Published:Updated:

``என் நிறம்தான் என் ப்ளஸ்!’’ - மாடல் கேப்ரில்லா

``மாடலிங்கை பொறுத்த வரை தமிழ்நாட்டில்தான் சிவப்பாக இருக்கணும்னு நினைக்கிறாங்க. உலக அளவில் எப்போதும் டஸ்கி, டார்க் ஸ்கின் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகம். இப்போது தமிழ்நாட்டிலும் அதை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்."

``என் நிறம்தான் என் ப்ளஸ்!’’ - மாடல் கேப்ரில்லா
``என் நிறம்தான் என் ப்ளஸ்!’’ - மாடல் கேப்ரில்லா

சிவப்பழகை மையப்படுத்தி அன்றாடம் எத்தனையோ விளம்பரங்கள் வந்தாலும் தமிழர்களின் பாரம்பர்ய நிறமான டார்க், டஸ்கி ஸ்கின் டோனுக்கு மாடலிங் துறையில் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மக்களும் திராவிட நிறத்தைக் கொண்டாட ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், தன் நிறத்தையே பிளஸ் ஆக்கி எந்த மேக்கப்பும் இன்றி சோசியல் மீடியாவில் பிரபலமாக இருப்பவர் மாடல் கேப்ரில்லா.

மியூசிகலி-ல் ஜாலியாக வலம் வரும் கேப்ரில்லா டிக்டாக்-ல் பீரியட்ஸ் குறித்து பேசி அதிகப்படியான வியூஸை அள்ளினார். தற்போது மாடலிங் துறையில் களமிறங்கி அங்கே கோலோச்சும் நிற பாகுபாட்டுக்கு மத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்திருக்கிறார்.  ``என்னுடைய கலர்தான் எனக்கு ஸ்பெஷல். நான் கறுப்பா இருக்கேன்னு ஒரு நாளும் வருத்தப்பட்டது கிடையாது. என் நிறத்தைவிட என் திறமையை எப்பவும் நம்புறேன். இப்போ மாடலிங் துறைகூட அப்படித்தான்'' எனத் தன்னம்பிக்கை பொங்க பேசும் கேப்ரில்லா, பேஷன் துறையில் டார்க் மற்றும் டஸ்கி டோன் பெண்களுக்கான அங்கீகாரம் பற்றி பேசினார். 

"நிறைய பெண்களுக்கு நாம கலரா இல்லையேன்னு ஏக்கம் இருக்கும். அதுக்குக் காரணம் நாம் பார்க்கும் விளம்பரங்கள், சமூக எதிர்பார்ப்புகள் போன்றவைதான். நிறத்தை கலாசாரம் ஆக்கியதால் நம் தமிழர்கள் பாரம்பர்ய நிறத்தை மக்கள் மறந்தே போயிட்டாங்கனுதான் சொல்லணும். குழந்தைகளுக்கு விளையாட வாங்கிக்கொடுக்கும் பொம்மை கூட நிறமா இருக்க மாதிரி தான் வாங்கிக்கொடுக்கிறோம். தன்னைச் சுற்றி எல்லாமே அதிக நிறத்துடன் இருப்பதைப் பார்க்கும் குழந்தைகளுக்கு, சிவப்புதான் அழகு என்ற எண்ணம் மனசில் பதிய ஆரம்பிக்கும். சில குழந்தைகளுக்கு தன்னை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை கூட வரத்தொடங்கும் என்பதுதான் உண்மை. குழந்தைகளின் எண்ணத்தை நாம்தான் மாத்தணும். நாம மாறினா சமூகத்தோட பார்வையும் மாறும்" என்ற கேப்ரில்லா மாடலிங் துறை என்ட்ரி பற்றிப் பேசுகிறார்.

"எனக்குச் சொந்த ஊர் திருச்சி. மாடலிங் மற்றும் சினிமா வாய்ப்புக்காக இப்போ சென்னையில் தங்கியிருக்கேன். சின்ன வயசிலிருந்தே எனக்கு நடிப்பு மேல ஆர்வம் அதிகம். டிவியில் நான் பார்க்கும் சின்ன சின்ன விஷயத்தைக் கண்ணாடி முன்னால் செய்து பார்ப்பேன். 'அட டிவியில் பார்த்ததை அப்படியே பண்ற'னு எல்லோரும் பாராட்டுவாங்க. ஆனால் என்னுடைய நிறத்தால் என்னுடைய சின்ன வயசில் சில வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கு. 

கல்லூரிக் காலங்கள்ல மைம் ஷோல நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் எனக்கான ஆரம்பம்னு கூடச் சொல்லலாம். நிறைய ஸ்டேஜ் ஷோ மூலம் திறமையை அதிகமாக்கிட்டேன். அதுக்குப் பிறகு, கல்லூரி படிப்பை  பாதியில் நிறுத்திட்டு தெருக்கூத்து, மேடை நாடகங்கள், டிக்-டாக் வீடியோக்கள் பண்ண ஆரம்பிச்சேன். என் நடிப்பைப் பார்த்த எல்லோரும் என் நிறத்தை மறந்து என்னை ரசிக்க ஆரம்பிச்சாங்க. நிறைய டார்க் ஸ்கின் பெண்கள் 'எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கீங்க'னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அதன் அடுத்தகட்ட நகர்வாகத்தான் மாடலிங் வாய்ப்பும் என்னைத் தேடி வந்தது. மாடலிங் வாய்ப்பு வந்த புதிதில் எனக்கே கொஞ்சம் சர்ப்ரைசிங்காகத்தான் இருந்தது. மாடலிங் வாய்ப்பை எனக்கான சவாலா எடுத்துக்கிடேன்" என்றார்.

"மாடலிங் ஆரம்பித்த புதிதில் எகிப்திய இளவரசி, ராணி போன்ற அவுட்லுக்கில் என்னை வெளிப்படுத்துகிறதுக்கான வாய்ப்புகள் நிறைய வந்தன. அதைச் சிறப்பா பண்ணேன். இப்போ டிரெடிஷனல் அவுட்லுக், பாரம்பர்ய கடைகளுக்கான விளம்பர வாய்ப்புகளும் வருது. மாடலிங் வந்த புதிதில் அதில் இருக்கும் சின்ன சின்ன நுணுக்கங்களை கத்துக்க கொஞ்சம் சிரமமா இருந்தது. இப்போ அதையும் பழகிட்டேன். மாடலிங்கை பொறுத்த வரை தமிழ்நாட்டில்தான் சிவப்பாக இருக்கணும்னு நினைக்கிறாங்க. உலக அளவில் எப்போதும் டஸ்கி, டார்க் ஸ்கின் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகம். இப்போது தமிழ்நாட்டிலும் அதை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஃபேஷன் ரேம்ப்வாக், அழகிப்போட்டிகள், விளம்பர ஷுட்னு இப்ப டஸ்கி பொண்ணுங்களுக்கான வாய்ப்பு நிறைய இருக்குது. அதை பயன்படுத்தினா நிச்சயம் இந்தத் துறையில் தடம் பதிக்க முடியும்'' என்கிறவர் திரைப்படங்களிலும் தலைகாட்டவிருக்கிறார்.