கேக், சூப், கேசரி, புலாவ், இட்லி, புட்டு, தோசை, சேவை, உப்புமா, பாஸ்தா, பாயசம், மில்க்ஷேக், ஜூஸ், டீ...
திருச்சூரில் வசிக்கும் தமிழ்ப் பெண், சரஸ்வதி விஸ்வநாதன். Sachu’s Kitchen இணையதள நிர்வாகி. இந்தியாவில் இதுவரை எந்தச் சமையற்கலைஞரும் செய்யாத புதிய உலக சாதனையைப் படைத்து, கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
``எனக்குச் சமையற்கலையில் ஈடுபாடு வர முக்கியக் காரணம், என் தந்தைதான். உடல்நலக் குறைவால் அவர் சமீபத்தில் மரணமடைந்துவிட்டார். `நம் முயற்சியால், பல சாதனைகளைச் செய்ய வேண்டும்’ என்று அவர் அடிக்கடி சொல்வார். அவரது ஆத்மா சாந்தியடையும் வகையில், இதுவரை யாரும் செய்யாத சாதனையை சமையற்கலையில் படைக்க வேண்டும் என்கிற எண்ணம் என் மனத்தில் உதித்தது. இது சம்பந்தமான விவரங்களை இணையதளத்தில் தேடியபோது, வெளிநாட்டில் வசிக்கும் ஆண் செஃப்கள் சிலர் சாதனைகளைச் செய்திருப்பது தெரியவந்தது. இதுவரை பெண் சமையற்கலைஞர்கள் யாரும் இந்த முயற்சியில் ஈடுபடாதது எனக்கு வியப்பளித்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Universal Achievers Book of Records அமைப்பைத் தொடர்புகொண்டு பேசினேன். அவர்கள் ஒரு மணி நேரத்தில் எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட சைவ உணவு வகைகளைத் தயார்செய்து சாதனை நிகழ்த்த ஒப்புதல் அளித்தனர். திருச்சூரில் என் வீட்டிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்த முடிவு செய்தேன். அந்த அமைப்பின் நிர்வாகிகளுடன் கலந்துபேசி, ஏப்ரல் 21-ம் தேதியைத் தேர்வுசெய்தேன். அவர்கள் திருச்சூருக்கு வந்து தங்கி முன்னேற்பாடுகளை மேற்பார்வையிட்டு, தேவையான ஆலோசனைகளைக் கூறினர்.
நான் 108 உணவுகளைத் தயார் செய்ய முடிவெடுத்தேன். தேவையான காய்கறிகள், மளிகைப்பொருள்கள், எண்ணெய் வகைகள், காஸ், உபகரணங்கள், ஒவ்வோர் உணவையும் தயார்செய்யத் தேவைப்படும் நேரம் ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டேன்.

என் கணவரும் இரு மகன்களும் உறுதுணையாக இருந்தனர். ஒரு மணி நேரத்தில் 20 வகை இட்லி, 8 வகை புட்டு, 13 வகை தோசை, 4 வகை சூப், 3 வகை புலாவ் மற்றும் சேவை, 6 வகை கேக், 13 வகை மில்க்ஷேக், 7 வகை ஜூஸ், 21 வகை ஸ்நாக்ஸ், 3 வகை டீ, 2 வகை பாயசம், பாஸ்தா, உப்புமா மற்றும் ஒரு கேசரி ஆகியவற்றைத் தயார்செய்து அசத்தினேன்.
கேரளத் தொலைக்காட்சிகளில் சமையல் போட்டிகளில் பங்குகொண்டு குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவுகளைத் தயாரித்துப் பரிசுகளைப் பெற்ற அனுபவத்தால், எந்தவிதமான பதற்றமுமின்றி இந்தச் சாதனையைச் செய்ய முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மலையாள எஃப்.எம் ரேடியோக்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வார-மாத இதழ்கள் எனப் பல தனியார் நிறுவனங்கள் சமையல் நிகழ்ச்சிகளுக்கு என்னை தலைமை தாங்க அழைத்து, பெருமைப்படுத்துகின்றன. இந்தப் பெருமை அனைத்தையும் என் அப்பாவுக்கே அர்ப்பணிக்கிறேன்.
மன-உடல் நலம் ஒருங்கே வாய்க்கப்பெற்று, சரியாகத் திட்டமிட்டு முறைப்படி செய்தால், எந்தச் சாதனையையும் நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அடுத்து லிம்கா மற்றும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பெற முயல்வேன்’’ என உற்சாகத்துடன் சொல்கிறார் சரஸ்வதி.
வாழ்த்துகள்!
-ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்