Published:Updated:

தைரியம்தான் அப்பாவின் அடையாளம்! - டாக்டர் கே.எம்.செரியன் - சந்தியா செரியன்

தைரியம்தான் அப்பாவின் அடையாளம்! - டாக்டர் கே.எம்.செரியன் - சந்தியா செரியன்
பிரீமியம் ஸ்டோரி
தைரியம்தான் அப்பாவின் அடையாளம்! - டாக்டர் கே.எம்.செரியன் - சந்தியா செரியன்

அப்பா என்றால் அன்பு

தைரியம்தான் அப்பாவின் அடையாளம்! - டாக்டர் கே.எம்.செரியன் - சந்தியா செரியன்

அப்பா என்றால் அன்பு

Published:Updated:
தைரியம்தான் அப்பாவின் அடையாளம்! - டாக்டர் கே.எம்.செரியன் - சந்தியா செரியன்
பிரீமியம் ஸ்டோரி
தைரியம்தான் அப்பாவின் அடையாளம்! - டாக்டர் கே.எம்.செரியன் - சந்தியா செரியன்

லக வரைபடத்தில் தமிழகத்தை உயர்த்திவைத்ததில் டாக்டர் கே.எம்.செரியனுக்கு மிகப்பெரிய பங்குண்டு. இந்தியாவின் முதல் பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்த சாதனை யாளர். குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடி.

செயலிழந்த எத்தனையோ இதயங்களை மீண்டும் துடிக்கச்செய்து, பலருக்கு மறுபிறவி கொடுத்த மருத்துவர், மகளின் மீதான பாசத்தைப் பகிரும்போது மெல்லிதயம் கொண்டவராகிறார். அப்பாவின் அன்பு பகிரும் மகளுக்கோ, அவரைவிடவும் அதிக நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும். அப்பா நிறுவிய `ஃபரண்டியர் லைஃப்லைன்' மருத்துவமனை யின் இயக்குநரான சந்தியா செரியன், தந்தை சொல் தட்டாத  தங்கமகள்.

‘`சின்ன வயசுல அப்பாவோடு செலவழிச்ச ஒவ்வொரு மணித்துளியும் மனசுக்குள்ளே பசுமையா ஞாபகத்திலிருக்கு. பெரும்பாலான நாள்கள் நாங்க காலையில தூங்கிட் டிருக்கும்போது அப்பா ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பியிருப்பார். அவர் திரும்பிவரும்போது நாங்க தூங்கியிருப்போம். நேருக்கு நேர் பார்த்துக்கக்கூட முடியாம போன நாள்கள்தான் அதிகம். அப்பா மாதிரி வேலையை நேசிக்கிற யாரையும் நான் பார்த்ததில்லை. அப்பாவோடு விளையாடி, பேசி, ஊர் சுத்தின நாள்கள் குழந்தைப்பருவத்துல எனக்கும் என் தம்பிக் கும் கிடைச்சதில்லை. ஆனாலும், அது ஒரு குறையா தெரிஞ்சதில்லை. கிடைக்கிற கொஞ்ச நேரத்தை அப்பா எங்களோடு பகிர்ந்துக்கிட்ட விதம், அந்த ஏக்கம் இல்லாமப் பார்த்துக்கிட்டது...’’ - பால்ய வயது மலரும் நினைவு களுக்குள் அழைத்துச் செல்கிறார் சந்தியா.

தைரியம்தான் அப்பாவின் அடையாளம்! - டாக்டர் கே.எம்.செரியன் - சந்தியா செரியன்

‘`வேலைக்காகவும் மேல்படிப்புக்காகவும் அப்பா  சில வருஷங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தார். பிறந்த முதல் சில வருஷங்கள் நானும் அங்கேதான் இருந்தேன். நியூசிலாந்தில் கடற்கரைக்கு அருகில் மிஷன் பே என்கிற இடத்தில் எங்க வீடு. ஒரு வார இறுதி நாளில் நியூஸ் பேப்பரை வெட்டி, அப்பா எனக்குப் பட்டம் பண்ணிக்கொடுத்தது இன்னும்  நினைவிலிருக்கு. இந்த மாதிரியான தருணங்கள் எங்களுக்கு அரிதாகவே கிடைச்சிருக்கு. அதனால ஒவ்வொரு சம்பவமும் இப்போதும் எனக்கு மறக்கலை. அப்பாகிட்ட ஒரு ஸ்போர்ட்ஸ் கார் இருந்தது. எப்பவாவது அவருக்கு டைம் கிடைச்சா, என்னை, அந்த காரில் ப்ளூ மவுன்ட்டனுக்குக் கூட்டிட்டுப் போவார். ஆஸ்திரேலியாவில் இருந்தவரையில் கிடைச்ச இந்த வாய்ப்புகள், நாங்க இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு இன்னும் அரிதாகிப் போயின’’ - ஒவ்வொரு தருணத்தையும் பொக்கிஷமாக நினைவுகளில் தேக்கிவைத்திருக்கிறார் அன்பு மகள்.

‘`சின்ன வயசுலேருந்தே எனக்கு மெடிசின் படிக்கணும்னு ஆசை இருந்தது. பத்தாவது போர்டு எக்ஸாம் எழுதியிருந்த டைம் அது... ‘ப்ளஸ் ஒன்ல நீ பயாலஜி எடுக்கப் போறதில்லை’னு அப்பா சொன்னபோது அதிர்ச்சியா இருந்தது. இத்தனைக்கும் நான் சூப்பரா சயின்ஸ் படிப்பேன். அதைப் பார்த்துட்டு என் டீச்சர்ஸும் ‘நீ உங்கப்பா மாதிரியே டாக்டராயிடு’ன்னு சொல்வாங்க. ‘மெடிசின் வேண்டாம்’னு அப்பா சொன்னதை ஏத்துக்க முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், எனக்கு எப்போதும் அப்பா வாக்குதான் வேத வாக்கா இருந்திருக்கு. எந்த விஷயத்திலும் அவரை எதிர்த்துப் பேசினதே இல்லை.

இன்னிக்கு, என் மகள்களுக்கு அவங்க விருப்பப்பட்ட விஷயங்களைச் செய்யற சுதந்திரத்தைக் கொடுத்திருக்கேன். ‘இது என் வாழ்க்கை. எனக்குப் பிடிச்சதைத்தான் நான் செய்வேன்’னு சொல்ற தைரியம் அவங்களுக்கு இருக்கு. அது எனக்கு இருந்ததில்லை. மெடிசின் இல்லைன்னு முடிவானதும், அண்ணா யுனிவர்சிட்டியில எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, அமெரிக்காவில் பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங்கில் மாஸ்டர்ஸ் பண்ணினேன். அப்புறம் மாஸ்டர்ஸ் இன் ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷனும், பிசினஸ் அனாலிசிஸ் அண்டு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸும் முடிச்சேன்’’ - மருத்துவத்துக்கு இணையான மேல்படிப்புகளை முடித்துவிட்ட சந்தியா, இன்றும் படிப்பைத் தொடர்கிறார். மெடிக்கல் லா படித்துக்கொண்டிருப்பவருக்கு, மருத்துவக் கனவு நிறைவேறாத வருத்தம் மனதை நிறைத்தாலும், அப்பாவுக்காக யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டாராம்.

‘` `மருத்துவர் வேலையையும் பார்த்துக்கிட்டு, குடும்பத்தையும் கவனிக்கிறது பெண்களுக்கு சரியா வராது. ரெண்டையுமே முழுமையா செய்ய முடியாது’ங்கிறது அப்பாவோட அபிப்ராயம். ஆனா, இன்னிக்கு சக்சஸ்ஃபுல் டாக்டராகவும் இருந்துக்கிட்டு, குடும்பத்தையும் அழகா நிர்வகிக்கிற எத்தனையோ பெண்களைப் பார்க்கறேன். அதையெல்லாம் அப்பாகிட்ட சொல்லி விவாதிக்கிற தைரியமும் எனக்கு இருந்ததில்லை. என் விருப்பப்படி என்னை மெடிசின் படிக்க அனுமதிச்சிருக்கலாமேங்கிற கோபம் இப்போதும் எனக்கு அடிக்கடி வரும். ஆனாலும், அதை நான் அப்பா கிட்ட சொன்னதில்லை. அவர் ஒரு பர்ஃபெக்‌ஷனிஸ்ட். ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட். நானும் தம்பியும் வளர்ந்து பெரியவங்களான பிறகுதான் அப்பாகிட்ட நேருக்கு நேர் உட்கார்ந்து பேசவே ஆரம்பிச்சோம். அதை பயம்னு சொல்றதைவிடவும் மரியாதைனு சொல்றதுதான் சரியா இருக்கும்.

நான் வியக்கிற, மதிக்கிற ஆளுமைகளில் முதலிடம் எங்கப்பாவுக்குத்தான். தன்னுடைய தொழிலில் இந்தளவுக்கு வெற்றிகரமா இருக்கார்னா, அதுக்குப் பின்னாடி அப்பா சந்திச்ச போராட்டங்களும், கடந்துவந்த கசப்பான அனுபவங்களும் கொஞ்சமில்லை. எவ்வளவு பெரிய தடை வந்தாலும் அப்பா சோர்ந்துபோயோ, மிரண்டுபோயோ நான் பார்த்ததில்லை. மெட்ராஸ் மெடிக்கல் மிஷனுக்கும், பாண்டிச்சேரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸுக்கும் அப்பாதான் ஃபவுண்டர். அந்த இரண்டுக்குமான நிலங் களைக் கண்டுபிடிச்சது, கட்டடம் எப்படி வரணும்னு டிசைன் பண்ணினதுன்னு ஒவ்வொரு செங்கல்லிலும் அப்பாவின் பங்கு இருக்கு. ஒருநாள் ஓய்வு கிடைச்சாலும் இந்த ரெண்டு இடங்களிலும்தான் அப்பாவின் நேரம் போயிருக்கு. ஆனா, சிலருடனான கருத்து வேறுபாடுகள் காரணமா, அப்பா இந்த ரெண்டு இடங்களிலிருந்தும் வெளியே வந்தார்.

மற்ற எல்லாரும் ரிட்டையராகிற 60 வயசுலதான் அப்பா தன்னுடைய சொந்த நிறுவனம் குறித்து யோசிச்சார். தான் பார்த்து வளர்ந்த ரெண்டு பிரமாண்ட கட்டடங்களை விட்டு விலகியிருக்கிற அந்த தைரியம்தான் அப்பாவின் அடையாளம். விமர்சனங்களை எதிர்கொள்வதிலும் அப்பாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ‘உன்னைச் சுற்றியுள்ள உலகம் ஆயிரம் பேசும். உன்னைக் காயப்படுத்தும். ஆனா, அதையெல்லாம் பொருட்படுத்த ஆரம்பிச்சிட்டால் உன் நிம்மதி போயிடும்’னு அடிக்கடி சொல்வார். வாழ்க்கையில் துயரங் களின் உச்சத்துக்குப் போனபோதெல்லாம் அப்பாவின் அந்த அட்வைஸ்தான் என்னை மீட்டெடுத்திருக்கு’’ என்கிற சந்தியாவின் குரல் உடைய ஆரம்பிக்கிறது.

‘`மாஸ்டர்ஸ் படிக்க அமெரிக்கா போயிருந்தேன். அங்கே என்னுடைய சீனியரை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். வழக்கமா எல்லா விஷயங்களிலும் ஸ்ட்ரிக்ட்டா இருக்கிற எங்கப்பா,  கல்யாண விஷயத்துக்கு உடனே ஓகே சொல்லிட்டார். டயானாவுக்கும் சார்லஸுக்கும் பிரச்னை ஆரம்பிச்சிருந்த நேரம் அது. ‘கல்யாணத்தைத் தள்ளிப்போடாதீங்க... சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க’ன்னு சொன்னவரும் அப்பாதான். கல்யாணம் முடிஞ்சதும் என் கணவரோடு பஹ்ரைனில் எட்டு வருஷங்கள் இருந்தேன். அப்புறம் அமெரிக்கா போனோம். ரெண்டு பெண் குழந்தைகள் பிறந்தாங்க. நானும் என் கணவரும் வேலை பார்த்திட்டிருந்தோம். வாழ்க்கை ரொம்ப நல்லா போயிட்டிருந்தது. யார் கண்பட்டதோ... ஒருநாள் ராத்திரி தூங்கப் போனவர், மறுநாள் காலையில கண் விழிக்கலை’’ - உடைந்து அழுகிறார் சந்தியா. பலரின் இதயங்களை உயிர்ப்பித்து, மறுவாழ்வு தந்த மருத்துவருக்கு, மருமகனின் இதயச் செயலிழப்பைக் காப்பாற்ற முடியாமல் போனதுதான் சோகத்தின் உச்சம்.

‘`அவர் போன அதிர்ச்சியிலேருந்து மீள்றது அவ்வளவு சுலபமா இல்லை. ரெண்டு வருஷங்கள் அங்கேயே இருந்தேன். அதுக்கு மேல முடியலை. இந்தியா வந்தோம். கணவரை இழந்த ஒரு பெண்ணை இந்தச் சமுதாயம் பார்க்கிற விதம் இங்கே இன்னும்கூட மாறலை. கல்யாண பத்திரிகை கொடுக்க வீட்டுக்கு வர்றவங்க அப்பா, அம்மா, தம்பினு எல்லாரையும் அழைப்பாங்க. என்னையும் என் குழந்தைகளையும் தவிர்ப்பாங்க. ஆரம்ப நாள்களில் அதைத் தாங்கிக்கிறது பெரிய வேதனையா இருந்திருக்கு. அப்பல்லாம் எனக்கு தைரியம் சொன்னவர் அப்பா. அவருடைய ஆறுதல்தான் எல்லா சோகங்களிலிருந்தும் என்னை மீட்டது.

அப்பாகூட நேரம் செலவிட முடியாத ஏக்கம் இன்னிக்கும் எனக்குண்டு. ஆனா, அதையெல்லாம் சேர்த்துவெச்சு இன்னிக்கு ஒரு தாத்தாவா தன் பேத்திகளோடு அவர் இருக்கிறதைப் பார்க்கறபோது சந்தோஷமா இருக்கு. அப்பாவை இழந்த ஏக்கம் தெரியாம அவர்தான் என் குழந்தைகளைப் பார்த்துக்கிறார். இந்த வயசிலும் அவர் அதே பிஸிதான். ஆனா, இப்பல்லாம் எங்களோடு நேரம் செலவழிக்கிறார். எனக்கு மட்டுமல்ல, என் மகள்களுக்கும் அவர்தான் அப்பா. இதுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியலை. ஆனா, அவரை எதிர்த்துப் பேசாம, அவர் அன்புக்குக் கட்டுப்பட்ட மகளா துணை நிற்கறதைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியலை.’’

வார்த்தைகள் தடுமாறுகின்றன மகளுக்கு. வாஞ்சையுடன் அரவணைக்கின்றன அப்பா வின் கைகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-ஆர்.வைதேகி,  படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

எங்க வீட்டு மகாலட்சுமி! - டாக்டர் செரியன்

தைரியம்தான் அப்பாவின் அடையாளம்! - டாக்டர் கே.எம்.செரியன் - சந்தியா செரியன்

``ஒரு வேலையைத் தேர்ந்தெடுத்தோம்னா, அதுக்கு 100 சதவிகிதம் நியாயத்தோடு நடந்துக்கணும்கிறது என் கருத்து. மெடிசின் வேண்டாம்னு சொன்னாலும், சந்தியாவை பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் படிக்கச் சொன்னது நான்தான். அவளுக்கு எது சரியா வரும்னு எனக்கு ஒரு முன் தீர்மானம் இருந்தது. அது தவறாகலைனு நம்பறேன். இன்னிக்கு என் பேத்தி ஷாரன், மெடிசின் படிக்க ஆசைப்பட்டபோது, சப்போர்ட் பண்ணின முதல் நபர் நான்தான். முடிவுகள் எடுப்பதில் சந்தியா திறமைசாலி. அதனாலதான் அவங்களுடைய காதலுக்கு நான் சம்மதம் சொன்னேன். இன்னிக்கு எங்க ஹாஸ்பிட்டலின் அட்மினிஸ்ட்ரேஷன் வேலைகளை அவதான் பார்த்துக்கிறா. மருமகனை இழந்தது என் வாழ்க்கையின் மிகப் பெரிய சோகம். அதைவிடப் பெரிய சோகம் என் மகளுக்கு. அதுலேருந்து அவங்க மீண்டாகணும். அதனால தாத்தாவா மட்டுமல்லாம, அப்பாவாகவும் அரவணைக்கிறதுன்னு முடிவெடுத்தேன். அதை ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா செய்யறேன்.

எம்.எஸ் எக்ஸாம் எழுதறதுக்கு முன்னாடிதான் சந்தியா பிறந்தாள். அவ பிறந்தபோது என் புரொஃபஸர்கிட்ட ‘சார் நான் அப்பாவாயிட்டேன்’னு சொன்னேன். ‘உங்க வீட்டுக்கு லட்சுமி வந்திருக்கான்னு சொல்லு’ன்னார். சத்தியமான வார்த்தைகள் அவை. சந்தியா எங்க வீட்டு மகாலட்சுமி. என் வாழ்க்கையின் மகாலட்சுமி!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism