Published:Updated:

யோகாசனத்தில் உலக சாதனை படைத்த அம்ருதா!

யோகாவில் 8 முறை உலக சாதனை படைத்துளார் என்பது இவருக்கான அடையாளம்.

யோகாசனத்தில் உலக சாதனை படைத்த அம்ருதா!
யோகாசனத்தில் உலக சாதனை படைத்த அம்ருதா!

``மனசுக்குப் பிடிச்ச வேலையை ரசிச்சு பண்ணும்போது 8 முறை இல்ல, 80 முறைகூட உலக சாதனை பண்ணலாம்’’ என எனர்ஜெட்டிக்காகப் பேசும் அம்ருதா, சிதம்பரத்தைச் சேர்ந்த 27 வயது பெண். இதுவரை யோகாவில் 8 முறை உலக சாதனை படைத்துளார் என்பது இவருக்கான அடையாளம். மேலும், கிராமப்புற மாணவர்களுக்கான யோகா பயிற்சிகள் வழங்குதல், வெளிநாடு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மற்ற நாடுகளில் யோகக் கலையைப் பரப்புதல் என யோகாவில் தனக்கான எல்லையை விரிவடைய வைத்திருக்கிறார். இது குறித்து அம்ருதா பகிரும் தகவல்கள்.

``எங்க அம்மா ஒரு யோகா டீச்சர். தினமும் காலையில் எழுந்தவுடன் யோகாசனம் செய்வது அம்மாவின் வழக்கம். அதைப் பார்த்து வளர்ந்த எனக்கு என்னை அறியாமலேயே யோகா மீது ஈர்ப்பு வர, அம்மாகிட்ட கத்துக்க ஆரம்பிச்சேன். என்னுடைய 10 வயதில் இருந்து யோகா என்னுடைய ரெகுலர் ஹேபிட்டாக மாறிருச்சு. ஆரம்பத்தில் உடலை வளைக்கிறது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்துச்சு. ஆனால், தொடர் பயிற்சிகள் மூலம் சாத்தியப்படுத்திக்கிட்டேன். பள்ளிப்படிப்புடன் சேர்த்து யோகாவிலும் சர்டிபிகேட் கோர்ஸ்கள் படிக்க ஆரம்பித்தேன். பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியில் என்னுடைய யோகாசனம் நிச்சயம் ஒரு ஸ்டேஜ் ஈவென்டா இருக்கும். அந்த வயசில் கிடைத்த கைத்தட்டல்கள்தான் அடுத்தடுத்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான யோகாசனப் போட்டிகளில் என்னுடைய வெற்றிக்குக் காரணமாக இருந்துச்சு. 

யோகாசனம் மூலம் மனசை எளிதாக ஒருநிலைப்படுத்த முடியும்ங்கிறதுனால நான் படிப்பிலும் டாப்பரா இருந்தேன். எம்.இ கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், எம்.எஸ்.இ யோகா என ரெண்டு மாஸ்டர் டிகிரியை ஒரே நேரத்தில் முடிக்க யோகா பயிற்சிகள் மட்டும்தான் காரணம். யோகாவை ஒர் ஆர்வத்தில்தான் கத்துகிட்டேன். ஆரம்பத்தில் உலக சாதனை செய்யணும்னு எந்த பிளானும் இல்ல. அப்பாதான் கைடன்ஸ் பண்ணாங்க. நிறைய உறவினர்கள், 'பொம்பளை பிள்ளைக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை'ன்னுகூட சொன்னாங்க. ஆனால், அப்பாவும் அம்மாவும் முழு சப்போர்ட் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினாங்க. அவங்களுடைய ஆர்வத்தாலும் வழிகாட்டுதலாலும்தான் 8 முறை உலக சாதனை சாத்தியமாச்சு’’ என்ற அம்ருதா தன்னுடைய உலக சாதனைகள் பற்றிய தகவல்களையும் அதற்கு எடுத்துக்கொண்ட பயிற்சிகள் பற்றியும் பகிர்கிறார்.

``கல்லூரி முதுகலைப் படிப்பு படிக்கும்போதுதான் உலக சாதனை செய்ய ஆரம்பிச்சேன். 2013-ம் ஆண்டு லகு வஜ்ராசனத்தை 7 நிமிடங்கள் செய்து லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட் சாதனை படைத்தேன். 2014-ம் ஆண்டு அதே ஆசனத்தை 20 நிமிடங்கள் செய்து என்னுடைய சாதனையை நானே முறியடித்து மீண்டும் உலக சாதனை படைத்தேன். மொத்தம் 84 லட்சம் வகையான ஆசனங்கள் இருக்கின்றன. அதில் 600 வகையான ஆசனங்கள்தான் வழக்கத்திலும் பயிற்சியிலும் உள்ளன. மக்களிடம் எல்லாவகையான ஆசனங்களையும் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து 1,088 வகையான ஆசனத்தை 2.45 மணிநேரத்தில் செய்து முடித்து, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட், தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட் என மூன்று புத்தகத்திலும் ஒரே நேரத்தில் இடம்பிடித்தேன். அடுத்தபடியாக, தண்ணீரின் மீது மிதந்தபடியே ஆசனம் செய்தது, 18 நிமிடத்தில் சூரிய நமஸ்காரத்தை 108 முறை செய்தது. வேகன் டயட் என்று சொல்லக்கூடிய இயற்கையான காய்கறிகள், பழங்களை மட்டும் 6 மாத காலம் உணவாக எடுத்துக்கொண்டு 27 மணி நேரத் தொடர் ஆசனம் செய்தது என அடுத்தடுத்து 7 முறை உலக சாதனை படைத்தேன். இறுதியாகக் கடந்த மாதம் சீனாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பரஸ்வா பூர்ணா தனூர் அசனத்தை 15 நிமிடங்கள் செய்து எட்டாவது முறை உலக சாதனை படைத்துள்ளேன். தினமும் நான்கு மணிநேர பயிற்சி, சரியான டயட் மட்டும் அடுத்தடுத்த சாதனைகளுக்கான அடிப்படை விதியாகக் கடைப்பிடித்து வருகிறேன்.

இப்போது இந்திய அளவில் உள்ள யோகா ஆசிரியர்களுக்கு, புது விதமான யோகப் பயிற்சிகள் வழங்கி அவர்களின் மூலம் கிராமப்புற மாணவர்களிடத்தில் யோகா கலையைக் கொண்டுசேர்ப்பதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறேன். சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அங்கு பயிற்சி வகுப்புகள் எடுப்பது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எடுப்பது என பிஸி. கூடிய விரைவில் கின்னஸ் சாதனையாளராகவும் பார்ப்பீங்க!’’ என்று தன்னம்பிக்கையுடன் விடைகொடுக்கிறார் அம்ருதா.