Published:Updated:

நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி

நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி

நேசக்காரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“குழந்தைகளுக்கான கற்பித்தலில் இருந்து தான் புரட்சி தொடங்கும் என  நம்புகிறவள் நான்'' என்ற குரலிலிருந்த உறுதியைப் போலவே இருக்கிறது, மீனாட்சி தேர்ந்தெடுத்த பாதையும் அதில் அவர் செய்யும் பயணமும்.

பி.ஏ ஆங்கிலத்தில் மேடை நாடகத்தை ஒரு பாடப்பிரிவாகப் படித்ததுடன், பல மேடைகளில் நடித்தும் இருக்கிறார். தொடர் பாராட்டுகள். ஆனாலும் நிறைவு இல்லை. கல்லூரியில் படிக்கும்போது, ஒருநாள் நிகழ்ச்சியாக ஆதரவற்ற குழந்தைகளைப் பார்க்கச்சென்ற மீனாட்சிக்கு, `இந்தக் குழந்தைகளுடனான நம் பந்தம் ஒரே நாளுடன் முடிந்துபோய்விடக் கூடாது, தொடர்ந்து இவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும்' என்கிற எண்ணம் எழுகிறது.

தான் கற்றுவைத்திருந்த கலையையே ஒரு கருவியாக்கி, இதுபோன்ற குழந்தைகளுக்காக, குழந்தையாகவே மாறி செயலாற்ற ஆரம்பித்திருக்கிறார். இப்போது இந்தச் சேவையின் ஆறாம் ஆண்டில் பூரிப்புடன் நின்றுகொண்டிருக்கிறார் மீனாட்சி.

நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி

விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வந்து, தான் கற்றுக்கொண்ட பல்வேறு கலைகளைப் பகிர்ந்தளிக்கும் குணம்கொண்ட இவரை குடும்பம் பெரிதாக ஆதரிக்கவில்லை. அதோடு, மீனாட்சி முறைப்படி பறையிசையும் கற்றுக் கொண்டிருக்கிறார் எனத் தெரிந்ததும், அவர் அப்பா, மகளை முற்றிலும் நிராகரித்திருக்கிறார்.

``வீட்டுக்கு யார் வந்தாலும் நீங்க என்ன ஆளுங்கன்னு கேட்கிற அப்பாவால் நான் பறையைத் தொட்டதை ஏத்துக்கவே முடியல. ஆனாலும், நான் விடலையே'' என்கிற அவர்,  கற்றலைத் தொடர்ந்திருக்கிறார்.

குடும்பத்தின் உதவியை நாடாமல் தன்னிச்சையாக இயங்க வேண்டுமென்கிற தேடலில், `ரெயின்போ' பண்பலையில் பகுதி நேர தொகுப்பாளராக வேலை கிடைத்திருக்கிறது. அதில் கிடைக்கும் தொகையையும், தனியார் பள்ளிகளில் பயிற்சி கொடுப் பதற்காகப் பெறும் சன்மானத்திலும் சக்கரம் சுழன்றிருக்கிறது.

சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, ஆதரவற்றோர் இல்லம், குடிசைப்பகுதி ஆகிய இடங்களில் உள்ள குழந்தைகளைத் தேடிச்சென்று, நாடகம் மூலமாக விழிப்புணர்வு அளிப்பதுடன் பறை யிசையையும்  கற்றுத் தந்திருக்கிறார். மாதவிடாயைக் கையாளுதல், பாலியல் வன்முறைக்கு எதிராக நிற்கும் மனத் திடம், கழிவறையின் அவசியம் போன்றவற்றை உள்ளடக்கிய வீதி நாடகத்தைக் குடிசைப்பகுதி பெண்கள் மத்தியில் நடத்திவருகிறார். 

``எப்போ நினைச்சாலும் என் உடம்பு சிலிர்க்கிற ஒரு விஷயம் என்னன்னா, ஒருமுறை மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு மியூசிக் தெரபியா பறை வாசிக்கப் போயிருந்தேன். அவ்ளோ நேரம், யார்கிட்டயும் பேசாம சுவரையே பார்த்துட்டு இருந்த ஒரு குழந்தை, பறை அடிச்சுக்கிட்டு இருந்த எங்கிட்ட ஓடிவந்து, நின்ன இடத்திலேயே துள்ளித் துள்ளிக் குதிச்சு சிரிச்சான். குழந்தை சிரிக்கச் சிரிக்க என் கண்ல இருந்து தண்ணி கொட்டிட்டே இருந்தது. ஆனாலும், நா அடிக்கிறத நிறுத்தல. அந்த நாளை என்னாலே மறக்க முடியாது'' என நினைவுகூர்கையில் மீனாட்சியின் கண்களில் நீர் தளும்புகிறது.

இப்போது மீனாட்சி ஓர் அமைப்பை உருவாக்கித் தன் பணிகளைத் தொடர்கிறார். 20 பேர் கொண்ட குழுவினருடன் பறை, கரகம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கைவினைக்கலை, ஓவியம், புகைப்படக்கலை, வீதி நாடகம், மைமிங் ஆகியவற்றை குழந்தைகளுக்குக்  கற்றுக்கொடுக்கிறது இவரின் குழு. எல்லாமே வணிகமயமாகிவிட்ட சூழலில், இவை அனைத்தும் மீனாட்சியின் குழுவினரால் இலவசமாகப் பயிற்று விக்கப்படுவதுதான் சிறப்பு.

``எனக்கு வெளியில கிடைக் கிற அங்கீகாரத்தைப் பார்த்த பிறகுதான், என் லட்சியத்தைப் புரிஞ்சுக்கிட்டார் எங்கப்பா. இப்போ எனக்கு ஆதரவா இருக்காரு. விழுப்புரத்தில என் தாத்தா இறந்தபோது, அப்பாவே என்னை பறை வாசிக்கச் சொன்னாரு. ஒட்டுமொத்த கிராமமே எதிர்த்தது. அவங்க எல்லோரையும் எதிர்த்து எங்கப்பா நின்னாரு. நான் பறை அடிக்க ஆரம்பிச்சேன். விடுதலையின் மொழியைக் கலையைவிட வேற எதுவும் துல்லியமா சொல்லிவிட முடி யாது. அதைத்தான் விளிம்புநிலை யினருக்குச் சொல்லிக் கொடுத் துட்டு இருக்கேன்'' என மீனாட்சி பேசி முடிக்கும் போது, பறையோசை அதிர்ந்து அடங்கியது போலிருக்கிறது!

-தமிழ்ப்பிரபா,  படம் : க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு