Published:Updated:

``பிரசவ சந்தேகங்களை ஆன்லைன்ல தேடுறதில்லை!'' - `கர்ப்பிணி' நிஷா... கரிசன கணேஷ்

``பிரசவ சந்தேகங்களை ஆன்லைன்ல தேடுறதில்லை!'' - `கர்ப்பிணி' நிஷா... கரிசன கணேஷ்
``பிரசவ சந்தேகங்களை ஆன்லைன்ல தேடுறதில்லை!'' - `கர்ப்பிணி' நிஷா... கரிசன கணேஷ்

"இந்த மகப்பேறு நேரத்தில் நிஷாவுடன் நான் செலவிடும் நேரம்தான் அவங்களுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய கிஃப்ட் என்பதால் பெரும்பாலான நேரம் அவங்க கூடத்தான் இருக்கேன். அவசியமாகப் போக வேண்டிய ஷூட்டிங்கிற்கு மட்டும் நிஷாவை அவங்க அம்மா பொறுப்பில் விட்டுட்டு போறேன்."

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கணேஷ் வெங்கட்ராம். இவர் விஜே மற்றும் சீரியல் நடிகையுமான நிஷாவை 2015-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோலாகலமாகப் பல சர்ப்ரைஸ்களுடன் நடைபெற்றது. தற்போது நிஷாவின் சீமந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்ட கணேஷ், 'வெயிட்டிங் ஃபார் குட்டி நிஷா/  கணேஷ்' எனப் பதிவிட்டு இருந்தார். தான் அப்பாவாகப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கும் கணேஷிடம் பேசினோம். அவர் குரலில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடுவதை உணர முடிந்தது.

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சொன்னா நம்ப மாட்டீங்க... எங்க குடும்பமே நிஷாவின் தாய்மை தருணத்தை கொண்டாடிட்டு இருக்காங்க. நிஷா, இந்த சர்ப்ரைஸ் நிமிஷத்தை என்கிட்ட சொன்னதில் இருந்து இப்போ வரை... வானத்தில் பறக்குற மாதிரி ஃபீலிங்கில் இருக்கேன். இது வரை நிஷாவுக்கு நல்ல கணவனாக இருந்த எனக்கு, அப்பாவா குழந்தையை நல்லபடியாக வளர்க்கணும் என்ற பொறுப்பையும், புரொமோஷனையும் கொடுத்திருக்காங்க. நிஷா சூப்பர் டூப்பர் சந்தோஷத்துல இருக்காங்க. எங்களோட ஒவ்வொரு நிமிஷத்தையும் எங்க பாப்பாவோட சேர்ந்து கொண்டாடிடுட்டு இருக்கோம். குழந்தை உருவான முதல் நாளில் இருந்தே, குழந்தையின் ஹெல்த்தை மெயின்டெயின் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க நிஷா. அதனாலே எல்லா ஷூட்டிங்கையும் கேன்சல் பண்ணிட்டு முழு நேர அம்மாவா குழந்தையோடு நேரத்தைச் செலவிட்டு இருக்காங்க. சரியான நேரத்திற்குச் சாப்பிடுறது, சின்ன சின்ன யோகா, நடை பயிற்சி, சரியான தூக்கம்னு குழந்தையின் ஆரோக்கியம் சார்ந்த எல்லா விஷயத்திலும் ரொம்ப கவனமா இருக்காங்க. பொதுவா பிரசவ தருணத்தில் பெண்களுக்கு நிறைய சந்தேகம் வரும். அப்படி நிஷாவுக்கு வரும் சந்தேகத்துக்கு ஆன்லைனில் விடைதேடி குழப்பிக்காமல், எல்லாத்தையும் டாக்டர்கிட்ட பேசிதான் முடிவு பண்ணனும்ங்கிறதுல ரொம்ப கவனமாக இருக்காங்க.

இப்போ நிஷாவுக்கு ஆறு மாசம். பெரியவங்களோட ஆசீர்வாதம் நிஷாவுக்கும், பாப்பாவுக்கும் வேணும்ங்கிறதுனால சீமந்தத்திற்கு பிளான் பண்ணினோம். சீமந்தம் டிரெடிஷனல் முறைப்படிதான் நடக்கணும்னு எங்க வீட்டில் சொன்னதால, எங்க வீட்டில் வெச்சே பாரம்பர்ய முறைப்படி சீமந்தத்தை சொந்தக்காரங்களோட அற்புதமா செய்து முடிச்சோம். வந்த எல்லாரும் நிஷாவையும் பாப்பாவையும் வாழ்த்தியிருக்காங்க. அவங்களோட ஆசிர்வாதம் ரெண்டு பேருக்கும் கிடைச்சிருக்கு.

பொதுவா சீமந்தம் முடிஞ்சுட்டா, பொண்ணு தன்னோட அம்மா வீட்டுக்கு போயிருவாங்க. எனக்கு அதில் உடன்பாடில்லை. நிஷாவை டெலிவரி வரை நான்தான் பார்த்துப்பேன்னு ரெண்டு வீட்டிலேயும் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன். அதனால் சீமந்தம் முடிஞ்ச பிறகும் கூட, நிஷா எங்க வீட்டில்தான் இருக்காங்க. வீட்டிலேயே இருக்கிறதால போர் அடிக்குதுனு நிஷா சமயத்தில் சொல்றாங்க. அதனால் சின்ன டிரைவிங், வித்தியாசமான உணவு முறைன்னு எதையாவது புதுசா டிரை பண்ண கூட்டிட்டு போறேன். இந்த மகப்பேறு நேரத்தில் நிஷாவுடன் நான் செலவிடும் நேரம்தான் அவங்களுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய கிஃப்ட் என்பதால் பெரும்பாலான நேரம் அவங்க கூடத்தான் இருக்கேன். அவசியமாகப் போக வேண்டிய ஷூட்டிங்கிற்கு மட்டும் நிஷாவை அவங்க அம்மா பொறுப்பில் விட்டுட்டு போறேன். நிஷாவுக்கு இன்னோரு சர்ப்ரைஸும் வெச்சுருக்கேன். ஆனா, அதை நேரம் வரும் போது சொல்றேன்" என்ற கணேஷ்  இன்னோரு முக்கியமான விஷயம் என முகமலர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.

''என்னோட குட்டி பேபியை எப்போ பார்ப்பேனு நாளுக்கு நாள் ஆர்வம் அதிகமாயிட்டே இருக்கு. வயிற்றில் இருக்கும் எங்க குழந்தைக்காக தினமும் பாட்டுப் பாடுறேன். நிறைய பேசுறேன். என்னுடைய குரலை கேட்டுட்டு என்னோட குட்டி பேபி சூப்பரா ரியாக்ட் பண்ணுறாங்க. நானும் நிஷாவும் சேர்ந்து குழந்தைக்கு நிறைய பெயர் செலெக்ட் பண்ணி வெச்சுருக்கோம். அர்த்தமுள்ள பெயர்தான் வைக்கணும்ங்கிறதுல நிஷா ரொம்பவே உறுதியா இருக்காங்க'' என்றார் மகிழ்வில்.

வாழ்த்துகள் தம்பதியரே!

அடுத்த கட்டுரைக்கு