Published:Updated:

`சமுத்திரக்கனி அண்ணா நடிக்க கத்துக்கொடுத்தாங்க!' - உலக சாதனை டு சினிமா ஆர்டிஸ்ட் ஏஞ்சலின்

சு.சூர்யா கோமதி
`சமுத்திரக்கனி அண்ணா நடிக்க கத்துக்கொடுத்தாங்க!' -  உலக சாதனை டு சினிமா ஆர்டிஸ்ட் ஏஞ்சலின்
`சமுத்திரக்கனி அண்ணா நடிக்க கத்துக்கொடுத்தாங்க!' - உலக சாதனை டு சினிமா ஆர்டிஸ்ட் ஏஞ்சலின்

பிறவியிலேயே அட்ரினல் சுரப்பி இல்லாமல் பிறந்து மரணத்துடன் போராடினாலும் தன்னுடைய நடனத்திறமையின் மூலம் பதிமூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார் ஏஞ்சலின் ஷெர்லின். தற்போது சமுத்திரக்கனி இயக்கும் `நாடோடிகள் -2' படத்திலும் கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். சினிமா என்ட்ரி பற்றி ஏஞ்சலினிடம் பேசினோம்.

``என்னுடைய பிறவி குறைபாட்டை நான் பெரிய கஷ்டமாகப் பார்த்ததே இல்ல. எவ்வளவோ கஷ்டத்திலும் நடனத்தை அடுத்தடுத்த தளங்களுக்கு கொண்டு போயிட்டு இருக்கேன். என்னுடைய கல்லூரியில் நடந்த கல்ச்சுரல் நிகழ்ச்சிக்கு சமுத்திரக்கனி அண்ணா விருந்தினராக வந்திருந்தாங்க. அன்று நான் பொய்க்கால் குதிரை ஆடியபடியே சிலம்பம் சுற்றினேன். என்னுடைய பர்ஃபாமன்ஸை பார்த்துட்டு கல்லூரியில் என்னைப் பற்றி விசாரிச்சுருக்காங்க.

நான் இதற்கு முன்னாடி சிலம்பம் சுற்றின வீடியோ, நடனம் ஆடிய வீடியோ எல்லாவற்றையும் பார்த்துட்டு அவங்க படத்துல ஒரு போல்டான பொண்ணு கேரக்டர் ரோல் இருக்கு. அந்த ரோலை பண்ணமுடியுமான்னு கேட்டாங்க. பெண்கள் பாதுகாப்பு, தற்காப்பு சம்பந்தப்பட்ட கதைக்களம் என்பதால் வீட்டிலேயும் ஒ.கே சொல்லிட்டாங்க. இப்போ ஷூட்டிங் போயிட்டு இருக்கு. ஆரம்பத்தில் கொஞ்சம் படபடப்பு இருந்துச்சு என்றாலும் சமுத்திரக்கனி அண்ணாவின் இயல்பான குணம் என்னை நார்மல் மோடுக்குக் கொண்டு வந்திருச்சு. அதுமட்டுமல்ல சின்ன விஷயத்தையும் நுணுக்கமாக எப்படிப் பண்ணனும் என்பதையும் அண்ணா கற்றுக்கொடுத்தாங்க.

நானும் அதை கரெக்டா ஃபாலோ பண்றேன். இப்போ என் நடிப்பைப் பார்த்துட்டு சினிமாக்கு புதுசா இருந்தாலும் நல்லா நடிக்கிறேன்னு எல்லோரும் சொல்றாங்க. கூடிய விரைவில் வெள்ளித்திரையில் பார்ப்பீங்க என்று சொல்லும் ஏஞ்சலின், நடனத்தின் மூலம் தற்போது கின்னஸ் சாதனைக்கு முயன்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.