Published:Updated:

``உங்களைச் சுத்தியிருக்கிற மரங்களைப் பத்தி தெரிஞ்சுக்கங்க!" - `Tamilnadu Treepedia App' சுதா

"புத்தகமாகப் போட்டால் மக்களை முழுமையாகச் சென்று சேராதென்று தெரியும். அதனால் ஆப் உருவாக்கும் எண்ணம் மனசுக்குள் ஸ்பார்க் ஆச்சு."

``உங்களைச் சுத்தியிருக்கிற மரங்களைப் பத்தி தெரிஞ்சுக்கங்க!" - `Tamilnadu Treepedia App' சுதா
``உங்களைச் சுத்தியிருக்கிற மரங்களைப் பத்தி தெரிஞ்சுக்கங்க!" - `Tamilnadu Treepedia App' சுதா

ந்தியாவிலேயே முதன் முறையாக `தமிழ்நாடு ட்ரீபீடியா' (மரக் களஞ்சியம்) என்ற ஒரு ஆப்பினை உருவாக்கி, மரம் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பதை அதிகப்படுத்துவதற்காக புதிய முயற்சியை எடுத்திருக்கிறார் வண்டலூர் உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் சுதா ராமன். இது குறித்து அவரிடம் பேசினேன்.

``இயற்கை தன்னுடைய பருவகால மாற்றத்தைத் தொலைத்ததற்கு மரம் அழிப்பும் ஒரு காரணம். தெருக்கள் அகலப்படுத்துதல், சாலை அகலப்படுத்துதல், வீடு கட்டுதல், அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்கள் செய்தல் எனப் பல காரணத்திற்காக எத்தனையோ ஆயிரம் மரங்கள் தினமும் அழிக்கப்படுகின்றன. ஆனால் நாம் அழிக்கும் மரத்திற்கு இணையாக எத்தனை மரங்களை  நட்டு இருக்கிறோம் என்பது ஒவ்வொருவரும் குற்ற உணர்வுடன் யோசிக்க வேண்டிய ஒரு விஷயம். ஆனால், அது தொடர்பான விழிப்புணர்வு கூட நிறைய மக்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. இதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக எடுத்த முயற்சிதான் `ட்ரீ பீடியா' என்றவர் ஆப் உருவாக்கியது பற்றிய தகவல்களைப் பகிர்கிறார்.

எனக்குச் சொந்த ஊர் நெய்வேலி. படிச்சது இன்ஜினீயரிங். படிப்புக்குப் பின் யூ.பி.எஸ்ஸி தேர்வுக்குத் தயார் செய்தேன். ஐ.எஃப்.எஸ். ஆக வெற்றி பெற்றதன் மூலமாக வனத்துறையில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இன்ஜினீயரிங் ஸ்டூடன்ட் என்பதால் வனத்துறை, மரம் வளர்ப்பு, என்பது போன்ற எந்தத் தகவலும் தெரியாமல்தான் டிரெயினிங்கில் சேர்ந்தேன். கத்துக்க வேண்டியது நிறைய இருந்தது. நிறைய ஆராய்ச்சிகளும் மேற்கொண்டேன். மரம் வளர்ப்பில் விதை தேர்வு செய்வதிலிருந்து, அறுவடை செய்வது வரை எல்லாமே ஒரு கலைனு அப்போதுதான் புரிய ஆரம்பிச்சுது. ஆனால், மக்களுக்கு இந்தத் தகவல்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் மரம் வளர்ப்பு ஆர்வலர்களுக்கும் கூட நிறைய வழிகாட்டுதல்கள் தேவைப்பட்டன. அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ன மாதிரியான மண், என்ன வகை மண்ணிற்கு என்ன வகையான மரங்களை வளர்க்க வேண்டும்.

என்ன மாதிரியான உரங்களைப் பயன்படுத்த வேண்டும். ஊடு பயிராக எதை விதைக்கலாம்.எவ்வளவு இடைவெளியில் அடுத்தடுத்து மரங்கள் நடவேண்டும். என்ன வகை மரங்களுக்கு என்ன மாதிரியான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என எல்லாத் தகவல்களையும் சேமிக்க ஆரம்பித்தேன். நிறைய விவசாயிகளை நேரில் பார்த்தும் தகவல் கேட்டு தெரிந்து கொண்டேன். இந்தத் தகவலையெல்லாம் புத்தகமாகப் போட்டால் மக்களை முழுமையாகச் சென்று சேராதென்று தெரியும். அதனால் ஆப் உருவாக்கும் எண்ணம் மனசுக்குள் ஸ்பார்க் ஆச்சு. டிரெயினிங்கில் இந்தத் தகவலைச் சொல்லும் போதே நிறைய பாசிட்டிவ் ஃபீட் பேக் கிடைத்தது. அதன் பின் பணியில் சேர்ந்ததும் வனத்துறையின் சார்பாக நிதியுதவி பெற்று வனத்துறையின் உதவியோடு கூடுதல் தகவல் சேகரித்து, ``ட்ரீபீடியா ஆப்பினை உருவாக்கினோம். வனத்துறை அமைச்சர் அவர்கள் மூலம் இந்த இயற்கை ஆப் மக்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் முழுமையான வெற்றி மக்கள் அதைப் பயன்படுத்துவதில்தான் உள்ளது என்பதால், மாவட்ட விவசாயக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். மரம் வளர்ப்பு தொடர்பான வீடியோக்கள் அப்லோடு செய்துள்ளோம். மேலும், நேரடி ஆலோசனை வேண்டும் என்பவர்களுக்கு அவர்களுக்கு அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளும் வசதியையும் உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இந்த ஆப்பில் உள்ள தகவல்கள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என ரெண்டு மொழியிலும் இருப்பது கூடுதல் சிறப்பு. கூகுள் பிளே ஸ்டோரில் இப்போது இதை நிறைய பேர் டவுன்லோடு செய்து பயன்படுத்துகிறார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு பெண்ணாக நான் எடுத்த இந்த முயற்சிக்கு இப்போது நிறைய பாராட்டுகள் கிடைக்கிறது. மரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது" என்கிறார் மகிழ்ச்சியாக.