Published:Updated:

'மனிதா, உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்!'

'மனிதா, உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்!'

பிரீமியம் ஸ்டோரி

க.நாகப்பன்
படங்கள்: வீ.நாகமணி

உன்னால இதெல்லாம் முடியாதுனு எதையும் மத்தவங்க தீர்மானிக்க நான் அனுமதிக்கறதில்ல. நானேதான் முடிவுஎடுக்கிறேன். அதனாலதான், முதுகலை பட்டதாரி, சமூக சேவகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்னு பல முகங்களோட, இந்த மாற்றுத்திறனாளியால இன்னிக்கு சுறுசுறுனு இயங்க முடியுது!''

- அவரின் சலனமற்ற கண்கள் நம்மை ஊடுருவ, ஆழமாக, அழுத்தமாக ஆரம்பித்தார் அருணாதேவி! 

'மனிதா, உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்!'
##~##

விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாதேவி. தென்னிந்தியாவிலேயே எம்.ஏ. சமூகப்பணி (மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்ஸ்) படித்த முதல் மாற்றுத்திறனாளி. இந்த அங்கீகாரத்துக்காக, இவர் கடந்த வந்த பாதை... கஷ்டங்கள் நிறைந்தது. 11-ம் வகுப்பு படிக்கும்போது, கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு தந்தை இறந்துவிட, முட்டி மோதி பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவருக்கு, 'டிகிரி படிக்கணும்’ என்பது கனவு. ஆனால், அறியாமை ஒருபுறம், வறுமை ஒருபுறம் என இயலாமையோடு, தீப்பெட்டி ஒட்டும் தொழிலில் ஒதுங்கியதால், அது அப்போதைக்கு கருகிப்போனது. ஆனால், சென்னையில்இருக்கும் அக்கா வீட்டுக்கு எதார்த்தமாக மேற்கொண்ட பயணம்... புது ஜென்மமாக அவரை எழ வைத்திருக்கிறது. அந்த வேகம், அவர் வார்த்தைகளிலும் பரவியிருந்தது...

'' 'ஸ்கூல் வரைக்கும் எப்படியோ தட்டுத் தடுமாறி வந்துட்டா... காலேஜுக்கு எல்லாம் அவளால போக முடியாது’னு ஊருல என் வாழ்க்கையை வரையறுத்த குரல்கள் எல்லாம் மனசுக்குள்ள சுழன்றடிக்க, மேல படிக்க முடியுமாங்கற விவரங்களை ஏக்கத்தோட சென்னையில தேடினேன். 'படிக்கலாம்’னு பாஸிட்டிவ் பதில் கிடைக்க, அக்காவின் உதவியோட குயின் மேரிஸ் காலேஜுல பி.ஏ., சோஷியாலஜி சேர்ந்தேன். கேசட் மூலமா படிக்கறது, மத்தவங்களை வாசிக்க சொல்லி படிக்கறது, 'ஸ்கிரைப்’ மூலமா எக்ஸாம் எழுதறதுனு எனக்குள்ள எரிஞ்ச உத்வேகத்தால கோர்ஸை வெற்றிகரமா முடிச்சேன்.

அடுத்து... ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்ல 'மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்’. 'மாற்றுத்திறனாளிக்கு எப்படி ஸீட் கொடுக்கறது?’னு தயங்கினாங்க. 'இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கற என்னை, உங்க சந்தேகத்தால மறுபடியும் இறக்கி விட்டுடாதீங்க'னு பிடிவாதமா நின்னேன். எல்லாரையும் போல எனக்கும் என்ட்ரன்ஸ் எக்ஸாம் வெச்சாங்க. அவங்களே ஆச்சர்யப்படற அளவுக்கு, ஃபர்ஸ்ட் மார்க். கோர்ஸ் முடிஞ்சப்போ, 'பெஸ்ட் ஸ்டூடன்ட்’ அவார்டும் வாங்கினேன். 'தென்னிந்தியாவிலேயே எம்.ஏ. சமூகப்பணி படித்த முதல் மாற்றுத்திறனாளி’ங்கற அங்கீகாரமும் கிடைச்சது!'' என்றபோது, அருணாதேவியின் முகத்தில் அத்தனை ஒளி!

''என் படிப்பு, தன்னம்பிக்கையை மட்டுமில்ல... என்னை மாதிரி பள்ளத்துல இருக்கறவங்களை மேடேத்தி விடணும்ங்கற அக்கறையையும் எனக்குக் கொடுத்துச்சு. அதனாலதான் எம்.ஃபில். படிப்புல தமிழக பெண் கைதிகளோட மறுவாழ்வு திட்டத்துக்கான வழிகளை ஆய்வு செஞ்சேன். புழல் சிறையில இருந்த ஆயுள் கைதிகளை சந்திச்சப்போ, தண்டனைக் காலத்துக்கு அப்புறம் சமுதாயத்தோட நிராகரிப்பால அவங்க படற அவஸ்தைகளைப் புரிஞ்சுக்க முடிஞ்சுது. 'அவங்க தொழில் செய்ய முதலீடு தரவும், பெண் கைதிகளோட குழந்தைகள் படிக்கவும் அரசு உதவி செய்யணும்’னு வேண்டுகோள் வெச்சேன். தையல் மெஷின், மாவரைக்கும் மெஷின்னு அந்தப் பெண்களுக்குக் கொடுத்த போலீஸ் அதிகாரிங்க, என் ஆலோசனையைப் பாராட்டினாங்க. ஒரு காலத்துல எல்லாரும் பார்த்து  பரிதாபப் பட்ட நான், மத்தவங்களுக்கு நல்லது செய்யற அளவுக்கு முன்னேறியிருக்கேங்கற அந்த வெற்றியும் சந்தோஷமும் என் ஆர்வத்தை இன்னும் அடர்த்தி ஆக்குச்சு...'' எனும் அருணாதேவி, அதற்குஅடுத்து எடுத்த ஆக்கப்பூர்வ முயற்சிகள் பல!

''தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்புல இணைஞ்சு, சில நல்ல காரியங்களை முன்னெடுத்தேன். சுனாமியால பாதிக்கப்பட்ட கடலோர மாவட்ட மாற்றுத்திறனாளிகள், வறுமை நிலையிலுள்ள மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துக்கு உதவி செய்யறது, இடையில படிப்பை விட்டுட்ட அவங்க குழந்தைங்களை மறுபடியும் பள்ளிக்கூடத்துல சேர்க்கறது, கம்ப்யூட்டர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யறதுனு மெனக்கெட்டேன். தொழில் வாய்ப்பு, படிக்கற வாய்ப்பு எல்லாம் கிடைக்க நானும் ஒரு கருவியா செயல்பட்டுட்டு வர்றேன். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற, வறுமையில் வாழ்பவர்கள்னு பல மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்தப் பார்வைஇல்லாதவ இன்னிக்கு ஒரு ஒளிவிளக்கு!''  எனும் அருணாதேவி, தன் சேவைகளுக்காக தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம்இருந்து பெற்ற 'சாதனைப் பெண்மணி விருது’ உட்பட, இருபத்தி ஐந்து விருதுகளைப் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளால எடுக்கப்பட்ட 'மா’ படத்தில், உதவி இயக்குநர்கள் வழிகாட்டுதலோட டப்பிங்கும் பேசியிருக்கிறார்.

''அமெரிக்க தூதரக உயர் அதிகாரி ப்ரெய்ன் டால்டன், என்னைப் பத்தி கேள்விப்பட்டு, என் சேவையைப் பாராட்டினதோட, வாஷிங்டன்ல நடக்கப் போற 'இன்டர்நேஷனல் விசிட்டிங் லீடர்ஷிப் புரோகிராம்’ல கலந்துக்க ஏற்பாடுகள் செஞ்சு தந்திருக்கார். அந்த வாய்ப்பை, என் சேவை தடத்தை இன்னும் செதுக்கிக்கறதுக்காக பயன்படுத்தப் போறேன். என் சக மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு என்னைப்போலவே நம்பிக்கை வளர நான் என்னிக்குமே உரமா இருப்பேன்!''

- குரலில் அத்தனை திடம் அருணாதேவிக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு