Published:Updated:

குடும்ப பொறுப்புகளையும் சுமந்து, மாதம் 4 லட்சம் பிசினஸ் செய்யும் தருணி!

குடும்ப பொறுப்புகளையும் சுமந்து, மாதம் 4 லட்சம் பிசினஸ் செய்யும் தருணி!
குடும்ப பொறுப்புகளையும் சுமந்து, மாதம் 4 லட்சம் பிசினஸ் செய்யும் தருணி!

ஃபேஷன் நகைகளைப் பொறுத்த வரை தமிழ்நாட்டை விட, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற இடங்களில்தான் விலை மலிவாக இருக்கும்.

``குழந்தைகள்,கணவர்னு என்னதான் குடும்பப் பொறுப்புகள் இருந்தாலும், ஒரு பெண்ணாக நமக்கான அடையாளமும் ரொம்ப முக்கியம். அதை உருவாக்கிக்கொள்வதில்தான் இருக்கிறது ஒரு பெண்ணுக்கான வெற்றி" என எதார்த்தமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த தருணி. பெண்களுக்கான ஃபேஷன் நகைகளை வாங்கி விற்பதை தன்னுடைய பிசினஸாக தொடங்கிய தருணியின் மாத வருமானம் நான்கு லட்சம். தன்னுடைய பிசினஸ் பற்றியும் அதில் உள்ள சவால்கள் பற்றியும் தருணி பகிரும் தகவல்கள்.

``எனக்கு சொந்த ஊர் ஆந்திரா, சின்ன வயசிலேயே படிப்புக்காக சென்னையில் செட்டிலாகிட்டேன். மனித வளத்துறையில் முதுகலைப் பட்டம் முடிச்சிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன். சில வருஷங்களில் திருமணம் முடிந்து குடும்பம், குழந்தைகள் என ஹோம் மேக்கராக வீட்டில் செட்டில் ஆகிட்டேன். என்னுடைய ரெண்டாவது குழந்தை டெலிவரிக்குப் பின், ஏதோ ஒரு வெறுமை மனசுக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு, என்னையே தொலைத்த ஒரு ஃபீலிங் மன அழுத்தமாக உருவெடுத்து நின்னுச்சு. அதற்கான மாற்றத்தை யோசிச்ச போதுதான் மீண்டும் வேலைக்குப் போகும் எண்ணம் வந்தது. ஆனால், கைக்குழந்தையை வீட்டில் விட்டுட்டு வேலைக்குப் போக மனசில்லாமல் மீண்டும் வீட்டிலேயே முடங்க ஆரம்பிச்ச போதுதான், குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே பிசினஸ் பண்ற ஐடியா ஸ்பார்க் ஆச்சு. என்ன பிசினஸ் பண்ணலாம்னு நிறைய யோசிச்சேன், ப்ரெண்ட்ஸ்கிட்ட கைடன்ஸும் வாங்கினேன். அப்போதான் ஃபேஷன் ஜூவல்லரிக்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பு பற்றி தெரிஞ்சுச்சு. ஃபேஷனில் எனக்கும் ஈர்ப்பு இருந்ததால், ஃபேஷன் ஜூவல்லரி பிசினஸை ஸ்டார்ட் பண்ற முடிவுக்கு வந்தேன். என் கணவரும் ஊக்கம் கொடுத்து உறுதுணையாக நின்றார்.

பிசினஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்பே ஃபேஷன் நகையில் இப்போது என்ன வகை டிரெண்டில் உள்ளது, எங்கு வாங்கலாம், எப்படி மார்க்கெட் செய்ய வேண்டும் என்ற புரிதலுக்காக நிறைய தகவல்களை ஆன்லைனில் படித்து தெரிந்துகொண்டேன். என்னுடைய சேமிப்பிலிருந்து இருபது ஆயிரம் ரூபாயை என்னுடைய பிசினஸிற்கான முதலீடாக எடுத்துக்கொண்டேன். ஃபேஷன் நகைகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை விட,ஜெய்ப்பூர், ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற இடங்களில்தான் விலை மலிவாக இருக்கும் என்பதால், நேரடியாக அங்கு சென்று யூனிக்கான, டிரெண்டியான நகைகளை பர்ச்சேஸ் செய்தேன். எல்லா நகைகளையும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் அப்லோடு செய்தேன். சில நாள்களுக்குப் பின் கஸ்டமர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆரம்பத்தில் பிசினஸ் கொஞ்சம் டல்லாகத்தான் இருந்தது.

பிசினஸின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காகக் கல்லூரிகள், ஐ.டி நிறுவனங்களில் ஸ்டால்கள் அமைத்து நகைகளை விற்பனை செய்தேன். என்னுடைய யுனிக்கான கலெக்‌ஷன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கவே அடுத்தடுத்து ஆர்டர்கள் குவியத்தொடங்கியது. இப்போது விற்பனையில் பிஸி என்பதால் ஒவ்வொரு முறையும் வெளி மாநிலங்களுக்குச் சென்று பர்சேஸ் செய்ய முடியல, அதனால் அங்கு இருக்கும் டிசைனர்களை போனில் தொடர்புகொண்டு ஆன்லைன் ஆர்டர் கொடுத்துருவேன். அவங்க நகைகளை கொரியர் அனுப்பிருவாங்க. இதனால் போக்குவரத்து செலவும் குறைந்து லாபமும் அதிகமாகியுள்ளது.

பொதுவாக ஃபேஷன் நகை என்றால் விலை அதிகமாயிருக்குனு கஸ்டமர்கள் ஃபீல் பண்ணுவாங்க. அதனால் நகைகளின் மீது எனக்குக் கிடைக்கும் லாபத்தைக் குறைத்து விற்பனையை அதிகரித்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்து எனக்கு வருவாய் அதிகமாகத் தொடங்கியது. அடுத்தகட்ட வளர்ச்சியாகச் சென்னையில் உள்ள ஒரு மாலில் ஃபேஷன் நகைகளுக்காக ஷோ ரூம் திறந்து விற்பனையை ஆரம்பித்தேன். டிவி ஸ்டார்ஸ், செலிபிரெட்டி என என் நகை கலெக்‌ஷனுக்கான வாடிக்கையாளர்கள் அதிகமாக ஆரம்பிச்சாங்க. பிசினஸின் உதவிக்காகப் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆறு பெண்களை வேலைக்கு சேர்த்துக் கொண்டேன். சொன்னா நம்ப மாட்டீங்க இருபது ஆயிரம் ரூபாயில் தொடங்கிய பிசினஸ் மூலம் இப்போது ஆண்டுக்கு 45 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன்." என்றவர் தன்னுடைய பிசினஸில் உள்ள சவால்களைப் பற்றிப் பகிர்கிறார்.

"ஃபேஷனில் அவ்வப்போது டிரெண்ட் மாறிக்கொண்டே இருக்கும். அதனால் மொத்தமாக நகைகளை பர்சேஸ் செய்து வைப்பது ஆபத்தானது. அதே சமயம் சில நேரத்தில் ஸ்டாக் கிடைக்காமல் வாடிக்கையாளர்களையும் இழக்க வேண்டியது இருக்கும். ஆர்டர்களுக்கு ஏற்ப நகைகளைக் கொரியர் செய்யும் போது சில சமயங்களில் நகைகள் டேமேஜ் ஆக வாய்ப்பு உள்ளது. அந்தச் செலவும் நம் லாபத்தையே பாதிக்கும். சிலர் வாங்கிட்டு பிடிக்கலைன்னு ரிட்டன் கொடுப்பாங்க. சில கஸ்டமர்கள் ஒரு குறிப்பிட்ட நகையை காண்பித்து அதே போன்று வேண்டும் என்பார்கள். அந்த மாதிரி சூழல்களில் நகைகளை உருவாக்கும் டிசைனர்களிடமிருந்து ஆர்டர் செய்து வாங்கிக்கொடுக்க வேண்டியிருக்கும். அப்படியான நேரத்துல லாபம் குறைவாக கிடைக்கும். அதெல்லாம் ஒரு அனுபவமா எடுத்துகிட்டு கஸ்டமர்களுக்கா அனுசரித்து போனா மட்டும்தான் பிசினஸில் தாக்குப் பிடிக்க முடியும்" என்று முடித்தார்.

பின் செல்ல