Published:Updated:

எதிர்க்குரல்: சிலந்திகள்... வௌவால்கள்... ஆண்கள்

எதிர்க்குரல்: சிலந்திகள்... வௌவால்கள்... ஆண்கள்
பிரீமியம் ஸ்டோரி
எதிர்க்குரல்: சிலந்திகள்... வௌவால்கள்... ஆண்கள்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

எதிர்க்குரல்: சிலந்திகள்... வௌவால்கள்... ஆண்கள்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
எதிர்க்குரல்: சிலந்திகள்... வௌவால்கள்... ஆண்கள்
பிரீமியம் ஸ்டோரி
எதிர்க்குரல்: சிலந்திகள்... வௌவால்கள்... ஆண்கள்

முற்றிலும் புதிய பேட்மேனை, முற்றிலும் புதிய முறையில் அறிமுகப்படுத்தியவர் கிறிஸ்டோபர் நோலன். காமிக்ஸ் வரலாற்றில் ஒரு சூப்பர் ஹீரோவை ரத்தமும் சதையுமாக திரையில் காட்சிப்படுத்தியவர், நோலன்தான். பறந்தோமா, சண்டையிட்டோமா, வென்றோமா என்றில்லாமல், `தீமை என்றால் என்ன, இந்த உலகம் ஏன் ஆபத்தானதாக இருக்கிறது, மனிதர்கள் ஏன் சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள், கடமை என்பது என்ன, தேடல் என்றால் என்ன?’ என்றெல்லாம் அரசியல் தத்துவப் பேராசிரியர்போல பேட்மேன் ஆராய்வது, புதிதானது மட்டுமல்ல... சுவையானதும்கூட.

அசாதாரணமான செயல்களை, அசாதாரணமானவர்கள் நிகழ்த்துவதில்லை. சூழலே சாமானியர்களை அவ்வாறு உருமாற்றுகிறது என்னும் கருத்து அழுத்தமாக வலியுறுத்தப்படும்போது, கார்ல் மார்க்ஸை யார் படித்தது, நோலனா அல்லது பேட்மேனா என்னும் சந்தேகம்கூட எழுந்துவிடுகிறது. ஆனால், பேட்மேனின் (புரூஸ் வெய்ன்) காதலி ரேச்சல் டாஸைப் பார்க்கும்போது அந்த சந்தேகம் சட்டென மறைந்துவிடுகிறது. சிக்மண்ட் ஃப்ராய்டு பொறாமைப்படும் அளவுக்கு பேட்மேனின் ஆழ்மனத்தை அகழ்வாராய்ச்சி செய்யும் நோலன், மிகவும் தட்டையாக ரேச்சலை உருவாக்கியிருக்கிறார். ஆழ்மனத்தை விடுங்கள், மனம் என்றொன்று ரேச்சலுக்கு உண்டா என சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு பொம்மையைப்போல அவர் வந்து போகிறார். இவ்வளவு பிரமாண்டமான ஒரு படத்தில் ரேச்சல் மட்டும் ஏன் அட்டைப் பெட்டிபோல தோற்றமளிக்க வேண்டும்?

தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டு வதற்காக நிஜமாகவே வானத்திலிருந்து குதித்த கடவுள், தோர். நார்டிக் தொன்மக் கதைகளில் இடம்பெற்றிருக்கும் இந்தக் கதாபாத்திரம், காமிக்ஸ் உலகிலும் திரைப்படத்திலும் மிகப் பிரபலம். கையில் பெரிய சுத்தியலோடு (அதைக்கொண்டு ஒரு தட்டு தட்டினால் மலை பொடியாகிவிடும்) வந்து விழும் இந்த விசித்திரக் கடவுளைக் காப்பாற்றி மீட்டெடுக்கிறார் ஜேன் ஃபோஸ்டர். இவர் அடிப்படையில் ஓர் இயற்பியல் ஆய்வாளர் என்பதால், தோர் வசித்துவந்த கிரகம் குறித்துத் தெரிந்துகொள்வதில் ஆர்வம்காட்டுகிறார். இந்த ஆர்வம், தோர் மீதான காதலாக மலர்கிறது. சுதாரித்து எழுந்ததும் தோர் பறந்து பறந்து எதிரிகளை அழிக்க ஆரம்பிக்கிறார். அதற்குப் பிறகு, அது கடவுளின் படம். ஜேனுக்கு இடமில்லை.

எதிர்க்குரல்: சிலந்திகள்... வௌவால்கள்... ஆண்கள்

க்வென் ஸ்டேஸி, எப்போதும் வகுப்பில் முதலிடம் பிடிப்பவர்; பரிவோடு நடந்து கொள்பவர். உடல் வலுவற்ற ஒரு மாணவர் சக மாணவர்களால் கிண்டலடிக்கப்பட்டால், தாக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட மாணவருக்குச் சார்பாக நின்று குரல்கொடுக்கக்கூடியவர்; தன்னுடைய காதலன் பீட்டர் பார்க்கராக இருக்கும்போதும் சரி, ஸ்பைடர்மேனான மாறிய பிறகும் சரி... அவனுடைய தேவைகளைப் புரிந்துகொண்டு ஆதரவாக நடந்துகொள்பவர்; ஸ்பைடர்மேன் அற்புத சக்திகொண்டவன் என்றாலும், வில்லனை அழிக்கும் பெரும்பணியில் அவனுக்கு தன்னாலான உதவிகளைச் செய்ய முடியுமா எனப் பார்க்கக்கூடியவர்.

ஸ்டேஸியின் அப்பாவோ, துடிப்பான தன் மகளைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார். ``ஆபத்தான பணிகளில் ஈடுபடும் நீ, என் மகளை மணந்துகொள்ளக் கூடாது’’ என்று அவர் இறப்பதற்கு முன் ஸ்பைடர்மேனிடம் வேண்டுகோளும் வைக்கிறார். ஸ்பைடர்மேனும் இதற்கு ஒப்புக்கொள்கிறார். ஸ்டேஸியிடமிருந்து அவர் காதல் பறிக்கப்படுகிறது. துணிச்சல் இருந்தும், புத்திசாலியாக இருந்தும் ஸ்டேஸியால் தன் அப்பாவிடம் தன் தரப்பை வலுவாக எடுத்து வைக்க முடியவில்லை.

`அப்பா, நான் எங்கு போனாலும் நீ உடன் வரத் தேவையில்லை. ஐயோ விழுந்துவிட்டால் என்னாகும் என்று, ஒரு குழந்தையை நடக்கவிடாமல் வைத்திருப்பாயா? ஆபத்துகள் தெருவில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளிருந்தும் வரலாம். என் கை விரல்களைப் பிடித்துக் கொண்டு நான் செல்லும் இடமெல்லாம் உன்னால் வர முடியாது அப்பா. தவிரவும், துப்பாக்கி இருந்தும், பெரிய கேப்டனாக இருந்தும், காவல்துறையே உன் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தாலும் நீயும் இறுதியில் ஆபத்தைச் சந்திக்கத்தான் நேர்ந்தது அல்லவா? உன்னையும் ஒருவன் கொல்லத்தான் செய்தான் அல்லவா?'

அனுமதித்திருந்தால் தன் காதலனிடமும் ஸ்டேஸி திடமாகப் பேசியிருப்பார்... `இதோ பார் பீட்டர். உன்னைப்போல என்னை சிலந்தி எதுவும் கடிக்கவில்லை என்றாலும், என்னிடம் இயல்பாகவே வலுவும் துணிச்சலும் இருக்கின்றன. என்னை அள்ளி எடுத்து உன் கரங்களுக்குள் வைத்து அழுத்தி, `இதைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்!’ என்று அப்பா சொல்ல, நான் ஒன்றும் பொம்மையல்ல. `சரி, பார்த்துக்கொள்கிறேன்’ என்று வாக்குறுதி கொடுக்க, நீ என் உடைமையாளனும் அல்ல. அப்படி உன்னை நீயே நியமித்துக்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. உன் தோளைப் பற்றிக்கொள்ளவும் உன் விரல்களைப் பிடித்துக்கொள்ளவும் நான் விரும்புகிறேன் என்பதற்காக, என்னை பலவீனமானவள் என நினைத்துவிடாதே! என் காதலை ஏற்க வேண்டுமா, நிராகரிக்க வேண்டுமா என்பதை முடிவுசெய்யும் உரிமை உனக்கு இருக்கிறது. ஆனால், உன் மீதான என் காதலை எனக்காக நீ தியாகம் செய்வதை எந்தத் தர்க்கத்தின் பெயராலும் அனுமதிக்க முடியாது. என்னைத் துறந்தால்தான் உலகைக் காக்க முடியும் என்று யார் சொல்லிக்கொடுத்தது உனக்கு?’

காமிக்ஸை முன்வைத்து இப்படியெல்லாம் கூட விவாதிக்க முடியும் என்பதே சமீபத்திய கண்டுபிடிப்புதான். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அமெரிக்காவில் எழுந்த பெண்ணிய அலைகள்தான் இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் துறை சார்ந்த ஆய்வாளர்கள். பெண்கள் ஏன் இரண்டாம் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்? ஏன் வேலையிடங்களில் பெண்களைக் காண முடியவில்லை? அப்படியே அரிதாகக் கண்டாலும் அவர்களுக்கு ஏன் ஆண்களுக்குச் சமமாக ஊதியம் வழங்கப்படுவதில்லை? பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் ஏன் பொருட்படுத்தப்படுவதில்லை? பெண்களுக்குச் சாதகமாக சட்டவிதிகள் ஏன் திருத்தப்படக் கூடாது? சமூகத்தில் ஆண்களுக்கு நிகரான இடத்தைப் பெண்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டி ஒலித்த லிபரல், பெண்ணியக் குரல்கள் எழுப்பிய கேள்விகள் சமூகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவி எதிரொலித்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதிர்க்குரல்: சிலந்திகள்... வௌவால்கள்... ஆண்கள்

அதன் விளைவாக, கலைப் படைப்புகளில் பெண்கள் சித்திரிக்கப்படும்விதம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. காமிக்ஸ் உலகமும் இதிலிருந்து தப்பவில்லை. அரைகுறை ஆடை அணிந்துகொண்டு ஆண்களை மயக்குவதற்கும், `ஐயோ... என்னைக் காப்பாற்றுங்கள்!’ என்று பரிதாபமாக அலறுவதற்கும் மட்டுமே உங்களுக்குப் பெண் கதாபாத்திரங்கள் தேவைப்படுகின்றனவா? அபூர்வமாக வந்துபோகும் அந்தப் பெண்களும்கூட `அழகிகளாகத்தான்’ இருந்தாக வேண்டுமா? வில்லனைத் துரத்தும் சூப்பர் ஹீரோவைத் துரத்திச்சென்று காதலிப்பதுதான் ஒரு பெண்ணின் உன்னதமான லட்சியமா? வீட்டிலும் பொதுவெளியிலும் மட்டுமல்ல, பல லட்சம் பேர் வாசிக்கும் காமிக்ஸ் கதைகளிலும் பெண்கள் கண்ணியமாக நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறோம்.

உடைமையாக, கவர்ச்சிப் பண்டமாக, பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளாக ஒரு பெண் சித்திரிக்கப்பட்டால், அந்தச் சித்திரிப்பு தவறானது என்பதைச் சுட்டிக்காட்டும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. இந்தச் சமூகத்தில்தான் நீங்கள் இயங்கியாக வேண்டும் என்னும்போது, இந்தச் சமூகத்தில்தான் உங்கள் பிழைப்பு நடக்கிறது என்னும்போது, இந்தச் சமூகத்தோடு சேர்ந்து நீங்களும் ஏன் மாற முயற்சி செய்ய கூடாது? எல்லாம் தெரிந்த உங்கள் சூப்பர் ஹீரோக்களுக்கும் ஏன் இந்த எளிய உண்மையை நீங்கள் கற்றுக்கொடுக்கக் கூடாது?

ஆரம்பத்தில் அவர்கள் கண்டுகொள்ள வில்லை. மாறவோ, மாற்றிக்கொள்ளவோ விரும்பவில்லை. ஆனால், ஆண்களால் ஆண்களுக்காக என்றொரு துறை இனியும் இந்த உலகில் உருவாகப்போவதில்லை என்பது தெரிந்ததும், சந்தை நலனுக்காகக் கொஞ்சம் கொஞ்சம் மாறத் தொடங்கினார்கள். பெண் கதாபாத்திரங்களை ஓரளவு நாகரிகமாக உருவாக்கத் தொடங்கினார்கள். பெண்களுக்கும் கொஞ்சம் உரையாடல்களைக் கொடுத்தார்கள். அவர்களுக்கும் கதையில் ஓர் ஓரமாக இடம் கொடுக்கப்பட்டது. `அழகிகளுக்கு’ மத்தியில் ரேச்சல்களும் ஸ்டேஸிகளும் உருவாகத் தொடங்கினார்கள்.

மேலே கண்டதுபோல இவர்களுடைய உருவாக்கங்களிலும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன என்றாலும் முந்தைய காலங்களோடு ஒப்பிடும்போது நிலைமை மாறியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால், அவர்கள் சுயமாகவே சிந்தித்து, தவறுகளை உணர்ந்து, திருந்தி, ஒரு வொண்டர் வுமனை உருவாக்கிக் கொடுத்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? ஏன் உங்கள் சிலந்தி ஓர் ஆணைத் தேடிப் பிடித்துக் கடிக்க வேண்டும் என்றொரு கேள்வியை அவர்களை நோக்கி வீசவேண்டியிருக்கிறது... அந்தக் கேள்வி அவர்களைக் கடிக்கும்வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.

ஆம், இன்னமும் மாறவேண்டியது மிக மிக அதிகம். கிறிஸ்டோபர் நோலன் தொடங்கி வொண்டர் வுமன் வரை போதாமைகள் நீடிக்கத்தான் செய்கின்றன. தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து, கூர்மையான கேள்விகளை எழுப்பி, தொடர்ந்து போராடினால் மட்டுமே இந்தப் போதாமைகளைக் களைய முடியும். தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும் வௌவால்களைத் தட்டியெழுப்பி, `இதுதான் உலகம். நிமிர்ந்து நேராகப் பார்’ என்று சொல்வது எளிதல்ல. அதைச் செய்ய, பெரிய வொண்டர் வுமன் படையே தேவை!

- மருதன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism