல், அரிப்பு, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவை மூலநோய்க்கான அறிகுறிகள்'' என்ற டாக்டர், நோயின் நிலைகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி தொடர்ந்தார்.

''மூலத்தை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலையில், ரத்தப் போக்கு இருக்கும். சதை வெளித்தள்ளாது; வலியும் இருக்காது. இரண்டாம் நிலையில், மூலம் வெளியே வந்து தானாகவே உள்ளே சென்றுவிடும். மூன்றாம் நிலையில் வெளியே வரும் மூலத்தை, கையால் உள்ளே தள்ள முடியும். நான்காம் நிலையில், மூலம் ஆசன வாய்க்கு கீழே தள்ளிய நிலையிலேயே இருக்கும். முதல் இரண்டு நிலைகளை மருந்து, மாத்திரை, உணவு மற்றும் வாழ்க்கை முறை மூலமாக சரிசெய்துவிடலாம். மூன்றாவது மற்றும் நான்காவது நிலைக்குத் தள்ளப்பட்டால்... அறுவைச் சிகிச்சை, லேசர் மற்றும் அதி நவீன சிகிச்சை முறைகள் மட்டுமே நிரந்தரத் தீர்வு.

உட்கார்ந்தே இருக்கிறீர்களா... உஷார் உஷார்!

புதிதாக 'ஸ்டேப்ளர் (STAPLER)’ சிகிச்சை முறை வந்திருக்கிறது. மூலத்துக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன வகைக்கருவியின் பெயர்தான் 'பைல்ஸ் ஸ்டேப்ளர்’. இக்கருவி மூலமாக ஆசன வாயின் உட்பகுதியில் உள்ள மேல் மூலத்துடன் கூடிய சதையை எடுத்துவிட்டு, அந்த இடத்தை இணைத்துவிடுவோம். தசைகளை அதிகம் வெட்டாமல், வேண்டிய அளவு மட்டுமே வெட்டுவதால், மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் சக்தி ஆசன வாய்க்கு அப்படியே இருக்கும்.

லேசர் மற்றும் ஸ்டேப்ளர் முறை சிகிச்சையில் ரத்த இழப்பு இருக்காது; வலியும் மிகக்குறைவுதான். மருத்துவமனையில் ஒருநாள் இருந்தாலே போதும். விரைவில் பழைய நிலைக்குத் திரும்பி, அன்றாட வேலைகளைக் கவனிக்கலாம்'' என்று தெம்பூட்டிய டாக்டர் கண்ணன்,

உட்கார்ந்தே இருக்கிறீர்களா... உஷார் உஷார்!

''மலச்சிக்கலைத் தவிர்க்க காய்கறி, பழங்கள், கோதுமை போன்ற நார்ச்சத்து உணவு வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழம், கொய்யா, பப்பாளி, மாதுளை, உலர் திராட்சை போன்றவை நல்ல மலமிளக்கிகள். மாவுச்சத்து உணவுகளை குறைத்துக் கொள்வதோடு... அதிகளவு தண்ணீர் (ஒரு நாளைக்கு மூன்றில் இருந்து நான்கு லிட்டர் அளவு) குடிப்பதும் மலச்சிக்கல் வராமல் காத்துக்கொள்ளும் வழிகள். ஒரே இடத்தில் தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு மேல் உட்காராமல்... அவ்வப்போது எழுந்து ரிலாக்ஸ் செய்துகொள்வதும், உட்காரும் நிலையை அடிக்கடி மாற்றிக்கொள்வதும் நல்லது'' என்று வலியுறுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு